நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 26, 2013

வளந்தரும் வைத்யநாதன்

 வைத்தீஸ்வரன் திருக்கோயில் 


''வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே!.'' (2/43/5)


என்று திருஞானசம்பந்தப்பெருமானும்,

''பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை

மந்திரமுந் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்

திரிபுரங்கள் தீயெழத் திண்சிலை கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்

போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.''  (6/54/8)

என்று திருநாவுக்கரசு சுவாமிகளும் பாடிப் பரவிய திருத்தலம்.

அப்படிப்பட்ட திருத்தலத்தை - நாமும் கண் குளிரத் தரிசிப்போம் வாருங்கள்!..


தமிழகம் மட்டுமின்றி  - பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.  

ஏனெனில் -
எல்லா விதமான உடற்பிணிக்கும் மருந்தாக ஐயனின் சந்நிதி விளங்குகின்றது.

ஆதியில் தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் ஒன்றுகூடி  - ''..அனைவரும் நோயின்றி நல்வாழ்வு வாழ வேண்டும்!..'' - என விரும்பி , அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டபோது, 

எம்பெருமான் சுயம்புவாகப் புற்றுருவில் வெளிப்பட்டார். அமிர்த சஞ்ஜீவினி மூலிகையுடன் ஐயன் தோன்றிய போது அம்பிகையும் தைலம் நிரம்பிய கலசத்துடன் உடன் வந்தாள்.

அனைவரும் ஈசனை வணங்கி தங்களின் விருப்பத்தினை முன் வைத்தனர்.

அவர்களிடம் நோய்கள் உண்டாவதற்கான காரண காரியங்களை விளக்கிய ஈசன் -  அதனின்று காப்பாற்றிக் கொள்ளும் வழிவகைகளையும் அருளினார். 

வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவ பீடமாக இத்திருத்தலம் விளங்கும் எனத் திருவாய் மொழிந்தார்.

அவ்வண்ணமாகத் தெளிவடைந்த  - தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் - ''ஐயனே உலகம் உய்யும் பொருட்டு தாம் இத்தலத்திலேயே இருந்தருள வேண்டும்!..'' - என வேண்டிக் கொண்டனர்.

அதன்படி - ஐயனும் மருத்துவத்தின் தலைமைப் பீடமாக விளங்கும் இத்தலத்தில் வைத்யநாதன் எனத் திருப்பெயர் கொண்டு எழுந்தருளினார்.

சித்தாமிர்த தீர்த்தம்
ஈசன் கொணர்ந்த அமிர்தம் தான் - சித்தாமிர்த தீர்த்தமாக விளங்குவது.

ஈசன் அருளியபடி  - இன்றும் 4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமைப் பீடமாக இத்தலம் திகழ்கின்றது. 

நோய்கள் எதுவானாலும் அதன் அடிப்படைக் காரணம் - இரத்தம். 

இரத்தத்தின் தேவதை செவ்வாய் எனப்படும் அங்காரகன்.


இந்த விஷயம் தான் - வைத்தீஸ்வரன் கோயில் - செவ்வாய் கிரகத்துக்கு உரிய தலம் என்று குறிப்பிடப்படுவது.

வைத்தீஸ்வரன் கோயிலில் அங்காரகன் எம்பெருமானின் திருவடிகளைப் பணிந்து கிடப்பதன் ரகசியத்தைப் புரிந்து கொண்டால் -

மனிதன் கோபத்தைக் குறைத்துக் கொண்டால் - நோய்நொடிகள் ஏது!... 

அப்புறம் எல்லாம் இன்பமயம் தானே!..மூர்த்தி, தலம், தீர்த்தம்  - என சிறப்புற்று விளங்கும் வைத்தீஸ்வரன் கோயில் மேற்கு நோக்கிய திருத்தலம்.  மேற்கு நோக்கிய திருத்தலங்கள் எல்லாம் தொழுவார் தம் துயர் துடைக்கும் திருத்தலங்கள் என்பது ஐதீகம். 


மக்களின் இன்னல் தீரும்படிக்கு -
ஸ்ரீ வைத்யநாதப் பெருமான் மேற்கு நோக்கியவாறு திருவருள் புரிகின்றார்.

இத்தலத்தின் சித்தாமிர்த தீர்த்தத்தில் மீன்களைத் தவிர வேறு உயிர்கள் கிடையாது.

இக்குளத்தில் வாழும் மீன்களைக் கூட  - சித்தர்களின் அம்சம் எனக் கொள்வர். எனவே விவரம் அறிந்தவர்கள் அந்த மீன்களுக்கு உணவாக பொரி போடுவர்.

திருக்கோயில் உள்ளேயே விளங்கும்- திருக்குளத்தின் நடுவில் அழகான நீராழி மண்டபம் விளங்குகின்றது.

தென்னஞ்சோலைக்கு பின்னால் - மேலைக் கோபுரம்
குளத்தின் நாற்புறமும் நீராடுவதற்கு ஏதுவாக வசதியான படிக்கட்டுகள். விசாலமான சுற்றுப் பிரகார மண்டபம்

தீர்த்தத்தில் பெருமானின் அபிஷேக திரவியங்கள் கலப்பதாகக் கூறுகின்றனர். எனவே உடல் நலிவுற்ற மக்கள் தீர்த்தத்தில் மூழ்கி எழுகின்றனர்.

இப்படி பக்தர்கள் தீர்த்தமாடி - பெருமானை வணங்க வருவதனால் கோயில் தளம் எப்போதும் ஈரமாகவே இருக்கின்றது. இருப்பினும் திருக்கோயில் பணியாளர்களால் அவ்வப்போது சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றது.

ஸ்ரீ கற்பக விநாயகர் சந்நிதி
திருக்குளக்கரையில் -  ஸ்தல விநாயகர் சந்நிதி. காக்கும் கணபதியின் திருப் பெயர் - ஸ்ரீ கற்பக விநாயகர். விநாயகரை வணங்கி விட்டு மண்டபத்தில் நுழைந்தால் - தங்கக்கொடி மரம். அழகு ததும்பும் அதிகார நந்தி.


தெற்கு முகமாக திருக்குளத்தினை நோக்கியபடி அன்னை தையல் நாயகியின் சந்நிதி.

கூட்ட நெரிசல் இல்லையெனில் கொடி மரத்தின் அருகில் இருந்தபடியே - 
அன்னையையும் ஐயனையும் ஒருசேரக் கண்டு கைகூப்பித் தொழலாம்.


அலங்காரமாகத் திகழும் அணி விளக்குகளின் ஒளியில் - அல்லல் எல்லாம் தீர்த்தருளும் ஐயன் ஸ்ரீ வைத்தீஸ்வரன் பிறவிப் பிணியினைத்  தீர்த்தருளும் பெருமருத்துவராக வருபவர்க்கெல்லாம் வாரி வழங்கும் வள்ளலாக - ஜோதி மயமாக விளங்குகின்றார்.

கற்பூர ஒளியில் ஆனந்தமான தரிசனம். 
கண்கள் பனிக்கின்றன. 

ஐயனைக் கண்ட பின் மற்றொன்றினைக் காண விரும்பாதபடி 
சிந்தை சிலையாக நிலைத்திருக்கின்றது!..

கதிர் கண்ட இருளாக துயர் விலகுகின்றது!..
மனம் அனல்பட்ட நெய்யாக உருகுகின்றது!..

வாழும் நாள் எல்லாம் வளமாக வாழ வேண்டும்!..
அத்துடன் நலமாக வாழ வேண்டும்!..
ஐயன் திருவருள் புரிய வேண்டும்!..
***

2 கருத்துகள்:

  1. பிறவிப் பிணியினைத் தீர்த்தருளும் பெரு மருத்துவர் வைத்தியநாத சுவாமியை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் அய்யா தங்களால். நன்றி

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்.. திரு ஜெயக்குமார் அவர்களே!.. பிறவிப் பிணி தீர்க்கும் வைத்யநாதரைத் தரிசிப்பவர்கள் சிந்திப்பவர்கள் - எல்லோருமே பெரும் பேறு பெற்றவர்கள்!....

    பதிலளிநீக்கு