நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 06, 2015

ஆற்றுக்கால் பகவதி

மலையாள தேசத்தின் மாபெரும் பொங்கல் திருவிழா. 

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயிலில் நேற்று வெகு கோலாகலமாக நடைபெற்றது. 


முழுவதும் பெண்களே முன்னின்று நடத்தும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா, கடந்த பிப்ரவரி 25 அன்று தொடங்கியது.
அன்றைய தினம் காலை 8 மணிக்கு பகவதி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.

தொடர்ந்து பகவதி அம்மனுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெற்ற நிலையில்
ஒன்பதாம் நாள் விழாவாக -

நேற்று (5/3) காலை மகத்தான பொங்காலை எனும் பொங்கல் திருவிழாவுக்கு ஆயத்தமானார்கள்.

காலை10.15 மணிக்கு கருவறையில் அம்பிகையின் முன்னிருந்த தீபத்தில் இருந்து - தந்திரி புதியதொரு தீபம் ஏற்றி மேல்சாந்தியிடம் வழங்கினார்.

அதைப் பெற்று கோயில் திடப்பள்ளியில் உள்ள அடுப்பில் தீ ஏற்றினார்.

தொடர்ந்து, ஏனைய மேல்சாந்திகள் கோயில் முன் உள்ள பண்டார அடுப்பில் தீ ஏற்றினர்.

பொங்கல் தொடங்கியதற்கு அறிகுறியாக செண்டை மேளங்கள் முழங்கின.
வெடி முழக்கும் நடைபெற்றது.



கோயிலைச் சுற்றிலும் ஆறு கி.மீ., தொலைவு வரை பொங்கலிடத் தயாராக இருந்த பெண்கள் குலவையிட்டு - அடுப்புகளில் தீ ஏற்றி பொங்கல் இட்டனர்.
பிற்பகல் 2.00 மணி அளவில் நூற்றுக்கணக்கான பூஜாரிகள் சந்நிதானத்தில் இருந்து தீர்த்தத்துடன் புறப்பட்டு திருக்கோயிலைச் சுற்றி எல்லாப் பகுதிகளுக்கும் சென்றனர்.

தனித்தனியாக எல்லா பொங்கல் பானைகளிலும் புனித நீர் தெளித்து பகவதி அம்மனுக்கு பொங்கலை நிவேத்யம் செய்தனர்.

பொங்கல் நிவேத்யம் நடைபெற்றதும் ஒருவருக்கொருவர் பிரசாதம் வழங்கி மகிழ்ந்தனர்..

இரவு பகவதி அம்மன் நகர் வலம் எழுந்தருளினாள்.

இன்று (6/5) இரவு 8.15 மணிக்கு காப்பு அவிழ்த்து,  11.30 மணி அளவில் விழா நிறைவு பெறும்.


கடந்த ஆண்டு பொங்கல் விழாவில் 30 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

அந்த அளவில் இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டார்கள் என யூகிக்கப்படுகிறது.
1997, பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற பொங்கல் விழாவில், 15 லட்சம் பெண்கள் கலந்துகொண்டதாக, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் ஆற்றுக்கால் பொங்கல் இடம் பெற்றது.


அதுபோல் 2009 மார்ச் 10 அன்று நடைபெற்ற பொங்கல் விழாவில், 25 லட்சம் பெண்கள் கலந்துகொண்டதாக மீண்டும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததாக செய்திகள் கூறுகின்றன.

கேரள மக்கள் மட்டுமின்றி - தமிழகத்திலிருந்து ஏனைய மாநிலங்களில் இருந்தும் - வெளிநாடுகளில் இருந்தும் பெண்கள் திரண்டு வந்து பகவதி அம்மனுக்குப் பொங்கலிட்டு மகிழ்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சபரிமலைக்குச்செல்லும் வழியில் - இரவு அர்த்தஜாம பூஜையை சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயிலில் தரிசித்து விட்டு நள்ளிரவில் திருவனந்தபுரத்தை வந்தடைந்தோம்.

இங்கே தங்கி விட்டு காலையில் பகவதியைத் தரிசனம் செய்து விட்டு பத்மநாப ஸ்வாமியை தரிசிக்கலாம் - என்றார் குருசாமி.

அரைத் தூக்கத்தில் இருந்த நான் ஆச்சர்யத்துடன் கண் திறந்து நோக்கினேன்!..


என்ன தவம் செய்தேன் தாயே.. நான் உன் மடியில் கண்ணுறங்குதற்கு!.. என்று மனம் துள்ளியது.

விசாலமாக அமைக்கப்பட்டிருந்தது கூடாரம். பார்க்கும் இடம் எங்கும் சுத்தம்!..

ஆங்காங்கே மக்கள் நடமாட்டம் இருந்தாலும் - யாதொரு தடையும் இல்லாதிருந்தது.

கூட வந்தவர்கள் குறட்டைச் சாமிகளாகி விட - நான் விழித்துக் கொண்டிருந்தேன். சர்வமும் ஒடுங்கி மனம் ஒரு குழந்தையானது.

சந்நிதானத்தின் வெளிநடையை அவளது மடியாகக் கொண்டு தலை சாய்த்தேன்.

யாரோ மயிலிறகால் வருடுவது போலிருந்தது.

அன்னையின் மடியில் அல்லவா தலை சாய்த்திருப்பது!..
வருடுவது அவளல்லாமல் வேறு யார்!..

நான்கு மணிக்கெல்லாம் வெடி முழக்கம். நடை திறக்கும் நேரம்.

அவசரமாக எழுந்து மெதுவாக நடந்தேன்.
பாதங்களில் பித்த வெடிப்பு. பருக்கைக் கற்கள் குறுகுறுத்தன.

நீள நீளமான குழாய்கள் கொண்டு - ஒரே நேரத்தில் பலர் நீராடுமாறு வசதி செய்து வைத்திருந்தார்கள்.

அலுப்பு தீரக் குளித்து விட்டு அன்னையின் சந்நிதி நோக்கி நடந்தேன்.

அதற்குள்ளாக நடை திறக்கப்பட்டிருந்தது.

பொழுதும் விடிந்து கொண்டிருக்க - என் கண்கள் வியப்பால் விரிந்தன.

சொல்லி வைத்தாற்போல தமிழகத்தின் திருக்கோயில் போலவே!..

அழகழகான சுதை சிற்பங்கள். நேர்த்தியான வடிவமைப்புகள். கண் கொள்ளாக் காட்சி!..

கோபுர வாசலில் திருவிளக்குக்கு என்று நல்லெண்ணெய் விற்கின்றனர்.

கோயிலினுள் - கண்ட இடங்களிலும் விளக்கேற்ற அனுமதியில்லை.

கருவறைக்கு எதிரே அகண்ட தீபம் எரிந்து கொண்டிருக்கின்றது. அதில் ஊற்றி விட வேண்டியது தான்!..

அகண்ட தீபத்திலிருந்து வழியும் எண்ணெய் -விளக்கிற்கும் கீழே உள்ள பெரிய அண்டாவில் நிறைகின்றது.

அங்கிருந்து பிற சந்நிதிகளுக்கு எண்ணெய் எடுத்துக் கொள்கின்றனர்.

முண்டியடித்துக் கொள்ளாமல் - ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக - ஒரு சேரநின்று அன்னையை - அகிலாண்ட நாயகியை ஆற்றுக்கால் பகவதியை கண்ணாரக்கண்டு கை தொழுகின்றனர்.

போ.. போ!.. - என்றோ,  விலகு.. விலகு!.. - என்றோ யாரும் கூறவில்லை..

குறைகளை முறையிட்டவாறு ஆனந்தப் பரவசத்துடன் தரிசனம்.

அவளுக்குத் தெரியாதா!.. - நம்முடைய குறைகள்?..


என் பிள்ளை நீ!.. உனக்கு என்ன குறை! - அன்னை புன்னகைக்கின்றாள்.

ஆம் தாயே!. உன் பிள்ளை எனக்கு ஏது குறை?.. - நாமும் புன்னகைக்கின்றோம்.

அன்னையின் புன்னகைப் பூக்களே - மகாபிரசாதம்!..

கருவறையினுள் - கற்பக விருட்சமாக அன்னை திகழ்கின்றாள்.

பூதகியின் மீது ஆரோகணித்தவளாக பகவதியின் திருக்கோலம்.

ஸ்ரீஆதிசங்கரர் - பகவதியின் சந்நிதியில் ஸ்ரீ சக்ரம் அமைத்துள்ளார்.

திருக்கரங்களில் - சூலம், கத்தி, கேடயம், கபாலம் - என விளங்குகின்றன.

அவளுடைய திருமேனியில் ஒளிரும் கற்கள் பதிக்கப் பெற்ற தங்கக் கவசம் திகழ்கின்றது.

மூலத் திருமேனியின் கீழாக அபிஷேகத் திருமேனியும் விளங்குகின்றது.

கருவறையின் வலப்புறமாக சிவ சந்நிதி அமைந்துள்ளது..

கருவறையைச் சுற்றிலும் - கணபதி, தக்ஷிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், நாகர் - சந்நிதிகள் அமைந்துள்ளன.

சர்ப்ப காவு எனப்படும் நாக பீடத்தில் விஸ்தாரமாக பூஜைகள் நிகழ்கின்றன.

நான் நின்று தரிசித்த போது, அபிஷேகப் பால் வழங்கினார் - பூஜாரி.

நம்ம ஊர் மாடஸ்வாமி - இங்கே மாடன் தம்புரான் என வணங்கப்படுகின்றார்.

தனி சந்நிதியில் பதுவை அமைத்து திருமுக மண்டலம் சாத்தியுள்ளனர்.

ஸ்ரீமாடஸ்வாமி - ஆற்றுக்கால் பகவதி அம்மனின் திருமெய்க்காவல்!..


திருக்கோயிலில் ஸ்ரீகாளி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீராஜராஜேஸ்வரி -என அம்பிகையின் திருமேனிகள் சுதை சிற்பங்களாக இலங்குகின்றன.

மதுரையைத் தீக்கிரையாக்கிய கண்ணகி - கொடுங்கலூர் செல்லும் வழியில் இங்கே இளைப்பாறியதாகவும் - அவளது கோபத்தை அம்பிகை ஆற்றுப் படுத்தியதாகவும் சொல்லப்படுகின்றது.

கிள்ளி ஆற்றில் நீராடிய அன்பர் ஒருவரிடம் -  சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை இடையுடுத்தி வந்த அம்பிகை -

என்னை அக்கரையில் விட முடியுமா!.. எனக் கேட்டிருக்கின்றாள்..

பிறர்க்கென வாழும் குணமுடையவராகிய அவரும் -

இதை விட எனக்கு வேறெது மகிழ்ச்சி!.. -

என அந்த சிறு பெண்ணை அக்கறையுடன் அக்கரையில் சேர்த்திருக்கின்றார்.

அந்த அளவில் மனம் திருப்தியுறாமல் - அந்தப் பெண்ணை உபசரிக்க வேண்டும் என எண்ணியவராக நிமிர்ந்து நோக்க - அம்பிகை தரிசனம் தந்து தன்னுரு கரந்தாள்.

அதன் பின்னர் அவள் காட்டிய இடத்தில் சிறு ஆலயம் எழுந்தது.

அன்றைக்கு அம்பிகை தரிசனம் பெற்ற அன்பரின் வம்சாவளியினர் தான் இன்றும் அவளுக்கு ஆராதனைகளைச் செய்வதாக சொல்லப்படுகின்றது.


அன்பிருக்கும் இடத்தில் அம்பிகையும் இருப்பாள் 
என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை!.. 

மாசி மாதத்தில் - பூர நட்சத்திரமும் முழுநிலவும் கூடி வரும் நன்னாளில் இந்த பொங்கல் வைபவம் நடைபெறுகின்றது.

பொங்கல் வைக்கும் பெண்களின் ஊடாக - பகவதி அம்மனும் மானுட வடிவு தாங்கி வந்து பொங்கல் வைக்கின்றாள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

அம்பிகை வந்து பொங்கல் வைக்கும் போது 
அவளைச் சுற்றியிருந்த புண்ணியவதிகள் யாரோ!.. எவரோ!..

அவள் மட்டுமே அறிந்த ரகசியம் அது!.. 

யாராயினும் எவராயினும் - இவர்களின் ஊடாக 
அம்பிகை எழுந்தருளி இருந்தாள் எனக் கொண்டு - 
பேர் கொண்ட பெண்மையை 
சீர் கொண்டு போற்றி வணங்குகின்றேன்!.. 

யாதேவி சர்வ பூதேஷூ சக்தி ரூபேண சம்ஸ்திதா 
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

ஆற்றுக்கால் அம்பிகையின் திருவடிகள் சரணம்.. சரணம்!..  
* * * 

22 கருத்துகள்:

  1. கண்ணகி தகவல் உட்பட பல தகவல்கள் சிறப்பு ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக கேரளா சென்றிருந்தபோது பார்க்கவேண்டிய கோயில் எனக்குறித்துக் கொண்டுபோய் நான் பார்த்த கோயில்களில் இதுவும் ஒன்று. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஆற்றுக்கால் பகவதி பொங்கல் விழாபற்றி மலையாளிகளிடம் பலமுறை கேட்டு இருக்கின்றேன் ஆனால் தங்களிடமிருந்து நிறைய விடயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. மாமா வருட வருடம் அழைப்பார்கள். எங்கள் வீடு வரை பொங்கல் பானை இருக்கும், இந்த முறை 48 லட்சமாம். என் மாமா பெண் சொன்னாள்.
    அடுத்தமுறையாவது அம்மா என்னை கூப்பிடுவாள் என்று நினைக்கிறேன்.
    படங்களும் செய்திகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர் ..
      நிச்சயம் அம்மா கூப்பிடுவாள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. சில நாட்களாக கணினியின் பக்கம் வர இயலவில்லை ஐயா
    தேர்வு நெருங்கிவிட்டதல்லவா
    தங்களின் சில பதிவுகளை பார்க்காமல் விட்டிருப்பேன்
    இனி தொடர்வேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பள்ளியில் தேர்வு நேரம்.. அது தானே முக்கியம்!..
      பணிகளுக்கிடையேயும் வருகை தந்தற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. என் முனைவர் பட்ட ஆய்விற்காக பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழாவிற்கு செல்லவேன் என இருந்தன். ஆனால் இயலவில்லை, தாங்கள் சொல்லிய கண்ணகி கதையை அறிய, பிறகு இயலாத காரணத்தால் சில குறிப்புகளோடு விட்டுவிட்டேன். வாய்ப்பு கிடைக்கும் போது செல்ல வேண்டும்.தங்கள் பதிவில் தகவல்கள் அனைத்தும் அருமை.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      விரைவில் முனைவர் பட்டம் பெற வாழ்த்துகின்றேன்..
      இனிய வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. முனைவர் பட்டம் பெற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றுவிட்டது. தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

      நீக்கு
    3. அப்படியா... தாங்கள் குறிப்பிட்டதை என்னால் விளங்கிக் கொள்ள இயலவில்லை!.. ஆனாலும் என்ன!..
      முனைவர் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  7. ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழா..எவ்வளவு செய்திகள்..ஐயா...நீங்கள் அருமையாக தரிசம் செய்து இருக்கிறீர்கள். நான் சிறு வயதில் சென்று இருக்கிறேன் கோவிலுக்கு. திருவிழா சமயத்தில் போனதில்லை. அம்பிகையே பொங்கல் இடுவாள் என படிக்கும் போது மெய்சிலிர்க்கிறது. நல்ல நல்ல தவல்கள் சமயம் அறிந்து கொடுக்கிறீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      வீட்டில் அனைவருமாக செல்லவேண்டும் என ஆவல் இருக்கின்றது
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அருமையான பகிர்வு ஐயா...
    ஆற்றுக்கால் பகவதி அம்மனைப் பற்றி நிறையத் தகவல்கள்...
    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் மகனுக்கு உடல் நலமில்லை என அறிந்தேன்..
      கவலை வேண்டாம். விரைவில் நலம் பெறுவான்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அருமையான பகிர்வு.

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் பற்றிய தகவல்கள் அனைத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. நான் இதுவரை அந்தக் கோவிலுக்குப் போனதில்லை.அங்கு மக்கள் பகவதிக்குப் பொங்கல் அல்ல பொங்கால் படைக்கிறார்கள்....1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..