நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 03, 2015

உத்திரத் திருவிழா

ஆதியில் -

திருக்கயிலாய மாமலை கல்யாணத் திருக்கோலம் கொண்டது ஒரு பங்குனி உத்திர நாளில் தான்!..

சர்வேஸ்வரனாகிய சிவபெருமான் -

ஆயிரத்தெட்டு அண்டங்களில் நூற்றெட்டு யுகங்களுக்கு ஆட்சி உரிமையை வரமாகப் பெற்றிருந்த மாயையின் மகனான சூர பத்மனையும் அவனது கூட்டத்தாரையும் பூண்டோடு அழித்து சங்கரிக்கும் பொருட்டு -

திருக்குமரன் ஒருவனைத் தம்முள்ளிருந்து தோற்றுவிப்பதாக அருளியிருந்தார்.

அப்படி - அருளியிருந்த சிவம் - சனகாதி முனிவர்களுடன் ஞானத் தவத்தில் அமர்ந்திருந்தது.

அது விழித்தெழும் வரைக்கும் அமைதி காக்க - அறியாத தேவர்கள் மன்மதனை ஏவி விட்டனர் - தவத்தைக் கலைக்குமாறு!..

ஆனால் - மலர்க்கணை ஏவிய மன்மதன் வெந்து சாம்பலாகிப் போனான்!..

மகரிஷிகளின் உபசாரங்களினால் - மனம் இளகினார் மகேஸ்வரன்!..


சகல லோகங்களையும் காத்தருளும் பொருட்டு - இமவானின் திருமகளாக வளர்ந்த அம்பிகையின் திருக்கரத்தினைப் பற்றி கல்யாண சுந்தரனாகத் திருக்காட்சி நல்கினார்.

அந்த மங்கல வைபவம் நிகழ்ந்தது - பங்குனி மாதத்தில்!..

அதனால் புனிதம் அடைந்த நட்சத்திரம் - உத்திரம்!..

அதன்பின் பங்குனி உத்திர நாள் - அடைந்த பெருமைகள் எண்ணற்றவை!..

சிவ பார்வதியின் வேளையில் தான் - ரதி தேவி தனது காதல் மணாளனாகிய மன்மதனை மீண்டும் அடைந்து இன்புற்றாள்!..

தேவர்களின் பகடைக் காயாக உருண்ட மன்மதனின் மனதிலும் ஆணவம் முளைத்தெழுந்தது - ஈசன் மீதும் மலர்க்கணையை எய்கின்றோம்!.. - என்று..

அவன் கொண்ட ஆணவம் அவனது அங்கத்தை அழித்தது. கர்வ பங்கம் ஆன நிலையில் - ரதி தேவியின் கண்ணீருக்காக அனங்கனாக மீண்டெழுந்தான்!..

அனங்கனாக அவன் மீண்டெழாவிட்டால் - பூவுலகில் மோக பரிபூரணம் ஆகியிருக்குமா!?..

பின்னும் -


மதுரையம்பதியில் - மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சன மாலைக்கும் மகவாகத் தோன்றி - அவர் தம் மடியில் தவழ்ந்து விளையாடிய - இளங்கொடி
மீனாள் - கயற்கண்ணியின் திருக்கரத்தினை சோமசுந்தரன் பற்றியதும் -

பங்குனி உத்திர நன்னாளில் தான்!..


மயிலாகத் தோன்றிய அம்பிகை - புன்னை வனத்தில் சிவபூஜை செய்து மீண்டும் ஈசனின் திருக்கரம் பற்றியதும்

பங்குனி உத்திர நன்னாளில் தான்!..

அதனால் தான் -  மயிலையே கயிலை!.. கயிலையே மயிலை!.. - என்றானது.

ஸ்ரீமஹாலக்ஷ்மி - ஸ்ரீஹரிபரந்தாமனுக்கு மாலையிட்டதும் -

பங்குனி உத்திர நன்னாளில் தான்!..

தசரத ராமனின் தோள்களில் ஜானகி மணமாலை சூட்டியதும் -

பங்குனி உத்திர நன்னாளில் தான்!..

ஜனக மகாராஜனின் அரண்மனையில் ஸ்ரீ ராமனுடன் வைதேகி, லக்ஷ்மணனுடன் ஊர்மிளை பரதனுடன் ஸ்ருதி கீர்த்தி சத்ருக்கனனுடன் மாண்டவி - என அன்புச் சகோதரர்கள் திருமணக்கோலங்கொண்டு நிற்க -

பெருமை கொண்டது பங்குனி உத்திர நன்னாள்!..

கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி
அரங்கநாயகியுடன் சேர்த்தி
பங்குனியின் ஆயில்யத்தன்று - உறையூரில் கமலவல்லித் தாயாருடன் சேர்த்தி கண்டருளிய பின் -

திருஅரங்கத்தில் - மட்டையடி வைபவத்திற்குப் பின் - அரங்க நாயகித் தாயாருடன் நம்பெருமாள் சேர்த்தி கண்டருள்வதும்

பங்குனி உத்திர நன்னாளில் தான்!..

காஞ்சி மாநகரில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் -  தாயார் சந்நிதியில் - ஸ்ரீதேவி பூதேவி, சேரநாச்சியார்,ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயாருடன் தரிசனம் நல்குவதும் -

பங்குனி உத்திர நன்னாளில் தான்!..

காலங்கள் கடந்த பின்னரும் -

ஸ்ரீவில்லிபுத்தூரில் - பெரியாழ்வார் கண்டு மகிழும் வண்ணம் - சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின் திருக்கரங்களை ஸ்ரீரங்கமன்னார் பற்றிக் கொண்டதும் -

பங்குனி உத்திர நன்னாளில் தான்!.


பூத நாதனாகிய - ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம் நிகழ்ந்ததும்

பங்குனி உத்திர நன்னாளில் தான்!..

மண்ணும் விண்ணும் மகிழும் பொருட்டல்லவோ - மணிகண்டனாக - தர்மம் பூமியில் தவழ்ந்தது!..

அறத்தினைப் பரிபாலிக்க அல்லவோ - அத்தனை செல்வங்களையும் உதறித் தள்ளி விட்டு அடர்ந்த வனத்தினுள் - தவநிலை கொண்டு அமர்ந்தது!..

அற வடிவாகிய ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருநாள் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 24/3 அன்று மாலை திருநடை திறக்கப்பட்டு ஸ்ரீ கொடிப்பட்டம் சமர்ப்பிக்கப் பெற்றது.

மறுநாள் மேளதாளங்கள் முழங்க திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது.

நேற்று (ஏப்ரல்/ 2) இரவு - சரங்குத்தியில் பள்ளிவேட்டை .

இன்று காலை ஒன்பது மணியளவில் ஸ்வாமி யானையின் மீது பம்பைக்கு எழுந்தருளுவார். மதியம் பம்பை நதியில்ஆராட்டு.

பம்பை திரிவேணி சங்கமத்தில்  - மங்கலத் திரவியங்கள் மலர்களுடன் நீராடுவார்.

மாலையில் சந்நிதிக்கு எழுந்தருள - இரவு கொடியிறக்கத்துடன் - பங்குனித் திருநாள் நிறைவுறும்..


அறுபடை வீடுகளுள் மூன்றாவதான பழனியம்பதியில் கடந்த மார்ச்/28 அன்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கியது. 

கொடுமுடி தீர்த்தக் காவடிகள் பங்குனித் திருவிழாவின் சிறப்பு அம்சம்!.. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக் காவடிகளைச் சுமந்தபடி 110 கி.மீ தொலைவினை பாத யாத்திரையாகக் கடந்து வருவது பக்தியின் உச்சம்!..

தீராத வினைகளைத் தீர்த்தருளும் திருக்குமரனுக்கு காவிரித் தீர்த்தத்தால் அமிஷேகம் சிறப்பாக நடைபெறுகின்றது.

விழா நாட்களில் - நாளும் - முத்துக் குமரஸ்வாமி - வள்ளி தேவயானையுடன் - வெள்ளி ஆட்டுக் கிடா, தங்கமயில், வெள்ளி யானை, தங்கக்குதிரை என பல்வேறு வாகனங்களில் திருவீதி எழுந்தருளினன்.

நேற்று வெள்ளித் தேர். திருக்கல்யாண வைபவம்.

பழனியம்பதியில் இன்று ஏப்ரல்/3 திருத்தேரோட்டம்.


அறுபத்து மூவர் உலா
கோலவிழி அம்மன்
மயிலையே கயிலை..
தருமமிகு சென்னையின் மயிலாபுரியில் - கடந்த 26/3 அன்று கொடியேற்றம்.

சிறப்பு மிகும் பங்குனித் தேரோட்டம் - ஏப்ரல் முதல் நாள் நடந்தது.

காலை 7.15 மணியளவில் ஸ்ரீ விநாயகர் தேர் முதலில் புறப்பட - அதனைத் தொடர்ந்து வடம் பிடித்து இழுக்கப்பட்டது - ஸ்ரீ கபாலீஸ்வரர் திருத்தேர்.

மாடவீதிகளில் வெகு சிறப்பாக அன்னதானம் செய்யப்பெற்றது.

நேற்று (ஏப்ரல்/ 2) காலை -  ஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளி பூம்பாவையை உயிர்ப்பித்து அருளினார். மதியம் சீரும் சிறப்பும் மிக்க அறுபத்து மூவர் உற்சவம் கோலாகலமாக நிகழ்ந்தது.

நம்முள் மலிந்து கிடக்கும் ஆணவ மாய கன்மங்களை யாசகமாகக் கேட்டு - இன்று (ஏப்ரல்/ 3) பிக்ஷாடனர் திருக்கோலம்.

நாளை காலையில் ஆடல்வல்லான் திருக்காட்சி.
புன்னை மரத்தடியில் அம்பிகை சிவபூஜை தரிசனம்.

ஸ்ரீ கபாலீஸ்வரன் - கற்பகவல்லி
தொடர்ந்து - உமாதேவியின் திருக்கல்யாணம் - கயிலாய வாகனத்தில் திருவீதியுலாவுடன் தீர்த்தவாரி. பங்குனித் திருவிழா மங்கலமாக நிறைவடைகின்றது.

பங்குனித் திருவிழா தமிழகம் எங்கும் சிறப்பாக நடந்துள்ளது.

எங்கும் அமைதியும் ஆனந்தமும் தவழ வேண்டும் என்பதே நமது வேண்டுதல்!.

அறநூல்கள் வகுத்துக் கூறும் அறச்செயல்களுள் ஒன்றான அன்னதானம் பல தலங்களிலும் - திருவிழா சமயத்தில் சிறப்பாக நிகழ்ந்துள்ளது.

அன்னதானத்தின் சிறப்பினை வேறொரு சமயத்தில் விரிவாகப் பேசுதற்கு ஈசன் திருவருள் புரியட்டும்!..

இயற்கை மலிந்த சுற்றுச் சூழலில் 
சிற்றுயிர்களுடனும் சக மனிதர்களுடனும் 
கூடி வாழ்வோமாக!..

அதுவே ஊர்கண்டு மகிழும் 
திருவிழாக்களின் உயரிய நோக்கம்!..

அத்தகைய திருவிழாக்களில் தான் - 
ஐயனும் அம்பிகையும் 
நம்முடன் கலந்து மகிழ்கின்றார்கள்!..

சிவாய திருச்சிற்றம்பலம்..
* * *

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அனைவரின் வேண்டுதலாகவும் இருக்கட்டும் ஐயா...

  சிறப்பு பகிர்வுக்கு நன்றிகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. சிறப்பான பங்குனித் திருவிழா படங்கள் நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பங்குனி உத்திரம் பெருமைகள் பற்றிய தகவல்களுக்கு நன்றி. நெய்வேலியில் பங்குனி உத்திரம் மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த நினைவுகளை மீட்டு எடுத்தது உங்கள் பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. மேலதிக செய்திகளுக்கு நன்றி..

   நீக்கு
 5. பங்குனி உத்திரம் அழைத்துச்சென்றமைக்கு நன்றி. கும்பகோணத்தில் நான் பள்ளி நாள்களில் அறுபத்துமூவர் திருவிழா பல முறை பார்த்துள்ளேன். படங்கள் வழக்கம்போல் மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. தாங்கள் குறித்ததைப் போல கும்பகோணத்தில் நானும் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன்.. நன்றி..

   நீக்கு
 6. பங்குனி உத்திரத் திரு நாளின் முக்கியத்துவம்குறித்தபதிவுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. பங்குனி உத்திரத் திருவிழா குறித்த தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா! இங்கும் சென்னையில் மைலாப்பூரிலும், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலிலும் கொண்டாடப்படுகின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. மேலும் தகவல் தந்ததற்கு நன்றி..

   நீக்கு
 8. பங்குனி உத்திர பதிவு மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு