நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 15, 2014

நெஞ்சம் மறப்பதில்லை

ரூபாய் நூற்று இருபது!.. 

15 ஜூலை 1903
கொடுத்து அனுப்பியவர் தமிழக முதல்வர் திரு கு. காமராஜர். 
பெற்றுக் கொள்ள வேண்டியவர் முதல்வரின் தாயார் சிவகாமி அம்மாள்.
கொண்டு வந்திருப்பவர் நம்பிக்கைக்குரிய முருக தனுஷ்கோடி.  

பெற்றெடுத்து பேணிக்காத்து வளர்த்த தாயாரின் செலவுக்காக மாதந்தோறும் மகன் கொடுத்தனுப்பும் பணம் அது.   

பணம் கொண்டு வந்திருந்த முருக தனுஷ்கோடியிடம் - சிவகாமி அம்மையார் - மெதுவாகச் சொன்னார். 

பேரனுக்கு கல்யாணம் ஆகப்போகுது. நம்ம வீட்டுக்கு புதுசா ஒரு பொண்ணு வரப் போறாள். நமக்கு பழகிப்போச்சு., ஆனா அதுக்கு சங்கடமா இருக்கும். நம்ம வீட்டு கொல்லப் புறத்துல ஒரு கக்கூஸ் கட்டணும்.  அதுக்கு ஒரு மூவாயிரம் ஆவும்.
நீ அடுத்த வட்டம் வாறப்ப  ஐயா கிட்ட சேதியச் சொல்லி வாங்கியாருவியா.. ராசா!?..

சென்னைக்குத் திரும்பிய
முருக தனுஷ்கோடி -  அப்படியே காமராஜரிடம் சொன்னார். 

வந்ததே கோபம் அவருக்கு!..

அம்மா கக்கூஸு கட்ட பணம் கேக்கறா. ஆனா ஊர்ல உள்ளவங்க நான் ஏதோ பங்களா கட்டுனதா சொல்லுவாங்க..  பத்திரிக்கைல சேதி வர்ற அளவுக்கு கொண்டு போயிருவாங்க.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்னு சொல்லு!.

அதன்பிறகு, தாய் சொல்லி அனுப்பிய சேதியில் இருந்த நியாயத்தை உணர்த்தி - மகனிடம் அனுமதி பெற்றார் - தனுஷ்கோடி.

இனி இப்படி ஒரு சம்பவம் கேள்விப்பட முடியுமா - இந்தத் தமிழகத்தில்!.. 


எதிர்பாராத விதமாக தன் மகனைப் பார்த்ததும் சிவகாமி அம்மையாருக்கு மிக்க மகிழ்ச்சி!.. தாயின் நலம் விசாரித்தார் மகன். ஆனாலும் அவரது பார்வை - வீட்டு முற்றத்தில் இருந்த தண்ணீர்க் குழாயில் நிலைத்தது. 

இது ஏது புதுசா?.. - வினா தெறித்து வந்தது.

விருதுநகர் நகராட்சி அதிகாரி ஓடி வந்து பதில் சொன்னார்.

ஊர்ல இருக்கிற எல்லா வயசானவங்க வீட்டுக்கும் இந்த மாதிரி போட்டுக் கொடுப்பீங்களா?... - முதல்வரின் கேள்விக்கு அதிகாரியால் பதில் கூற இயல வில்லை.

உன்னை விட வயசானவங்க, இல்லாதவங்க, இயலாதவங்க - எல்லாம்  வரிசையில நின்னு தெருக்குழாய்ல தண்ணி பிடிக்கிறாங்க!.. உனக்கு மட்டும் ஏன் வீட்டுக்குள் குழாய்?..

அடுத்த சிறு பொழுதுக்குள் - அந்த தண்ணீர்க் குழாய் அகற்றப்பட்டது.

என் தாயானால் என்ன!.. அவரும் பொதுமக்களில் ஒருவர் தான்!.. - எனக் கூறும் நகராட்சி உறுப்பினரைக் கூட எங்கும் காண இயலாது இந்நாளில்!..

உடல் நலமில்லாதிருந்த தங்கை - அண்ணனிடம் உதவி கேட்டு கடிதம் எழுதினார். அதற்கு பதில் வந்தது.

அன்பு நாகம்மை.. நீ பெரிய டாக்டரிடம் எல்லாம் போக வேண்டாம்! மதுரையிலே அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கு. அங்கே போனால் இலவச வைத்தியம் கிடைக்கும். உன் கைச்செலவுக்கு இருபது ரூபாய் அனுப்பி இருக்கிறேன். இதற்கு மேல் என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே!..
 

இந்த மாதிரி யாராவது இருக்காங்களா ஐயா?

ஏழைப்பங்காளன்
ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர்.

அடுத்த சில நிமிடங்களில்,  காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார்.

அங்கே அவர் கண்ட காட்சி விசித்திரமாக இருந்தது.

குளித்தும் குளிக்காமலும் இருந்த பொதுமக்கள் - அருவிக்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு - பாதையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஒதுங்கி நின்றவர்களைப் பார்த்ததும் விஷயம் விளங்கிற்று அவருக்கு.

அங்கிருந்த காவலரை பார்த்து -

இதுக்குத்தான் நீ எனக்கு முன்ன ஓடி வந்தியா!. இவங்களோட நா சேந்து குளிச்சா ஒனக்கு என்னான்னே?.. -  என்று சத்தம் போட்டுவிட்டு,

ஒதுங்கி நின்ற மக்களை பார்த்து,

இப்படி ஒதுங்கி நின்னா எப்படின்னேன்?.. வாங்க எல்லாரும் சேந்து குளிப்போம்!..  - என அன்புடன் அழைத்தார்.

உண்மையான ஏழைப் பங்காளனை நேரில் பார்த்த களிப்பில், மக்கள் ஆரவாரத்துடன் அருவியில் குளித்தனர்...

அன்று குற்றால அருவியே, ஓ!.. என்று மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்ததாம்!.. 


அதற்கு முன்னும் பின்னும் எந்த முதல்வரும் மக்களுடன் சேர்ந்து குளித்ததாக வரலாறு இல்லை!..

இனி - எந்த முதல்வருடனும் சேர்ந்து குளிக்க மக்களுக்கு இயலுமா!..


தமிழக முதல்வரின் அலுவலக வாசலில்  கையில் திருமண அழைப்பிதழுடன் ஒருவர் காத்திருந்தார்.

அவர் சுதந்திரப் போராட்டத் தியாகி.  முதல்வரின் நண்பரும் கூட!.. 


முதல்வர் காமராஜர் அவர்களைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. உள்ளே சென்றவர் -

தனது இல்லத் திருமணத்துக்கு  வரவேண்டுமென்று அன்புடன் அழைத்தபடி, அழைப்பிதழைக் கொடுத்தார்.

அவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த காமராஜர் -

அந்தத் திருமண நாளில் தனக்கு வேறு வேலை இருப்பதாகவும் அதனால் திருமணத்துக்கு வர இயலாது என்பதையும் குறிப்பால் உணர்த்தினார். 


தியாகி வருத்தத்தோடு  ஊருக்குத் திரும்பினார்.

திருமண நாள். பொதுவாக சந்தோஷம் களைகட்டியிருந்தாலும் மனதின் ஓர் ஓரத்தில் -
காமராஜர் வர மறுத்தது உறுத்திக் கொண்டேயிருந்தது.  அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக கல்யாணப் பந்தலின் வாசலில் பரபரப்பு!.. 

இரண்டு மூன்று போலீஸ் வண்டிகள்.. என்ன.. ஏது.. என்று எவருக்கும் புரியவில்லை!.. 

எல்லோரும் போலீஸ் ஜீப்புகளைக் கண்டு அதிர்ந்து, பயந்து நிற்கையில் -

தியாகியின் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. 

அந்தக் காரில் இருந்து இறங்கியவர் - தமிழக முதல்வர்!..

புன்னகையுடன் இறங்கி வந்த காமராஜரைப் பார்த்ததும் தியாகியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!.. ஓடிச் சென்று  கைகளைப் பற்றிக் கொண்டார்.

நீ அழைப்பிதழ் கொடுத்தபோதே உன் வீட்டுத் திருமணத்துக்கு வர முடிவு செய்துவிட்டேன். நான் வருகிறேன் என்று அப்பவே சொல்லி இருந்தால், முதலமைச்சர் வருகிறார் என்று ஏகப்பட்ட கடனை வாங்கி கல்யாணத்தைத் தடபுடலாக நடத்தியிருப்பாய். உன் சூழ்நிலை எனக்குத் தெரியும்ன்னேன். உன்னை கடன்காரனாக ஆக்க நான் விரும்பவில்லை!.. 


- என்று முதல்வர் காமராஜர்  கூறியதும் சுற்றியிருந்தவர்கள் அனைவருக்கும் மெய்சிலிர்த்தது.

இது நடந்த இடம் வள்ளியூர்.  தியாகி  - திரு.காளிதாஸ் கோனார் அவர்கள்.

ஏழை வீட்டில் - ஒப்புக்காகக் கூட கை நனைக்கும் முதல்வரை இனியும் காண முடியுமா இந்த நாட்டில்!..


காமராஜர் - ஒன்பது ஆண்டுகாலம் முதல்வராக ஆட்சி புரிந்தார்.  

காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற  அன்றைய பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து.சுந்தரவடிவேலு அவர்களும், 

தொழிற்திட்டங்கள் நிறைவேற - அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்களும் உடனிருந்து பாடுபட்டனர்.

30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் 16 லட்சம் மாணவ – மாணவிகள் மதிய உணவு உண்டார்கள் என்பது - பள்ளிக் கல்வி இயக்குனர் திரு. நெ.து. சுந்தர வடிவேலு அவர்களின் குறிப்பு.

காமராஜர் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிறகே  தமிழகத்தில் ஏழை எளியவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வி - இலவசக் கல்வியானது.

தொழில்கள் பெருக வேண்டுமென தொழிற் கல்விக் கூடங்களும் மாவட்டம் தோறும் தொடங்கப்பட்டன.

இனியொரு தமிழன் இதைப்போல அமரமுடியுமா!..
இலவசக் கல்வி, ஏழைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு, இலவசப் பாடப் புத்தகங்கள், பள்ளிப் பிள்ளைகளுக்கு  சீருடை என்றெல்லாம் அறிமுகப் படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர்.

கல்லாய் கிடந்த மக்கள் கல்வி கற்று எழுந்திடக் கை கொடுத்தவர் - காமராஜர். 

ஆனாலும் அவர் மீது - வெளிநாட்டு பேங்கில் பணம் போட்டு வைத்திருக்கிறார் - என்று புழுதி வாரி வீசப்பட்டது. 

அண்டங்காக்கை, பனையேறி  - என்றெல்லாம்  அவரை நாவில் ஈரமின்றிப் பேசியவர்கள் - 

1967 தேர்தலுக்குப் பின் - தாமும் தம் மக்களும் என,  நன்கு கொழுத்தனர்.

நாட்டில் - நடந்தவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்த விஷயங்கள்!..

02 அக்டோபர் 1975
 1967 தேர்தலில் தோல்வி அடைந்தபின் - 

மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் செய்தீர்கள் என்பதைப் பிரசாரத்தில் விவரமாய் தெரிவிக்கவே இல்லை. அதுதான் நீங்கள் தோற்றதற்கு காரணம்!..

- என்றனர் நெருங்கிப் பழகும் வாய்ப்புடைய பலரும்!..

அதற்கு காமராஜர் சொன்ன பதில் -

அட போங்கய்யா!.. பெத்த தாய்க்கு சேலை வாங்கிக் குடுக்கிற மகன், எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன், எங்கம்மாவுக்குச் சேலை வாங்கிக் குடுத்தேன்னு தம்பட்டம் அடிக்கலாமான்னேன்! நம்ம கடமையைத் தானேய்யா  செஞ்சோம்? அதில பீத்திக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?..


காமராஜர்  ஒரு சகாப்தம்
இன்று நம் கையில் உள்ள கல்வி 
அன்று அவர் அளித்த கொடை!.. 

கல்விக் கண் திறந்த காமராஜரின் புகழ்
என்றும் நின்று நிலவும்!.. 
  * * *

28 கருத்துகள்:

  1. பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த அவரது எளிமையை விளக்கும் சில சம்பவங்களின் தொகுப்பு! ஒரு சிறப்பான பதிவு! தஞ்சை மருத்துவக் கல்லூரியையும் திருச்சி பெல் நிறுவனத்தையும் பார்க்கும் போதெல்லாம் அவரைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது.
    பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      திருச்சியை நெருங்கும் போதெல்லாம் நெஞ்சில் -
      காமராஜரின் நினைவுகள் நிழலாடும் ஐயா!..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. காமராசர் இல்லையேல் இன்று நாம் ஏது
    காமராசரையே தோற்கடித்த புன்னியபூமியில் அல்லவா நாம் வாழ்கிறோம்.
    காமராசர் நினைவினைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தனக்கென வாழாத தனிப் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்..
      நெஞ்சிருக்கும் வரைக்கும் அவருடைய நினைவும் இருக்கும்
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. எளிமை எளிமை எளிமை... இதை விட என்ன சொல்ல முடியும்...?

    சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      வெளிநாடுகளுக்கும் வேட்டி சட்டையுடன் சென்று வந்தவர் காமராஜர். ஒரு நூறு ரூபாய் + சில்லறைக் காசுகள். சில உடைகள். இவையே அவரது சொத்து எனும் போது கண்கள் கலங்குகின்றன..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. குற்றால அருவியே, ஓ!.. என்று மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்ததாம்!..

    ஆர்ப்பரிக்கவைக்கும் உன்னத தலைவரின் நினைவலைகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மக்களோடு மக்களாக - மக்கள் தலைவன் இருந்த காலம் அது. மகோன்னதமான மனிதர் காமராஜர்.
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. வணக்கம் ஐயா!

    எத்தனை இனிமை!..

    தித்திக்கத் தித்திக்க சேர்த்த நினைவுகள்!
    எத்திக்கும் பற்றிட்டே இன்று!

    மிக மிக அருமையாகத் தொகுத்து அறிந்திராத பல விடயங்களை
    எமக்கும் அறியத்தந்தீர்கள்!
    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      பெற்ற தாயையும் மறந்து - நாடு தான் தனது வீடு என வாழ்ந்த உத்தமர் - காமராஜர்!..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. கர்மவீரரின் பிறந்த நாளில் அவர் குறித்த சிறப்பான வரிகள் எழுதி இருக்கிறீர்கள். அம்மாதிரி ஒரு மனிதர் இனி தோன்றுவாரா.? வாழ்த்துக்கள். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      காமராஜர் போன்ற உத்தமர்கள் காலச்சுழற்சியில் மீண்டும் பிறக்கக் கூடும். யாரறிவார் அந்த ரகசியங்களை!..

      தாங்கள் வருகை தந்து கருத்துரைத்து வாழ்த்தியமை கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி!..

      நீக்கு
  7. கடந்த மாதம் விருது நகர் சென்ற போது அன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய அய்யா அவர்களின் இல்லம் கண்டு பெரு உவகை கொண்ட நினைவு தங்களின் பதிவு வாசிக்கையில் நெஞ்சில் நிழலாடியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      சில ஆண்டுகளுக்கு முன் நானும் விருது நகரில் ஐயாவின் இல்லத்தை தரிசித்திருக்கின்றேன்.
      அந்த தெப்பக் குளத்தைத் தாண்டி தெருவில் நுழையும்போதே கண்ணீர் ஆறாகப் பெருகியது.
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி

      நீக்கு
  8. படிக்கப் படிக்க இன்பம் தந்த செய்திகள். இப்படி ஒரு அரசியல்வாதி நமக்கு இனிமேல் கிடைப்பதரிது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      ஏழைகளை வாழ்விக்க வந்த ஏற்றம் மிகு தலைவர் அவர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. தலைவர் என்ற சொல்லுக்கு இலக்கணமானவர். அவரைப் பற்றிய பகிர்வும், புகைப்படங்களும் அருமை. இனியொரு தலைவன் இதைப்போல அமரமுடியுமா என்ற சொற்களுடன் உள்ள புகைப்படம் மிக அருமை. வாழ்த்துக்கள்.
    மற்றொரு செய்தி. மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார் இன்றைய வலைச்சரத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மக்களுக்காக வாழ்ந்த மாபெருந்தலைவர். படிக்காத மேதை அவர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      அத்துடன் இன்றைய வலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரிரங்கன் அறிமுகம் செய்ததையும் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  10. மிக அருமையான பதிவு ஐயா..குற்றால செய்தி புதிது. காமராசரைப் போல ஒரு தலைவர் இனிக் கிடைப்பாரோ?
    பகிர்விற்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      காமராஜருடைய எளிமையான வாழ்க்கை இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக வேண்டும்.
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. கீழ்க்கண்ட வாக்கியத்தில் "ஆரம்பப் பள்ளிகள்" என்பதற்குப் பதில் தவறுதலாக "உயர்நிலைப் பள்ளிகள்" என்று வந்திருக்கிறது. மேலும் இதில் உள்ள புள்ளிவிவரம் பற்றியும் எனக்கு ஐயம் உண்டு. காமராஜர் முதலமைச்சராகப் பதவி ஏற்ற போது தமிழகத்தில் இருந்தவை 3,86,000 உயர்நிலைப்பள்ளிகள். அவரது தீவிர முயற்சிகளால் 13 லட்சமாக உயர்ந்தது.முடிந்தால் சோதித்துத் திருத்துங்கள். (2) கண்களில் நீரை வரவழைக்கும் பதிவு. நம் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இப்படி ஒரு மனிதர் நம்மிடையே நடமாடினார் என்பதை நிச்சயம் நம்பப்போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்வராஜ் ஐயா ! செல்லப்பா அவர்கள் சொன்னது சரிதான். அந்தக் காலக் கட்டத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளும் 1000 க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளும் இருந்ததாகக் குறிபிடுகிறார் நெ.த. சு அவர்கள் தன் நூலில்.
      நீங்கள் குறிப்பிட்டுள்ளது மாணவர் எண்ணிக்கையாக இருக்கக் கூடும்.

      நீக்கு
    2. அன்புநிறை செல்லப்பா ஐயா அவர்களுக்கும் -
      அன்பின் டி.என். முரளிதரன் அவர்களுக்கும்..

      காமராஜரின் தனி வாழ்வின் செய்திக் குறிப்புகள் என் தந்தை எனக்குக் கூறியவை. சில நான் படித்த விஷயங்கள்..

      அந்தப் புள்ளி விவரங்களை - அரசியல் கட்சி ஒன்றின் செய்தி தளத்திலிருந்து பெற்றேன். நம்பிக்கைக்குரியதாக இருக்கும் என்று!..

      ஆனால், அது பிழையாக இருக்கின்றது. பொறுத்தருள்க!.. தவறாக இருந்த புள்ளி விவரங்களை நீக்கி விட்டேன்.

      இயன்றவரைக்கும் தேடி - ஓரளவுக்கு சரியான தகவல்களைத் தேடிப் பெற்றுள்ளேன்.. தனிப்பதிவாகத் தருகின்றேன்..

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  12. காமராஜர் பற்றி நிறையச் செய்திகளுடன் நல்ல பகிர்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      கல்வியுடன் பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவசச் சீருடைகள் வழங்கச் செய்தவர் காமராஜர்.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  13. அந்த மாமனிதர் வாழும் காலத்தில் நாங்கள் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.உருக்கமும் நெகிழ்ச்சியும் ஏற்படுத்தும் சம்பவங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் முரளிதரன்..
      காமராஜர் அவர்களால் தான் ஏழை, எளியவர்களுக்கு எட்டாதிருந்த கல்வி இலவசக் கல்வி என்றானது.
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..