நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

கரிக்குருவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரிக்குருவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 17, 2015

கரிக்குருவி - 3

தேவகுருவாகிய பிரகஸ்பதியின் புத்திரர் - பரத்வாஜ மகரிஷி. மகாஞானி

அவருக்கும் ஒருமுறை பிரம்ம சாபம் விளைந்தது.

அதை அனுபவித்துத் தீர்க்க வேண்டிய சூழ்நிலை.

பிரம்மனிடமே சாப விமோசனம் கேட்டார்.

ஏதேனும் ஒரு பறவையாகப் பிறந்து - வினையைத் தீர்த்துக் கொள்க!..

நான்முகனிடமிருந்து விடை கிடைத்தது.

பறவையாகப் பிறந்து - அங்குமிங்கும் பறந்து திரிந்தாலும் -

தனக்கும் ஒரு கடமை உண்டு. பொழுதெல்லாம் பயனுள்ளதாகக் கழிய வேண்டும்!.. -  என சிந்தித்தார் - பரத்வாஜ மகரிஷி.


அதன்படி, பரத்வாஜ மகரிஷி - தான் கொண்ட கோலம் தான் - கருங்குருவி!..

தனது கடும் வினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய - பரத்வாஜ மகரிஷி , 
ஏன் கருங்குருவியாகப் பிறக்க வேண்டும்!..

வலியன் ஆன கருங்குருவி - ஒன்று தானே - 
தானும் வாழ்ந்து மற்ற பறவைகளையும் வாழ வைக்கின்றது!.. 

மகாஞானியாகிய பரத்வாஜ மகரிஷி - இதனை உணர்ந்திருந்ததால் தான் கருங்குருவியாக உருக்கொண்டார்.


கருங்குருவியாக உருமாறிய பரத்வாஜ மகரிஷி -  கருங்குருவியின் இயல்புகளுடன் - நாளும் நல்லறம் புரிந்தார்.

ஊரும் உயிர்களும் வாழ தீர்த்தக் குளம் அமைத்தார்.

பாதிரி மரத்தின் நிழலில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார்.

கருங்குருவியின் வடிவிலேயே - நாளும் சிவ பூஜை செய்து சிவ தியானம் மேற்கொண்டார்.

தன் மகனின் தவநிலையைக் கண்ட - தேவகுரு பிரகஸ்பதி தாமும் அவரோடு இருந்து சிவ பூஜை செய்தார்.

காலச் சக்கரங்கள் உருண்டோடின. நேரம் கனிந்து வந்தது.


பறவைக்கு இரங்கிய பரமதயாளன் - பரத்வாஜ மகரிஷிக்கு இரங்காமல் இருப்பானா!..

வேத வேதாந்தங்களைக் கடந்த விமலன் - விடை வாகனனாக அம்பிகையுடன் தரிசனம் தந்தருளினான்.

கருங்குருவியின் வடிவிலிருந்து நீங்கிய பரத்வாஜ மகரிஷி - பரம்பொருளை வலம் வந்து வணங்கினார்.

தன்னலமில்லாத கருங்குருவியாகப் பிறந்து தொண்டு செய்த பரத்வாஜ மகரிஷியை மனதார வாழ்த்திய எம்பெருமான் -

விரும்பும் போதெல்லாம் - தம் ஆயுளைத் தாமே நீட்டித்துக் கொள்ளும் வல்லமையை - பரத்வாஜ மகரிஷிக்குத் தந்தருளினன்.

இப்படி ஒரு தல வரலாறு உண்டு!..

அது எந்த தலத்திற்கு!.. அந்தத் தலம் எங்கிருக்கின்றது!?..

பரத்வாஜ மகரிஷி கருங்குருவியாகி - சிவபூஜை செய்த திருத்தலம் தான் -

திருவலிதாயம்!..



அருட்பிரகாச வள்ளலார் ஸ்வாமிகளின் திருவாக்கில் தரும மிகு சென்னை என்று புகழப்பட்ட சென்னை மாநகரில் -

அம்பத்தூரின் அருகில் - தற்காலத்தில் - பாடி என வழங்கப்படுகின்றதே -

அதுதான் திருவலிதாயம்!..

மிகச் சிறந்த திருத்தலம்..

இந்த வரிகளைப் பதிவிடும்போது நெஞ்சக் கன கல் நெகிழ்ந்து உருகுகின்றது.

ஏனென்று புரியவில்லை!.. புரிந்தாலும் வெளியே சொல்லத் தெரியவில்லை!..

இத்தலத்தில் வேண்டிக் கொள்பவர்களுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்கின்றன என்பது ஆன்றோர் வாக்கு!..

நியாயம் தானே!..

அண்டி நிற்போருக்கு ஆயுள் நீட்டிப்பு!..

இது - கருங்குருவியின் வடிவிலிருந்த பரத்வாஜ மகரிஷி பெற்ற வரம்!..

பரம்பொருள் அன்றைக்கு பரத்வாஜ மகரிஷிக்கு நல்கிய வரத்தின் பயன்!..

பலவீனமான இதயம் - பரமன் தொண்டினால் - பலப்படுகின்றது!..

பரமன் தொண்டு எனப்படுவது பிற உயிர்களுக்கான தொண்டு!..

மக்கள் பணியே மகேசன் பணி!..

இதயம் பலமானால் - எண்ணங்களும் நலமாகும் தானே!..

எண்ணங்கள் நலமானால் - ஏது மரணம்!..

மரணமில்லாப் பெரு வாழ்வு!..

இதைத் தானே ஞானியரும் சித்தர்களும் உபதேசிக்கின்றனர்.

காலவெள்ளத்தில் - நம்முடைய வண்ணங்கள் மறையலாம். மறைந்தே தீரும்!..

ஆனால் -

நம்முடைய எண்ணங்கள் மறைவதே இல்லை.. 
ஏழேழு பிறப்பிலும் அவை தொடர்ந்து வந்து நம்மையே சேர்கின்றன..

நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தால் - 
அவை ஒவ்வொரு பிறப்பிலும் மெருகேறி  
முத்தாக, மணியாக, ரத்தினமாக உருமாறி 
நம்மையே வந்து சேரும் என்பதே நீதி!..

உயிரற்ற கரித் துண்டு கால ஓட்டத்தில் வைரமாகும் போது -
உயிருள்ள எண்ணங்கள் அடையும் மேன்மையைச் சொல்லவும் வேண்டுமோ!..

எண்ணங்கள் உயிருள்ளவைகளாகத் திகழ்வதற்கு அடிப்படை -

தன்னலமற்ற தொண்டு!..

அதற்கு -

நம் முன்னே காணப்படும் அடையாளங்களுள் மிகச்சிறந்தது - கரிக்குருவி!..

திருவலிதாயத்தின் தல வரலாற்றினுள் பொதிந்திருக்கும் உண்மை இதுவே!..


இறைவன் - ஸ்ரீ வலிதாய நாதர், ஸ்ரீ வாலீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ தாயம்மை, ஸ்ரீ ஜகதாம்பிகை
தீர்த்தம் - பரத்வாஜ தீர்த்தம்
தல விருட்சம் - பாதிரி, சரக்கொன்றை

திருமூலஸ்தானம் கஜபிருஷ்டம் போல விளங்குகின்றது.


பரத்வாஜ மகரிஷி வணங்கி வழிபட்ட திருவலிதாயத்தில் ஸ்ரீராமன் - இளைய பெருமாளுடன் வணங்கியதாக ஐதீகம்

பின்னும் ஆஞ்சநேயரும் சூரியனும் சந்திரனும் இந்திரனும் வழிபட்டு நலம் எய்தினர்.

பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் தான் -

இராவணனை வென்று வீழ்த்திய ஸ்ரீராமன் - தம்பியுடனும் சீதையுடனும் ஆஞ்சநேயருடனும் - அயோத்திக்குத் திரும்பும் வழியில் விருந்து உண்டு மகிழ்ந்தனன். 

கஜபிருஷ்ட மூலஸ்தானம்
திருஞானசம்பந்தப் பெருமான் - தரிசித்து - பாடிப் பரவி வழிபட்ட திருத்தலம்.

தேவாரத் திருப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் - 32.

அவற்றுள் இருபத்தொன்றாவது திருத்தலம்.

அருணகிரிநாதரும் திருப்புகழ் பாடி வழிபட்டிருக்கின்றனர்.


தமிழகத்தில் - தேவகுரு பிரகஸ்பதி வழிபட்ட - குரு ஸ்தலம் எனப்படும் திருத்தலங்கள் மூன்றனுள் ஒன்று - திருவலிதாயம்.

மற்றவை - திருச்செந்தூர், தென்குடித் திட்டை (தஞ்சை).

கடலில்நஞ்சம் அமுதுண்டு இமையோர் தொழுதேத்த நடமாடி
அடலிலங்கை அரையன்வலிசெற்றருள் அம்மான் அமர்கோயில்
மடலிலங்கு கமுகின் பலவின் மதுவிம்மும் வலிதாயம்
உடலிலங்கும் உயிருள்ள அளவுந்தொழ உள்ளத் துயர்போமே!.. (1/3/8)  
திருஞானசம்பந்தர்.
* * *

அடுத்த பதிவில் 
வலியன் வலம் வந்து வணங்கிய திருத்தலம்.

ஐயன் அருள் உண்டு என்றும் பயமில்லை!..

சிவாய திருச்சிற்றம்பலம்.. 
* * *

வெள்ளி, மார்ச் 13, 2015

கரிக்குருவி - 2

அதோ கடம்பவனம்!..

இன்னும் சிறிது தூரம் தான்!.. - என்று எண்ணியபடி விரைந்து பறந்து கொண்டிருந்தது - அந்தக் குருவி.

கரியன் எனவும் கரிச்சான் எனவும் கூறப்பட்ட அந்தக் குருவியை -
காக்கைக்குக் காதம் - கரிக்குருவி!..- என ஏளனம் செய்திருந்தனர்.

இந்த அவலம் எல்லாவற்றையும் நீக்கிட வேண்டும்!..

- அது ஒன்றே முனைப்பாக இருந்தது கரியன் எனப்பட்ட கரிக்குருவிக்கு.


கரிக்குருவி மிகவும் களைத்திருந்தது. இளைத்திருந்தது.
காரணம் - அது வெகு தொலைவிலிருந்து ஓய்வின்றிப் பறந்து வருகின்றது.

நின்று நிதானமாக - இயற்கை அழகையெல்லாம் கண்டு களிப்பதாக -
அதன் பயணம் அமையவில்லை..

கருங்காக்கையிலிருந்து கொடுங்கழுகு வரை - இந்தக் கருங்குருவியை - விட்டேனா பார்!.. என்று வல்வழக்கிட்டு வாட்டி வதைத்தன.

சின்னஞ்சிறு புதருக்குள் சிறுகூடு கட்டி சேர்ந்திருக்கக் கூட முடியவில்லை.

தனக்கு மட்டும் இக்கொடுமை என்றில்லாமல் தன் இனத்தார் எல்லாருக்குமே இது தான் நிலைமை என்றிருந்ததைக் கண்டு - அதன் மனம் வெதும்பியது.

ஏனெனில் - இந்தக் குருவியையே - தமக்குத் தலைவனாகக் கொண்டிருந்தன - ஏனைய கரிக்குருவிகள்.

தலைவனாகிய தன்மையினால் -
தன்னைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை தேடும் வகையினால் தான் -

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் - நீண்ட நெடுந்தூரம் பயணித்து -
கடம்ப வனமாகிய மதுரையம்பதியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

கரிக்குருவிக்கு இந்நாள் நன்னாளாக அமைந்தது பூர்வ ஜன்ம புண்ணியம்!..

மதிய வேளையில் -  பாதுகாப்பாக அமர்வதற்கு நிழல் தேடியபோது - அந்த மரத்தின் கீழ் துறவி ஒருவர் அமர்ந்திருக்க - அவரைச் சுற்றிலும் அடியார்கள்!..

''மாமதுரையில் திகழும் பொற்றாமரைக் குளம் மகத்தானது. அதில் மூழ்கி எழுந்து - ஆங்கே வீற்றிருக்கும் ஆலவாய் அண்ணலையும் அங்கயற்கண் அம்மையையும் பணிந்து வணங்குவோர்க்கு அல்லல் ஒரு போதும் இல்லை!..''

- என அடியார்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார்.

அதைக் கேட்ட அக்கணமே - கரிக்குருவியின் சிறகுகள் -

அங்கயற்கண்ணி செங்கோல் ஏந்தி அருளாட்சி செய்யும் திருத்தலமாகிய
மாமதுரையை நோக்கி விரிந்தன.


அடி வானத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்த சூரியன் -
தன் கதிர்களால் - அக்குளத்தில் பூத்துக் கிடந்த தங்கத் தாமரைகளை வருடி - தன் கதிர்களில் ஒளி வீசும் பொன் வண்ணத்தை ஏற்றிக் கொண்டிருந்தான்.

சோமன் ஆகிய சந்திரன் வணங்கிய சுந்தர லிங்கத்தை
சூரியன் ஆகிய தானும் வணங்கி உவகை கொண்டான்.

இதைக் கண்ட குருவியின் மனம் ஆனந்தக் கூத்தாடியது.

தங்கத் தாமரைகள் மினுமினுத்துக் கொண்டிருந்த - அந்தக் குளமே- பொற்றாமரைக் குளம் என யூகித்துக் கொண்டது - கரியன்!..

அம்மையே!.. அப்பா!.. - என்று கூவியபடி, பொற்றாமரைக்குளத்தில் மூழ்கியது. எழுந்தது. மீண்டும் மூழ்கியது.. எழுந்தது.

மூன்றாவது முறையாக மீண்டும் மூழ்கி எழுந்த கரியன் - தன் சிறகுகளைச் சிலிர்த்து உதறிக்கொண்டு அந்தக் கடம்பவனத்தை வலம் வந்தது.

கடம்ப மரத்தினடியில் சுயம்புவாக திருமேனி.

சொக்கலிங்கம். சுந்தரேச சிவலிங்கம்!..

இக்கலிங்கம் போனால் என்? - மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை!..

- என இரட்டைப் புலவர்கள் பாடித் துதித்த மகாலிங்கம்!..

அருகே - அமுத ஸ்வரூபிணியாக அங்கயற்கண் அம்பிகை!..

காணற்கரிய கடவுளைக் கண்ட - கரியனின் கண்களில் நீர்..

பேசுதற்கு மொழியின்றி - வைத்தவிழி வைத்தபடி - வெகுநேரம் பார்த்திருந்தது.

இருள் சூழ்ந்திருந்த அவ்வேளையில் சிவாச்சார்யார்கள் வந்தனர்.
ஐயனுக்கும் அம்பிகைக்கும் நித்ய ஆராதனைகளை நிகழ்த்தினர்.

உடன் வந்தவர்கள் - அர்த்தஜாம பூஜை சிறப்பு என்று பேசிக் கொண்டனர்.

திருவிளக்குகளின் சுடரைக் குறைத்து வைத்து விட்டுப் போயினர்.

கரிக்குருவிக்கு வந்த களைப்பு - கண்களைச் சுழற்றியது.

கூட்டில் அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்து விட்டோமே!..

தன் துணையை ஒரு கணம் நினைத்தது.. ஈசனே.. காப்பு!.. - எனத் துதித்தது.

நறுமணம் கமழ்ந்த நந்தவனத்துப் புதரினுள் சென்று கண்ணயர்ந்தது.

இயல்பாகத் தூக்கம் - பிரம்ம முகூர்த்த வேளையில் கலைந்ததும்,

கீசு.. கீசு.. - எனப் பாடிக் களித்தது. அங்குமிங்குமாகப் பறந்து திரிந்தது.

பொற்றாமரைக் குளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கிக் களித்த வேளையில் -

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்!..

திருப்பள்ளி எழுச்சி பாடியவண்ணம் சிவனடியார்கள் திரண்டு வந்தனர்.

அங்கயற்கண் அம்மையுடன் ஐயன் - துயில்வதாகப் பாவித்து பெருமானையும் அம்பிகையையும் - துயில் எழ செய்தனர்.

நன்னீரால் நீராட்டி - புத்தாடைகளை அணிவித்தனர். வாசம் மிகும் சந்தனாதி திரவியங்களைப் பூசினர்.

அன்றலர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளைச் சூட்டி அலங்கரித்து தூப தீப ஆராதனைகளுடன் உண்ணுதற்கு இனிதான அன்ன வகைகளை -அன்புடன் சமர்ப்பித்து வணங்கினர்.

அம்மையப்பனுக்கு படைக்கப்பட்ட - சித்ரான்னங்களைத் தாங்கள் உண்ணும் முன்பாக -

ஆணவ, கன்ம, மாயா மலங்களைப் பலியிடுதற்கான பலிபீடத்தில் -
சிற்றுயிர்களுக்கு என அன்னத்தை அள்ளி வைத்தனர்.

அதுவரையிலும் ஆங்காங்கே காத்துக் கிடந்த குருவிகளும் புறாக்களும் கிளிகளும் அணில்களும் ஓடோடி வந்து - அந்த அன்னத்தைத் தம்முள் பகிர்ந்து கொண்டன.

கரியன் தானும் தாவிச் சென்று -  ஈஸ்வரப் பிரசாதத்தைப் பெருமகிழ்வுடன் உண்டது.

அங்கிருந்த பறவைகள் ஒன்றோடொன்று அடித்துக் கொள்ளாதது - இதுவரை காணாத விநோதமாக இருந்தது கரியனுக்கு!..

பறவைகள் மட்டுமின்றி - மனிதர்களும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாமல் அன்பு கொண்டு இருந்தனர் - அன்றைய மதுரையில்!..

இரண்டாம் நாளும் கழிய - இறைதரிசனம் வேண்டிக் காத்திருந்தது கரியன்!..

விடிந்தது - மூன்றாம் நாள். விருந்தும் மருந்தும் மூன்று நாள் தானே!..

இன்று எப்படியும் இறைவனிடம் நம் குறையைச் சொல்லிட வேண்டுமெனக் காத்துக் கிடந்தது கரியன்.

நித்ய வழிபாடுகள் எல்லாம் நிறைவேறின..

இதோ.. இப்போதே சொல்வோம்!.. - என சிந்தித்த அப்பொழுதில் - அம்மையும் அப்பனும் அந்தக் கருங்குருவியின் மீது கழிவிரக்கம் கொண்டு எதிர்நின்றனர்.

ஈசனுடன் கரிக்குருவி
எண்ணிலா உயிர்க்கு இறைவ போற்றி வான்
தண்ணிலா மதிச் சடில போற்றிஎன்
புண்ணியப் பயன் போற்றி அங்கயற்
கண்ணிநாத நின் கருணை போற்றி!..

- எனத் துதித்துத் தொழுது வணங்கி வலம் வந்தது கரிக்குருவி.


அனைத்தும் அறிந்தவளாகிய அம்பிகை - அந்தக் கரிக்குருவி அறியும் பொருட்டு -

இக்குருவிக்கு ஏன் இத்தனை இடுக்கண்!..  - என்று ஐயனிடம் வினவினாள்..

முற்பிறப்பினில் - நிறைந்த அறிவுடன் நற்காரியங்கள் பல செய்தவனாக இருந்தாலும் - அதனூடே இழைத்த தீவினையால் - இத்துயர் வந்துற்றது!..

- என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இந்தக் குருவி அடைந்த துயர் போதும்!.. அன்பு கொண்டு அடைக்கலம் நல்கி ஆவன செய்தருளுங்கள் ஸ்வாமி!..

அங்கயற்கண்ணி அன்பு கொண்டு பரிந்துரைத்தாள்.

தேவி!. இதன் தொல்வினைகள் எல்லாம் தீர்ந்தொழிந்தன. அதனாலன்றோ - நம்மை நாடி வந்ததும்!.. இக்கரியனுக்கு ம்ருத்யுஞ்சய மந்திரத்தை யாம் உபதேசிப்போம்!..

ஈசன் மொழிந்ததும் தேவதுந்துபிகள் முழங்கின. பூமாரி பெய்தது.

புண்ணியத்துடன் மகா மந்த்ர உபதேசம் பெற்ற கரியன் - மீனாட்சி சுந்தரனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கியது.

ஆயினும்,  எனக்கு ஐய!.. ஓர் குறை.. தீய புள் எலாம் ஊறு செய்து எனைக் காய்ந்தன. மனமும் கழியக் கண்டு எளியன் ஆயினேன்!.. - என்றது.

அதைக் கேட்ட எம்பிரான் - புன்னகையுடன்,

அந்த புள்கட்கு எல்லாம் வலியை ஆகுக நீ!.. - என்றருளினான்.

இதைக் கேட்டு மகிழ்ந்த கரியன் மேலும் தாழ்ந்து பணிந்து -

பேதையேற்கு இன்னும் ஓர் வரம் தந்தருளல் வேண்டும்!.. -  என்றது.

யாது வேண்டும் கேள்!.. - என்றான் எம்பெருமான்.

வலியை என்பது என்மரபினுக்கு எலாம்
பொலிய வேண்டும் எப்போதும் நீ சொன்ன
ஒலிய மந்திரம் ஓதியோதி நாங்
கலியை வெல்லவும் கருணை செய்!..

- எனறு காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி நின்றது.

புன்னகைத்தனர் - அம்மையும் அப்பனும்!..

ஆகுக.. அவ்வண்ணம்!.. - என்று அருள் புரிந்தனர்.

அந்த அளவில் -

எளியன் என்றிருந்த கரியன் - வலியன் என்றானது!..

மீண்டும் - மீனாட்சி சுந்தரேசனின் திருவடிகளைத் துதித்தது - கரியன்..

இதுவே - கரிக்குருவிக்கு அருளிய லீலை!..

கருங்குருவிக்கு உபதேசித்த படலம் - என்றும் புகழப்படும் திருவிளையாடல்
ஈசன் நிகழ்த்திய அளவிலா விளையாட்டுகளுள் - குறிக்கப்படும் அறுபத்து நான்கினுள் நாற்பத்து ஏழாவது திருவிளையாடல் ஆகும்!..


மதுரையில் நிகழ்வுறும் ஆவணி மூலப் பெருந்திருவிழாவில் - நடத்தப்பெறும் பத்து திருவிளையாடல்களுள் - முதலாவதாக நிகழ்த்தப்படுவது இதுவே!..

ஈசன் நிகழ்த்திய இந்தத் திருவிளையாடலை -

கருங்குருவிக்கு அன்று அருளினை போற்றி!..

- என்று , மாணிக்கவாசகப் பெருமான் போற்றுகின்றார்.

எனில், கருங்குருவி பெற்ற பேறு தான் என்னே!..

தான் மட்டும் இன்புற வேண்டும் என எண்ணாமல் -
தன் இனத்தாரும் இன்னல் தீர்ந்து இன்புற்றிருக்க வேண்டும்!..

- என, எண்ணிய எண்ணம் தான்-
எளியனாக இருந்த கருங்குருவி வலியன் என்று ஆனதற்குக் காரணம்!..

திருவிளையாடற் புராணம் காட்டும் உண்மை இதுவே!..

கருங்குருவியின் இந்தத் தலைமைப் பண்பு போற்றத்தக்கது.
மனிதர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கது!..

இத்தகைய வலியன் - வலம் வந்து வணங்கிய 
திருத்தலத்தினை அடுத்த பதிவில் தரிசிப்போம்!..

வலிவலம் வந்த இறைவா போற்றி!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..
* * *

செவ்வாய், மார்ச் 03, 2015

கரிக்குருவி - 1

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய்!..


மார்கழி மாதத்தின் - இளங்காலைப் பொழுது!..

தன் தோழியரை எழுப்புவதில் முனைப்பாக இருக்கின்றாள் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்!..

அடிப் பெண்ணே!..

இளங்காலைப் பொழுதில் இன்னும் என்ன தூக்கம்?..

இளங்காளை!.. இனியவன்!..
இனி அவன் ஆன - இனியவனைத் தொழப் போக வேண்டாமா!..

பறவைகள் எல்லாம் சிலம்பின் ஒலி போல இனிமையாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனவே!..

அந்த ஒலி - கோவிந்தா.. கோவிந்தா!.. - என்று உனக்குக் கேட்கவில்லையோ!..

பறவைகளுக்கெல்லாம் ராஜன் - கருடன்!..
அந்த கருடனுக்கும் ராஜன் - ரங்கன்.. ஸ்ரீரங்கன் - ஸ்ரீரங்கராஜன்!..

அவனுடைய திருக்கோயிலின் வெண்சங்கிலிருந்து - நாதம் பெருஞ்சத்தமாக
எங்களுக்குக் கேட்கின்றது!..

வெண்சங்கின் பெருஞ்சத்தமும் உன் காதுகளைத் துளைக்கவில்லையோ!?..

இன்னும் என்ன தூக்கம்?.. எழுந்து வெளியே வா!..

என்ன ஒரு விசித்திரம்!..

திருப்பாவையின் ஒவ்வொரு எழுத்தும் தித்திக்கின்றது!..

சின்னஞ்சிறு பறவைகளின் குரலை சிலம்பின் ஒலிக்கு இணையாகக் கூறிய - கோதை நாச்சியார் - வெண்சங்கின் நாதத்தைப் பேரரவம் என்கின்றாள்!..

என்ன ஒரு நயம்!..

இப்படி இருந்தும் - அந்தத் தோழி உறக்கத்திலிருந்து எழுந்தாளா!?..

இல்லை.. இல்லை..

ஆண்டாளின் அமுதத் தமிழ் கேட்க வேண்டுமென அவள் உறங்குவது போலவே கிடக்கின்றாள்!..

மீண்டும் - கோதை நாச்சியார் அழைக்கின்றாள்!..

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!..

ஆறாவது திருப்பாடலில் பொதுவாக புள்ளினங்கள் என்று குறித்த ஆண்டாள் - ஏழாவது திருப்பாடலில் நேரிடையாக ஆனைச்சாத்தன் என்கின்றாள்..

ஆனைச்சாத்தன், தன் துணையுடன் கூடிக் கலந்து - கீசு கீசு எனப் பேசும் பேச்சரவம் கூட உனக்குக் கேட்கவில்லையா?..

பேய்ப் பெண்ணோ நீ!?..

நள்ளிருளில் விழித்தெழுந்து, கூத்தடித்து மகிழும் பேய் பிசாசுகள் எல்லாம் விடியற் காலையில் -

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டதும் வெருண்டு ஓடிப் போகுமே!..

அப்படி ஓடித் தொலையாத பேய் எதுவும் உன்னைப் பிடித்திருக்கின்றதோ?..

எழுந்திராய்.. தோழீ.. எழுந்திராய்!..


தன் துணையுடன் கூடிக் கலந்து - கீசு கீசு எனப் பேசும் ஆனைச்சாத்தன்!..

ஆனைச்சாத்தன்!.. 
இதுதான் கரிச்சான் எனப்படும் கரிக்குருவி!..

காலையில் கீச்சிடுபவை எத்தனையோ பறவைகள்!..

அவற்றுள் ஆனைச்சாத்தன் எனப்பட்ட கரிக்குருவியை - ஏன் குறித்தாள் ஆண்டாள்?..

அது சமூகத்துடன் ஒட்டி உறவாடுவதால்!..

தொழுவம் மாடுகளைக் கட்டிப்போடுமிடம். இதுவே கொட்டில் எனப்படுவதும்.

மாட்டுத் தொழுவத்தை - அதிலும் குறிப்பாக எருமைக் கொட்டிலை ,

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் குறிக்கும் அழகே - அழகு!..

எருமைச் சிறுவீடு!..

திருப்பாவையின் எட்டாவது திருப்பாடலில் இந்த வார்த்தையைக் காணலாம்!..

இன்றைக்கு -
இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுள் - மீதமுள்ள அருங்காட்சியாக -
கரிச்சான் - எருமையின் முதுகில் அமர்ந்து கொண்டு ஆனந்தமாக வலம் வருவதைக் காண்கின்றோம்..


அன்றைக்கு -
ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் -
எல்லா வளங்களும் நிறைந்திருந்த - அந்தக் காலத்தில் -

கனைத்த இளங் கற்றெருமை முதுகில் அமர்ந்திருக்கும் கரிக்குருவியை -

ஆண்டாள் கண்டிருக்க மாட்டாளா!..

கண்டு இன்புற்றிருக்க மாட்டாளா!..

அந்த இன்பத்தின் பயனையே - ஆண்டாள் நமக்கு வாரிக் கொடுத்தாள்!..

பறவைகளையும் விலங்குகளையும் - உற்று நோக்கி உளம் மகிழ்ந்த - கோதை
அவற்றைச் சிறப்பித்து திருப்பாவையில் பதிவு செய்திருக்கின்றாள்.

ஆண்டாள் திருவடிகள் போற்றி.. போற்றி!.. 
* * * 


எருமையின் முதுகில் சும்மா வேடிக்கைக்காக அமர்வதில்லை - கரிச்சான்!..

அதன் - முதுகிலும் முரட்டுக் கொம்புகளுக்கு இடையே உச்சந்தலையிலும் அடர்ந்திருக்கும் முடிகளுக்கிடையே பதுங்கிக் கொண்டு தலைவலியை உண்டு பண்ணும் சிறு சிறு பூச்சிகளைப் பிடித்துத் தின்று ஒழிப்பதே -

இரட்டைவால் குருவியின் தலையாய வேலை!..

சமயத்தில் - இந்தக் கரிச்சான் என்ன செய்யும் தெரியுமா!..

எருமையின் கண்ணோரத்தில் - உலர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகளையும் -

ஒரு தாயின் பாசத்துடன், ஒரு தாதியின் பரிவுடன் -
தன் கூரிய அலகால் மெதுவாக - உதிர்த்து விடும்!..

இந்தப் பாசத்தையும் பரிவையும் அதற்குச் சொல்லிக் கொடுத்தது யார்?..

சிந்திக்க சிந்திக்க ஆச்சர்யம் தான் விரிகின்றது!..


எருமை மட்டும் என்றில்லை..
ஆடு, மாடு இவைகளுக்கும் கரிச்சான் உற்ற தோழனே!..

ஆற்றங்கரைகளிலும் குளத்தின் ஓரத்திலும் கால்நடைகள் மேயும் போது -

அவற்றின் தோழர்களாக கரிக்குருவி, கொக்கு மற்றும் மடையான்களையும் கண்டு மகிழலாம்.

இந்தக் கரிச்சான் வீட்டுக்கு அருகிலேயே சுற்றித் திரிந்தாலும் -
சக மனிதர்களுக்கு எவ்விதத் தொல்லையும் கொடுப்பதில்லை.

மொட்டை மாடியில் - வற்றல் என எதையாவதைக் காய வைத்தால் அதைக் காக்கைகளிடம் இருந்து காப்பதற்கே -

ஒரு ஆளைத் தனியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும்..


ஆனால் - அந்த இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக கம்பியும் -
ஒரு கரிக்குருவியும் இருந்து விட்டால் போதும்!..

நாம் நிம்மதியாக - அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடலாம்..

கூலியில்லா வேலையாளாக - வெகு சிரத்தையுடன் ஒற்றை ஆளாக -
காக்கைகளை அடித்து விரட்டி விட்டு -

வற்றலைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொடுத்து விடும்.

காக்கை என்ன காக்கை!..



கழுகையே விரட்டி அடிக்கும் வல்லமை பெற்றது கரிக்குருவி.

அதனால் தான்,  கரிச்சானுக்கு வலியன் என்றொரு பெயரும் அமைந்தது.

கரிக்குருவிக்கு ஏன் வலியன் என்ற பெயர் அமைந்தது!?..

அதை அடுத்த பதிவினில் தருகின்றேன்..

சக பதிவரான - கலையரசி.G அவர்களின்

ஊஞ்சல் வலைத்தளத்தில்

'' பறவை கூர் நோக்கல் '' - எனும் பதிவைப் படித்ததுமே -

கரிக்குருவியைப் பற்றி ஒரு பதிவினைத் தர வேண்டும் என விரும்பினேன்.

காரணம் -

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கையில் கரிக்குருவியை ரசித்த தருணங்கள் மீண்டும் கிடைக்காதவை.

குறுஞ்செடிகளின் மெல்லிய கிளைகளிலும் வீடுகளின் அருகிலுள்ள கம்பிகளிலும் யதேச்சையாக அமர்ந்தபடி -

ஒய்யாரமாக தன் பாட்டுக்கு தானே ஆடிக் கொண்டிருக்கும் சுகவாசி - கரிக்குருவி.


முன்பெல்லாம் - இருப்புப் பாதையில் மருங்கில் அமைந்திருந்த தந்திக் கம்பங்களின் கம்பிகளில் கூட்டங்கூட்டமாக கரிக்குருவிகளைக் காணலாம்.

ஆனால், தற்போது - இருப்புப் பாதையின் ஓரத்தில் தந்திக் கம்பங்களையும் காண முடிவதில்லை.

கரிக்குருவிகளையும் காண முடிவதில்லை..

தானும் வாழ்ந்து - தன்னைச் சேர்ந்த சக பறவையினங்களையும் வாழ வைக்கும் குணமுடையது - கரிக்குருவி..

கலையரசி.G அவர்களின் பதிவுக்குக் கருத்துரை வழங்கியதும் -

இந்தப் பதிவுக்கான களம் அமைந்து விட்டது.

கலையரசி.G அவர்கள் -
கரிச்சானைப் பற்றித் தாங்களும் ஒரு பதிவு எழுதுக!.. - என உற்சாகப்படுத்திய வகையில் - மகிழ்ச்சி கொண்டு இப்பதிவினை வழங்குகின்றேன்.

அடுத்த பதிவினில் -

கரிக்குருவிக்கு வலியன் என்ற பெயர் அமைந்த காரணத்துடன் சந்திப்போம்..
* * *


ரெட்டை வால் கரிச்சான் - நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை!..

ஆனால் - நாம் தான் ரெட்டை வாலின் வாழ்விடங்களை மூர்க்கத் தனமாக அழித்தொழித்தோம்.

இனியேனும் திருந்தி 
இவ்வுலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொது 
என்பதைப் புரிந்து கொண்டு 
சக உயிரினங்களையும் வாழ விடுவோமாக!..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!.. 
* * *