நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 29, 2015

சித்திரைத் திருவிழா - 4

மதுரையம்பதியில் நிகழ்வுறும் சித்திரைத் திருவிழாவின் -
ஏழாம் திருநாள் மற்றும் எட்டாம் திருநாளின் படங்களை - இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்..


பல நூறு சிறப்புக்களைக் கொண்டது மதுரையம்பதி.

சர்வேஸ்வரியாகிய பராசக்தி - தன் திருப்பாதம் பதித்த திருத்தலம்.

மலையதுவஜ பாண்டியருக்கும் காஞ்சனமாலைக்கும் மகவாகத் தோன்றி மடியில் தவழ்ந்து விளையாடினள்...

வித்யாவதி எனும் கந்தர்வப் பெண்ணின் பக்திக்கு இரங்கினாள் பராசக்தி. 

அதன்படி - வித்யாவதி - காஞ்சனமாலை எனப் பிறந்து - பாண்டி மாநகரில் மன்னன் மலையத்துவஜ பாண்டியனின் மனைவி ஆகின்றாள். 

அவர் தமக்கு புத்ர காமேஷ்டி யாகத்தில் - பொற்றாமரையின் மத்தியில் - மூன்று வயதுடைய குழந்தையாக மூன்று தனங்களுடன் தோன்றினாள். 

தடாதகை எனும் திருப்பெயருடன் மாமதுரை வீதிகளில் மக்களோடு கலந்து விளையாடித் திரிந்தாள். 

பெண் கல்விக்கு முன்னுதாரணமாக - சகல கலாவல்லியாகிய சங்கரி -  
சகல கல்விகளையும் மீண்டும் கற்றுத் தேறுகின்றாள்.. 

மகளின் திறன் கண்டு களித்த மன்னன் - 
மனம் நிறைந்தவனாக மதுரைக்கு அரசியாக மகுடம் சூட்டி மகிழ்கின்றான்.


ஒன்றாகி அனைத்துயிர்க்கும் உயிராகி எப்பொருளும்
அன்றாகி அவையனைத்தும் ஆனாளைப் பாடுவனே..
பரசிருக்கும் தமிழ்க்கூடற் பழியஞ்சிச் சொக்கருடன்
அரசிருக்கும் அங்கயற்கண் ஆரமுதைப் பாடுவனே!..
குமரகுருபரர்.
* * *

இன்றைய பதிவின் படங்களை வழங்கியோர் :- 
திரு. குணா அமுதன், திரு. ஸ்டாலின், திரு.அருண்., 
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
* * *

ஏழாம் திருநாள் (27/4) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

-: காலை :-
ஸ்ரீ கங்காள நாதர் மாசி வீதிகளில் எழுந்தருளினார்.

-: இரவு :-
அருள் தரும் சுந்தரேசர் அதிகார நந்தி வாகனத்திலும் 
அங்கயற்கண் அம்பிகை யாளி வாகனத்திலும்
எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். 

எட்டாம் திருநாள் (28/4) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

-: காலை :-
தங்கப் பல்லக்கு ஸ்ரீ சபாநாயகர் எழுந்தருளல்.
கீழச் சித்திரை வீதி, தெற்கு ஆவணி மூல வீதிகளில் பவனி.  

-: இரவு :-
மங்கையர்க்கரசி மரகதவல்லிக்கு பட்டாபிஷேகம்.
வெள்ளி சிம்மாசனம்
மாமதுரையின் அரசியாக அன்னை முடி சூட்டப்பட்டாள்..
அன்னை மீனாட்சிக்கு கிரீடம் சூட்டி செங்கோல் கொடுக்கப்பட்டது.

அவள் திருக்கரத்திலிருந்து செங்கோலைப் பெற்று - சகல விருதுகளுடன் ஸ்வாமி இரண்டாம் திருச்சுற்றில் வலம் வந்து அன்னையின் கையில் மீண்டும் ஒப்புவிக்கும் வைபவம் நிகழ்ந்தது. சித்திரை முதல் ஆவணி வரை அன்னை மீனாட்சி கொலுவிருந்து அரசாட்சி நிகழ்த்துவதாக ஐதீகம்.

வேப்பம்பூ மாலையுடன் வீதி வலம்


மங்கலம் அருளும் மதுரைக்கு அரசி
வேப்பம்பூ மாலையணிந்து வீதி வலம் வருகின்றாள்.. 
மீன் - தன் குஞ்சுகளைப் பார்வையால் வழிநடத்துவதைப் போல - 
நம்மை நடத்துபவள். அதனாலேயே மீனாட்சி எனும் திருப்பெயர்..

அவள் - கருங்கண்ணி.. கயற்கண்ணி.. அங்கயற்கண்ணி!..

பாண்டியர்க்குரிய வேப்பம்பூ மாலையைத் தரித்துக் கொண்டு -
நம் குலம் விளங்க பவனி வருகின்றாள்!..

படியளக்கும் பராசக்தி - பட்டம் ஏற்று வருகின்றாள்!..
பாதமலர்களில் தலை வைத்து வணங்குவோம்..
வேண்டியதை அருள்வாள் - வேதநாயகி!..

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப்பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறீயும் சிவலோகமும் சித்திக்குமே!.. (28)
அபிராமி அந்தாதி.

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.
* * *

16 கருத்துகள்:

 1. தஞ்சையில் இருக்கும் எங்களையும் மதுரைக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. மதுரையம்பதியில் நடைபெறும் சித்திரை திருவிழா படங்களுடன் கூடிய பக்தி மணம் கமழும் பதிவு இறையின்பத்தை இனிதே தந்தது. நன்றி அன்பரே!
  அருள் மனம் ஆனந்தம்!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 3. மதுரையம்பதி நிகழ்வுகளை வெளியிட்ட தஞ்சையம்பதிக்கு எமது வாழ்த்துகளும் நன்றிகளும் புகைப்படங்கள் அருமை வாழ்க நலம் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 4. மதுரையம்பதி பற்றிய விளக்கங்களும், படங்கலும் மிகவும் அருமை ஐயா! நேரில் கண்டது போன்ற ஒரு உணர்வு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 5. படங்கள் அனைத்தும் சிறப்பு ஐயா... நாங்களும் கலந்து கொண்ட உணர்வு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. படங்களுடன் விளக்கமும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. பாண்டியருக்குரிய வேப்பம்பூ மாலை அணிந்து நம் குலம் விளங்க பவணி வருபவளை அழகுற பதிவில் வைத்த சோழ தேசத்தாருக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 8. தலை நகர் தில்லியிலிருந்தே மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவின் நிகழ்வுகளை படங்கள் மூலம் கண்டு ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு