நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2018

வளனே வாழி..

இன்று ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை..
அதிலும் மங்கலகரமான பதினெட்டாம் நாள்...

ஸ்ரீ காவேரியன்னை - அம்மாமண்டபம், திருஅரங்கம் 
கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்குப் பின்
தமிழகத்தின் நெற்களஞ்சியம் புதுப் பொலிவு பூண்டுள்ளது...

காவிரியில் புது வெள்ளம்..
அதன் கரை நெடுகிலும் மகிழ்ச்சி வெள்ளம்...

காவிரி பொங்கி வரும்போது - அதன் வழி நெடுக
மகிழ்ச்சியும் உற்சாகமும் ததும்புவது
இன்று நேற்றல்ல..

ஈராயிரம் வருடங்களுக்கு முன்னரே
காவிரியின் புதுப் புனல் கண்டு
அதன் இருகரைகளும் ஆனந்தக் கூத்துடன்
விழாக் கொண்டாடியதை
இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்...



உழவர் ஓதை மதகோதை
உடை நீரோதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி..
விழவர் ஓதை சிறந்தார்ப்ப
நடந்த வெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி...

கல்லணை 
பூம்புனலைக் கண்டு மகிழ்ந்து 
ஆரவாரிக்கும் உழவர்களின் ஓசையும்
கரைகளில் அமைக்கப்பட்டிருக்கும் 
மதகுகளின் வழியே நீர் புகுந்து
சலசலப்புடன் வெளியேறும் ஓசையும்

அத்துடன் -

சோம்பிக் கிடந்த ஊரார் கவனிப்பின்றி 
போட்டு வைத்திருந்த கரைகளை 
பொல... பொல... என, உடைத்துப் போட்டுவிட்டு
கலகலப்புடன் துள்ளிக் குதித்தோடும் ஓசையும்

வந்ததே புதுப்புனல்!.. - என்று, ஆர்ப்பரித்து -
மக்கள் கொண்டாடி எடுக்கும் விழாக்களின் ஓசையும்!...

ஆகா... அற்புதம்!...

இத்தனையும் உன்னாலன்றோ!...

காவேரி... நீ வாழி!...
உன்னால் நாங்கள் வாழ்கின்றோம்!..

ஆதலின், இத்தனை ஓசைகளையும் கேட்டவாறு நடந்து செல்..
எங்களையும் நல்வாழ்வில் நடத்திச் செல்!..

இப்படி நீ இத்தனை வளங்களுடன் சிறந்து நடப்பதற்கு
பேரொலியுடன் உன்னைக் காத்து நிற்கும்
வீரர்களையுடைய வளவனே காரணம்!..

வளவன் என்றென்றும் உனைக் காக்க -
வளந்தந்து அவனை நீ காத்து நிற்பாயாக!..


காவிரியே!.. நீ - மெல்லென ஊர்ந்து தான் வருகின்றாய்...

ஆனால்,
சிறுபொழுதுக்கெல்லாம்
சல்லென வேகம் கொண்டு
வெல்லெனப் பாய்கின்றாய்!...

இப்படிப் பாய்ந்தால் காவிரியே...
இத்தனை அழகினையும் கண்டு களிக்க ஏலுமோ!..

எனவே,
சில்லென நடந்து செல்.. காவிரி!..

இவ்வண்ணமே -
நடந்து செல் காவிரி...


மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயல் கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி..

பூவர் சோலை மயிலாலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி!..
-: இளங்கோவடிகள் :-
***
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயாகக் காவிரி..
 கல்லணை.. ஜூலை 2018..
இந்த வருடம் காவிரியாள்
பொங்கிப் பெருகி வந்திருக்கின்றாள்..

மங்கல தீபங்களுடன் வரவேற்பதோடு
நின்று விடாமல்
மங்கையவளைக் காத்து நிற்போம்..

நாம் காவிரியைக் காத்து நின்றால்
அவள் நம்மைக் காத்து நிற்பாள்!...

நடந்தாய் வாழி.. காவேரி!..
ஃஃஃ