நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 03, 2015

ஸ்ரீ பைரவ தரிசனம்

இன்றைய நாள் - தேய்பிறை அஷ்டமி..

ஊர் முழுதும் ஒளியேற்றி வழிபடும் திருக்கார்த்திகை நிகழும் - கார்த்திகை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி..

ஊர் முழுதும் தானா!..

உள்ளத்திலும் ஒளியேற்றுதற்கான சிறப்புடைய நாள் - இன்று..

ஸ்ரீ பைரவர், பட்டீஸ்வரம்.
நாம் - நம் மனதில் மண்டிக் கிடக்கும் இருளை அகற்றுவது - மிக சிரமம்.. மிகவும் சிரமம்..

அந்த இருள் அதுவாக அகலவேண்டும்..

அது எப்போது அகலும்!?.. அதற்கு வெகுகாலம் ஆகுமே!?..

அதுவரையிலும் ஆயுள் கொண்டிருப்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லையே!..

உள்ளத்துள் ஒளியேற்றிக் கொள்ளாமலேயே - விடை பெற்றுக் கொள்வோமோ?..

ஒன்றும் புரியவில்லையே!.. உள்ளத்தினுள் அச்சம் மிக ஓங்குகின்றதே!..

எல்லாவித கேள்விகளுக்கும் அச்சங்களுக்கும் - ஒரே விடை!..

விடை வாகனனாகிய எம்பெருமானின் திருமேனியிலிருந்து தோன்றிய -

ஸ்ரீ பைரவர்!..


ஸ்ரீ வைரவ மூர்த்தி தோன்றிய நாள் - கார்த்திகை தேய்பிறையின் அஷ்டமி!..

ஸ்ரீ வைரவரின் திருவடிகளில் தலை வைத்து வணங்கினாலே - எல்லா அச்சங்களும் அகன்றுவிடும்..

அது மட்டுமா!..

நம்முள் - இருள் மண்டிக் கிடப்பதற்கான மூலகாரணிகள் - காம, குரோத, மோக, லோப, மத, மாச்சர்யங்கள் - எனும் ஆறு குணங்களும் தொலைந்து போகும்..

சரி - இந்த ஆறுகுணங்களும் இல்லையெனின் உலகமே இல்லையே!..

இவைதானே உயிர்களுக்கும் இயக்கத்திற்கும் அடிப்படை!..

அதைப் பற்றிய விளக்கங்கள் காலங்களைக் கடந்தும் செல்பவை..

விவரிப்பதற்கும் விளங்கிக் கொள்வதற்கும் - ஆயுள் போதாது!..

ஆயினும், அவற்றையெல்லாம் - ஸ்ரீ வைரவ வழிபாடு நமக்கு உணர்த்தும்..

ஸ்ரீ வைரவ வழிபாட்டினை நாம் உணரும்போது -
மாசற்ற மாணிக்கமாக நம் மனம் மிளிரும் என்பது ஆன்றோர் திருவாக்கு..


ஆதிக்கண் நான்முகத்தில் ஒன்று சென்று
அல்லாத சொல்லுரைக்கத் தன் கைவாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டுவானை
மாதிமைய மாதொரு கூறாயினானை
மாமலர்மேல் அயனோடு மாலுங்காணா
நாதியை நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே!..(6/20/1) 
-: திருநாவுக்கரசர் :- 
                         
முன்னொரு காலத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் இடையில் -  '' யார் பெரியவர்'' என்று பெருங்கலகம் விளைந்தது.

அவ்வேளையில் சிவபரம்பொருள் திருமேனியிலிருந்து, பேரொளி ஒன்று தோன்றியது..

அக்னி ஜூவாலைகளுடன் படர்ந்த கேசம். மூன்று திருவிழிகள். ஒளிரும் கோரைப் பற்கள். திருக்கரங்களில் தண்டத்துடன் சூலம், உடுக்கை, நாகம், பாசம்.. திகம்பரமான திருமேனியில் வெண்தலை மாலை.. ஒலிதரும் மணிகள் புரளும் ஆரம்.. இடையில்  நாக கச்சை.. திருவடிகளில் வீரத்தண்டைகள்..

இதுவே ஸ்ரீ வைரவத் திருக்கோலம்..

இவ்வண்ணம் கொண்டு பேரொளியாகத் தோன்றிய வைரவரைக் கண்ட நான்முகன் - அல்லாத சொல்லாக - '' வா என் மகனே'' - என்று அழைத்தான்..

மூண்டெழுந்த சினம் விழிகளில் தெறிக்க, முந்தி நின்றார் - ஸ்ரீ வைரவர்..

அகங்காரம் கொண்ட நான்முகனின் ஐந்து முகங்களுள் தகாத சொல்லுரைத்த முகத்தைத் - தன் கை நகத்தினால் கிள்ளியெடுத்தார் வைரவர்.

இப்போது திசைக்கு ஒன்றாக பிரம்மனுக்கு நான்கு முகங்கள். 

ஆறாத சினத்துடன் அடுத்த தலையையும் பறிக்குமுன் -
தகாத சொல்லுரைத்த நான்முகனை மன்னித்து அருளுமாறு,   
ஸ்ரீஹரிபரந்தாமன்  வேண்டிக் கொண்டார்..

சினம்  தணிந்த  வைரவமூர்த்தி, நான்முகனை மன்னித்ததுடன்

'' வேதம்  ஓதுபவர்களுக்கு  நீயே குருவாக விளங்குவாய்!..'' 

- என்று மீண்டும் படைப்புத் தொழிலை பிரம்மனிடமே அருளினார்.

செருக்கு நீங்கிய நான்முகனும் - மீண்டும் படைக்கும் பணியை ஏற்றுக் கொண்டார் என்பது ஐதீகம்..

திருக்கண்டியூர் தலத்துடன்  - திருக்கோவிலூர், திருஅதிகை, திருப்பறியலூர், திருக்கடவூர், திருவிற்குடி, திருக்குறுக்கை, திருவழுவூர் - ஆகிய ஏழு தலங்களும் சேர்ந்து வீரட்ட திருத்தலங்கள் என்று வழங்கப்படுகின்றன..

இத்தலங்கள் வீரட்ட திருத்தலங்களாக தேவார திருவாசகங்களில்  புகழ்ந்து போற்றப்படுகின்றன.  

திருச்சேறை
ஈசன் - ஸ்ரீசாரபரமேஸ்வரர். 
அம்பிகை - ஞானவல்லி.
குடந்தைக்கு அருகிலுள்ளது - திருச்சேறை.

விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால வைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச் 
சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச் செல்வனாரே!..(4/73/6)
                                                                             
தேவாரத்தில் ஸ்ரீவைரவரின் திருப்பெயர் பயின்று வரும் ஒரே திருப்பாடல் இது.

திருச்சேறையில்  இறைவனைத் தரிசித்தபோது, அப்பர் பெருமான் வைரவரின் திருமேனியழகை - பாடிப் புகழ்ந்தார்.


தாருகாவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து - யானையை ஏவி விட்டபோது, அதனைப் பிடித்து அதன் தோலை உரித்து, அந்தத் தோலையும் தம் மீதே போர்த்திக் கொண்டான் - திகம்பரனாக வந்த ஈசன்..

பிரபஞ்சமெங்கும் விரிந்து பரவும் ஒளிக்கதிர்களுடன் திகழும்  திரிசூலம், வெடியென முழங்கும் உடுக்கை - இவற்றைத் தம் திருக்கரங்களில் ஏந்திய வண்ணம் காலவைரவன் எனத் தோன்றிய  ஈசனைக் கண்டு, உமையவள் அச்சம் கொண்டனள்.

அப்போது, அம்பிகையை நோக்கி செந்நெறிச்செல்வன் ஆகிய ஈசன் - பிரகாசமாகிய  புன்னகையுடன் சிரித்து அருள் செய்தார்!..

- என்று அப்பர் பெருமான் போற்றுகின்றார்...

சிவபெருமான் யானையை உரித்த திருத்தலம் வழுவூர். 

இத்தலத்தில் ஈசன் கஜசம்ஹார மூர்த்தி..
அம்பிகை பாலகுஜாம்பிகை..    

யானை உரித்த திருக்கோலம் பஞ்சலோகத் திருமேனியாக விளங்குகின்றது.

திருஆரூர் - மயிலாடுதுறை வழித்தடத்தில் மங்கநல்லூருக்கு உட்புறமாக இரண்டு கி.மீ., தொலைவில் உள்ளது - வழுவூர்..

யானையை உரித்த - திருக்கோலத்தினை பல்வேறு கோயில் கோபுரங்களில் சுதை வடிவாகத் தரிசிக்கலாம். எனினும், 

யானையை உரித்த திருக்கோலம் திருத்துறைப்பூண்டி - அருள்மிகு பிறவி மருந்தீசர் திருக்கோயிலிலும் தனியாக கருவறையில் பெருந் திருமேனியாகத் திகழ்கின்றது.


மேலும், ஸ்ரீ வைரவர் யோக நிலையில் விளங்கும் திருத்தலம் காரைக்குடிக்கு அருகில் உள்ள திருப்பத்தூர்..

ஸ்ரீதிருத்தளிநாதர் திருக்கோயில் மிகவும் சிறப்புடையது..


வைரவர் ஞானமூர்த்தி. அளப்பரிய வலிமையுடையவர்.
தம்மை அண்டினோர்க்கு சத்ரு பயத்தை நீக்கி, அடைக்கலம் அருள்பவர்.

ஸ்ரீ வைரவர் - காவல் நாயகன் என்பதால் நாய் இவருடன் திகழ்கின்றது. 

சிவபெருமான் உறையும் திருக்கோயில்கள் அனைத்திலும் ஈசான்ய  (வடகிழக்கு)  மூலையின் ஒரு பகுதியில் வைரவரின் திருமேனி விளங்கும். 

ஸ்ரீ வைரவரின் அருகில் சனி பகவான் நிச்சயம் வீற்றிருப்பார். ஏனெனில்,   

சனி  பகவானுக்கு வைரவரே முழுமுதற் குரு என்பதாக ஐதீகம். 

எனவே - வைரவரை மனப்பூர்வமாக வழிபடும் அன்பர்களுக்கு சனைச்சரனின் தாக்கம் குறைவு..

காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யங்களில் இருந்து - நாம் மீள வேண்டும்.. 

இந்த நிலையை நாம் எளிதில் எய்திட உறுதுணையாய் விளங்குவது - வைரவ  வழிபாடு.


ஸ்ரீ கால வைரவ மூர்த்தியை பக்தியுடன் தியானித்து,  தினமும் காலை  மாலை போற்றி வழிபடுவோர்க்கு பிணி, வறுமை, பகை முதலான துன்பங்கள் விலகும் என்பது ஆன்றோர் வாக்கு. 

வைரவ வழிபாடு பல்வகையான துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி வாழ்வினைச் செம்மைப்படுத்தி நல்வழி காட்டும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. 

ஸ்ரீ வைரவர் திகம்பர மூர்த்தி.. ஆயினும், அவருக்கு அலங்காரம் என ஆடை அணிவித்து மகிழ்கின்றனர்..

தற்காலத்தில் - தேங்காயிலும் பூசனிக்காயிலும் நெய்யூற்றி விளக்கேற்றி ஸ்ரீவைரவ மூர்த்தியை வழிபடுகின்றனர்.. அதெல்லாம் அவரவர் மனப்போக்கு..


இன்று மாலை திருக்கோயில் சென்று ஈசனை வணங்கி வலம் வந்து, 
ஸ்ரீ வைரவரின் திருவடிகளின் அருகில் விளக்கேற்றி வைத்து -   

நம்மைப் பற்றி, நாமே - முறையிடுவதற்கு இந்த நாள் - இனிய நாள்..

நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக நம்முள்ளேயே வேரூன்றி விரிந்து பரந்திருக்கும் அகங்காரம் எனும் விஷ விருட்சத்தைக் 
கிள்ளி எறியும்படி - தலை வணங்கி வேண்டிக் கொள்வோம். 


இந்தவேளையில் -
தலைநகர் சென்னை பெருந்துயரத்தில் சிக்கிக் கொண்டுள்ளது..

தொடர்ந்து பெய்யும் கனமழையினால் மக்கள் சொல்லொணாத துயரத்துடன் தவித்துக் கொண்டிருக்கின்றனர்..

எல்லா வழிகளும் அடைபட்டுப் போயிருக்கின்றன..

வேதனைப்படும் மக்களுக்கு ஆறுதலாக ஆதரவுக் கரங்கள் நீண்டிருக்கின்றன..

நல்லுள்ளம் படைத்தோர் - பலவகையிலும் உதவிக் கொண்டிருக்கின்றனர்..

கழுத்தளவு நீரில் - தம் உயிரினைத் துச்சமாக நினைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்..

மழை குறைந்து - வெள்ளம் வடிய வேண்டும்.. மக்கள் துயர் தீர வேண்டும்.. நல்லோர் தம் உதவிகளுக்கு ஈசன் உற்ற துணையாக இருக்கவேண்டும்..

நன்றி - Fb.,
ஸ்வானத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ: பைரவ ப்ரசோதயாத்

 ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

12 கருத்துகள்:

 1. ஆஹா அருமையாக உள்ளது,

  அந்த இருள் அதுவாக விலக வேண்டும்,

  அதற்கு வெகு காலம் ஆகுமே,,,,,,,,,,

  உண்மை தானே,,,

  தங்கள் தொகுப்பு அழகான புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக.. வருக..

   எல்லாருடைய வாழ்விலும் நல்மும் வளமும் பெருகட்டும்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. "காமம், குரோதம், மோகம், லோபம்,மத, மாச்சர்யங்கள்"
  அருள் விளக்கம் அருமைஅய்யா

  இதை தருவதால் தெய்வத் தமிழ் மனங்களில் வாழும்.
  நன்றி,
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நம்பி..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 3. நகரத்தாருக்கென்று ஒன்பது கோவில்களைக் கூறுகின்றனர் அதில் வைரவன் பட்டி வைரவர் கோவிலும் ஒன்று. எதையும் கேள்வி கேட்காத மனம் இருந்தால் இம்மாதிரிப் பதிவுகளை ரசிக்கலாம் எழுத வேண்டாம் என்றிருந்தாலும் எழுதி விட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   வைரவன்பட்டி முதலான ஒன்பது கோயில்கள் செட்டிநாடு பகுதியில் பிரசித்தமானவை.. ஆயினும், நான் - அவற்றைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை..

   எனது பதிவுகள் பற்றி - தாங்கள் கேட்கலாம்..
   மனமகிழ்வுடன் வரவேற்கின்றேன்..

   நான் அறிந்தவற்றையும் எனக்குப் புரிந்தவற்றையும் -
   எனது உணர்வுடன் கலந்து பதிவுகளில் வழங்குகின்றேன்..

   எனது பதிவில் தாங்கள் எழுத வேண்டும்.. அதுவே எனக்கு ஊக்கம்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அருமையான விளக்கங்கள் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. வைரவன் பட்டி திருக்கோவிலுக்கு போய் வந்தோம் கடந்த வாரம்.பைரவர் வழிபாடுப்பற்றி அருமையான விளக்கம்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..