![]() |
ஸ்வஸ்தி ஸ்ரீ ராஜராஜ சோழன் - லோகமாதேவி |
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதுஎல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே!..(3/54)
-: திருஞானசம்பந்தமூர்த்தி :-
***
நேற்றைக்கு முன்தினம் (1/6) -
தஞ்சையின் நெடிய வரலாற்றில் மிக்க புகழ் கொண்ட நாள்...
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரிலுள்ள
சாராபாய் பவுண்டேஷன் அருங்காட்சியகத்தில்
இதுநாள்வரை காட்சிப் பொருட்களாக இருந்த
மாமன்னன் ராஜராஜப் பெருஞ்சோழனின் திருமேனியும்
அவரது திருமனையாள் லோகமாதேவியின் திருமேனியும்
மீட்கப்பட்டு தஞ்சையம்பதிக்கு மீண்டும் எழுந்தருளிய நாள்...
திருமிகு பொன் மாணிக்கவேல் ஐஜி.,
(தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு)
அவர்களின் சீரிய தலைமையிலான குழுவினர் - தமது பெருமுயற்சியால்,
அருங்காட்சியகத்திலிருந்த திருமேனிகள் மீட்கப்பட்டன....
சிந்திப்பார் மனத்தான் சிவன் செஞ்சுடர்
அந்திவான் நிறத்தான் அணி யார்மதி
முந்திச் சூடிய முக்கண்ணி னானடி
வந்திப்பார் அவர் வானுலகு ஆள்வரே..(5/97)
-: அப்பர் ஸ்வாமிகள் :-
***
பல்லாண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருந்த பெருமுயற்சி
மகத்தான வெற்றியை அடைந்தது...
குஜராத்திலிருந்து சென்னைவந்தடைந்ததும்
அங்கிருந்து வேன் மூலமாக - மிகுந்த பாதுகாப்புடன் புறப்பட்டனர்..
1/6 அன்று காலை 8.30 மணியளவில்
தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலில்
திருமேனிகளுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது...
சிறப்பு ஆராதனைகளுக்குப் பிறகு
கும்பகோணத்தை நோக்கிப் பயணம் தொடர்ந்தது...
மதியம் ஒரு மணியளவில்
திருக்குடந்தை மாநகரின் பல்வேறு அமைப்பினரும்
மேள தாளம் முழங்க மன்னனுக்கும் அவனது தேவிக்கும்
வெகுசிறப்பான வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்....
மீட்கப்பட்ட சிலைகள் -
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன...
சிலைகளைப் பார்வையிட்ட நீதிபதி -
அறநிலையத்துறை ஆணையரிடம் ஒப்படைக்க ஆணையிட்டார்...
அவ்வணணமாக பெற்றுக் கொள்ளப்பட்ட திருமேனிகள் -
தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
முனைவர் திருமிகு T. செந்தில்குமார் அவர்களது சீரிய தலைமையில்
திருக்குடந்தையிலிருந்து திருஐயாற்றை நோக்கிப் பயணப்பட்டன...திரு ஐயாற்றில் - ஐயாறப்பர் திருமூலத்தானத்திற்கு வடக்காக
மகாராணி லோகமாதேவி எழுப்பிய வடகயிலாயத் திருக்கோயிலில்
சிறப்பு மரியாதைகள் செய்யப்பட்டன...
அதன்பின், தஞ்சையை நோக்கியது பயணம்...
தாருந்தண் கொன்றையுங் கூவிளந்தனி மத்தமும்
ஆரும் அளவறியாத ஆதியும் அந்தமும்
ஊரும்ஒன்று இல்லை உலகெலாம் உகப்பார்தொழப்
பேரும்ஓர் ஆயிரம் என்பரால் எம்பிரானுக்கே!..(7/44)
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
***
மாலை 5.30 மணி...
பெரிய கோயிலின் வாசலில் திரண்டிருந்த மக்கள்
எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்
தஞ்சை மாநகருக்கு மீண்டும் எழுந்தருளிய -
மாமன்னனையும் தேவியையும்
வருக... வருக... எங்கள் மன்னவனே!..
- என்று, ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர்...
ஒருபுறம் மங்கல வாத்தியங்கள்..
மறுபுறம் சிவகண திருக்கயிலாய வாத்தியங்கள்..
தேவாரத் திருப்பதிகங்கள் இசைக்கப்பட்டன...
தமிழர்தம் கலையான பரத நாட்டியத்துடன்
மாமன்னனும் அவனது தேவியும் வரவேற்கப்பட்டனர்....
மாலை மரியாதைகளுடன்
பல்லக்கில் ஆரோகணித்து - தக்ஷிணமேருவை வலம் வந்தனர்...
ஆரவார கோஷங்களுடன் கருவறைக்கு ஏகிய
மன்னன் ராஜராஜனுக்கும் லோகமாதேவிக்கும்
பெருவுடையாரின் முன்பு ஆராதனைகள் நிகழ்ந்தன...
அதன்பின்,
மூலத்தானத்தின் தென்புறம் -
மன்னன் ராஜராஜனும் லோகமாதேவியும்
ஸ்ரீ தியாகராஜப் பெருமானை நோக்கிய வண்ணம்
மேற்கு முகமாக பீடத்தில் அமர்த்தப்பட்டனர்...
துணியா உருகா அருள்பெருகத்
தோன்றும் தொண்டர் இடைப்புகுந்து
திணியார் மூங்கிற் சிந்தையேன்
சிவனே நின்று தேய்கின்றேன்
அணியார் அடியார் உனக்குள்ள
அன்புந் தாராய் அருளளியத்
தணியாது ஒல்லை வந்தருளித்
தளிர்பொற் பாதந் தாராயே!..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
***
இந்தத் திருமேனிகள் இரண்டும்
மாமன்னன் ராஜராஜ சோழனின் காலத்திலேயே உருவாக்கப்பட்டு திருக்கோயிலில் அமர்த்தப்பட்டதாக வரலாறு....
திருக்குடமுழுக்கு கண்ட தஞ்சைப் பெரியகோயிலின்
தலைமைச் சிற்பி - பெருந்தச்சன் ராஜராஜ குஞ்சர மல்லன்...
பெருந் திருக்கோயில் - உருவாகியபோது
பொய்கை நாட்டு கிழவன் சூரியன்
ஆதித்தனாகிய தென்னவன் மூவேந்த வேளான்!..
- என்னும், பெருமகனே - தலைமை நிர்வாகியாக விளங்கியவன்...
ராஜராஜனுக்கும் லோகமாதேவிக்கும் திருமேனி வடித்த புண்ணியன்...
இதற்கு உறுதுணையாக இருந்தவன் -
சோழர் பெருந்தளபதி மும்முடி பிரம்மராயன் கிருஷ்ணன் ராமன்..
ராஜராஜனுக்கும் லோகமாதேவிக்கும்
திருமேனிகள் வடிக்கப்பட்டு -
அவை - பெரிய கோயிலில் அமர்த்தப்பட்ட ஆண்டு 1012...
இவை மட்டுமல்லாது - இன்னும்
பல திருமேனிகள் தங்கத்தில் வடிக்கப்பட்டு
வழங்கப்பட்டிருக்கின்றன...
கால வெள்ளத்தால் மறைக்கப்பட்ட அவைகளும்
மீட்கப்பட வேண்டும் என்பது நல்லோர் விருப்பம்...
![]() |
திருமிகு பொன் மாணிக்கவேல் - திருமிகு T. செந்தில்குமார் |
இந்த அளவில், அரும்பணியாற்றிய -
திருமிகு பொன் மாணிக்கவேல் அவர்களையும்
திருமிகு T. செந்தில்குமார் அவர்களையும்
மற்றும் அவர்தம் குழுவினரையும்
தமிழ் மக்கள் நெஞ்சார வாழ்த்தி மகிழ்கின்றனர்...
இன்றைய பதிவில் -
திருமிகு T. செந்தில்குமார் அவர்களது FB ல் பெற்ற படங்களுடன்
மற்ற தளங்களில் கிடைத்த படங்களும் இடம்பெற்றுள்ளன...
அத்துடன் Fb ல் வெளியாகிய காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது...
படங்களையும் கணொளியையும்
பதிவில் வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி..
நேற்று காலையிலேயே படங்களுடன் தகவல்கள் கிடைத்தும்
இணையம் ஒத்துழைக்காததால் ஒருநாள் தாமதமாகி விட்டது...
![]() |
ஸ்ரீ தியாகராஜர் - அல்லியங்கோதை., தஞ்சை பெரியகோயில். |
பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர்
தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்னெடுங் கோயில் நெஞ்சுவீ ற் றிருந்த
எளிமையை என்றும் நான் மறக்கேன்
மின்னெடும் புருவத்து இளமயில் அனையார்
விலங்கல்செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத்து இவர்க்கே...
-: கருவூரார் :-
***
மாபெரும் நிகழ்வைப் பற்றிய செய்திகளுடன்
ஆயிரத்து நூற்றுப் பதினொன்றாவதாக
இன்றைய பதிவு...
இந்தப் பதிவினை
பெரிய கோயிலைப் பற்றியதாக
முன்பே தொகுத்து வைத்திருந்தேன்...
அவ்வண்ணமாகத் தான் ஆகியிருக்கின்றது..
ஆனால் - வேறுவிதமாக!...
அனைத்தும் யான் பெற்ற பேறு...
வாழ்க தஞ்சை மாநகர்..
வாழ்க மாமன்னனின் பெரும்புகழ்!..
ஃஃஃ