நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 03, 2013

ஜடாயு

பஞ்சவடி வனத்தில் தனித்திருந்த சீதையை - மாயவேடமிட்டு வந்த ராவணன் வஞ்சனையால் கவர்ந்து கொண்டு ஆகாயத்தேர் மூலமாக -



தென்திசை நோக்கிச் சென்றதைத் தடுக்க முயன்றான் கழுகரசனாகிய ஜடாயு..

ஆனால் ராவணனால் கொடூரமாக தாக்கப்பட்டு மண்ணில் வீழ்ந்தான்..



சீதையைத் தேடிக் கொண்டு வந்த ஸ்ரீராமனிடம் ராவணனின் தகாத செயலை எடுத்துக் கூறிய ஜடாயு - ''..ராமா!..'' - என்றபடி ஸ்ரீராமனின் திருக்கரங்களில் இன்னுயிர் நீத்தான்.



தன் தந்தை தசரதனுக்கு இயற்ற இயலாத காரியங்களை - ஜடாயு எனும் கழுகிற்கு இயற்றி நீர்க் கடன்களையும் நிறைவேற்றினான் ஸ்ரீராமன்.

ஸ்ரீராமன், ஜடாயுவுக்கு கிரியைகளையும் நீர்க்கடன்களையும் - நிறைவேற்றிய திருத்தலம் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருப்புட்குழி என்பர் பெரியோர்.

திருப்புட்குழி - காஞ்சியிலிருந்து 7 மைல் தொலைவில், பாலுசெட்டி சத்திரம் என்ற ஊருக்கு அருகில் இருக்கிறது.

இந்த அளவில்,  இந்தப் பதிவினை - வேறு முகமாகச் செலுத்தத் திட்டமிட்டு, எழுதிக் கொண்டிருந்தபோது -

எனது Facebook -  வரவுகளைக் காண வேண்டி,  அங்கே சென்ற எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

அங்கே - சக்திவிகடன் ஜடாயு பற்றி படத்துடன் ஒரு குறிப்பினை வெளியிட்டிருந்தது.

''..எண்ணும் எண்ணங்களுடன் எம்பெருமானும் உடன் வருகின்றார்!..'' - என என்னுள் ஆனந்த அலைகள்..

சக்தி விகடன் வெளியிட்டிருந்த படம் இதோ உங்கள் பார்வைக்கு!...


இதுவரையிலும் - கண்டு வணங்கி இன்புற்ற திருத்தலங்கள் மட்டுமே பதிவிடப்பட்டுள்ளன.

திருத்தொண்டரான ஜடாயு - பதிவிடும் வேளையில் வழித்துணையென வந்தமையால் -

ஜடாயுவைப் பற்றியும் - இதுவரை தரிசனம் செய்திராத திருப்புட்குழி திருத்தலம் பற்றியும் தகவல்கள்.  இணையத்தில் திரட்டப்பட்டவை.

இந்தத் திருத்தலத்தில் எம்பெருமான்  - ஸ்ரீ விஜயராகவப் பெருமாள். தாயார் மரகதவல்லி. திருவிழாக் காலங்களில் பெருமாள் திருவீதியுலா எழுந்தருளும் போது ஜடாயுவுக்கு சகல மரியாதைகளும் வழங்கப்படுகின்றது.

மூலவர்  தொடையில் ஜடாயுவை வைத்துக் கொண்டு அருள் பாலிக்கின்றார். இத்தலத்தில் ஸ்ரீராமன் ஜடாயுவுக்காக தன் அம்பினால் உண்டாக்கிய தீர்த்தம்  - ஜடாயு தீர்த்தம்.   

ஸ்ரீ விஜயராகவப்பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி
ஜடாயுவை, தன் வலப்புறம் வைத்து, தகனக் கிரியைகளைச் செய்தபோது  ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி இடப்புறமும், இடப் புறம் இருந்த பூதேவி வலப்புறமும் மாறி அமர்ந்து அருள்வதாக ஐதீகம். 

திருப்புட்குழி, திருமங்கைஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலம். 

ஜடாயுவுக்கு கிரியைகள் செய்யப்பட்ட திருத்தலம் - ஆதலால், கொடிமரமும்  பலிபீடமும் கோயிலுக்கு வெளியே அமைந்துள்ளன.

இனி - ஏற்கனவே திட்டமிட்டபடி!...

இந்தப் பதிவில் - ஜடாயு மாபெரும் சிவபக்தன் என்றும் சிவபெருமானைக் குறித்து வேண்டுவதாகவும் வரைந்துள்ளேன்!..

ஏன் அப்படி!?...

திருஞானசம்பந்தர் - இனிக்க இனிக்க தமது திருப்பதிகத்தில் ஜடாயுவின் சிவபக்தியை, வீரத்தை, பெருமையைப் பாடி மகிழ்கின்றார்.

எனில், ஜடாயுவின் பெருமையை  நாம் விவரிக்கவும் முடியுமோ!...

ஜடாயு பெற்ற பேறுதான் என்னே!...

ஜடாயுவின் சிவபக்தியுடன் - அடுத்த பதிவில் சந்திப்போம்!... சிந்திப்போம்!...

ஸ்ரீராம ராம!... ஜயராம ராம!...
ஸ்ரீராம ராம!... சிவராம ராம!...

4 கருத்துகள்:

  1. திருப்புட்குழி திருத்தலம் பற்றிய தகவல்கள் அற்புதம் ஐயா... முகநூலில் வந்தது வியப்பு...

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. நன்றி திரு. தனபாலன் அவர்களே!.. நாம் நன்மையைத் தொடர்கின்றோம்!.. நன்மைகளும் நம்மைத் தொடர்கின்றன!..

    பதிலளிநீக்கு
  3. திருப்புட்குழி திருத்தலம் பற்றிய தகவல்கள் அருமை அய்யா. தங்களின் எழுத்து நடை, தேர்ந்த எழுத்தாளர்களின் நடையினைப் போல், தாங்கள் கூற வரும் செய்திகளுக்கு மெருகூட்டுகின்றது அய்யா. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அன்புடையீர்!..தங்களின் மனம் திறந்த பாராட்டுகளுக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி. இப்போது எனக்கு இன்னும் பொறுப்பு கூடுவதாக உணர்கின்றேன்.. தங்களைப் போன்ற நல்லாசிரியர்களின் வாழ்த்துக்களுடன் - நற்றமிழும் என் வழிக்குத் துணையாக வரும் என நம்புகின்றேன்!.. வணக்கம்!.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..