நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 12, 2015

திருமறைக்காடு

அந்த எலிக்கு - தன்னையே நம்பமுடியவில்லை!..

இப்படியெல்லாம் நடக்குமோ!?.. - தன்னைத் தானே கிள்ளிக் கொண்டது.

கனவல்ல!.. நிஜம் தான்!.. 

கண் கொள்ளாக் காட்சியாகத் தரிசனம் செய்வது - சிவபெருமானைத் தான்!.. 


கண்ணீர் பெருக , இறைவனை வலம் வந்து  - வணங்கி நின்றது!..

ஆகா!.. இப்படி - எலி பேறு பெறும் அளவுக்கு என்ன நிகழ்ந்தது?..

இரவு நேரம்.

அருள் வடிவான சிவலிங்கத்தின் அருகில் நெய் நிறைந்த அகல் விளக்கு ப்ரகாசித்துக் கொண்டிருந்தது.

அதனுள் இருக்கும் நெய்யினை சுவைப்பதற்காக - ஆவலுடன் ஓடி வந்த எலி அவசரத்தில் சுடரின் பக்கத்தில் தன் நாவினை நீட்டிவிட  - சுருக் என சுட்டு விட்டது.

வலி பொறுக்கமாட்டாத எலி, பதறித் துடித்துத் துள்ளியதில் அகல்விளக்கின் திரி தூண்டப்பட்டு முன்னை விட அதிகமாக ப்ரகாசித்தது.

இது போதாதா - எம்பெருமானுக்கு!.. கருணையுடன் காட்சி தந்தார்.

வரமும் தந்தார் - மாவலி எனும் மன்னனாகப் பிறக்க!.. - என்று..

ஈசன் வரமளித்தபடி - 

அந்த எலி - தன்னுடலை நீத்து -  ஸ்ரீபக்த ப்ரகலாதனின் பேரனாகப் பிறந்தது - என்று மேலும் தொடர்கின்றது சம்பவம்..

இப்புண்ணியம் நிகழ்ந்த தலம் - வேதாரண்யம் எனப்படும் திருமறைக்காடு.

இதனை,

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக் 
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட 
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம் 
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே!. (4/49/8) 

- என்று , அப்பர் பெருமான் திருக்குறுக்கை வீரட்டானத்தைத் தரிசிக்கும் போது - திருப்பதிகத்தில் பதிவு செய்து - போற்றிப் பாடி மகிழ்கின்றார்.

திருத்தலம்
திருமறைக்காடு - வேதாரண்யம். 


இறைவன் - ஸ்ரீ மறைக்காட்டு மணாளன்
அம்பிகை - ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள்.

சப்த விடங்கத் திருத்தலம்
மரகத லிங்கம்.
தியாகராஜர் - ரத்ன சிம்மாசனம் - புவன விடங்கர்
நடனம் - ஹம்ச நடனம்.

மூவர் பதிகம் பெற்ற திருத்தலம்.

தலவிருட்சம் - வன்னி.
தீர்த்தம் - சந்நிதிக் கடற்துறை, மணிகர்ணிகை, வேத தீர்த்தம்.

-: தலப்பெருமை:-

தமிழகத்தின் தொன்மையான திருத்தலங்களில் ஒன்று.

வேதங்கள் மரங்களாகி நின்று - இறைவனை வணங்கிய திருத்தலம்.

திருக்கோயிலின் அகல்விளக்கில் இருந்த நெய்யினை உண்ண வந்த எலி தான்  - பின்னாளில் மகாபலி மன்னனாகப் பிறந்தது.
  
அகத்தியர், ஸ்ரீராமபிரான், லக்ஷ்மணன், வசிஷ்டர், விஸ்வாமித்ரர்,  கங்கை, காவிரி, முசுகுந்த சக்ரவர்த்தி, அருணகிரிநாதர் - என அனைவரும் வணங்கி வழிபட்ட திருத்தலம். 

மணிகர்ணிகை தீர்த்தத்தில் - கங்கை, காவிரி, யமுனை, நர்மதை, சிந்து - எனும் ஐந்து நதிகளும் உறைவதாக ஐதீகம்.


ஆடி அமாவாசை, மஹாளய பட்சம், தை அமாவாசை - தினங்களில் ஆயிரக் கணக்கானோர் - கடலில் நீராடி - தங்கள் முன்னோர்களுக்குத் திதி கொடுத்து வணங்கும் திருத்தலம்.

அகத்தியருக்குத் திருமணக்காட்சி நல்கிய திருத்தலம்.

முசுகுந்தச் சக்ரவர்த்தி - தேவலோகத்திலிருந்து ஸ்ரீ விடங்க மூர்த்திகளைக் கொணர்ந்து ஸ்தாபித்த திருத்தலங்கள் ஏழு.

இவை சப்த விடங்கத் தலங்கள் என குறிக்கப்படும்.

அவற்றுள் - திருமறைக்காடும் ஒன்று.

சீதாதேவியைத் தேடிய வண்ணம் தென் திசை நோக்கி வந்த ஸ்ரீராமபிரானும் இளைய பெருமானும் வணங்கி வழிபட்ட திருத்தலம்.

பின்னும் - திருமறைக்காட்டிற்குத் தெற்கே உள்ள கோடியக்கரையில் நின்று ஸ்ரீராமபிரான் - இலங்கையை நோக்கியதால் ஆதி சேது எனவும் படும்.

அகத்தியருக்குத் திருமணக்காட்சி நல்கிய திருத்தலம்.

அதனால் திருமூலத்தானத்தினுள் - சிவலிங்கத்திற்குப் பின்னால் அம்மையும் அப்பனும் திருமணக் கோலத்தில் வீற்றிருக்கின்றனர்.


அப்பர் ஸ்வாமிகள் - அம்மையப்பனின் திருமணக் கோலத்தினை தரிசித்து -
திருப்பதிகங்களால் துதித்து மகிழ்கின்றார்.

ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் மகிழ்ந்து உறவாடி இருந்த திருத்தலங்களுள் ஒன்று.

மன்னன் ஒருவன் - தனக்கு நேர்ந்த துன்பத்தினைக் கண்டு வெருண்டு - யாரும்  தரிசனம் செய்யக்கூடாது என்று திருக்கோயிலின் கிழக்கு வாசலை அடைத்து விட்டான்.

அந்த மன்னனுடைய காலம் முடிந்தது. அதன் பின்னும் -  திருக்கோயிலின் திருக்கதவங்களைத் திறக்க யாரும் முன்வரவில்லை. 

ஆயினும், மேலை வாசல் அமைத்துக் கொண்டு - அதன் வழியாக திருக் கோயிலில் தரிசனம் செய்தனர்.

நாடு முழுதும் சிவதரிசனம் செய்ததோடு மக்களுக்கு நல்வழி காட்டி வந்த அருளாளர்களாகிய அப்பர் பெருமானும் ஞானசம்பந்தப் பெருமானும் -

திருமறைக்காட்டிற்கு எழுந்தருளிய போது - 
திருக்கதவங்கள் அடைபட்டிருப்பதைக் கண்டு மனம் பொறாதவர்களாகினர்.

தேமதுரத் தமிழால் திருப்பதிகம் பாடினர்.

பண்ணின் நேர்மொழி யாள்உமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திற்ந்தருள் செய்ம்மினே!.. (5/10)

- என, அப்பர் பெருமான் பாடிய திருப்பதிகத்தினால் அடைத்துக் கிடந்த ஆலயக் கதவுகள் திறந்து கொண்டன.

அதன் பின் - 

சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே!.. (2/37)

- என்று ஞானசம்பந்தப்பெருமான் பாடிய திருப்பதிகத்தினால் - திருக்கதவுகள் மீண்டும் அடைத்துக் கொண்டன.


இப்படி - 

தீந்தமிழ் கொண்டு - திருக்கோயிலின் கீழ்வாசற் கதவங்களைத் திறந்தும் அடைத்தும் மக்களுக்கு நலம் விளைத்த புண்ணியர்களின் பொற்பாதங்கள் பதிந்த புண்ணிய தலம் - திருமறைக்காடு. 

திருமறைக்காட்டில் - அப்பர் சுவாமிகளுடன் ஞானசம்பந்தப் பெருமான் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த  போது -

சிவ சமயத்தை மீட்டெடுக்க  பாண்டிய நாட்டுக்கு எழுந்தருள வேண்டும்!..  

- என பாண்டிய நாட்டின் பட்டத்தரசியான மங்கையர்க்கரசி எனும் மாதரசி - ஞானசம்பந்தப் பெருமானுக்கு திருமுகம் அனுப்பியிருந்தாள்.

காரணம் - அக்காலத்தில் தென்பாண்டித் திருநாட்டில் புறச்சமயம் ஓங்கி இருந்தது.

பாண்டிமாதேவியின் அழைப்பினைக் கண்ட திருஞானசம்பந்தர் - மதுரைக்குப் புறப்படலானார்.

அப்போது, அப்பர் சுவாமிகள் - 

இவ்வேளையில் நாளும் கோளும் நல்லனவாக இல்லையே!.. 

- என, ஞானசம்பந்தரிடம் தனது கவலையைத் தெரிவித்தார். 

ஏனெனில் புறச்சமயத்தாரின் கொடுமைகளை  அனுபவித்து மீண்டு வந்தவர் - அப்பர் சுவாமிகள்.

தன்னைக் குறித்து - மனம் வருந்திய அப்பர் சுவாமிகளுக்கு ஆறுதல் கூறி - 

ஈசனின் அடியார்களுக்கு அனைத்தும் நல்லனவே!.. 

- என, திருஞான சம்பந்தப் பெருமான் திருப்பதிகம் அருளினார். 

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..{2/85/1}

கோளறு பதிகம் என அன்பர்களால் போற்றித் துதிக்கப்படும் திருப்பதிகம் பிறந்த தலம் - திருமறைக்காடு.

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளும் திருப்பதிகம் பாடி வழிபட்டிருக்கின்றனர்.

திருவிளையாடற் புராணம் அருளிய பரஞ்சோதி முனிவர் அவதரித்த திருத் தலம்.

எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே 
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!..

- என்றருளிய தாயுமான ஸ்வாமிகளின் அவதாரத் திருத்தலமும் இதுவே!..


கிழக்கு நோக்கிய திருக்கோயில்.

திருமூலத்தானத்தின் வலப்புறமாக மரகத லிங்கம். தியாக விடங்கர் சந்நிதி.
காலை மாலை இருவேளைகளிலும் சிறப்பு பூஜைகள் நிகழ்கின்றன.

சிற்றுயிரான எலிக்கும் ஏற்றம் அளித்த - சிவபெருமானின் சந்நிதியில் மனம் பரவசமாகி அமைதி அடைகின்றது.

வேதங்கள் வழிபட்டதால் - அம்பிகைக்கு வேதநாயகி என்றும் திருப்பெயர். ஆயினும் யாழைப் பழித்த மொழியாள் என்பதே பிரசித்தம்.

அம்பிகையின் மொழி கேட்டு நாணிய சரஸ்வதி சுவடியுடன் தியானத்தில் இருக்கின்றாள்.

அம்பாள் சந்நிதியிலும் கொடிமரம் விளங்குகின்றது.

திருச்சுற்றில் - தெற்கு நோக்கியவளாக ஸ்ரீ துர்க்கை. மிகுந்த வர ப்ரசாதி..

இவள் - வேதாரண்யத்தின் காவல் நாயகி என்பர் ஆன்றோர்.

திருச்சுற்றில் திகழும் வள்ளி மணவாளனை - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி வழிபட்டிருக்கின்றனர்.

கோளறு பதிகம் பிறந்த திருத்தலம்.
ஆகையால் - நவக்கிரகங்கள் திசைக்கு ஒன்றாக இல்லாமல் -  
ஒரே - நோக்கில் வரிசையாக விளங்குகின்றனர்.

வெளித்திருச்சுற்றில் - வீரஹத்தி விநாயகர் சந்நிதி மிகச்சிறப்புடையது.

ஸ்ரீராமபிரானைத் தொடர்ந்து சென்ற தோஷத்தை -
விநாயகர் தமது திருவடியினால் அழுத்தி - அழித்ததாக ஐதீகம்.

விநாயகர் சந்நிதியிலும் தனியாக கொடி மரம் விளங்குகின்றது.

திருக்கோயில் - கடற்கரையில் விளங்கினாலும் - திருக்கோயிலினுள் நல்ல தண்ணீர் கிணறு உள்ளது.

தல மரமாகிய வன்னியின் கீழே பெரிய ஐந்தலை நாகத்தின் திருவடிவம் விளங்குகின்றது.

நாக தோஷம் உள்ளவர்கள் வலம் வந்து வணங்கி நலம் பெறுகின்றனர்.

என் தந்தை - எனக்கு அடையாளங்காட்டி வணங்கச் செய்த திருத்தலம் - திருமறைக்காடு.

இத்திருக்கோயிலில் - நவராத்திரி விசேஷங்களின் போது - என் தந்தை, தன் குழுவினரோடு -  இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றார்.

திருமறைக்காடு - எனினும் வேதாரண்யம் என்பதே சொல்வழக்காகி விட்டது.

சுதந்திரப் போராட்டத்தின் போது - பெரும் திருப்பு முனையாக அமைந்தது -
வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம்.

தொண்டர்களுடன் மூதறிஞர் ராஜாஜி
காந்திஜி - தண்டியில் உப்பு சத்யாகிரகம் செய்தபோது -
மூதறிஞர் ராஜாஜி, நூறு தொண்டர்களுடன் - 13ஏப்ரல்/1930 அன்று திருச்சியில் இருந்து புறப்பட்டார்.

உப்பு சத்தியாக்கிரக நினைவுத் தூண்
கல்லணை, தஞ்சாவூர், மன்னார்குடி - வழியாக வேதாரண்யத்திற்குச் சென்று -
30 ஏப்ரல்/1930 அன்று அதிகாலையில் அகஸ்தியம் பள்ளியில் உப்பை அள்ளி சிறைப்பட்டார்.


உப்பு சத்தியாக்கிரகிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்தவர்
வேதாரண்யம் சர்தார் வேதரத்தினம் பிள்ளை!..

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் நீங்காத இடம் பெற்றிருப்பது - வேதாரண்யம்..


மயிலாடுதுறையிலிருந்து - திருஆரூர் வழியாக இருப்புப் பாதை இருந்தது - 20 ஆண்டுகளுக்கு முன்.

இப்போது சாலை வழி மட்டுமே.. தஞ்சை, நாகை, திருஆரூர் என அனைத்து நகரங்களில் இருந்தும் அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன.


வேதாரணயத்திற்கு அருகில் கோடியக்கரை சரணாலயம் குறிப்பிடத்தக்கது.


கோடியக்கரைக்கு வந்தால் - பூங்குழலியையும் சேந்தன் அமுதனையும் 
சமயத்தில் வந்தியத்தேவனைக் கூட சந்திக்கலாம்!..

இயற்கையோடு இணைந்து 
தெய்வ பக்திக்கும் தேசபக்திக்கும் அடையாளமாகத் திகழ்வது 
திருமறைக்காடு எனும் வேதாரண்யம்!..

யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான் இடம்வினவில்
தாழைப்பொழில் ஊடேசென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழிக் குரங்கு உண்ணும் மறைக்காடே!.. (7/71)
சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்.

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்ல மரர்சூளா மணிதான் கண்டாய்
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக் காட்டுறையும் மணாளன் தானே!.. (6/23)
அப்பர் ஸ்வாமிகள்.

சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *  

22 கருத்துகள்:

  1. எலியில் ஆரம்பித்து வேதாரண்யமாகிய பெரும் வரலாற்றை அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே...
    சிவாய திருச்சிற்றம்பலம். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  2. திருமறைக்காடு பற்றிய சிறப்புகள் அனைத்தும் அருமை... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  3. திருமறைக்காடு அறியாத பல செய்திகள் அறிந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  4. அறியாத வரலாற்று சிறப்பு மிக்க திருமறைக்காடு(வேதாரண்யம்) பற்றி தங்கள் பதிவின் மூலம் தந்ததற்கு நன்றி...

    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  5. எப்படி இப்படியெல்லாம் முடிகிறது. இலக்கியம், வரலாறு நாவல் ஒரே பதிவில். ஆனாலும் அருமையான செய்திகள். திருமறைக்காடு எனும் வேதாரண்யம் (ஆரண்யம்/ காடு) கல்கியின் நாவல் தான் நினைவுக்கு வந்தது, உடன் அடுத்து பூங்குழலி, சேந்தன் அமுதன் சரி ,,,,,,,,,,,, அழகிய பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. எப்படி இப்படியெல்லாம் முடிகிறது. இலக்கியம், வரலாறு நாவல் ஒரே பதிவில். ஆனாலும் அருமையான செய்திகள். திருமறைக்காடு எனும் வேதாரண்யம் (ஆரண்யம்/ காடு) கல்கியின் நாவல் தான் நினைவுக்கு வந்தது, உடன் அடுத்து பூங்குழலி, சேந்தன் அமுதன் சரி ,,,,,,,,,,,, அழகிய பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. திருமறைக்காடு பற்றிய செய்திகளை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      சித்திரைத் திருநாளின் கவிதை அழகு.. அருமை..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

      நீக்கு
  10. வேதாரண்யம்/திருமறைக்காடு பற்றிய அரிய தகவல்கள். இதுவரை இந்த இடங்களுக்குச் சென்றதில்லை.

    பகிர்வுக்கு நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. திருமறைக்காடு பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன். கோவில் பற்றிய செய்திகளுடன் ராஜாஜியின் உப்புச்சத்தியாக்கிரகம் பற்றிய வரலாற்றுச் செய்தியைச் சேர்த்துச் சொன்னது மிகவும் சிறப்பு. பூங்குழலி, சேந்தன் அமுதன், வந்தியத்தேவன் பற்றிச்சொன்னவுடன் பொன்னியின் செல்வன் மீண்டும் ஒருமுறை நினைவில் வந்து போனது. கோடியக்கரை பறவைகள் சரணாலயம் பற்றியும் சொல்லிப் பதிவை நிறைவு செய்த விதம் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..