நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 19, 2016

அன்புள்ள அப்பா

இன்று தந்தையர் தினம்!..

புதிதாகக் கற்பிக்கப்பட்ட நாள் தான்..

எனினும் -

மரமண்டைகளாகி -
பெற்றோரை ஆதரவற்றோர் இல்லத்தில் தள்ளி விடும் மகன்களுக்கு -
இப்படி ஒரு நினைவூட்டல் அவசியமான ஒன்றுதான்!..

ஆனாலும் -

தாயிற் சிறந்த கோயிலுமில்லை..
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!..

- என்றுரைத்தது தமிழ் கூறும் நல்லுலகு..


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!.. - என்று மொழிந்தாள் ஔவை..

பின்னாளில்,

அப்பனை நந்தியை ஆராவமுதனை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை..

- என்று புகழ்கின்றார் - திருமூலர்..

தாயும் நீயே.. தந்தை நீயே!.. - என்று போற்றுகின்றார் - ஞானசம்பந்தர்..

அப்பன் நீ.. அம்மை நீ!.. - என்று வணங்குகின்றார் - திருநாவுக்கரசர்..

அம்மையே.. அப்பா.. ஒப்பிலாமணியே!..

- என்று உருகுகின்றார் மாணிக்கவாசகர்..

ஆழ்வார்களும் அடியார்களும் - அப்பனே!.. என்றுதான் உவந்து மகிழ்கின்றனர்..

மறைநூல்களும் அவ்வண்ணமே - வந்திக்கின்றன.. சிந்திக்கின்றன!..

வகையறியா மானிடர் தாம் -
வாழ்வு தந்த பெற்றோரின் வாழ்வை அழித்துத் திரிகின்றனர்..
நிலைதடுமாறி நிந்தித்து சகதியில் சரிகின்றனர்...


இங்கே - பழங்காலக் கதை ஒன்று - சிந்திப்பதற்கு!..

வயோதிகத்தால் பிணியுற்ற தந்தை
குடிசை ஒன்றினுள் ஓலைப் பாயில் கிடந்தார்..

அவருக்கு உணவு கொடுக்கச் சென்றான் - மகன்..
அவனுடன் அவனுடைய மகன்..

கிழவரின் அருகிலிருந்த மண் சட்டியில் - தான் கொண்டு வந்திருந்த கூழை ஊற்றினான்..

பசி தாளாதிருந்த கிழவர் - மண்சட்டியை ஆவலுடன் பற்றி இழுத்தார்..

மகனுக்குக் கோபம் மூண்டது...

சட்டியை உடைத்து விடாதே!... - என்றான் ஆத்திரத்துடன்..

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பேரன் கேட்டான்..

ஏன்.. தாத்தா!... நீங்க உங்க அப்பாவுக்கு இந்த சட்டியிலயா கூழு கொடுத்தீங்க?..

இல்லேடா.. கண்ணு!...

நீங்க உங்க அப்பாவுக்குகொடுக்கலேன்னா.. என்ன!.. 
நான் எங்கப்பாவுக்கு கொடுக்கிறேன்!.. 
சட்டியை உடைச்சிடாம பத்திரமாக வைத்திருங்கள்!..

அப்படியெல்லாம் செய்யக்கூடாது... பெற்ற தகப்பன் அல்லவா!..

- என்றார் கிழவர் - பரிதவிப்புடன்..

தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு திகைத்து நின்றான் - அந்த மூடன்..

இன்றைக்கு எதை - விதை என்று விதைக்கின்றோமோ
அதையே நாளைக்கு அறுவடை செய்ய வேண்டியதிருக்கும்!..

அதில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது!...


என் தந்தை தெய்வத்திரு ந. துரைராஜன்..

அவர் தமக்கு - நல்ல மகனாக நான் இருந்திருக்கின்றேன்..

ஆனால் -

பயங்கலந்த மரியாதையினால் -
எதையெல்லாமோ இழந்து விட்டதாக உணர்வு...

தனது தளராத உழைப்பினால் தகையுறு நிலையில் வாழ்ந்தவர்..


மிகச்சிறந்த இசைக் கலைஞர்.. தஞ்சை ராமநாதன் செட்டியார் மன்றத்தில் பல நாடகங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியவர்

திரு. M.R. ராதா அவர்கள், திரு. கலைஞர் அவர்கள், திரு. சிவாஜி கணேசன் அவர்கள் - ஆகியோர் தம்முடன் நட்பு கொண்டிருந்தாகச் சொல்வார்...

அவர் சொல்லிச் சென்றவை எல்லாம் இன்னும் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன..





1994 நவம்பர்.. நவராத்திரி ஆறாம் நாள்...

அன்று இரவு மிகப் பயங்கரமான கனவு.. அதுமாதிரி கண்டதேயில்லை...

சிறுவனாக நான் அவரது கையைப் பிடித்துக் கொண்டு எங்கோ செல்வதாக தெரிகின்றது..

ஏதோ சூழலில் கைப்பிடி நழுவி விடுகின்றது...

தந்தையைக் காண முடியவில்லை.. சிறுவனாக நான் அழுகின்றேன்...

அப்போது காதருகில் -

இதோ.. இங்கேதாம்பா இருக்கின்றேன்!... - என்று, என் தந்தையின் குரல்...

சட்டென விழித்துக் கொள்கின்றேன்..

சரியாக மூன்றாம் நாள் -
சரஸ்வதி பூஜையன்று முன்னிரவுப் பொழுதில் இறைவனடியில் ஐக்கியமாகி விட்டார்..

அந்த சோகம் இன்னும் எனக்கு ஆறவில்லை...

ஆயினும், என்னருகில் இருப்பதாகவே உணர்வு...

சிற்றுயிர்களை ஆதரிக்கும் பண்பை அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன்..

ஆனாலும் - அவரைப் போல என்னால் செயலாற்ற முடியவில்லை...

என் தந்தையின் அடிப்படை குணநலன்கள் சிலவற்றை என் மகனிடம் நான் காண்கின்றேன்...


ஆயுளும் ஆரோக்கியமும் கிட்டுமாயின் - 
எதிர்காலத்தில்
என் பேரனிடத்தும் நான் காண்பேன்!..

அந்த வகைக்கு அருள்பவன் இறைவன்!..
அவன் ஒருவனே அனைத்திற்கும்...

அப்பன் நீ.. அம்மை நீ.. 
என, அவனிடம் கையேந்தி நிற்கின்றேன்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
* * * 

26 கருத்துகள்:

  1. நெஞ்சை உருக்கிவிட்டீர்கள் .

    சுப்பு தாத்தா.

    இங்கும் வந்து அப்பா வை வாழ்த்துங்கள்.
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்பின் ஜி
    மனதை உலுக்கி விட்டது தங்களது பதிவு அற்புதமான கருத்தை அடங்கிய கதை நல்லதொரு பாடம் கற்பித்தது அருமை.

    புகைப்படங்கள் மேலும் அழகூட்டியது
    தங்களுக்கு எனது இனிய தந்தையர் தினவாழ்த்துகள்

    ஜி இப்பதிவு எனது டேஷ்போர்டுக்கு வரவில்லை இன்று தங்களது பதிவு வருமென்று காத்திருந்தேன் தாங்கள் எனது பதிவில் சொன்னதால் வந்தேன்.

    நலம் வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      அங்குமிங்கும் கேட்ட செய்திகள் சிலவற்றை -
      சற்றே ஒழுங்கு செய்து கருத்துப் படங்களாக அமைத்துள்ளேன்...

      மதியம் 12 மணிக்கு வேலை முடிந்து வரும் பொழுதில் - இணையம் வேலை செய்வதே கிடையாது.. மிக சிரமம்.. ரமலான் முடியும் வரை இப்படித்தான்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மனம் நெக்குருக செய்து விட்டீர்கள். தந்தையர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      தொடர்ந்து வரும் அன்பின் சொந்தங்கள் அனைவரும் நெகிழ வைத்த பதிவு என்றே கருத்துரைத்திருக்கின்றனர்..

      பதிவை எழுதும் போது மனம் சற்று கலங்கியதே அன்றி கண்கள் கலங்கவில்லை..

      ஒருமித்த வண்ணமாக அனைவரும் கூறும் போது நெஞ்சம் விம்முகின்றது.. கண்கள் நனைகின்றன..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  4. மனதை உருக்கி விட்டீர்கள் ஐயா, தந்தையர் தின வாழ்த்துகள்.
    என் நினைவும் பின் நோக்கி சென்று வந்தது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நெகிழ வைக்கும் பதிவு என்று ஒருமித்த வண்ணமாக அனைவரும் கூறும் போது நெஞ்சம் விம்முகின்றது.. கண்கள் நனைகின்றன..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  5. நெகிழ்ச்சி தந்த பகிர்வு. தந்தையர் தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      நெகிழ வைக்கும் பதிவு என்று ஒருமித்த வண்ணமாக அனைவரும் கூறும் போது நெஞ்சம் விம்முகின்றது.. கண்கள் நனைகின்றன..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  6. தந்தைகளைநினைக்கிற எல்லோருக்கும் கிட்டத்தட்ட நெக்குருக வைக்கிற நினைவுகளே நிறைந்து கிடக்கிறது/(சிலர் விதி விலக்காய் இருக்கலாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் விமலன்..

      தாங்கள் கூறுவது உண்மைதான்.. நடுத்தர வயதினைத் தாண்டிய மகன்களில் பெரும்பாலோர் - தந்தையின் ஏக்கத்துடன் தான் நாளைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்..

      அவருடன் இன்னும் கொஞ்ச நாள் வாழ்வதற்குக் கொடுத்து வைக்கவில்லை.. கண்கள் நனைகின்றன..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  7. மனம் நெகிழ்கிறது ஐயா
    தந்தையர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  8. பலருக்கு இதுபோன்ற அனுபவம் கிட்டியிருக்க வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      உண்மைதான்.. பலருக்கும் பலவிதமான அனுபவங்களே..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  9. மனம் நெகிழ வைக்கும் பதிவு.
    உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  10. நெகிழ்வான பதிவு.
    அப்பாவின் நினைவுகளை அழகாய் கூறினீர்கள்.
    படங்கள் எல்லாம் அருமை.
    மெய் சிலிர்த்தது உங்கள் கனவை படித்த போது.
    என் அப்பாவும் இறப்பதற்கு முன்பு கனவில் வந்தார்கள் விழித்து பார்த்த போது தந்தி சேகவன் வாசலில் நின்றார் அப்பாவின் இறப்பை தாங்கிய செய்தியுடன். குழந்தைகள் மேல் பாசம் வைத்தவர்கள் குழந்தைகளின் கனவில் வருவார்கள் என்பார்கள்.

    தந்தையர்தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கும் இப்படித்தானா... மெய்சிலிர்க்கின்றது..

      அப்போது நான் குவைத்தில் இருந்தேன்.. உடனடியாக சென்று சேர முடியாத சூழ்நிலை.. இப்போது நினைக்கும் போது கூட மனம் சோர்வடைகின்றது..

      குழந்தைகளின் மேல் பாசம் வைத்தவர்கள் குழந்தைகளின் கனவில் வருவார்கள் - என்ற தகவல் புதிது..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  11. தந்தையின் தோள் மீதமர்ந்து திருவிழா பார்த்தேன் . அப்போது புரியவில்லை கடவுளின் தோள் மீதேறித் தான் பார்த்தேன் என்று / மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      அந்த சொற்றொடர் Facebook -ல் வந்தது..
      வார்த்தைகளை சற்றே ஒழுங்கு செய்து படம் ஒன்றுடன் வடிவமைத்தேன்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  12. மனதை நெகிழ வைத்த பதிவு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு நன்றி..

      நீக்கு
  13. அருமையான ஒரு பதிவு ஐயா! அம்மை அப்பனைக் கொண்டு தங்கள் தந்தையைப் பற்றிச் சொல்லி எழுதியவிதம் அருமை. நம் எல்லோருக்குமே அந்த அம்மை அப்பன் தானே எல்லா தினமுமே தந்தையர் தினம் தாய் தினம்தானே இல்லையா.

    மனதை நெகிழ்த்திய பதிவு ஐயா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      எனக்கெல்லாம் தினமும் தாய் தந்தையர் தினம் தான்..
      அவர்களுக்கு வெகு தொலைவில் நான் இருந்தாலும் என் நினைவுகள் எல்லாம் அவர்களிடத்தில் தான்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..