நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 28, 2014

ஆலய தரிசனம் - 2

நாளைக்கு வைத்தீஸ்வரன் கோயில். அப்படியே திருக்கடவூருக்கும்!..

- என்று என் மனைவி சொன்னபோது -  இரவு மணி பத்தரை.

விடிந்த பொழுது நவம்பர் பதினொன்றாம் நாள் - செவ்வாய்க்கிழமை.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து  முடித்து - வீட்டில் விளக்கேற்றி வணங்கி விட்டு வாசலுக்கு வந்தால் - எதிரில் கும்பகோணம் செல்லும் பேருந்து!..


பேருந்தில் கூட்டம் அதிகமில்லை. அது ஏழரை மணியளவில் கும்பகோணம் பேருந்து நிலையத்திற்குள் நுழையும் முன்பாகவே - மோதிலால் தெரு முனையிலேயே - எங்களுக்காக நின்று கொண்டிருந்தாற்போல மாயூரம் செல்லும் பேருந்து!..

அந்த பேருந்திற்கு மாறி பயணம் தொடர்ந்தது.


காலை ஒன்பது மணிக்கெல்லாம் - மயிலாடுதுறை!..

பேருந்து உள்ளே நுழைந்ததும் வலப்புறம் ஒரு பழைமையான உணவகம்.

நல்ல சுவையான இட்லி, சட்னி, சாம்பார் - காபி. காலைச் சிற்றுண்டி ஆயிற்று.

அந்தப் பக்கம் போனால் சீர்காழி பஸ் நிற்கும். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு டிக்கெட் எடுத்து விடலாம்!..

இவ்வளவு தூரம் வந்தாயிற்று. முதலில் மயூர நாதர் கோயிலுக்குபோகலாம். அப்புறமாக வைத்தீஸ்வரன் கோயில்!..

மயூர நாதர் கோயிலா!?.. நேரம் ஆகி விடுமே!..

அதெல்லாம் ஆகாது. செவ்வாய்க் கிழமை அதுவுமாக வைத்தீஸ்வரன் கோயிலில் கூட்டமாக இருக்கும். கோயில் கதவு அடைக்க ஒரு மணி ஆகிவிடும். இன்னும் நேரம் இருக்கின்றது.

மாயூரத்தில கோயில் எங்கே இருக்கு என்று தெரியுமா?..

தெரியுமாவா!.. நான் ஏற்கனவே வந்திருக்கின்றேன். அதோ தெரிகிறதே மணிக்கூண்டு அதுக்கு  தெற்காலே கொஞ்ச தூரம் நடந்தா அங்கே ஒரு பிள்ளையார் கோயில். அதிலேயிருந்து நேரா கிழக்கே போனா - மயூரநாதர் கோயில்!.. அவ்வளவு தான்!..

இப்படிச் சொல்லிவிட்டு பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து -

இடப்புறம் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ பிரசன்ன மாரியம்மனை கண்ணாரக் கண்டு தொழுதோம்.  பேசும் தெய்வம் அவள்!..

சந்நிதியை வலம் வந்து வணங்கினோம்.

அப்போது தான் திருக்கோயிலைக் கழுவி விட்டிருந்தனர். வேப்ப மரத்தின் அருகில் விழுந்து வணங்க முடியவில்லை.

அம்பாளின் குங்குமத்துடன் நடந்த நான் - வழியில் எதிர்ப்பட்ட சிலரிடம்,

மயூரநாதர் கோயிலுக்குப் போற ரோடு இது தானே!.. - என்று கேட்டதும் என் மனைவியிடம் இருந்து சிரிப்பு!..

பெரிய கோயிலுக்குத் தானே!.. இப்படியே போயி - கிழக்கால திரும்புங்க.. கோயிலுதான்!.. - என்று வழி கூறினார் ஒருவர்.

கொஞ்சம் யோசித்தால் அவரே அழைத்துக் கொண்டு போய் விடுவார் போலிருந்தது. அவ்வளவு அன்பு வார்த்தைகளில்!..

கோயிலுக்கு வழி தெரியும் - ந்னு சொல்லிட்டு எதுக்கு விசாரிப்பு எல்லாம்!..

அதுவா?.. இருபத்தைந்து வருஷத்துக்கு அப்புறம் நான் இங்கே வருகிறேன்.. அன்றைக்கு வீதியெல்லாம் ஓட்டு வீடும் திண்ணையுமா இருந்தது. இன்னைக்கு எங்கே பார்த்தாலும் முகத்திலடிக்கிற மாதிரி கண்ணாடி வைத்த கட்டிடமா போச்சு. அதுதான் கொஞ்சம் குழப்பம். அப்போ மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் தான் அதிகம். இப்போ தலை தெறிக்கிற வேகத்தில காரும் பைக்கும் தான் சாலையில்!.. ஓரத்தில் கூட ஒதுங்கி நடக்க முடியவில்லை.

மயிலாடுதுறையின் மாற்றத்தைப் பேசிக் கொண்டே  - மயூரநாதர் திருக் கோயிலின் வடக்கு வாசலுக்கு வந்து விட்டோம்.

இப்படியே போகலாம் தானே!..

போகலாம் தான்!.. ஆனாலும் கிழக்கு வாசல் வழியாகப் போறது தான் நல்லது.

மேலும் சிறிது தூரம் நடந்து  - வலப்புறம் திரும்பியதும் மதிலை ஒட்டியவாறு யானை மண்டபம்.

முகத்தைத் திருப்பியபடி ஏதோ யோசனையில் இருந்தது யானை!..


திருக்கோயிலின் வாசலில் பெரிதாக பந்தல். அலங்கார தோரணங்கள்..

என்ன திருவிழா நடக்கின்றதா!..

பின்னே!.. ஐப்பசி மாதம் அல்லவா!.. துலாஸ்நானம். முடவன் முழுக்கு வரை ஜே.. ஜே-ன்னு நடக்கும். இங்கே அது தானே விசேஷம். அம்பாள் மயிலாக வந்து தவம் பண்ணின இடம். ஈஸ்வரன் தானும் மயிலாக வந்து அம்பாளுடன் நடனம் ஆடினதால் மயூரநாதர் அப்படின்னு பேர் - தெரியுமா!..

அதுதான் எனக்குத் தெரியுமே!..  - உற்சாகமாக பதில் வந்தது.

இதோ.. திருக்கோயிலின் கிழக்கு வாசல். பிரம்மாண்டமான ராஜகோபுரம்.


ராஜகோபுரத்தின் காவல் நாயகன் - ஸ்ரீ தங்க முனீஸ்வரர்.

இஷ்ட தெய்வத்தின் முகம் கண்டதும் கஷ்டங்கள் கரைந்தது போலிருந்தது.

ராஜகோபுரத்தின் மாடத்தில் கண் காணும்படிக்கு -
ஸ்ரீநந்திகேஸ்வரரும் அவர்தம் தேவி ஸ்ரீசுயம்பிரகாஷினியும் ஸ்ரீ பைரவரும் புடைப்புச் சிற்பமாகத் திகழ்ந்தனர்.

திருப்படியைத் தொட்டு வணங்கி விட்டு திருக்கோயிலினுள் நுழைந்தோம். 



இரு வரிசையாக பச்சைப் பசேலென நீண்டு உயர்ந்த மரங்கள். மேக மூட்டமான  சூழ்நிலையில் குளுமையாக  இருந்தது.

இடப்புறமாக திருக்குளம். நீரின் நடுவில் நந்தி மண்டபம். இறங்கி தீர்த்தத்தினைத் தலையில் தெளித்துக் கொண்டு சந்நிதி நோக்கி நடந்தோம். 

காதுகளில் தேன் பாய்ந்ததைப் போல - ஓதுவார்களின் தேவார பாராயணம்.

இரண்டாவது திருவாசலைக் கடந்தால் நந்தி மண்டபம். கொடிமரம்.

திரளான பக்தர்கள்.. நந்தியின் அருகில் வயது முதிர்ந்த சிவனடியார்கள் வரிசையாக அமர்ந்திருக்க - அவர்களை வணங்கி அன்பர்கள் ஆசி பெற்றுக் கொண்டிருந்தனர். 

அந்தப் பெரியோர்களும் மனங்குளிர்ந்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியவாறு திருநீறு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.. 

நானும் என் மனைவியும்  - நந்தி மண்டபத்தில் அமர்ந்திருந்த பெரியோர்களை வணங்கினோம். பழுத்த சிவனடியார்களுடன் அம்மையார் ஒருவரும் இருந்தார். மங்கலகரமாக ஆசி கூறி விபூதி அணிவித்தார்கள். 

அப்போது தான் கவனித்தேன் - சிவனடியார்கள் அங்கே கூட்டு வழிபாடாக, சின்னஞ்சிறிய லிங்கங்களை வைத்து  சிவபூஜை செய்திருந்ததை.

அந்த வேளையில் அன்பர்கள் சிலர் - சிவனடியார்கள் அனைவருக்கும்  துண்டு அணிவித்து சிறப்பு செய்தனர்.

என்ன விசேஷம்?.. -  என்று வினவினேன்.

இன்னிக்கு அஞ்சாம் திருவிழா. மயிலம்மா பூஜை செஞ்ச நாள்!..

எங்களுக்கு மேனி சிலிர்த்தது. என்னே ஒரு பேறு!.. 

மகிழ்ச்சியில் திக்கு தெரியாமல் போனது மனதிற்கு!.. கண்கள் கசிந்துருகின. ஆனந்தப் பரவசத்தில் ஓரிரு நிமிடங்கள் சிலையாகி விட்டேன்.

மீண்டு வந்த பொழுதில் - சிவனடியார்கள் - பூஜை செய்த நிர்மால்யங்களை விசர்ஜனம் செய்து கொண்டிருந்தனர்.

எனக்கு சற்றே வருத்தம். ஒரு இனிய நிகழ்வினைப் படம் எடுக்கத் தவறி விட்டோமே என்று!..

மனைவியிடம் சொன்னேன். 

ஆமாம்.. நீங்கள் கண்ணில் கண்டதற்கெல்லாம் இங்கும் அங்கும் ஓடுவீர்கள்.. முக்கியமானதை கோட்டை விட்டு விடுவீர்கள்!..

அதிகார நந்தி - அமைதியாக இருந்தார்.

அவரை வணங்கியபடி சந்நிதிக்குள் நுழைந்தோம்.


அம்பிகை மயிலாக வழிபட்டதிருத்தலம். அம்பிகையின் அன்பினைக் கண்டு மகிழ்ந்த ஐயன் அவளுடன் தானும் மயிலாக மாறி ஆடிக் களித்த திருத்தலம்.

ஐயனின் திருத்தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படுகின்றது.

அது கண்டு நான்முகன் இந்திரன் ஆகியோருடன் தேவகுரு பிரகஸ்பதியும் அகத்திய மகரிஷியும் கங்கையும் காவிரியும் வணங்கி வழிபட்ட திருத்தலம்.

தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணியார்ந் தவருக் கருளென்றும்
பிணியா யினதீர்த் தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே!..(1/38)

- என்று ஞானசம்பந்தப் பெருமானும்,

நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
கலைக ளாயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.!..(5/39)

- என்று திருநாவுக்கரசு சுவாமிகளும் - பாடிப்பரவிய திருத்தலம்.

காசிக்குச் சமமான ஆறு திருத்தலங்களுள் இதுவும் ஒன்று.

மற்ற ஐந்து  - திருவையாறு, திருவிடைமருதூர், திருவெண்காடு, சாயாவனம்,  ஸ்ரீவாஞ்சியம் - என்பன.

காவிரித் தென் கரையில் முப்பத்தொன்பதாவது திருத்தலம் - மாயூரம்.
திருமூலஸ்தானத்தினுள் அருட்பெருஞ்சோதியாக ஐயன் மயூரநாதன்!..

நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..
இமைப் பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!..

- என்று போற்றித் துதித்து வணங்கி நின்றோம். 

தீப ஆராதனை. ஆனந்த தரிசனம். திருநீறு தரித்துக் கொண்டு சந்நிதியை வலம் செய்தோம். 

திருச்சுற்றின் வடபுறம் தக்ஷிணாமூர்த்தியின் திருக்கோட்டத்துக்கு முன்பாக விநாயகர் எழுந்தருளியிருக்க - அருகில் குதம்பை சித்தர். 

சித்தர் பெருமான் இங்கே ஐக்கியமாகியிருக்கின்றார். பணிந்து வணங்கியபின் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி தரிசனம்.

மேல் திருச்சுற்றில் லிங்கோத்பவருக்கு எதிரில் - ஸ்ரீ குமரகோட்டம்.

மூலஸ்தானத்திற்கு இணையாக கருவறையின் பின்னால் விளங்குகின்றது.

வயலூர் முருகன் சந்நிதியும் இப்படித்தான் திகழ்கின்றது.

எழில்வளை மிக்கத் தவழ்ந் துலாவிய 
பொன்னிநதி தெற்கில் திகழ்ந்து மேவிய 
இணையிலி ரத்னச் சிகண்டியூருறை பெருமாளே!..

- என்று அருணகிரி நாதர் திருப்புகழ் பாடி மகிழ்ந்த சந்நிதி..

ஸ்ரீ வள்ளி தேவயானையுடன் - திருமுருகனின் திவ்ய தரிசனம்.

மேலைத் திருச்சுற்றில் ஸ்ரீமஹாவிஷ்ணு
திருமுருகனின் சந்நிதிக்குப் பின்னால் - மேல் நடையில் ஸ்ரீ மஹாவிஷ்ணு திகழ்கின்றார். அவருக்கு அருகில் பஞ்சபூத சிவலிங்கங்கள் விளங்குகின்றன.

தென்புற திருக்கோட்டத்தில் ஆலிங்கன மூர்த்தி. 

கருணையுடன் மகிஷமர்த்தனி ஸ்ரீ துர்க்காம்பிகை. சண்டீசர் சந்நிதி.

அழகே உருவான நடராஜர் சந்நிதி. ஈசான்யத்தில் ஸ்ரீபைரவர். மற்றும் நவக்கிரங்கள்.

ஆண்டாண்டு காலமாய் ஐயனின் அடி தொழுத புண்ணியம் - ஆனந்தம் மனதில் ஊற்றெடுக்கின்றது.

மீண்டும் சந்நிதி கண்டு மயூர நாதனை மனங்குளிர வணங்கியபடி வெளித் திருச்சுற்றுக்கு வந்தோம்.




விசாலமான திருச்சுற்று. மிகவும் சுத்தமாக இருக்கின்றது திருக்கோயில்.

கொடிமரத்தடியில் நமஸ்கரித்து விட்டு - அம்பிகையின் சந்நிதியை நோக்கி நடந்தோம்.

இங்கே கிழக்கு நோக்கியவளாக - ஐயனின் இடப்புறம் திருக்கோயில் கொண்டு விளங்குகின்றனள்.

திருவையாற்றிலும் இப்படியே!.. அறம்வளர்த்த நாயகி  கிழக்கு நோக்கியவள்.

கோபுர வாசலைக் கடந்து உள்ளே நடக்கையில் மனம் விம்முகின்றது - இளங்கன்றென!.. 

மயிலம்மாள் என்பது செல்லப்பெயர். 
அபயாம்பிகை என அன்புடன் வழங்கப்படுகின்றாள். ஆயினும்,

அஞ்சொல் உமை பங்கன் என்பது - அப்பர் ஸ்வாமிகளின் திருவாக்கு.

அதனால் - அஞ்சொல்லாள் - குளிர்ந்த சொற்களை உடையவள் என்பது திருக்குறிப்பு.

அம்பிகை வலக்கரத்தில் கிளியினைத் தாங்கியவளாகத் திகழ்கின்றனள்.

ஆடி வெள்ளிக் கிழமைகளில் அம்பிகை காவிரி கரைக்கு எழுந்தருள்கின்றாள்.

திருக்கயிலையில், ஈசன் அம்பிகைக்கு வேத உபதேசம் செய்கையில் ஊடாகப் புகுந்தது மயில் ஒன்று. அப்போது அம்பிகையின் கவனம் மயிலின் மீது சென்றது.

விளைவு - அம்பிகை மயிலாக உருமாறி , கங்கையினும் புனிதமாகிய காவிரிக் கரையில்  - சிவபூஜை புரிந்தனள்.


அம்பிகையைப் பிரிந்திருக்க இயலாத பெருமான் - பிரியமுடன் தானும் மயிலுரு கொண்டு அவளுடன் ஆடிக் களித்தனன். அன்புடன் கூடிக் களித்தனன் என்பது ஐதீகம். 

அன்னையின் அழகு தரிசனம் கண்டு நெஞ்சம் ஆனந்தக் கடலாக ஆர்ப்பரித்தது.

அவளுடைய கடைக்கண்கள் அனைத்தையும் அள்ளி வழங்கியதாக உணர்வு!..

அணி மயிலென வரும் அம்பிகை போற்றி!..
பிணி வினை தீர்க்கும் அஞ்சொல்லாள் போற்றி!..

- எனத் துதித்தவாறு வலஞ்செய்து வணங்கினோம்.

காமகோட்டத்தின் சுவர்களில், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய அபயாம்பிகை சதகம் பதிக்கப்பட்டுள்ளது.

திரும்பவும் நந்தி மண்டபம். கொடிமரம். அங்கே -

ஐந்தாம் நாளின் வீதியுலாவிற்காக - ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன.

அங்கிருந்த சிவாச்சார்யார் ஒருவரிடம்  தயக்கத்துடன்,  புகைப்படம் எடுக்கலாமா?.. - என்று கேட்டேன்.

எடுத்துக் கொள்ளுங்கள்!.. - என்று புன்னகைத்தார்.

அந்தப் படங்கள் மூன்றும் இதோ!..




ஐயனுக்கு பூத வாகனமும் அம்பிகைக்கு பூதகி வாகனமும் தயாராக இருந்தன.

அங்கேயே - திருக்கோயிலில் - இன்னும் கொஞ்ச நேரம் இருக்க ஆசைதான்.
ஆனாலும், பத்து மணிக்கு மேலாகி விட்டது.

மீண்டும் நெஞ்சார வணங்கி விட்டு புறப்பட்டோம்.

சாலைக்கு வந்ததுமே - புதிய பேருந்து நிலையம் வரைக்கும் செல்லும் அருகில் வந்து நின்றது பேருந்து.

புதிய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து அந்த சிறிய கடைத்தெரு வழியே நடந்தால் - வழி நெடுக பச்சைப் பசுங்காய்கறிகள்!.. பழங்கள்!..

மறக்க இயலாத நகரம் மயிலாடுதுறை.

மண் மணம் மாறாத வண்ணம் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் இந்நகரைச் சுற்றிலும் பல திருக்கோயில்கள் விளங்குகின்றன!..


திருமதி பக்கங்கள் எனும் இனிய தளம்..

அதில் நல்ல பல விஷயங்களைப் பதிவிடும் - அன்புக்குரிய கோமதி அரசு அவர்கள் மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் வேறு ஏதோ ஒரு ஊர் என்று தான் எண்ணியிருந்தேன்.

ஆனால் - அவர்கள் மயிலாடுதுறையில் தான் இருக்கின்றார்கள் என்பது சில தினங்களுக்கு முன் தான் தெரிய வந்தது.

முன்பே அறிந்திராமையால் அவர்களைச் சந்திக்க இயலவில்லை..

வேறொரு இனிய வேளையில் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பினை எல்லாம் வல்ல எம்பெருமான் அருள்வாராக!..

பேருந்து நிலையத்தில் மீண்டும் ஒரு அருமையான காபி!..

வைத்தீஸ்வரன் கோயில் செல்லும் பேருந்து -  வா.. வா!.. - என்றது.

வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் திருக்கடவூர் தலங்களைத் தரிசனம் செய்து விட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்த போது மாலை - 6.30.

ரயில்வே ஸ்டேஷனுக்கு சற்று முன்பாக எப்போதும் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தேநீர் கடையில் வடையும் டீயும் அருமையாக இருந்தன.

அங்கிருந்து தஞ்சாவூர் பாசஞ்சர் புறப்பட்ட போது இரவு - 7.45.

இரவு பத்து மணியளவில் வீட்டை அடைந்து கணிணியைத் திறந்தால் - Facebook - ல், அன்றைய தினம் மயிலாடுதுறையில் ஸ்வாமி எழுந்தருளிய திருக்காட்சி.

அத்துடன் முந்தைய  நாள் எழுந்தருளிய திருக்கோலங்களும்!..

அந்த நான்கு படங்களும் இதோ!..





எங்கோ - எவரோ விரும்பி தேர்வு செய்திட  - எனக்கு படங்கள் வந்திருந்தன.

அனுப்பியவர் யாரென்று தேடினேன். கடல் கடந்த முகவரியைக் காட்டியது.  

திருவிழாக்களை முழுமையாகத் தரிசனம் செய்ய இயலவில்லையே என்ற ஏக்கம் எங்கள் மனதிற்குள் இருந்தது.

எல்லாம் அறிந்த எம்பெருமான் - ஏதோ ஒருவழியில் இனிதே திருக்காட்சி நல்கினன்.

என் மகனையும் மனைவியையும் அழைத்துக் காட்டினேன்.

எம்மைத் தொடர்ந்து வரும் ஈசனின் செயலன்றி வேறொன்றால் ஆவது ஏதுமில்லை!.. - என்று இறைவனின் கருணைக்குள் ஆழ்ந்தோம்.

அந்த அளவில் மனம் மகிழ்வாக இருக்கின்றது.
அதற்கு மேல் வேறெதுவும் தேவையாய் இருக்கவில்லை.

துலா ஸ்நானம் - பழைய படம்
வைத்தீஸ்வரன் கோயில் - திருக்கடவூர்  தலங்களின் தரிசனம் விரைவில்!..

ஐயனும் அம்பிகையும் அருள்மழை பொழிய
மீண்டும் வணங்குகின்றேன்..


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
* * *

22 கருத்துகள்:

  1. மயூரநாதர் பற்றிய தகவல்களும், படங்களும் விவரணமும் மிக அருமை!

    வைத்தீஸ்வர்ன் கோயில் சென்றிருக்கின்றோம். மயூர நாதர் சென்றதில்லை. செல்ல வேண்டும். மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      மயிலாடுதுறை சென்று வர வேண்டுகின்றேன்.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் ஐயா!

    அற்புதமான படங்களும் பதிவும் ஐயா!
    கூடவே நானும் வந்ததுபோல உங்கள் எழுத்துநடை
    என்னை மிகவே ஈர்த்தது ஐயா!
    மிக மிக அருமை! உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்திட மனதில் எண்ணியும் சில சூழ்நிலை இடையூறுகளால் அவ்வப்போது வலைக்கே வரமுடியாது போய்விடுகிறது எனக்கு!. வருத்தமே!..

    தங்களின் பதிவுகளைப் படிக்கவும் பார்க்கவும் நாமும்
    இவையெல்லாம் வந்து கண்டு வணங்கி ஈடேறுவோமா
    என என்னுள் ஏக்கம் மேலிடத்தொடங்கிவிட்டது ஐயா!
    இப்படியாயினும் கண்டு ஆறிக்கொள்கின்றேன்! அதுவரையிலாயினும்
    இறையருள் எனக்கும் கிட்டியுள்ளது மகிழ்வே!
    முடிந்தவரை தொடர்கிறேன் ஐயா!..

    உங்கள் ஆன்மீகப் பயணத்தைத் தொடருங்கள்!..
    நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..
      தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்..
      வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. அருமையான ஆலய தரிசனம்.
    எங்கள் ஊருக்கு வந்து இருக்கிறீர்கள். என்னைப்பற்றி குறிபிட்டதற்கு நன்றி.
    அடுத்தமுறை மாயவரம் வரும் போது வாருங்கள்.
    படங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் அன்பின் அழைப்பும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மயூரநாதர் பற்றிய படங்களும் பகிர்வும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. எங்கள் பயணத்தின்போது திருமதி கோமதி .அவர் கணவர் அரசுவுடன் மயூர நாதர் கோவில் சென்றிருந்தது நினைவில். அபயாம்பிகை படம் ஒன்று வாங்கினேன். ஓவியமாக்க. துவங்கி இருக்கிறேன். வைத்தீஸ்வரன் கோவில் ஒவ்வொரு வருடமும் போய் வருவது. இந்த முறை திருக்கடையூருக்கும் போய் வந்தோம். இந்த ஆண்டுமுழுவதும் பிரதிமாதம் பிரசாதம் வரும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      அபயாம்பிகையின் ஓவியத்தை நிறைவு செய்து விரைவில் பதிவில் இடுங்கள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. எங்களையும் கை பிடித்து கோயிலுக்கு அழைத்துச் சென்று
    வணங்க வைத்த ஓர் உணர்வு தோன்றியது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு உற்சாகம். மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. முடவன் முழுக்கிற்குப் போய் அருள் பெற்று வந்திருக்கிறீர்கள். எங்களையும் கூடவே அழைத்து சென்றத் திருப்தி தந்தது பதிவு. அங்கிருக்கும் வள்ளலார் கோவிலிற்கு வியாழக்கிழமையன்று குரு பகவான் தரிசனம் பெறுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அடுத்த முறை கண்டிப்பாக உத்தரமாயூரம் வள்ளலார் கோயிலுக்குச் செல்லவேண்டும்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஆலயதரிசனம் – மாயவரம் கடைத் தெருவில் உங்களுடனேயே தொடர்ந்து கோயிலுக்கு நடந்து சென்றது போன்ற உணர்வு. படஙளும் வழி நடத்திச் சென்றன. அடுத்த ஊர் பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      வாருங்கள்.. மகிழ்ச்சியுடன் பயணிப்போம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. மயூரநாதரை தரிசித்தோம். அழகான இடங்கள் அதை எங்களுக்காக புகைப்படமாய் பிடித்து வந்ததற்கு நன்றி ஐயா. வைத்தீஸ்வரன் கோவில் சென்று இருக்கிறோம். இங்கும் செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  10. தங்களுடன் கூடவே வந்தது போன்ற உணர்வு வந்து விட்டது நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      கலகலப்புடன் தங்கள் வருகையும் மகிழ்ச்சியே!.. நன்றி..

      நீக்கு
  11. மயூரநாதர் கோயில் பல முறை சென்றுள்ளேன். இருப்பினும் உங்களோடு தற்போதைய பதிவின் வழியாக பயணித்தபோது பல புதிய செய்திகளையும் அருமையான புகைப்படங்களையும் காணமுடிந்தது. பதிவுகளின் மூலமாக தலப்பயணத்திற்கு எங்களை அழைத்துச்செல்லும் தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.
      தங்கள் பதிவிலும் ஒரு இனிய சுற்றுலாவினைக் கண்டேன்.
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..