நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 28, 2019

காளீம் ஸ்ரீகண்ணகீம்

தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற்கடை மணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான் தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என்பதியே.. அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனே ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப 
சூழ்கழல் மன்னா நின் நகர்ப் புகுந்து இங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பது என் பெயரே!...


அன்றொருத்தி அஞ்சா நெஞ்சினளாய்
அயல் நாட்டு மன்னனின் சபை நடுவே நின்று உதிர்த்த வீரமொழிகள்...

அந்த தீரத்துடன் இன்றைக்கு
ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரிடம் இப்படிப் பேசவும் கூடுமோ!..  

ஆடவன் ஒருவனால் கூட இயலாது!.. - என்பதே உண்மை...

அத்தகைய பெண்ணரசியை
நாம் எந்த அளவுக்குக் கொண்டாடியிருக்கிறோம்?..

மௌனம் தான் மிச்சம்...

ஆனால் -
அருகிருக்கும் கேரளத்தில்
பத்ரகாளியாக - பகவதி அம்பிகையாக
கண்ணகி தேவியாகக் கொண்டாடப்படுகின்றாள்....


கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோயிலில்
இந்தக் கொண்டாட்டம் மிகவும் பிரசித்தம்...

மாசி மாத்தின் பரணி தொட்டு
பங்குனி மாதத்தின் பரணி நட்சத்திரம் வரை
மீன பரணி என்று மஹோத்ஸவம் நிகழ்கின்றது...

சென்ற மாதத்தில் ஒருநாள்
இந்த மீனபரணி மகோத்ஸவத்தைக் குறிப்பிட்டு
FB யில் ஒரு தகவல் வந்தது...

அதில் கண்ணகி தேவிக்கான ஸ்லோகம் கண்டு கண்கள் குளமாகின...


கனக விஜய சிரோத்ருத
கங்கா தீர்த்த அபிஷிக்தாம்
கஜபாஹ ராஜ சேவிதாம்
காளீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!..

பீஜக விருக்ஷ சாயாஸ்திதாம்
பராசக்தி ஸ்வரூப நாயகீம்
காவேரீ புஷ்ப நகரிணீம் தேவீம்
பகவதீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!..

ஆகாச மார்க்க காமினீம்
ஆனந்த சாகர ஸ்வரூபிணீம்
ஆச்சர்ய சரித்ரமயீம் காமாக்ஷீம்
அம்பிகாம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!..

விரதமிருந்து கோயிலை நாடிவரும் பக்தர்கள் 

நன்றி - மனோஜ் மகாதேவ் 
கொடுங்கல்லூர் பகவதியம்மன் திருக்கோயிலில்
கண்ணகி நீதி கேட்டு சிலம்பை உடைக்கும் காட்சி
சித்திரமாக வைக்கப்பட்டிருப்பது கண்டு நெஞ்சம் விம்மியது...


சேர நாட்டில் மட்டுமின்றி
ஈழத்திலும் கண்ணகி வழிபாடு சிறப்புற நிகழ்கின்றது...

ஈழத்தில் வற்றாப்பளை எனும் ஊரில்
பேரிளம் பெண்ணாக கண்ணகி வழிபடப்படுகின்றாள்...

கண்ணகி - வற்றாப்பளை 
சத்பத்தினி
சிங்கள மக்களிடமும்
சத்பத்தினி என்ற பேரில் கண்ணகி வழிபாடு உள்ளது..

இதெல்லாம் இணையம் தரும் செய்திகள்...

சரி.. அங்கெல்லாம் கொடுக்கப்படும் மரியாதையும் மகத்துவமும்
நம் தமிழகத்தில் கண்ணகிக்குக் கொடுக்கப்படுகின்றதா?...

இல்லை!...

ஏன் இல்லை?...

தெரியவில்லை!... தெரிந்து கொள்வதற்கு என்னவெல்லாமோ
இருக்கும் போது கண்ணகி வரலாற்றைத் தெரிந்து கொண்டு
என்ன ஆகப் போகின்றது!..

- என்பதனால் யாரும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை!...

இன்றைய நாட்களில் -
வெட்டி மன்றங்களாகி விட்ட பட்டி மன்றங்களில் இகழ்ந்து ஏளனம் செய்வதற்கான கருப்பொருள்களுள் ஒன்றாகி விட்டது கண்ணகி - வரலாறு...

கேரளத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும்
கண்ணகி பிறந்த ஊரைத் தரிசிப்போம் என்று
வருவோர்க்கு - மகிழ்ச்சியைத் தரக்கூடிய நிலையில்
இருக்கின்றதா - பூம்புகார்!?...

அதனை அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்!...

காவேரீ புஷ்ப நகரிணீம் தேவீம்
பகவதீம் ஸ்ரீ கண்ணகீம் நமாமி!..

ஓம் சக்தி ஓம் 
ஃஃஃ