நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

மயிலாப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மயிலாப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 03, 2016

திரு மயிலை

மயிலையே கயிலை..
கயிலையே மயிலை!..

என்று அடியார்களால் போற்றிப் புகழப்படும் பெருமைக்கு உரிய திருத்தலம்..

அம்பிகை மயிலாக வடிவெடுத்து ஈசனை வழிபட்டனள் - இங்கே!..


அம்பிகையின் தவங்கண்டு மகிழ்ந்த எம்பெருமான் திருக்காட்சி நல்கினன்..

அதன்பின்,
அம்பிகை மணக்கோலங்கொண்டு ஐயனுடன் கலந்து இன்புற்ற திருத்தலம்..
* * *

பெருஞ்சிறப்புகளை உடைய இத்திருத்தலத்தினில்
வாழ்ந்திருந்தவர் சிவநேசஞ்செட்டியார்..

பெருவணிகரான அவருடைய அன்பு மகள் பூம்பாவை..

ஒருநாள் - தோழியருடன் பூ வனத்தில் மலர் கொய்த வேளையில்
கொடிய நாகந்தீண்டியதால் மாண்டு போனாள் அந்த இளங்கன்னி..

மயிலைக்கு திருஞானசம்பந்தப்பெருமான் - எழுந்தருளும் போது,
தன் மகளை அவருக்குக் கன்யாதானம் செய்து கொடுப்பதற்கு எண்ணம் கொண்டிருந்த செட்டியார் - கலசத்தினுள் அவளது சாம்பலைப் பாதுகாத்து வைத்திருந்தார்..

பின்னாளில் -
மயிலைக்கு எழுந்தருளிய ஞானசம்பந்தப் பெருமான் - திருப்பதிகம் அருளி -
அஸ்திக் கலசத்தினுள்ளிருந்து பூம்பாவையை உயிருடன் எழுப்பி -

அருஞ்செயல் ஒன்றினை நிகழ்த்தினார்..

அறுபத்து மூவருள் ஒருவரான வாயிலார் நாயனார் வாழ்ந்திருந்த திருத்தலம்.


திருமயிலை

இறைவன் - ஸ்ரீ கபாலீஸ்வரன்
அம்பிகை - ஸ்ரீ கற்பகவல்லி
தல விருட்சம் - புன்னை
தீர்த்தம் - கபாலி தீர்த்தம்


கண்ணீர் துடைப்பவள் கற்பகவல்லி..
கைகொடுத்துக் காப்பவள் கற்பகவல்லி..

மேற்கு நோக்கிய திருக்கோயில்..
தொண்டை நாட்டின் இருபத்து நான்காவது திருத்தலம்..

பன்னிரு ஆண்டுகளுக்குப் பின் -
இன்று இத்திருக்கோயிலுக்கு திருக்குடமுழுக்கு நிகழ்ந்துள்ளது..

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து வழிபட்டுள்ளனர்..




தம்பிரான் ஸ்வாமிகள்









இன்று அதிகாலை ஐந்து மணியளவில் பன்னிரண்டாம் கால வேள்வி பூஜைகள் நிறைவு பெற்றன..

அதைத் தொடர்ந்து - காலை 7.45 மணியளவில் கலசங்கள் புறப்பாடு ஆகின..







நன்றி - தினமணி
காலை 9.50 மணிக்குள்ளாக அனைத்து ராஜகோபுரங்களுக்கும் விமானங்களுக்கும் திருக்குடமுழுக்கு மங்கலகரமாக நடந்தேறியது..

முற்பகல் 11.00 மணியளவில் ஸ்வாமிக்கும் அம்பிகைக்கும் மகா அபிஷேகம்..

மாலை நான்கு மணிக்கு - முதல் மண்டலாபிஷேகம்..

தொடர்ந்து திருக்கல்யாண வைபவம்..

இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா..

அப்பர் ஸ்வாமிகள் - திருவொற்றியூரைத் தரிசிக்கும் போது -

வடிவுடைய மங்கையுந் தாமும் எல்லாம்
வருவாரை எதிர்கண்டோம் மயிலாப்புள்ளே!..

என்று, திருமயிலையில் இறைவன் எதிரில் திருக்காட்சியளிக்க -
தாம் தரிசனங்கண்டு மகிழ்ந்ததாகக் குறித்தருள்கின்றார்..

அத்துடன்,

தில்லைத் திருச்சிற்றம்பலத்தில்,

மங்குல் மதி மாடவீதி மயிலாப்பில் உள்ளார்!..

- என்றே முதலெடுத்துத் திருப்பதிகம் பாடி மகிழ்கின்றார்..

மேலும்,

திரு அதிகை வீரட்டானத்தில் திருக்காப்புத் திருப்பதிகத்திலும்

மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர் சடையான்..

- என்று புகழ்ந்தேத்துகின்றார்..
***


திருக்குடமுழுக்கு வைபவத்தின் நிகழ்வுகளை வழங்கியோர் -

தம்பிரான் ஸ்வாமிகள், வசந்த குமார், 
சக்தி விகடன் மற்றும் தந்தி தொலைக்காட்சி..

சிறப்புறும் திருத்தலமாகிய திருமயிலை திருக்குடமுழுக்கு வைபவத்தின் நிகழ்வுகளை வலையில் ஏற்றிய நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி..
***

கற்பகவல்லி கழலடி போற்றி
காபாலீச்சரன் திருவடி போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
* * *

வெள்ளி, மார்ச் 14, 2014

அறுபத்து மூவர் திருவிழா

மயிலையே கயிலை!.. கயிலையே மயிலை!..

கபாலி!..
எனும்போது - கம்பீரம், கண்டிப்பு. பொறுப்பு மிக்க தந்தையின் முழுவடிவம். தன் பிள்ளை உருப்பட்டு முன்னுக்கு வரவேண்டுமே - என்று எண்ணும் தந்தையின் நேர் வடிவம் - விளங்குவதை உணரலாம்.. 

இன்னொன்றும் சொல்வதென்றால் - நான்முகன் ஐந்து தலைகளுடன் செருக்குற்று நின்ற போது -  ஆணவம் அடங்கட்டும் என்று ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்த பின்னரே - கபாலி எனும் திருப்பெயர் விளங்கிற்று.


கற்பகாம்பாள்!..
அப்படியே - திருவாளர் கபாலி அவர்களுக்கு இணையான கம்பீரம். கண்டிப்பு. இவனுங்களை எப்படி ஈடேற்றுவது!.. என்று இருவித இயல்பினில் இருக்கும் மாணவர்களை - - ஊடுருவிப் பார்க்கும் பார்வையை உடைய - உயர் நிலைக் கல்வியாளர் எனும் பாவனை!..

இன்னொன்றும் சொல்வதென்றால் - நான்முகனின் ஐந்தாவது தலையை ஐயன் கிள்ளி எடுத்தபோது , கலைச்செல்வி அருகிருந்தும் கலங்கி நின்ற நான் முகன் இப்படியாவது ஈடேறட்டும் என்று எண்ணியவாறு, திருமதி கபாலி அருகிருந்ததாக ஐதீகம்.

கற்பகாம்பிகை!..
''..ஏண்டா.. இப்படிப் பண்றே!..'' - என்று கேட்டுக் கொண்டே, ஏதாவது ஒரு வழியில் , எப்படியும் உதவுபவள்!.. புரிந்திருக்குமே! - அன்பான அன்னை!..

கற்பகம்!.. 
எங்கெங்கிருந்தெல்லாமோ பாசப்பிணைப்புகளுடன் வந்து அமையும் அரிய உறவுகள் -  பெரியம்மா, அத்தை, அண்ணி - எனும் பாவனை!..

கற்பகா!..
''..எனக்காக செய்யமாட்டாயா!..'' - என்று கேட்டால், அப்படியே இளகும் மனம் உடைய இனிய தங்கை எனும் பாவனை!..


கற்பகவல்லி!..
''..இந்த நேரத்தில் எங்கேடா ஊர் சுற்றி  விட்டு வருகிறாய்!..'' - என்று கேட்டபடி தலையில் குட்டுவதற்கு என கை வரும் . ஆனால் மனம் வராது. 

ஆதுரத்துடன் தலையைக் கோதி விடும். 
துயரங்களைத் தூசாக ஊதி விடும். 
சோகங்களைக் கெடுக்க தோள் கொடுக்கும். 
அல்லல்களை அழிக்க வாள் கொடுக்கும்!..

கற்பகவல்லி எனும்போது - ஆதரவில் அரவணைப்பில் இன்னொரு தாய் என  அன்பு நிறைந்த அக்கா - அவள் அருகில் இருப்பதைப் போன்றதோர் உணர்வு!..

அதனால் தானே  -
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்!.. - என்றொரு பாடல் பிறந்தது.

வல்லி என்ற பதம் -  வாத்ஸல்யம், வாஞ்சை மிக்கது!..

தஞ்சையில் - ஆனந்தவல்லி!..
திருவாடானையில் - சிநேகவல்லி!..
திருக்கடவூரில் - அபிராமவல்லி!..
மதுரையில் - மரகதவல்லி!..
மயிலையில் - கற்பகவல்லி!..

இத்தகைய வாஞ்சைமிக்க கற்பகவல்லி - கபாலீச்சரத்தானுடன் கூடிக் குளிர்ந்து -  அடியவர்க்கு அருள் பொழிவதைக் கேட்கவா வேண்டும்!..

நேற்று நடந்த தேரோட்டம்
 
இன்று வெள்ளிக்கிழமை. காலையில் திருஞானசம்பந்தர் எழுந்தருள்கின்றார்.

பூம்பாவையின் அஸ்தி கலசத்துடன் சிவநேசர் செட்டியார் எழுந்தருள ஓதுவாமூர்த்திகள் - மட்டிட்ட புன்னையங் கானல் - திருப்பதிகத்தினை மனமுருகப் பாடுகின்றனர். ஒவ்வொரு பாடலுக்கும் தீபாராதனை நிகழும்.

பத்தாம் திருப்பாடலின் போது அஸ்தி கலசமாகப் பாவிக்கப்பட்ட மலர் குவியலில் இருந்து பூம்பாவை உயிர் பெற்று எழுகின்றாள்.  எங்கும் ஆனந்த கோஷம்.

மாலையில் அறுபத்து மூவர்க்கு தரிசனம் தரும் ஆனந்தப் பெருவிழா.

விநாயகர் முன் செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்கள்.

அருள்மிகு கபாலீஸ்வரனும் கற்பகவல்லியும். அடுத்து ஷண்முகர், சண்டிகேசர் - மாடவீதிகளில் வலம் வருகின்றனர்.

அவர்களுடன் - திருவள்ளுவர் வாசுகி, முண்டகக்கண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரௌபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் - என இணைந்து வர -

ஆனந்த கோலாகலமாக திருவிழா நிகழ இருக்கின்றது.

எது எப்படி இருந்தாலும் வள்ளுவப் பெருந்தகை வாசுகி அம்மையாருடன் - தாமும் மக்களுக்காக வலம் வருகின்றார்.

அவரும் மக்களுக்கு நல்லனவற்றை அறிவுறுத்திய திருத்தொண்டர் தானே!..

சைவம் எனினும் வைணவம் எனினும் - ஒரு முக்கிய விஷயம்!..

எம்பெருமான் எப்போதும் அடியார் மத்தியில் திகழ்கின்றான் என்பதே!..



தன்னைக் காணவில்லை என - பரிதவித்து அங்கும் இங்கும் அலைந்த கோபிகைகளின் மத்தியில் அல்லவா கோகுலக் கிருஷ்ணன்  குதுகலத்துடன் இருந்தான்!..

நன்னெறியில் நிற்பவர்களை, தானிருக்கும் அடியார் குழாத்தோடு இணைத்துக் கொள்கின்றான் என்பது உள்ளங்கை நெல்லி என விளங்குவது!..

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்  கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி -  என்பது விநாயகர் அகவலில் ஔவையார் குறிப்பது.

தொங்கலும் கமழ்சாந்து அகிற்புகையுந் தொண்டர் கொண்டு
அங்கையால் தொழுதேத்த
அருச்சனைக்கு அன்றருள் செய்தான் (1/61)
- என்பது ஞான சம்பந்தர்  அருள்வாக்கு.

தொண்டர்கள் தம் தகவி னுள்ளார் போலும்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும் - (6/89) என்பது திருநாவுக்கரசர் திருவாக்கு.

சேரும் புகழ்த் தொண்டர் செய்கை யறாத் திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதியாய் இருந்தானை - (7/19) என்பது சுந்தரர் தம் திருக்குறிப்பு.

பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!..

- அடியவர் இல்லங்களில் பரமன் பராபரையுடன் எழுந்தருள்கின்றான் என்பது மாணிக்க வாசகர் திருவாசகம். 

அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவர் (33)

ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகனின் உருவங்கண்டு (பந்த பாசத்தில் சிக்கி ) தூங்கார். பிறர்க்குத் தீங்கு செய்யார் (55)

- என்று கந்தர் அலங்காரத்தில் - கந்தனின் அடியார்களை அடையாளங்காட்டி, வாழ்க சீர் அடியார் எல்லாம்!.. - என்று வாழ்த்துகின்றார் அருணகிரி நாதர். 

அந்தாதி பாடிய அபிராமி பட்டர் -

கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்: பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து: நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. (12)


என்று வியப்பதும்,

புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.(41)


- என்று பூரிப்பதும், அடியார் திருக்கூட்டத்தைக் குறித்தே!..


ஔவையார் - அஞ்சக்கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக்கரத்தில் நிலையறிவிக்கும் எம்பெருமானின் பெருமையைக் கூறும் போது,

உமையோ இறைவர் தம் பாகத்து ஒடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம் 
தொண்டர் தம் பெருமையைச் 
சொல்லவும் பெரிதே!.. 

- என்று கூறி நமக்கெல்லாம் விளங்க வைக்கின்றார். 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - தமக்கு முன்னேயும்  தம்காலத்திலும் செயற்கரிய செய்த சிறந்த அடியார்களின்  திருப்பெயர்களைக் கூறி,  

''..இவர்களுக்கு, நான் அடியனாக மாட்டேனா!..'' - என்று ஏங்குகின்றார். 

திரு ஆரூர் தியாகராஜ ஸ்வாமி திருக்கோயிலின் தேவாசிரிய மண்டபத்தில்  இத் திருப்பதிகத்தை சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளினார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் - தமது திருப்பதிகத்தில் அறுபது அடியார்களை நேரடியாகப் பெயர் குறித்துப் பாடுகின்றார். அத்துடன் -

எட்டு வகையான சீரிய  குணங்களைக் கொண்டு இலங்கும் அன்பர்களையும், திருஆரூரில் பிறந்தார்களையும் - பொதுவாகக் குறிக்கின்றார். 

பின்னாளில் மூவர் தேவாரம்  -  மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறையிலிருந்து மீட்கப்பட்டது.  ,

அதனைத் தொகுத்தளித்த நம்பியாண்டார் நம்பி -  சுந்தர மூர்த்தி சுவாமிகளையும் அவருடைய தாய் தந்தையரான சடையனார், இசைஞானியார் ஆகியோரையும் அடியார் வரிசையில் இருத்தினார்.

மயிலை பங்குனிப் பெருவிழா - சிறப்பு மிக்க அடியார்களைச் சிறப்பிக்கும் அறுபத்து மூவர்  திருவிழா - எனப் போற்றி மகிழும் பெருமையுடையது. 

இன்று (14/3) மயிலையில் அறுபத்து மூவர் திருவிழா!..

இந்த மகத்தான நாளில்    
சுந்தரமூர்த்தி சுவாமிகள்  அருளிய திருப்பதிகம்.
ஏழாம் திருமுறை . திருப்பதிக எண்  - 39. 

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 1


இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்ப
ர்க் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாய
ர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 2


மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 3


திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன்
பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்க
ர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 4


வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 5


வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்ட
ர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவா
ர்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 6


பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழ
ர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரைய
ர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்த
ர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7


கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவா
ர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 8


கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 9


பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 10


மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணா
ர்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே. 11


 
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

சிவாய திருச்சிற்றம்பலம்!..

வியாழன், மார்ச் 13, 2014

ஸ்ரீ கபாலீச்சரம் - 2

இறைவன் - ஸ்ரீகபாலீஸ்வரர். இறைவி - ஸ்ரீகற்பகவல்லி.

அம்பிகை மயில் வடிவாக வழிபட்டமையால் மயிலாப்பூர் எனப் பெயர் பெற்ற திருத்தலம் - ஆதியில் புன்னை வனம். எனவே தல விருட்சம் புன்னை.


அப்பர் பெருமான் இத்தலத்தை மயிலாப்பு எனக் குறித்து புகழ்கின்றார். 

திருஞான சம்பந்தரின் பதிகத்தால் - நாகம் தீண்டி இறந்த பூம்பாவை  - அஸ்தியிலிருந்து மீண்டெழுந்த தலம். வாயிலார் நாயனார் அவதரித்த தலம்.

கடந்த பிப்ரவரி-21. எனது விடுப்பு முடிந்து குவைத் திரும்ப வேண்டிய நாள். விமான நிலையத்தில் - Check In - பிற்பகல் மூன்று மணிக்கு.  

அன்று பகல் 12 மணியளவில் - நான் இருந்ததோ - மயிலை கபாலீச்சரத்தில்!..

மயிலையில்  தரிசனம் செய்த போது எடுக்கப்பட்ட படங்களில் சில - இங்கே பதிவில்!..


திருக்கோயிலின் முன் பரந்து விரிந்த திருக்குளம். இதுவே கபாலி தீர்த்தம். நாற்புறமும் நீண்ட  படிக்கட்டுகள்.  திருக்குளத்தின் நடுவில் அழகான  நீராழி மண்டபம். 

திருக்குளத்தின் கீழ்க்கரையில் அழகுடைய ராஜகோபுரம்.   மேற்கு நோக்கிய திருக்கோயில்.  தலைவணங்கி உள்ளே நுழைந்தால் அழகிய கொடிமரம். அன்பும் அழகும் அறிவும் ஆற்றலும் நிறைந்த - நந்தியம்பெருமான்.

நேர் எதிரே சுவாமி ஸ்ரீகபாலீஸ்வரர் திருச்சந்நிதி - மேற்கு முகமாக கருணை ததும்பி வழியும் சிவலிங்கத் திருமேனி.

'மட்டிட்ட புன்னை' என்னும் திருப்பதிகமும் சிவபுராணம் முதலான வேறு  சில திருமுறைப் பதிகங்களும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

சுவாமி சந்நிதியுள் நுழைந்து வணங்கி உள் திருச்சுற்றில் வலம் வரும்போது கருவறையைச் சுற்றிலும் - நடராஜர், வள்ளி தெய்வயானை  சமேத கல்யாணமுருகன்,  சோமாஸ்கந்தர், பிக்ஷாடனர் - முதலான உற்சவத் திருமேனிகள். 

சண்டீசர் சந்நிதி. திருக்கோஷ்ட மூர்த்தங்களாக - துர்கை, நான்முகன், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, விநாயகர் - தரிசனம். இன்னும்  லக்ஷ்மி, சரஸ்வதி , நாகங்கள், பைரவர், வீரபத்திரர், நற்றமிழ் வளர்த்த  நால்வர் -

மயிலையின் மாண்புகளுள் ஒன்றான அறுபத்து மூவர்  மூலத் திருமேனிகள். உற்சவத் திருமேனிகள் - என கண்கள் நிறைகின்றன. மேனி சிலிர்க்கின்றது.

உள் திருச்சுற்றில் சோமாஸ்கந்த மூர்த்தி தரிசனம். வலம் வந்து மீண்டும் பெருமானைத் தொழுகிறோம்.


வெளியே வலப்புறம் அம்பாள் சந்நிதி. கருணைக் கடலாக ஸ்ரீகற்பகவல்லி!.. நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அருள்கின்றனள்.

தாயைக் கண்ட கன்றென மனம் துள்ளித் தாவுகின்றது. சந்நிதியில் நுழையும் போதே தெய்வீக மணம். ஊழ்வினைகள் இற்றுத் தொலைகின்றன.

அபிராமி அந்தாதி,  சௌந்தர்யலஹரி என தேவியின் புகழ் பாடும் திருப் பாடல்களின் கல்வெட்டுகள்.  பல தலங்களிலும் வீற்றிருக்கும் அம்பாளின் வண்ணப் படங்கள் என - உள் திருச்சுற்று தெய்வாம்சமாகத் திகழ்கின்றது.

வெளித்திருச்சுற்றில்  வலப்புறம் திரும்பினால் -  கிழக்கு நோக்கிய  முதல் சந்நிதி - பூம்பாவையின் சந்நிதி . 

ஞானசம்பந்தப் பெருமானின்  திருவாக்கினால் - பூம்பாவாய் என அழைக்கப் பட்ட பெரும் பேற்றினள். அவளை வணங்குகின்றோம்.


வடக்குத் திருச்சுற்றில் தல விருட்சமாகிய புன்னை.   அம்பிகை மயிலாய் பூசித்த புன்னைவன நாதர் சந்நிதி. - சிவலிங்கத் திருமேனி உள்ளது.  மயிலின்  சிலாரூபம்.

ஈசான்ய மூலையில் சனைச்சரன் சந்நிதி.  வலமாக வந்து நவக்கிரகங்களைத் தொழ - கம்பீரமான கிழக்கு ராஜகோபுரம்.


திருச்சுற்றில் சுந்தரேஸ்வரர், ஜகதீஸ்வரர், நர்த்தன விநாயகர், அண்ணாமலையார் சந்நிதிகள்.

தெற்குத் திருச்சுற்றில் மிக அழகாக விளங்கும் சிங்கார வேலன் சந்நிதி.  திருமதில் ஓரமாக பசுமையான நந்தவனம் உள்ளது.

அருகில் தண்டாயுதபாணி சந்நிதியும், மயிலையில் வாழ்ந்த வாயிலார் நாயனார் சந்நிதியும்.


அலங்காரமாக பதினாறு கால் மண்டபமும்,  சுவாமி எழுந்தருளும் வசந்த மண்டபமும் உள்ளன.

மயிலைக்கு வந்து  திருப்புகழ் பாடி தரிசனம் செய்த  அருணகிரிநாதர் சந்நிதி.

மேலைத் திருச்சுற்றாகிய திருக்கோயில் வாசல். தங்கக் கவசத்துடன் கொடி மரம்.

தலைக்கு மேல் கரங்களைக் கூப்பி - ஈஸ்வரா என்று - வீழ்ந்து வணங்கி, எழும் போது நெஞ்சில் ஆனந்தமும் ஆரவாரித்து எழுவதை உணர்கின்றோம்.


பிரதோஷம், கிருத்திகை, ஆடிப்பூரம், ஆவணிமூலம், நவராத்திரி, சஷ்டி, தனுர் மாதவழிபாடு முதலியனவும் திருமுறை விழாக்களும் சிறப்புற நிகழ்கின்றன.

தைப்பூசத்தினை அனுசரித்து தெப்ப உத்ஸவம் நிகழ்கின்றது.

மயிலையில் நடைபெறும் சிறப்புடைய பங்குனிப் பெருவிழாவின் ஏழாம் நாள் அறுபத்துமூவர் திருவிழா. கண்கொள்ளாக் காட்சியாகும்.

முருகனை வணங்கிய அருணகிரி நாதர்  - ''..கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப்பதி தனில் உறைவோனே!..'' - என்று  பாடி மகிழ்கின்றார். ஆனால் - அந்த பழைமையான திருக்கோயில் இப்போது இல்லை.

ஸ்ரீ கபாலீச்சரம் - 1 - எனும் நேற்றைய  பதிவில், ஸ்ரீ கபாலீச்சரத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வெறியாட்டங்களை குறித்திருந்தேன்.

மேலதிக விவரங்களை - கடற்கரையில் கபாலீசுவரம் - என்னும் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடற்கரையில் இருந்த திருக்கோயிலை வெள்ளையர் இடித்துத் தள்ளி விட்டு  தமக்காக கட்டிக் கொண்டதுவே  - சாந்தோம் கதீட்ரல்.

அதைப் பற்றி விக்கிபீடியா கூறுவது  - இதோ!..



Mylapore was occupied by the Portuguese in 1523, who established the viceroyalty of "São Tomé de Meliapor" or "Saint Thomas of Mylapore." Portuguese rule lasted until 1749, except for a brief interregnum between 1662 and 1687, when the town was occupied by the French.

After 1749, the town fell into the hands of the British East India Company, who took possession of the settlement in the name of Muhammad Ali Khan Wallajah, the Nawab of Arcot. In that same year, Mylapore was incorporated into the Administration of the Presidency of Madras. The settlement known as "Luz" developed during this period.


The commonly held view is that the temple was built in the 7th century CE by the ruling Pallavas.This view is based on references to the temple in the hymns of the Nayanmars (which, however, place it by a sea shore). Thirugnanasambandar's 6th song in Poompavaipathikam and Arunagirinathar's 697th song in Thirumylai Thirupugazh, make clear reference to the Kapaleeswarar temple being located on the seashore in Mylapore. 

The scholarly view that accounts for the discrepancies is that the original temple was built on the shore at the location of the current Santhome Church but was destroyed by the Portuguese, and the current temple (which is 1-1.5 km from the shore) was built by the Vijayanagar kings during the 16th century. There are inscriptions dating back to 12th century inside the temple.

ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்டதே - இப்போதுள்ள திருக்கோயில்.

கடந்த மார்ச்.7  வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா தொடங்கியது. முன்னதாக  வியாழன்று - கிராம தேவதையான அருள்மிகு கோலவிழியம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


திருவிழாவின் மூன்றாம் நாள் அதிகார நந்தி தரிசனம்.

இன்று - ஏழாம் நாள் {மார்ச்-13. வியாழன்} திருத்தேர்.  


முன்னதாக, ஸ்ரீகபாலீஸ்வரரும் ஸ்ரீகற்பகவல்லியும்   சிறப்பு பூஜைகளுடன் திருத்தேருக்கு எழுந்தருள - காலை ஒன்பது மணி அளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்படும்.

மாடவீதிகளில் வலம்வரும் தேர்  - மாலையில் நிலையைச் சென்றடையும்.

எட்டாம் நாள் {மார்ச்-14. வெள்ளி} வெள்ளி வாகனத்தில் ஸ்வாமி அம்பாள் திருவீதி எழுந்தருளல். அப்போது அறுபத்து மூன்று நாயன்மார்களும் கண் கொள்ளாக் காட்சியாக - பவளக்கால் சப்பரங்களில் மாடவீதிகளில் வலம் வருவர்.

மார்ச்-15. பிக்ஷாடனத் திருக்கோலம்.  மார்ச்-16. திருக்கல்யாணம்.

அதன் பின் விடையாற்றி.


பங்குனிப் பெருவிழாவின் போது மக்கள் மத்தியில் - கபாலீஸ்வரர், கற்பகவல்லி, விநாயகர், வள்ளி தேவயானை சமேத முருகன், சண்டிகேஸ்வர் - என பஞ்ச மூர்த்திகளுடன் அறுபத்து மூவர் - உலா வரும் அழகே அழகு.

கல்லாடை புனைந்தருளும் காபாலியைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே!..

கயிலைநன்மலை யாளுங் கபாலியே போற்றி!.. 
மயிலியன் மலை மாதின் மணாளனே  போற்றி!.. போற்றி!..
 திருச்சிற்றம்பலம்!..

புதன், மார்ச் 12, 2014

ஸ்ரீ கபாலீச்சரம் - 1

தருமமிகு சென்னை!.. 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று நெகிழ்ந்துரைத்த வள்ளலார் சுவாமிகளின் திருவாக்கு. இத்தகைய சென்னை மாநகரில் புகழ் பெற்று இலங்கும் திருத்தலங்களுள் ஒன்று -   மயிலாப்பூர்.

திருமயிலை என விளங்கும் மயிலாப்பூரில் கம்பீரமாக விளங்குவது அருள்மிகு கற்பகவல்லி உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயில்.


அம்பாள் - மயில் உருவாகி புன்னை வனத்தில் - 
சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம்

கபாலீச்சரம் என தேவாரத்தில் சிறப்பிக்கப் பெறும் இத்திருத்தலம் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் முப்பத்திரண்டில் - இருபத்து நான்காவது தலமாகும்.

தொண்டை நாடு -

வேழம் உடைத்து மலை நாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர்வயல் தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து.

- என ஔவையாரால் புகழப் பெற்ற திருநாடு.

''..தூய மாதவஞ் செய்தது தொண்டை நன்னாடு..'' - என்பது சேக்கிழாரின் திரு வாக்கு.

இதற்கெல்லாம் காரணம் இல்லாமல் இல்லை. எனினும் ஒரு குறிப்பு மட்டும் -

ஐயன் திருவள்ளுவர் திருமயிலையில் பிறந்தது வாழ்ந்ததாக வரலாறு. 

இத்தகைய சிறப்புடைய  -  மயிலையம்பதியில், அக்காலத்தில் -

கடல் வணிகம் செய்து பெரும் தனவந்தராக விளங்கிய சிவநேசன் செட்டியார் சிவநெறி வழுவாதவராக அறநெறிகளின் வழி வாழ்ந்து வந்தார்.

அடியார்க்கும் எளியார்க்கும் வறியார்க்கும் அமுது செய்வித்து அவர்தம் வாட்டம் தணிவித்த நல்லறம் அவருடையது.

அனைவரிடமும் அன்பு கொண்டு விளங்கிய சிவநேசருடைய அருந்தவப் புதல்வி - பூம்பாவை எனும் நல்லாள்.

ஒருநாள் - சிவபூஜைக்கென நந்தவனத்தில் தோழியரோடு மலர் கொய்த வேளையில் - முன்னை விதி வந்து மூண்டெழுந்ததால் - நாகம் தீண்டி மயங்கி விழுந்தாள். தோழியர் ஓடோடிச் சென்று உற்றாரிடமும் மற்றோரிடமும் செய்தி அறிவித்து அழைத்து வருவதற்குள் - அந்த நந்தவனத்திலேயே மாண்டாள்.

தளிராய்த் தழைத்து - மலராய் மலர்ந்தவள் - மலர் வனத்தினுள் மாண்டு கிடப்பதைக் கண்டு - கதறிக் கண்ணீர் வடித்து அழுதார் சிவநேசர்.

''..பூம்பாவை! உன்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்ததெல்லாம் பாழும் பாம்புக்கு  பலி கொடுக்கவா?..''

தாய் - தகப்பனின்  கதறலைக் கேட்டு அங்கே கூடியிருந்தோர் கண்களில் நீர் ததும்பியது.

''..ஞானச்செல்வராகிய சம்பந்தப்பெருமானுக்கு உன்னை கன்யாதானம் செய்ய அல்லவா சிந்தை கொண்டிருந்தேன்!.. என் சிந்தை சிதறுண்டு போனதே!..''

செட்டியாரின் ஆற்றாமையைக் கேட்டதும், அனைவரும் திடுக்கிட்டனர்.

இவர் மனதிற்குள் - இப்படியும் ஒரு எண்ணம் இருந்ததா!..

கைதர வல்ல - கற்பகமும் கபாலியும்  - கருநாகம் உன்னைத் தீண்டுங்கால் - காணாது  இருந்தனரோ!.. காலனைக் கடியாது விடுத்தனரோ?..

செட்டியாரின் கதறல் - மயிலையில் மட்டுமின்றி கயிலையிலும் கேட்டது.

''ஆனது ஆயிற்று. உலகியல் இது என உணர்க!..''

ஆன்றோரும் சான்றோரும் அமைதிப்படுத்தினர். ஒருவாறு செட்டியார் மனந் தெளிய - மற்ற காரியங்கள் நடக்கலாயின.

அன்று விடியற்காலை. அனைவரும் ஆயத்தமாக இருந்தனர். தனது அறைக்குள்ளிருந்து சிவநேசர் வெளியில் வந்தார் - கையில் ஒரு பொற் கலசத்துடன்!..

அனைவருக்கும் ஆச்சர்யம். பார்வையினாலேயே வினவினர். செட்டியார் சொன்னார்.

''..பூம்பாவையைத் தான் பெருமானின் கரங்களில் ஒப்படைக்க இயலவில்லை. இந்தப் பொற்குடத்தையாவது ஒப்படைக்கின்றேன்!.''

''..ஒன்றும் புரியவில்லையே!?..''

''..பூம்பாவை சம்பந்தப் பெருமானுக்கென குறிக்கப்பட்டவள். காலக் கொடுமையால் ஆருயிர் நீத்தாள். அங்கம் அஸ்தியாகி விட்டது. என்றேனும் ஒருநாள் சம்பந்தப் பெருமான்  திருமயிலைக்கு  வருவார். அப்போது அவரிடம் அதனை ஒப்படைப்பது ஒன்றே எனது நோக்கம்!..''

''..செட்டியாரின் சித்தம் பேதலித்து விட்டதா!.. இதென்ன முறையற்ற வழக்கம்!..''

ஆங்காங்கே சிலர் முணுமுணுத்தனர். ஆயினும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

சிவநேசரின் எண்ணப்படியே - பொற்குடத்தில் சேகரிக்கப்பட்ட அஸ்தி- கன்னி மாடத்தில் வைக்கப்பட்டது. பட்டு அணிவிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டது. அருகில் தூங்காமணி விளக்குகள் ஏற்றப்பட்டன.

காலம் நகர்ந்தது. ஆனாலும் சிவநேசரின் கண்ணீர் வற்றவில்லை. ஒருநாள் -

ஊழியன் ஒருவன் ஓடோடி வந்தான்..

''.ஞானசம்பந்தப் பெருமான் இன்னும் சில தினங்களில் மயிலைக்கு விஜயம் செய்கின்றார்கள்!.. தற்சமயம் ஐயன் திருவேற்காட்டில்  திருமடம் இருப்பு!..''

அமுத மழை பெய்த மாதிரி இருந்தது - சிவநேசன் செட்டியாருக்கு!..


மயிலைக்கு முதன்முறையாக எழுந்தருளும் பெருமானுக்கு மகத்தான வரவேற்பு வழங்க ஆயத்தமாயினார்.

அன்றையப் பொழுதும் இனிதே புலர்ந்தது. ஊர் திரண்டு கூடியிருந்தது.  திருக்கோயில் வாசலில் மாவிலைத் தோரணங்கள். மங்கல இசை முழக்கங்கள்.

வங்கக் கடலில் அலைகள்  ஆனந்தமாகப் புரள - கடற்துறையில் நங்கூரம் இடப்பட்டிருந்த நாவாய்களும் - நாங்களும் ஐயனைப் பார்க்க வேண்டும் என்பது போல அலைகளினூடே அசைந்து கொண்டிருந்தன.

சற்று தொலைவில்  - மெலிதாகக் கேட்ட சிவகோஷங்கள் - இதோ ஐயன் எழுந்தருள்வதாக அருகிலேயே - தெளிவாகக் கேட்டன.

''..ஆகா!.. புண்ணியம் செய்தனை மனமே!..'' - நெஞ்சம் ஆனந்தத்தினாலும் ஆற்றாமையினாலும் பொங்கியது.

இதோ.. இதோ!.. பெருமானின் முத்துப்பல்லக்கு!. முன்னே வந்த தோரணங்களும் பதாகைகளும் திருக்கொடியும் சற்றே விலகி நிற்க -

பாதந்தாங்கிகள் - தோளிலிருந்து - பல்லக்கினை மெல்ல  இறக்கி வைத்தனர்.

''..ஹர ஹர சங்கர!.. ஜய ஜய சங்கர!..'' - அடியார் திருக்கூட்டத்தினோடு அலைகளும் ஆர்ப்பரித்தன.

முத்துப் பல்லக்கில் - ஞான சம்பந்தப்பெருமான் புன்னகையுடன் விளங்கினார்.

முகில் கிழித்த நிலவென  -  முகங்காட்டியபடி - ஞானசூரியன் - பொற்பாதக் கமலங்களைப் பூமியில் வைத்தது.

காழியர் கோன் கழல்களில் - வீழ்ந்து வணங்கினர்.

''..திருச்சிற்றம்பலம்!.. திருச்சிற்றம்பலம்!..''

ஞானசம்பந்தப் பெருமானின்  திருப்பாதங்களிலிருந்து,  எழ மனமில்லாமல் எழுந்து -  ஆனந்தக் கண்ணீருடன் நின்றிருந்தனர் - அனைவரும்.

அதற்குள் - ஐயனுடன் வந்திருந்த அடியார் ஒருவர் - பணிவுடன் ஐயனை நெருங்கி - சிவநேசன் செட்டியாரைச் சுட்டிக் காட்டினார்.

பெருமான் - முகம் கொண்டு நோக்க - திருக்குறிப்பு அறிந்து, மேனி சிலிர்க்க மெல்ல முன் நடந்தார் - சிவநேசர். அழுகையும் ஆத்திரமும் அவருக்குள் பொங்கிப் பெருகின. அவையடக்கம் கருதி -  தொண்டைக் குழியினுள்ளேயே அழுகையை அழுத்தினார்.

''..திருச்சிற்றம்பலம்!.. தேவரீர்.. எளியேனுக்கு இடும் பணி யாது!..''

திருஞான சம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்தார்.

''..கை தர வல்ல - கற்பகமும் கபாலியும்  -  பூம்பாவையைக் கருநாகம் தீண்டுங்கால் - காணாது  இருப்பரோ!.. காலனைக் கடியாது விடுப்பரோ?..''

அதிர்ந்தார் - செட்டியார். மேனியில் - மின்னல்  பாய்ந்தது போலிருந்தது.

''..அந்த அஸ்தி கலசத்தினைக்  கொணர்க!..''

அடுத்த சில விநாடிகளில் - ஞான சம்பந்தப் பெருமானின் முன்பாக பூம்பாவை அஸ்தி அடங்கிய பொற்குடம்.

அலைகடலும் அதிராமல் அடங்கியது - அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற ஆவலுடன்!..

ஒருகணம் ஞான சம்பந்தப் பெருமான் திருவிழி கொண்டு நோக்கினார்.

ஐயனின் திருக்கரங்களில் - ஈசன் திருக்கோலக்காவில் அளித்த பொற்றாளம்!..

அதன் உள்ளிருந்து சீகாமரப் பண் எனப் புறப்பட்டாள் - ஓசை கொடுத்த நாயகி!..

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!..

நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தப் பெருமான் திருப்பாடல்களைத் தொடர்ந்தனர்.

கைதர வல்ல - கற்பகமும் கபாலியும் கண் கொண்டு நோக்கினர்.

திருப்பதிகம் என பத்தாவது பாடலைப் பாடுங்கால் - பொற்குடம் உடைந்து சிதற, அதனுள்ளிருந்து அன்றலர்ந்த தாமரை என - பூம்பாவை வெளிப்பட்டாள்.


உள்ளுணர்வால் அனைத்தையும் உணர்ந்தவளாகி - ஐயனை வலஞ்செய்து வணங்கி நின்றாள்.

ஆ!.. ஆ!.. - என உலகோர் வியந்தனர். விண்ணோர் வாழ்த்தினர்.

ஞானசம்பந்தப் பெருமான் - பலன் கூறி திருப்பதிகத்தினை நிறைவு செய்தார்.

ஆனந்தக் கண்ணீர் ஆறாகப் பெருக, அனைவரும் ஐயனின் மலரடிகளில் வீழ்ந்து வணங்கினர்.

வாராது வந்த மாமணி என  - மீண்டும் பிறந்த பூம்பாவை - உச்சி முகர்ந்த சிவநேசர் , தன் திருமகளைத் திருமணம் கொண்டருள  வேண்டுமென ஞான சம்பந்தப் பெருமானை வேண்டினார்.

சம்பந்தப் பெருமான் வாழ்வியல் நெறியை அவருக்கு உணர்த்தினார்.  

''..பூம்பாவையை யாம் மீண்டும் உயிர்ப்பித்தோம். ஆதலின் அவள் எமக்கு மகளாவாள்!..'' - எனக் கூறி அனைவருக்கும் திருநீறு அளித்து ஆசி கூறினார். 

அனைவருக்கும்  - கற்பகவல்லியுடன் உடனாகிய கபாலீச்சரத்தானைத் தரிசனம் செய்வித்தார்.

பூ என மலர்ந்த பூம்பாவையும் இல்லறத்தில் நாட்டமின்றி - இறைபணியில் நின்றாள். சிவனடியே சிந்தித்திருந்து - சாயுஜ்யம் பெற்றாள். 

இத்தகைய அருஞ்செயல் நிகழ்ந்த திருத்தலம் - திருமயிலை.

திருநாவுக்கரசர் இத்தலத்தினை - மயிலாப்பு எனப் புகழ்கின்றார்.  



அம்பாள் - மயில் உருவாகி புன்னை வனத்தில் - சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம் எனும் பழந்திருக்கோயில் கடற்கரையில் இருந்தது.

வணிகம் என்ற போர்வையுடன் நுழைந்த வந்தேறிகள் - நம் தாயக மண்ணின் மீது வெறிகொண்டு, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். பாரம்பர்ய கலைச் சின்னங்களையும் திருக்கோயில்களையும் பாழாக்கினர். மேலும் சமய காழ்ப்புணர்வும் சேர்ந்து கொண்டதால், 1672ல் - திருக்கோயிலை இடித்தனர்.

பித்துப் பிடித்த மந்தி ஊமத்தங்காயைத் தின்றதைப் போலானது. அதன் கொடுங் கரங்களிலிருந்து -   மந்த்ர பீட யந்த்ரங்கள்,  மூல விக்ரகங்கள் ஆகிய இவற்றை மட்டுமே நல்லோர்களால் மீட்க முடிந்தது.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் - எஞ்சிக் கிடந்த நவாப் படைகளுடன் - பிரஞ்சு, போர்ச்சுக்கீசிய, பிரிட்டிஷ் படைகள் முட்டி மோதிக் கொண்ட விவரம் சென்னையின் சரித்திரத்தில்  இடம் பெற்றுள்ளது.

கடற்கரையில் இருந்த  திருக்கோயிலை  இடித்துத் தரை மட்டமாக்கி விட்டு அடித்தளத்தின் மீது வெள்ளையர்கள் அவர்களுக்கென கட்டிக் கொண்ட வழிபாட்டு இடமே,  இப்போதுள்ள - ''சாந்தோம் கதீட்ரல்''.

மயிலைக் கபாலீச்சரத்தில்
பங்குனிப் பெருவிழா நிகழ்ந்து கொண்டிருக்கும்
இவ்வேளையில் - இன்னும்  செய்திகள் அடுத்த பதிவில்!..

மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான்.. போற்றி!.. போற்றி!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..