நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 24, 2018

திருப்பாலைத்துறை

அகங்காரம் கொண்ட தாருகா வனத்து ரிஷிகள்
ஈசன் எம்பெருமானை உய்த்து உணராமல்
அபிசார வேள்வி நடத்தி - அந்த வேள்வியிலிருந்து
வெளிப்பட்ட வேங்கையை பெருமானின் மீது ஏவி விட்டனர்...

அந்த வேங்கையை விரல் நுனியால் கிழித்தெறிந்த திருத்தலம் தான் -

திருப்பாலைத்துறை...


இத்திருத்தலத்தில் ஈசன் எம்பெருமனின் திருப்பெயர் -
அருள்மிகு பாலைவனநாதர்...

அதென்ன பாலைத்துறை?... பாலைவன நாதர்!...

சோறுடைத்த சோழநாட்டில் இப்பகுதி பாலை வனமாக இருந்ததா!?...

சோறுடைத்த சோழநாட்டில் -
எப்பகுதியும் பாலை வனமாக இருந்ததில்லை...

சோறுடைத்த சோழநாட்டை -
பாலை வனமாக ஆக்கும் பணியைத் தான்
நாம் இப்போது செய்து கொண்டிருக்கின்றோம்!...

பாலை வனம் என்றால் -
பாலை மரங்கள் நிறைந்திருந்த வனம் என்பதாகும்...

இந்தப் பாலை மரம் பாலை நிலத்துக்குரியது என்று குறிக்கப்படுகின்றது...

ஆயினும், பாலை நிலத்துக்குரிய மரம்
மருத நிலத்தில் தழைத்து ஊர்ப் பெயரானது எங்ஙனம்!?...

அது காலங்களைக் கடந்து நிற்கும் ஆச்சர்யங்களுள் ஒன்று...


தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலையில்
பாபநாசம் நகரின் ஒருபகுதியாக விளங்குவது திருப்பாலைத்துறை...

அரசுப் பேருந்துகளில் விரைவுப் பேருந்துகளைத் தவிர
மற்றெல்லாப் பேருந்துகளும் திருக்கோயிலுக்கு
சற்று முன்பாக நின்று செல்கின்றன....

பேருந்து நிற்குமிடத்தில்
கோயிலுக்குச் செல்லும் வழியைக் காட்டும் பலகையும் உண்டு...

பிரதான சாலையில் இருந்து - நூறடி தூரத்தில் ராஜகோபுரம்..
சந்நிதி வாசலாக நடக்க வேண்டும்...

இருபுறத்திலும் வீடுகள் மக்கள் புழக்கம் என்பதால்
கோயில் வாசலைப் படம் எடுப்பது கவனத்துக்குரியதாகின்றது...

ஐந்து நிலையுடைய ராஜகோபுரம்...

தலை வணங்கி திருக்கோயிலினுள் நுழைகின்றோம்...

வலது புறமாக பழைமையான நெற்களஞ்சியம்...
கம்பீரமாக விளங்குகின்றது...

நெற்களஞ்சியத்தைப் பற்றி தனியானதொரு பதிவு எழுதுதலே மகிழ்வு...

நெற்களஞ்சியத்தைக் கடந்ததும் பலிபீடம் ..
சிறு மண்டபத்துள் பிரதோஷ நந்தி...


கவள மால்களிற் றின்னுரி போர்த்தவர்
தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர்
திவள வானவர் போற்றித் திசைதொழும்
பவள மேனியர் பாலைத் துறையரே..

அதிகார நந்தியைப் பணிந்து வணங்கியபடி
திருக்கோயிலினுள் நுழைகின்றோம்...

இரண்டாவதாக மூன்று நிலைகளுடன் மற்றொரு திருவாசல்...

அதையும் கடந்து திருக்கோயிலினுள் நுழைந்தால்
ஏகாந்தம்... ஏகாந்தம்.. அதைத் தவிர ஏதுமில்லை...


வலப்புறமாக திருத்தல விநாயகர்...

மனதார வணங்கி சந்நிதிக்குள் நுழைய -
அன்பையும் அருளையும் அள்ளித் தரும் வள்ளல் பெருமான்..

இறைவன் - ஸ்ரீபாலைவனநாதர்..
அம்பிகை - ஸ்ரீ தவள வெண்ணகையாள்
தல விருட்சம் - பாலை மரம்
தீர்த்தம் - வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம், குடமுருட்டி..

கற்பூர ஒளியில் சிவலிங்கத் திருமேனி பிரகாசிக்கின்றது...

திருநீறு பெற்றுக் கொண்டு திருக்கோயிலை வலம் வருகின்றோம்...

பழைமை புலப்படுகின்றது விசாலமான பிரகாரம்..

வழக்கமான திருச்சந்நிதிகள்...

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, நிருதியில் கணபதி,
வள்ளி தெய்வயானையுடன் திருமுருகன்,
மஹாலக்ஷ்மி - என, தரிசனம்...


வடக்குத் திருச்சுற்றில் வில்வமரம்..
தல விருட்சமான பாலை மரம் இப்போது இங்கு இல்லை...


மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும்
பொன்னி நீர்மூழ்கிப் போற்றி யடிதொழ
மன்னி நான்மறை யோடுபல் கீதமும்
பன்னி னாரவர் பாலைத் துறையரே..



வடக்குத் திருச்சுற்று மண்டபத்தில் நாயன்மார்கள்..
பீடத்தில் வைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன..

இன்னும் முறையாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை..

நடராஜர் சந்நிதியை அடுத்து இரட்டை பைரவ திருமேனிகள்..

திருமூலத்தானத்தை வலம் செய்து வணங்கியபின்
அப்படியே வெளியே வந்து தெற்குப் புறமாக விளங்கும்
அம்பிகையின் சந்நிதியை அடைகின்றோம்...



சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
பித்தர் நான்மறை வேதியர் பேணிய
அத்தனே நமையாளுடை யாயெனும்
பத்தர் கட்கன்பர் பாலைத் துறையரே.. 



காம கோட்டம் தனிக் கோயிலாக
கிழக்கு நோக்கி விளங்குகின்றது..

இது மதுரையைப் போல கல்யாண கோலமாகும்...

இத்தலத்தில் வழிபடும் கன்னியர்க்கும் காளையர்க்கும்
கல்யாணத் தடைகள் விலகுவதாக ஐதீகம்...

அம்பிகையின் சந்நிதியில் அமைதி தவழ்கின்றது...

திருக்கோயிலில் எடுக்கப்பட்ட படங்களுள் சிலவற்றைப் பதிவினில் வழங்கியுள்ளேன்...


ராஜகோபுரத்தை அடுத்து விளங்கும் பிரம்மாண்டமான நெற்களஞ்சியம் அடுத்து வரும் பதிவாகின்றது...


அப்பர் பெருமான் இத்திருக்கோயிலை தரிசனம் செய்து திருப்பதிகம் அருளியுள்ளார்..

பின்னாளில்
ராஜராஜ மாமன்னனின் சீரிய முயற்சியால் நம்பியாண்டார் நம்பியவர்கள் திருமுறைகளைத் தொகுத்தபோது -

அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகங்கள் மூன்றாக அமைந்தன...

அவற்றுள் நடுவாக விளங்குவது ஐந்தாம் திருமுறை...

ஐந்தாம் திருமுறை நூறு திருப்பதிகங்களைக் கொண்டது..
அதனுள் ஐம்பத்தொன்றாவது திருத்தலமாக அமையப் பெற்றது -
திருப்பாலைத்துறை...

திருப்பாலைத்துறைக்கான திருப்பதிகம்
பதினொரு திருப்பாடல்களை உடையது...

இத்திருப்பதிகத்தினுள் -
விண்ணினார் பணிந்தேத்த - எனும், ஆறாவது திருப்பாடல்
சிவாய - எனும் மகா மந்திரத்துடன் விளங்குவதால்
நடுநின்ற திருப்பதிகம் எனப்படுகின்றது...

விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்
மண்ணி னார்மறவாது சிவாய என்று
எண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே..
-: அப்பர் ஸ்வாமிகள் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***  

18 கருத்துகள்:

  1. ஸ்ரீ பாலைவனநாதரை தரிசித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. துரை அண்ணா இனிய காலை வணக்கம்...தரிசனத்துக்கு வந்தாச்சு...அப்பால கோயிலுக்கு வரேன்.. என்னாச்சு உங்களைக் காணலை எபியில்?

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தேவார பாட்டும் பன்னிருதிருமுறையும் சுவை. அவர்கள் பற்றிய விவரங்களும் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  4. கோவிலை பற்றிய விவரங்கள் அழகு. ஒருமுறையாவது இது போன்ற பழமையான கோவில்களுக்குச் சென்று வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. பழமையான கோவில் என்று தெரிகிறது. அழகிய படங்கள். சற்றுப் பெரிதாக்கி வெளியிடலாமே படங்களை...

    பதிலளிநீக்கு
  6. கோயில் தரிசனம் அருமை!!! நன்றாகச் சுற்றிக்காட்டி தரிசனமும் செய்ய வைத்தீர்கள்!

    படங்கள் செமையா இருக்கு...தூண்கள் நிறைந்து இருக்கும் படங்கள் அழகு!! பரவாயில்லை படம் எடுக்க அனுமதித்தார்களே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அழகிய பாலைவனநாதர் தரிசனம் கண்டேன் விரிவான விடயம் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  8. மாயவரத்தில் இருக்கும் போது இரண்டு மூன்று முறை போய் இருக்கிறேன். இந்த கோவிலை தாண்டி தான் ஊர்களுக்கு போக வேண்டும்,(மதுரை, கோவை போகும் போதும்)
    போகும் போதும், வரும் போது பார்த்துக் கொண்டே போவோம்.
    நெற்களஞ்சியத்தைப்பார்த்து வியந்து கொண்டே தான் இருப்பேன்.

    மீண்டும் அழகிய படங்களுடன் தரிசனம் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. என்னட்த்தைச் சொல்ல எப்பூடிச் சொல்ல.. அனைத்தும் அழகோ அழகு.

    பதிலளிநீக்கு
  10. பலமுறை இந்தப்பக்கமாகப் போயிருக்கோம். கோயிலுக்குப் போனதில்லை. இந்த நெற்களஞ்சியம் போலவே நான்கு களஞ்சியங்கள் ஶ்ரீரங்கம் கோயிலிலும் இருக்கின்றன. அதைச் செப்பனிடும்போது படம் எடுத்துப் பகிர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  11. படங்களும் அதைத் தொடர்ந்த விளக்கங்களும் கோயில் பற்றிய விவரணையும் நன்று.

    பதிலளிநீக்கு
  12. அய்யன் அம்மை பெயர்கள் மிக அழகு...

    தெய்வீக தரிசனம்..அமைதியான இடம் பார்க்கவே காணும் ஆவல் வருகிறது...

    பதிலளிநீக்கு
  13. பல முறை பார்த்த கோயில். இன்று உங்களால் மறுபடியும் தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. புகைப்படங்களும் தகவல்களும் அருமை! இளம் வயதில் தந்தை பாபநாசத்தில் போலீஸ் அதிகாரியாய் வேலை பார்த்தபோது சகோதரிகளுடன் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் அதைப்பற்றிய ஞாபகங்கள் இல்லை. தஞ்சையிலிருந்து குடந்தை செல்லும்போதெல்லாம் இக்கோவிலைப் பார்ப்பதுண்டு. ரொம்ப நாட்களாக மீண்டும் போய் வர விரும்பியும் சமயம் வாய்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  15. படித்தேன். ரசித்தேன். மூன்று பதிகங்களையும் அர்த்தத்தோடு புரிந்துகொள்ள முயன்றேன். அருமை.

    பதிலளிநீக்கு
  16. திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில் பற்றிய விரிவான விளக்கத்தை இன்று தெரிந்துகொண்டேன். நான் இரா.முத்துசாமி http://agharam.wordpress.com இங்கு முதன் முறையாக வருகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..