நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 07, 2015

தஞ்சை கருடசேவை

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாட நெஞ்சை அள்ளும் தஞ்சை..

காலங்காலமாக சிறப்புடன் குறிக்கப்படும் பொன்மொழி!..

இதற்கிணங்க - நீர்வளமும் நிலவளமும் நிறையப் பெற்றது - தஞ்சைத் தரணி.


புராணச் சிறப்புகளுடன் வரலாற்றுச் சிறப்புகளையும் ஒருங்கே உடையது - தஞ்சை மாநகர்!..

சோறுடைத்த சோழ நாட்டின் சுந்தரத் திருநகர்  தஞ்சை!.. 

இப்பெருநகரில் - 


முத்துப் பல்லக்கு
திருஞானசம்பந்தப் பெருமான் முக்தி பெற்ற - வைகாசி மூல நட்சத்திரத்தினை அனுசரித்து - 

வருடந்தோறும் - முத்துப் பல்லக்குத் திருவிழா வெகுசிறப்பாக நிகழ்கின்றது.

அந்தவகையில் - ஜூன்/4 வியாழனன்று முத்துப் பல்லக்குத் திருவிழா நடைபெற்றது.

அன்றைய தினம் இரவு - நகரிலுள்ள பிள்ளையார் கோயில்கள் மற்றும் முருகன் திருக்கோயில்களில் இருந்து மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் - உற்சவமூர்த்திகள் எழுந்தருளினர். 

விடிய விடிய ராஜவீதிகள் நான்கிலும் திருவீதி உலா சிறப்புடன் ஆடல் பாடல் இசை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. 

இந்நிலையில் - 

தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத சிறப்பாக - 
நாளைய தினம் (ஜூன்/8) 23 கருட சேவை நடைபெற உள்ளது.

திருமங்கை ஆழ்வாரால்  - 

''வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயில்!''.. 

- என போற்றி வணங்கப்பட்ட திவ்ய தேசமாகிய தஞ்சையில் மகத்தான
கருட சேவைப் பெருவிழா நாளை மங்கலகரமாக நிகழ இருக்கின்றது.

அன்ன வாகனத்தில் திருமங்கை ஆழ்வார்
மகோத்சவத்தின் முதல் நாளாகிய இன்று - திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி திவ்யதேசப் பெருமாளை மங்களாசாசனம் செய்விப்பார். 

இன்றிரவு திவ்ய தரிசன சேவை.  

நாளை காலை அதிகாலையில், 

திருமங்கை ஆழ்வார் அன்னவாகனத்தில் எழுந்தருள -  

தஞ்சை மாமணிக்கோயில்  ஸ்ரீநீலமேகப் பெருமாளும் ஆண்டாளும், ஸ்ரீமணிக் குன்றப் பெருமாளும், தஞ்சை யாளிநகர் ஸ்ரீ நரசிம்ஹப் பெருமாளும் கருட வாகனத்தில் ஆழ்வாருக்குத் திருக்காட்சி நல்கி சேவை சாதிப்பர்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியுடன் நீலமேகப்பெருமாள்
காலை 6.30 மணியளவில் -
சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாளுடன் ஸ்ரீநீலமேகப்பெருமாளும்   
ஸ்ரீமணிக்குன்றப் பெருமாளும் 
யாளி நகர் ஸ்ரீவீரநரசிம்ஹப் பெருமாளும் 

- தனித்தனியே கருட வாகனத்தில் எழுந்தருள்வர்.

அதேவேளையில் வெண்ணாற்றின் வடகரையில் உள்ள திருக்கோயில்களில் இருந்தும் கருட வாகனங்கள் புறப்பாடாகின்றன. 



1) ஸ்ரீ நீலமேக பெருமாள் - ஸ்ரீ ஆண்டாள்
2) ஸ்ரீ வீரநரசிம்ஹ பெருமாள்
3) ஸ்ரீ மணிக்குன்ற பெருமாள்
4) ஸ்ரீ வரதராஜ பெருமாள் - வேளூர்
5) ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் - வெண்ணாற்றங்கரை

6) ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி - பள்ளி அக்ரஹாரம்
7) ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள் - சுங்காந்திடல்
8) ஸ்ரீ யாதவ கண்ணன் - கரந்தை
9) ஸ்ரீ வெங்கடேச பெருமாள், கரந்தை
10) ஸ்ரீ யோகநரசிம்ஹ பெருமாள் - கொண்டிராஜபாளையம், கீழவாசல்.



11) ஸ்ரீ கோதண்டராமர் - கொண்டிராஜபாளையம், கீழவாசல்.
12) ஸ்ரீ வரதராஜ பெருமாள் - கீழராஜவீதி
13) ஸ்ரீ கலியுக வெங்கடேச பெருமாள், தெற்கு ராஜவீதி
14) ஸ்ரீ ராமஸ்வாமி, ஐயங்கடைத்தெரு (பஜார்)
15) ஸ்ரீ ஜனார்த்தன பெருமாள் - எல்லையம்மன் கோயில் தெரு


16) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் - கோட்டை
17) ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் - கோட்டை
18) ஸ்ரீ ரங்கநாத பெருமாள் - மேல அலங்கம்
19) ஸ்ரீ விஜயராமஸ்வாமி - மேலராஜவீதி
20) ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் - மேலராஜவீதி

21) ஸ்ரீ பூலோககிருஷ்ணன் - சகாநாயக்கன் தெரு,
22) ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் - மானம்புச்சாவடி
23) ஸ்ரீ பிரசன்னவெங்கடேச பெருமாள் - மானம்புச்சாவடி.


மாநகரில் திகழும் மற்ற திருக்கோயில்களில் இருந்தும் கருடாரூடராக பெருமாள் எழுந்தருளி, தஞ்சை வடக்கு ராஜவீதியின் கொடிமரத்து மூலையில் ஒன்றுகூடுவர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து இன்புறும் வண்ணம் - 

மகா தீபாராதனைக்குப் பின் - கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி என நான்கு ராஜவீதிகளிலும் சேவை சாதித்தருள்வர்.

மீண்டும் கொடி மரத்து மூலையில் - ஒன்று சேரும் உற்சவமூர்த்திகளுக்கு மகாதீபாராதனை நிகழ்வுறும். 

அதன்பின் உற்சவமூர்த்திகள் -  அவரவர் திருக்கோயில்களுக்கு திரும்புவர்.


அன்ன வாகனத்தில் - முன்செல்லும் திருமங்கை ஆழ்வாரைத்  தொடர்ந்து இருபத்து மூன்று கருட வாகனங்களின் வீதி உலா கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். 

காலையில் இருந்தே ராஜவீதிகளில் ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்கள் - 
பகல் பொழுதில் - ஒவ்வொரு திருக்கோயிலின் பெருமாளையும் கருட வாகனத்தில் தரிசித்து, நம்மாழ்வார் அம்சம் எனும் சடாரி  சூட்டிக்கொள்வதில் ஆர்வம் கொள்வர். 


மகத்தான கருடசேவையைத் தரிசித்திட வேண்டி - வெளியூர்களில் இருந்தும் - வெளி மாவட்டங்களில் இருந்தும் - திரளான பக்தர்கள் குடும்பத்துடன் தஞ்சைக்கு வருகின்றனர்.  





ஆதியில் பராசர மகரிஷிக்கும் மார்க்கண்டேயருக்கும் - பின்னாளில்,
திருமங்கை ஆழ்வாருக்கும் ப்ரத்யட்க்ஷமாகிய கருட வாகன தரிசனம் - 

எண்பது ஆண்டுகளுக்கு முன், தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் வாழ்ந்த - ஸ்ரீதுவாதச கருடாழ்வார் ஸ்வாமிகளுக்கு மீண்டும் அருளப்பெற்றது.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்  - என, பன்னிரு கருட சேவையை, ஸ்ரீதுவாதச கருடாழ்வார் ஸ்வாமிகள் தான் தஞ்சை மண்ணில் துவக்கி வைத்து மக்கள் உய்யும் வழியைக் காட்டினார். 

அந்த மகத்தான அருளாளர் தொடங்கிய கருட சேவை - இன்று பரமன் அருளால் இருபத்து மூன்று கருட சேவை என தழைத்து விளங்குகின்றது.

இந்துசமய அறநிலையத் துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீராமானுஜ தர்சன சபையினர் இணைந்து விழாவினை சிறப்பாக நடத்துகின்றனர்.



அந்தவகையில் - 

எண்பத்தொன்றாம் ஆண்டாக நடைபெறவுள்ள இந்தத் திருவிழா இன்று - ஜூன்/7 - ஆழ்வார்களின் மங்களாசாசனத்துடன் தொடங்குகின்றது.

நாளை (ஜூன்/8) காலை தஞ்சையின் ராஜவீதிகளில் கருடசேவை

இந்தப் பெருவிழாவினை அடுத்து -  (ஜூன்/9) செவ்வாய்க் கிழமை அனைத்துத் திருக்கோயில்களிலும் நவநீத சேவை.

ராஜவீதிகளில் வெண்ணெய்த்தாழியுடன் பெருமாள் எழுந்தருள்வார்.

ஜூன்/10 புதன் கிழமையன்று விடையாற்றி நடைபெறும். 


ராஜவீதிகளின் நெடுகிலும் நீர்மோர், பானகம், சித்ரான்னங்கள் - என, பக்தர்களுக்கு வழங்கி மகிழ்வதற்கு இறையன்பர்கள் காத்திருக்கின்றனர்.

பதிவில் - சென்ற ஆண்டில் நிகழ்ந்த கருடசேவை இடம்பெற்றுள்ளது!..


இப்பெருவிழா சிறப்புடன் நிகழ்வதற்கு பலவகைகளிலும் உறுதுணையாய் விளங்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கமும் நன்றிகளும்!..

இருப்பினும் - இந்த வைபவத்தில் கலந்து கொள்ள இயலாதவாறு மிகவும் நலிவடைந்த நிலையில் சில திருக்கோயில்களும் நகரில் உள்ளன.

எதிர் வரும் ஆண்டுகளில் அந்தத் திருக்கோயில்களில் இருந்தும் பெருமான் - திருவீதி எழுந்தருள வேண்டும் என்பது நமது பிரார்த்தனை. 

அத்துடன் வேறொரு விருப்பமும் மனதில் உண்டு. 
உலகளந்த மூர்த்தி உள்ளுறையும் எண்ணம் ஈடேறிட அருள வேண்டும்.

கருடவாகனனாக எழுந்தருளி
நம் கவலைகளைத் தீர்க்க வருகின்றான்
கார்மேக வண்ணன்!..

பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்வதன் 
உட்பொருள் மகத்தானது.

அழைத்தவர் குரலுக்கு வருபவன் - அவன்!..
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிபவன்  - அவன்!..

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்
தமருள்ளும் தண்பொருப்புவேலை - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தை என்பரே
ஏவல்ல எந்தைக்கு இடம்!.
பூதத்தாழ்வார்.

ஓம் ஹரி ஓம் 
* * *

20 கருத்துகள்:

  1. தஞ்சை கருட சேவைக்கு....எங்களை அழைத்து போகிறீர்கள்....படங்களும் விளக்கங்களும் மனங்குளிர கண்ட உணர்வு வருகிறது ஐயா நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  2. பிரமாண்டமான தகவல்களும், அழகான புகைப்படங்களும் அருமை ஜி வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. கருடசேவையினைக் கண்ணாரக் காண வைத்துள்ளீர்கள் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அற்புதமான படங்கள்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. கருட சேவைதனைக் கண்டு மகிழ்ந்தேன் அழகிய படங்கள் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திருநாங்கூர் கருடசேவையில்தான் அதிகமான எண்ணிக்கையில் பெருமாள் வருவர் என கேள்விப்பட்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்,

      ஆழ்வார் திருநகரியில் - 9, திருநாங்கூரில் - 11, குடந்தையில் - 12, காஞ்சி கூழமந்தலில் - 15 என கருடசேவை வைபவம் நிகழ்கின்றன.

      இங்கெல்லாம் - அடுத்த ஊர்களில் இருந்து எழுந்தருளும் மூர்த்திகள்..

      ஆனால், தஞ்சையில் அனைத்தும் உள்ளூர் திருக்கோயில்களே..

      இந்த வைபவத்தில் கலந்து கொள்ள இயலாமல் நலிந்த நிலையில் மேலும் சில கோயில்களும் உள்ளன.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அருமையான படங்கள், விளக்கங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. தங்கள் பதிவினை முன்பே படித்துவிட்டேன், கருத்திட இயலவில்லை, கருடசேவையை நான் நேரில் பார்த்தேன். மாலையில் தங்கள் பதிவினைப் பார்த்தேன். விளக்கம், புகைப்டங்கள் அருமை. நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் கருடசேவை தரிசனம்.. கொடுத்து வைத்தவர் நீங்கள்!..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. வணக்கம் !
    அருமையான இப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் என் இனிய வாழ்த்துக்களும் ஐயா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      வெகு நாட்களுக்குப் பின் தங்களின் வருகை..
      தங்களின் பாராட்டுரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  10. கருட சேவையின் பதிவும் கருத்துரையும் அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..