நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 01, 2017

திருக்குடமுழுக்கு

மாமன்னன் ஸ்ரீ ராஜேந்திர சோழன் எழுப்பிய கங்கை கொண்ட சோழீசர் ஆலயத்திற்கு -

நாளை - தை மாதம் இருபதாம் நாள் (பிப்ரவரி 2) வியாழக்கிழமை காலையில் திருக்குட முழுக்கு..


85 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்கின்றது...

திருக்கோயிலின் கருவறை விமானத்தில் ஒன்பதடி உயரமுடைய தங்கக் கலசம் பொருத்தப்பட்டுள்ளது..

புதிதாக 43 அடி உயரமுடைய கொடி மரமும் நாட்டப்பட்டுள்ளது...

ஜனவரி ஆறாம் தேதி அன்று திருமுழுக்கிற்கு - என,
கங்கையிலிருந்து நீர் எடுத்து வருவதற்குப் புறப்பட்ட திருப்பணிக் குழுவினர் மாமன்னன் பயணித்த வழியிலேயே ஹரித்வார் வரைக்கும் பயணித்தனர்..

அங்கிருந்து 108 குடங்களில் கங்கை நீரை நிறைத்துக் கொண்டு
ஜனவரி 16 அன்று திரைலோக்ய சுந்தரம் எனும் புகழுடைய
திருலோக்கி ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோயிலுக்கு வந்தடைந்தனர்..

திருமுழுக்குக் காணும் திருக்கோயில் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்க -

தஞ்சை மாவட்டத்திலுள்ள சிற்றூராகிய
திருலோக்கிக்கு ஏன் கங்கை நீர் கொண்டு வரப்படவேண்டும்?...

இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும் எனில்,
ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்!..


ஆம்!...

ராஜேந்திர சோழதேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்து திருவடி தொழுது..

- எனும் கல்வெட்டுச் செய்தியே அந்தக் கேள்விக்கு விடை..

ஸ்ரீ ராஜேந்திர சோழ மாமன்னன் கங்கையை வெற்றி கொண்டபின்
அங்கிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு -

திரைலோக்ய சுந்தரம் எனும் புகழுடைய திருலோக்கி ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோயிலை வந்தடைந்ததாக இங்குள்ள கல்வெட்டு பகர்கின்றது...

ஸ்ரீ ராஜேந்திர சோழ மாமன்னன் - கங்கை நீருடன் திரைலோக்ய சுந்தரத்திற்கு வந்து ஸ்ரீ கயிலாச நாதனை வணங்கிய பின்னர்

தான் புதிதாக எழுப்பிய தலைநகரை கங்கை நீரால் புனிதப்படுத்தினான்..

திருக்கோயிலில் ஸ்ரீ பிரகதீஸ்வரப் பெருமானுக்கு திருமுழுக்கு செய்வித்தான்..

- என்று, தருமபுர ஆதீனம் அருளியுள்ள பன்னிரு திருமுறைத் திருக்குறிப்புகளில் காணக் கிடைக்கின்றன..

அந்தப் பெருஞ்செயலை நினைவு கூரும் விதமாகவே கங்கை நீர் குடங்கள் திருலோக்கிக்கு எடுத்து வரப்பட்டன..

திருலோக்கியிலிருந்து - ஜனவரி 27 அன்று மதியம் ஒரு மணியளவில்
கங்கை கொண்ட சோழபுரத்தை நோக்கி புனித நீர்க்குடங்கள் புறப்பட்டன...

வழி நெடுக மக்கள் எதிர்கொண்டு வரவேற்று மகிழ்ந்தனர்..

ஜெயங்கொண்டம் குறுக்குச் சாலை ஸ்ரீ விநாயகர் திருக்கோயிலில் சிறப்பான வரவேற்பு நிகழ்ந்தது.. 

முளைப்பாரி அணிவகுத்துச் செல்ல - 
திருக்கயிலாய சிவகண வாத்யப் பேரொலியுடன் ஊர்வலம் நடைபெற்றது.. 

அன்றைய தினம் மாலை வெகு சிறப்பாக யாகசாலை பூஜைகள் தொடங்கின..

நாளை காலையில் எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று
பூர்ணாஹூதி வழங்கப்பட்டதும் (8.30 - 10.00) பத்து மணிக்குள்ளாக
திருக்குட முழுக்கு சீரும் சிறப்புமாக நிகழ இருக்கின்றது..

யாகசாலை நிகழ்வின் படங்களை வழங்கியோர் -
உழவாரம் திருப்பணிக் குழுவினர்..

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..


கடல் கடந்து கலம் நடத்தி மாபெரும் வெற்றிகளை
இத் தமிழ் மண்ணுக்கு அளித்து மகிழ்ந்தவன்
மாமன்னன் - ஸ்ரீ ராஜேந்திர சோழன்..

மாமன்னன் எழுப்பிய திருக்கோயில் 
எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னால்
நாளை திருமுழுக்கு காண்கின்றது..

மனம் மீண்டும் மீண்டும் 
சோழேச்சரத்தைச் சுற்றித் திரிகின்றது..

கிடைத்தற்கரிய பெரும்பேறு இது!..

வாய்ப்பும் வசதியும் உடையவர்கள் அவசியம் 
கங்கை கொண்ட சோழபுரத்தில் திருக்குடமுழுக்கினைத் 
தரிசனம் செய்திடல் வேண்டும்...


சுருதி வானவனாம் திருநெடுமாலாம்
சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதி வானவனாம் படர்சடை முக்கட்
பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்
எருது வாகனனாம் எயில்கள் மூன்றெரித்த
ஏறு சேவகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
கொண்ட சோழேச் சரத்தானே!..
- கருவூரார் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

 1. //85 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்கின்றது...//

  அரிதான விடயம் ஜி காணொளி இயக்கமில்லை பிறகு வருகிறேன்

  பதிலளிநீக்கு
 2. கடல் கடந்து கலம் நடத்தி நிர்மாணித்தகோவில்குடமுழுக்கு பற்றி கடல் கடந்து வாழும் உங்கள் பதிவினை ரசித்தேன் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் சென்றுள்ளேன் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்வதல்லவா குடமுழுக்கு

  பதிலளிநீக்கு
 3. இதுவரை சென்றதில்லை. விரைவில் சென்று தரிசிக்க வேண்டும்.
  -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  பதிலளிநீக்கு
 4. சிறப்பான தகவல்கள்.... தாங்கள் ரசித்த படங்களை எங்களுடனும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு