இன்று ஆடி பதினெட்டாம் நாள்...
ஆடிப் பெருக்கு விழா!..
அனைவருக்கும் ஆடி பெருக்கு நல்வாழ்த்துகள்..!
ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாக காலகாலமாக முழு உற்சாகத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது...
காவிரியில் பொங்கிப் பெருகி வரும் புதுவெள்ளம் புத்துணர்வு தரும்...
தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை காவிரியாள் செழிக்க வைக்கின்றாள்.. சனாதன தர்மத்தைக் கடைப்பிடித்து மதித்து நடக்கும் ஒவ்வொரு இல்லத்திற்கும் அவள் செல்லப் பெண்ணாகின்றாள்...
தஞ்சையின் மக்கள் -
தங்கள் வீட்டுப் பெண்ணாக மதித்து வழிபடுகிறார்கள்...
காவிரி பொங்கிப் பெருகிப் பாய்வதற்குக் காரணம்
முழுமுதற்பொருளான விநாயகப் பெருமான்...
அகத்திய மகரிஷியின் கமண்டலத்துள் சிறைப்பட்டுக் கிடந்த காவிரியை
கணபதி - காக்கை வடிவில் வந்து விடுவித்ததாக புராணம்...
எனவே - காவிரி பூஜையில் அவருக்கு இஷ்டமான காப்பரிசியும் விளாங்கனியும் நாவற்பழமும் கண்டிப்பாக இருக்கும்.
காவிரி பாயும் - திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மாவட்டங்களில் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
ஐந்து ஆறுகள் பாயும் காவிரிச் சமவெளியில்
திருவையாறு காவிரியின் புஷ்ய மண்டப படித்துறை
மயிலாடுதுறையில் துலா கட்டம் மற்றும்
திருஅரங்கத்தில் அம்மா மண்டபப் படித்துறை ஆகியன
ஆடி பெருக்கு வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றவை...
இருந்தாலும் காவிரியின் வழி நெடுக
எல்லா இடங்களும் சிறப்பு பெற்றவையே!...
ஆனாலும் இந்த வருடமும் எதிர்பார்த்த வகையில்
தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
எனினும் மங்கல மரபுகளை மாற்றிக் கொள்வதற்கில்லை!..
வைகாசி ஆனி மாதங்களில் மனை மங்கலம் கண்ட
புதுமண தம்பதிகளுக்கு மிக மிக உற்சாகமான நாள் ஆடிப் பெருக்கு...
ஆடி மாதம் பிறப்பதற்கு
சில நாட்களுக்கு முன்பாகவே பிரிக்கப்படும் இவர்கள்
கண்களால் கதை பேசிக் கொள்வது காவிரியின் கரையினில் தான்!..
இப்படியான மகிழ்ச்சியான தருணங்கள்
தற்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகின்றன...
ஆடிப்பெருக்கு முழுக்க முழுக்க பெண்களுக்கே உரியது..
ஆடிப்பெருக்கு நாளில் வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன்
பெருகி வரும் புது வெள்ளத்தில் நீராடுவதைப் பெரும் பேறாகக் கருதுவதும்
புது மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டு மகிழ்வதும்...
ஆகா!...
என்ன மாதிரியான கலாச்சாரம்!..
பெரும்பாலும் மூத்த சுமங்கலிகளே இளம் பெண்களுக்கு
புதிய மஞ்சள் சரடு அணிவித்து வாழ்த்துவர்...
இன்றைய சூழ்நிலையில் - ஆடிப்பெருக்கன்று
காவிரிக்குப் பூஜை செய்வது விசேஷமானது என்பதால் -
காலையில் பெண்கள் காவிரியில் குளித்து எழுந்து
ஆற்றங்கரைப் படித்துறையில் ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு
அந்த இடத்தை சுத்தம் செய்து அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் பிடித்து வைத்து அகல்விளக்கு ஏற்றி வைப்பதும்
பூஜையில் காப்பரிசி, விளாங்கனி, நாவற்பழம், எலுமிச்சங்கனி,
காதோலை கருக மணி, வாசமுள்ள மலர்கள், தாம்பூலம், பழங்கள்
எல்லாம் படைத்து தூப தீப கற்பூர ஆராதனையுடன் வழிபடுவதும்
அரிதான காட்சிகள் ஆகிக் கொண்டிருக்கின்றன...
பூஜை முடிந்ததும் காவிரியில் மஞ்சள் மற்றும் பூக்கள்,
காதோலை கருகமணி ஆகியவற்றை தாமரை இலையில் வைத்து
அகல் விளக்குடன் மிதக்க விடுவதும்
அதை எடுக்க விடலைகள் போட்டி போட்டு
தங்களது வீர தீரப் பராக்கிரமங்களைக் காட்டி
கன்னியரின் கவனத்தை ஈர்ப்பதுவும் -
அடுத்த ஆடிப்பெருக்கு நாளில் அதே கரையில்
தம்பதியராக மணங்கொண்டு நிற்பதும்
கனவுக் காட்சிகளாகிக் கொண்டிருக்கின்றன...
சில இடங்களில் மாலை நேரத்தில் விளக்கேற்றி பூஜை செய்து -
வாழை மட்டையில் தெப்பம் கட்டி அதில் அகல் விளக்குகளை வைத்து - காவிரியில் மிதக்க விடுவர்.
காவிரி பெருகி வரக் காரணமான விநாயகருக்கு பூஜை செய்வதும்
சித்ரான்னங்கள் படைத்து வழிபடுவதும் பாரம்பர்யமாவை.
நதிக்கரையில் கூடும் புதுமணத் தம்பதிகள்
திருமண மாலைகளை ஆற்றில் மிதக்க விட்டு
புது வெள்ளம் போல வாழ்வில் மகிழ்ச்சி பெருக வேண்டும்
என்று வேண்டிக் கொள்வர்...
திருமணமாகாத கன்னியர்க்கு
விரைவில் திருமணம் கூடி வருவதற்கும்
நல்ல கணவன் அமைவதற்கும் மற்ற சுமங்கலியர்
வாழ்த்தி மஞ்சள் கயிறு கட்டி விடுவர்...
இந்த மகிழ்ச்சி எல்லாம் வேறெங்கு கிடைக்கும் சொல்லுங்கள்!...
திருவரங்கத்தில் ஆடிப் பெருக்கு அன்று
நம்பெருமாள் அம்மா மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.
அங்கே - அரங்கனின் சார்பில் பட்டுப் புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், பூக்கள், வெற்றிலை ஆகிய மங்கலப் பொருட்கள் அனைத்தும் யானை மீதேற்றி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, காவிரி ஆற்றின் நீரில் சீதனமாக விடப்படும்.
ஆடிப்பெருக்கு நாளன்று திருஐயாற்றில் ஸ்ரீ அறம் வளர்த்தநாயகியும் எம்பெருமான் ஐயாறப்பரும் பூசப் படித்துறையின் மண்டபத்திற்கு எழுந்தருள்வர்.
அங்கு தீர்த்தவாரி நடக்கும்.
ஆனால் ஆடிப் பதினெட்டு அன்று காவிரிச் சமவெளி முழுதும்
வறண்டு கிடப்பதே வழக்கம் என்றாகி விட்டது...
![]() |
கல்லணையில் காவிரி (பழைய படம்) |
ஆடிப்பெருக்கின் புது வெள்ளத்தில் யோகிகளும், சித்த புருஷர்களும் ஒளி வடிவாக நீராடி, காவிரி அன்னையை வணங்குவதாக ஐதீகம்.
எனவே, காவிரியில் நீராடி ஏழை எளியோர்க்கு தான தர்மங்களைச் செய்தால் அவர்களின் ஆசியைப் பெறலாம்.
ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில்
ஆடிப்பெருக்கு பூஜையை வீட்டில் எளிய முறையில் செய்யலாம்.
வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் திருவிளக்கேற்றி
ஒரு செம்பில் - சுத்தமான தண்ணீர் எடுத்து
அதில் சிறிதளவு மஞ்சள் பொடியைக் கரைத்து
அதனைத் திருவிளக்கின் முன் வைத்து
அந்தத் தண்ணீரில் வாசமுள்ள பூக்களை இட்டு
மஞ்சள் குங்கும திலத்துடன் பூச்சரம் சூட்டி
செம்பினை அலங்கரிக்கவும்...
இயன்றபடிக்கு காப்பரிசி அல்லது ஏதாவதொரு
சித்ரான்னம் செய்து பழங்களுடன் நிவேதனமாக வைக்கவும்...
கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, பொருணை
எனும் புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்துக் கொண்டு.
சாம்பிராணி தூபமும் நெய் தீபமும் காட்டி கற்பூர ஆரத்தி
செய்து வழிபடுதல் சாலச் சிறந்தது.
நிவேதனங்களைப் பிரசாதமாக எடுத்துக் கொண்டபின்
செம்பிலுள்ள நீரை வீடு முழுதும் மாவிலை கொண்டு தெளித்து
உள்ளங்கை அளவு தீர்த்தப் பிரசாதமாக அருந்தவும்...
புனித நீர் மீதமிருந்தால் - செடி, கொடிகளின் வேரில் ஊற்றி விடவும்.
ஆடிப் பெருக்கு விழா காவிரியை மையமாகக் கொண்டே நிகழ்கின்றது.
கல்லணையிலிருந்து - காவிரியிலும் அதன் கிளை நதிகளான
புது ஆறு, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆகியவற்றில் நீர் மிகுதியாக திறந்து விடப்படும்.
ஆனால், இந்த வருடம் அப்படியில்லை.
கடந்த பசலியில்- அறுவடையான வயல்களெல்லாம் எரு அடித்து உழப்பட்டு புதுத் தண்ணீரின் வரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன.
சீரும் சிறப்பும் பெற்ற காவிரி - வரும் ஆண்டுகளிலாவது -
முன்பு போல பொங்கிப் பெருகி வர வேண்டும்!..
- என இந்நாளில் வேண்டிக் கொள்வோம்...
காவிரி இயற்கையால் வழங்கப்பட்ட நிதி..
காவிரியன்றி வேறொன்றும் இல்லை கதி!..
நடந்தாய் வாழி காவேரி!..
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி!..
* * *