நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 17, 2014

கருடசேவை 1

சோறுடைத்த சோழ நாட்டின் சுந்தரத் திருநகர்  தஞ்சையம்பதி!.. 

நீர் வளமும் நிலவளமும் நிறையப் பெற்ற திருத்தலம். 

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாட நெஞ்சை அள்ளும் தஞ்சை என்பதும் தஞ்சைத் தரணி என்பதும் - இந்நகரின் சிறப்பு அடைமொழிகள்.. 

புராணச் சிறப்புகள் வரலாற்றுச் சிறப்புகள் என அனைத்தும் ஒருங்கே உடைய தஞ்சை மாநகரில் - 

வைகாசி மூல நட்சத்திரத்தை அனுசரித்து, நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிகழும் பாரம்பரிய விழாவான முத்துப் பல்லக்குத் திருவிழாவினைப் பற்றிய விவரங்களை -  முந்தைய பதிவில் கண்டோம். 

இதோ - அடுத்து மீண்டும் ஒரு மகத்தான திருவிழா - தஞ்சையம்பதியில்!.. 


புகழ் பெற்ற இருபத்து மூன்று கருட சேவை!.. 

வானளாவ உயர்ந்த அடர்ந்த சோலைகள் சூழ்ந்து விசாலமாக விளங்கியது  - அந்தப் பைம்பொழில். அதன் பேரழகும் வளமும் பராசர மகரிஷியை மிகவும் கவர்ந்ததால் - தமது சீடர்களுடன் அங்கே ஆஸ்ரமம் அமைத்து தவம் மேற்கொண்டார்.  

பராசர மகரிஷி தேவ லோகத்தில் தான் பெற்ற அமுதத்தைத் தன் குடிலுக்கு அருகில் இருந்த புஷ்கரணியில் கலந்து விட - அமிர்த புஷ்கரணியால் மேலும் வளம் கொழித்து விளங்கியது. அதனால் அங்கிருந்த சகல ஜீவன்களும் நோய் நொடியின்றி இன்புற்றிருந்தன. 

இந்நிலையில் வடக்கே இருந்த தண்டகாரண்யம் மழையின்றி வறண்டு போனதால் - அங்கிருந்து வளமையான பகுதியினைத் தேடி, தென் திசைக்கு வந்தவர்கள் - தஞ்சன், தாரகன், தண்டகன் - ஆகியோர். 

செழித்து விளங்கிய  செந்நெல் வயல்கள் அவர்களுடைய சிந்தையைக் கவர்ந்தது. அங்கேயே குடியேறினர்.  நாளடைவில் வாழ்வும் வளமும் பெருகியதால் - அவர்களுடைய இயல்பான குணங்கள் மாறின. அசுர குணங்கள் மேலோங்கி ஆர்ப்பரித்து நின்றன. 

அதனால் காணும் உயிர்களுக்கெல்லாம் இன்னல் விளைக்க முற்பட்டனர்.  

இன்றைய - மனித சமுதாயம் செய்து கொண்டிருக்கின்றதே - அதைப் போல!..
   
வனங்களை அழித்தனர் - விலங்குகள் அஞ்சி ஓடட்டும் என!..  குளிர் நிழல் கொண்டு வேரோடி நின்ற விருட்சங்களை வெட்டிச் சாய்த்தனர் - சிற்றுயிர்களும் பறவைகளும் தொலையட்டும் என!.. 

குளம் ஏரி போன்ற நீர் ஆதாரங்களைச் சிதைத்தனர் - நீர்வாழ் உயிர்களும் நிர்மூலமாகட்டும் என!.. எங்கும் புகை மண்டலமாக வாழ்வாதாரங்களத் தீயிட்டுக் கொளுத்தினர் - வானம் வக்ரம் ஆகி வையகம் வறண்டு போகட்டும் என!..  

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்துப் பெண்கள் மட்டுமின்றி பெண்ணாகப் பிறந்த மழலைகளும் மாளாத துயரத்துக்கு ஆளாகினர். 

கொடுமைக்கோர் அளவில்லையா?.. எனக் குமுறிய பராசரர் - பரந்தாமனின் பாத கமலங்களைப் பற்றிக் கொண்டு, 

பாதக மலங்களைத் தொலைக்க வாராயோ!.. - எனக் கதறி நின்றார். 


மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று மண்ணுலகின் துயர் தீர்க்க என்று வந்தருளிய ஸ்ரீமந்நாராயணன் - அனைத்து வளங்களுக்கும் ஆதாரமாக இருந்த அமிர்த புஷ்கரணியின் நீரினைப் பருகி - நீலமேக சியாமளனாகப் பொலிந்தார். 

அமிர்த புஷ்கரணி வறண்டதைக் கண்டு அதிர்ந்த தண்டகன்  - பூமியைப் பிளந்து கொண்டு ஓடினான்.  பெருமாள் அவனைப் பின் தொடர்ந்து - வராஹ மூர்த்தியாகி வதைத்தார். 

பெருமாளுடன் தோன்றிய ஸ்ரீகாளி - தறி கெட்டு நின்ற தாரகனை வதைத்தாள். 

தஞ்சகன் கோரமான யானை வடிவாகி - பெருமானை எதிர்க்க - மஹாவிஷ்ணு - ஸ்ரீநரசிம்ஹ ரூபமாக - மஹா யாளி என எதிர்நின்றார். 

பொன் பெயரோன் தன் நெஞ்சம் அன்றிடந்த  - புகழ் தஞ்சை யாளி - என திருமங்கை ஆழ்வார் போற்றித் துதிப்பது - இந்தத் திருக்கோலத்தையே!.. 

பெருமானின் திருக்கரங்களுக்குள் சிக்கினான் தஞ்சகன். ஸ்பரிச தீட்சை ஆனதால் - அந்த அளவில் தஞ்சகனின் அசுர குணங்கள் அகன்றன.  ஞானம் பிறந்தது. 

என் பொருட்டு நரசிம்ஹ திருக்கோலங்கொண்டு வந்த தாங்கள் இங்கேயே - இருந்தருளி சகல ஜீவன்களையும் உய்வித்தருள வேண்டும். என் பிழைகளை இனிவரும் சந்ததியினர் உணர்ந்து  இயற்கைக்கு இடையூறு செய்யாமல்  இன்புற்று வாழவேண்டும். இத்தலமும் என் பெயரால் விளங்க வேண்டும்!.. - என வரங்கேட்டான். 

வரும் சந்ததி வாழவேண்டும்!.. - என அவன் கேட்டதால் - பெருமாளும் அவ்வாறே அருள் புரிந்தார். 

பராசர மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி - மீண்டும் வளமார்ந்த பூமியில் மணிக்குன்றனாக - நெல்மணிக் குன்றனாக விளங்கி - மஹா லக்ஷ்மியுடன் கருட வாகனத்தில் சேவை சாதித்து அருளினார். 


பராசர மகரிஷிக்கு பெருமாள் - திவ்ய தரிசனம் நல்கிய நாள் - வைகாசி திருஓணம். 

பின்னாளில் - இத்திருத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் - மங்களாசாசனம் செய்து தரிசிக்கும் போது - பராசர மகரிஷிக்கு நல்கிய திவ்ய தரிசனத்தினை ஆழ்வாருக்கும் அருளியதாக ஐதீகம். 

இத்திருநாள் அக்காலத்திலேயே சிறப்புற பெருவிழாவாக நிகழ்ந்தது. இருப்பினும் தஞ்சையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் - இடையில் தடைபட்டு நின்றது. 

நூறாண்டுகளுக்கு முன்  - தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் வாழ்ந்த மகான் ஒருவர் - தனது முயற்சியினால் - பன்னிரு கருட சேவையாக மீண்டும் நடத்தினார். அதனால் அவர் துவாதச கருட ஆழ்வார் என சிறப்பிக்கப்பட்டார். 

தற்போது வருடந்தோறும் வைகாசித் திங்கள் திரு ஓணத்தன்று - இருபத்து மூன்று கருட சேவையாக - ஸ்ரீநீலமேகப் பெருமாளின் பேரருளால் சிறப்புற கொண்டாடப்பட்டு வருகின்றது. 

மகோத்சவத்தின் முதல் நாள் - முற்பகலில் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி திவ்யதேசப் பெருமாளை மங்களாசாசனம் செய்விப்பார். அன்றிரவு திவ்ய தரிசன சேவை.  மறுநாள் அதிகாலையில், 

திருமங்கை ஆழ்வார் அன்னவாகனத்தில் எழுந்தருள -  

தஞ்சை மாமணிக்கோயில்  ஸ்ரீநீலமேகப் பெருமாளும் ஆண்டாளும், ஸ்ரீமணிக் குன்றப் பெருமாளும், தஞ்சை யாளிநகர் ஸ்ரீ நரசிம்ஹப் பெருமாளும் கருட வாகனத்தில் ஆழ்வாருக்குத் திருக்காட்சி நல்கி சேவை சாதிப்பர்.

1)ஸ்ரீநீலமேக பெருமாள் - ஆண்டாளுடன் 
2)ஸ்ரீவீரநரசிம்ம பெருமாள்,
3)ஸ்ரீமணிகுன்றப்பெருமாள்,
4)ஸ்ரீவரதராஜ பெருமாள்,வேளூர்
5)ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள்,வெண்ணாற்றாங்கரை

6)ஸ்ரீகோதண்டராமர், பள்ளிஅக்ரஹாரம்
7)ஸ்ரீலட்சுமிநாராயண பெருமாள், சுங்காந்திடல்
8)ஸ்ரீயாதவ கண்ணன், கரந்தை
9)ஸ்ரீவெங்கடேச பெருமாள் ,கரந்தை
10)ஸ்ரீயோகநரசிம்ம பெருமாள், கொண்டிராஜபாளையம்

11)ஸ்ரீகோதண்டராமர், கொண்டிராஜபாளையம்
12)ஸ்ரீவரதராஜ பெருமாள், கீழராஜவீதி
13)ஸ்ரீகலியுக வேங்கடேச பெருமாள், தெற்குராஜவீதி
14)ஸ்ரீராமஸ்வாமி, ஐயங்கடைத்தெரு (பஜார்)
15)ஸ்ரீஜனார்த்தன பெருமாள், எல்லையம்மன் கோவில் தெரு

16)ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்,கோட்டை
17)ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள், கோட்டை
18)ஸ்ரீரங்கநாத பெருமாள், மேல அலங்கம்
19)ஸ்ரீவிஜயராமஸ்வாமி, மேலராஜவீதி
20)ஸ்ரீநவநீத கிருஷ்ணஸ்வாமி,மேலராஜவீதி
 
21)ஸ்ரீபூலோககிருஷ்ணன், சகாநாயக்கன்தெரு
22)ஸ்ரீநவநீதகிருஷ்ணன், மானம்புச்சாவடி
23)ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள், மானம்புச்சாவடி



மாநகரின் ஏனைய சந்நிதிகளிலிருந்தும் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள - தஞ்சை கோட்டை நான்கு ராஜவீதிகளிலும் கண்கொள்ளாக் காட்சியாக கருட சேவை நிகழும்!.. 

கருட சேவையில் - மக்களோடு மக்களாக திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்து கொண்டு அன்ன வாகனத்தில் முன்னே செல்வார். 

அவரைத் தொடர்ந்து - ஸ்ரீ நீலமேகப் பெருமாளும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி கோதை நாச்சியாரும் கருட வாகனத்தில் செல்வர். 

தொடர்ந்து ஸ்ரீ வீரநரசிம்ஹப் பெருமாள், ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள் - என அனைவரும் வரிசையாக கருட வாகனங்களில்  ஆரோகணித்து - ராஜ வீதிகளில் வலம் வந்தருள்வதைத் தரிசிக்கும் போது தீராத வினைகளும் தீர்ந்து போயிருக்கும். 

மகத்தான இந்த வைபவம் - நாளை (ஜூன்/18 புதன்) நிகழ்கின்றது.


திவ்யதேச பிரம்மோற்சவங்களின் போது ஒரு நாள்  கருட சேவை நிகழ்வது வழக்கம். 

காஞ்சி கூழமந்தலில் - பதினைந்து, 
திருக்குடந்தையில்  - பன்னிரண்டு , 

சீர்காழி திருநாங்கூரில் - பதினொன்று, 
ஆழ்வார் திருநகரியில் - ஒன்பது -

என கருட சேவை வைபவங்கள் சிறப்பாக நிகழ்ந்தாலும் மிகப்பெரிய அளவில்  நிகழ்வது - 

வம்புலாம்சோலை மாமதில் தஞ்சை மாமணிக் கோயில் எனும் திய்வதேசத்தில் தான்!. 

கருட சேவையைக் கண்டவர்கள் நூறு அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் பெறுவர். 


அவர் தம் தோஷங்கள் எவையானாலும் கருட நிழலைக் கண்ட நாகம் போல் நடுங்கி விலகி ஓடும் -  என்பது ஆன்றோர் வாக்கு. 

23 திருக்கோயில்களுள் - முதற்குறித்த ஒன்பது திருக்கோயில்களின் கருட வாகனங்கள் - தஞ்சை நகரை நோக்கிச் செல்லும் வழி -

சங்கத் தமிழ் வளர்க்கும் - கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வாசல் வழியே தான்!.. 

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அருகில் தான், 
எனது -  ஸ்ரீவிஷ்ணு கம்ப்யூட்டர்ஸ் (Net Cafe & DTP) இருந்தது.

பவனி வரும் பெருமாளை - கண் குளிரக் குளிர - குடும்பத்துடன் சேவித்து மகிழ்வோம்.

இப்போது நான் - இருப்பது வளைகுடா நாட்டின் குவைத்தில்!..

ஆனாலும், என்னுயிர்ப் பறவை -  
தஞ்சையை - பெரிய கோயிலை - பெருமாளைச் சுற்றியே பறக்கின்றது.



கருட சேவையைத் தொடர்ந்து நாளை மறுநாள் - நவநீத சேவை!.. 

23 திருக்கோயில்களில் இருந்தும் வெண்ணெய்த்தாழி உற்சவம். 
மறுபடியும் - தஞ்சை ராஜ வீதிகளில் மகோன்னதமாக நிகழும்!.. 

விழா ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் திரு. பாபாஜி ராஜாபான்ஸ்லே அவர்கள் தலைமையில் - திவ்யதேச பொதுமக்கள், ஸ்ரீராமானுஜ தர்சன சபையினர் மற்றும் ஹிந்து அறநிலையத்துறையினர் சிறப்புடன் செய்து வருகின்றனர்.

அடியார்களும் ஆழ்வார்களும் தேடிச் சென்று தரிசித்த திருமங்கை மணாளன் - நம்மைத் தேடி வருகின்றான். 

தேவாதி தேவனை - திருமறை நாயகனைக் கண்ணாரக் கண்டு கொள்வோம்!.. ஆராஅமுதனை உண்ணாமல் உண்டு கொள்வோம்!.. 

தஞ்சையில் இருபத்து மூன்று கருட சேவை காண வாருங்கள்!..

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுந்தஎம் அண்ணல் வம்புலாஞ் சோலைமாமதில் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்!..
திருமங்கை ஆழ்வார்.
* * *

14 கருத்துகள்:

  1. எங்கிருந்த போதும் தஞ்சையை மறக்காத உங்கள் ஊர்ப்பாசம் வாழ்க!. தஞ்சைக்கு வடகிழக்கே ஒரு வனாந்திரத்தில் பழையகால
    காளி கோயில் இருப்பதாக, எனது சின்ன வயதில் கேள்விப்பட்டு இருக்கிறேன். அது எந்த கோயில், எவ்விடம் என்று எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. அது பற்றி நீங்கள் அறிந்து இருந்தால் வலைப்பதிவில் எழுதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் கேட்டிருக்கும்படிக்கு - விரைவில் எழுதுகின்றேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மகத்தான திருவிழா - தஞ்சையம்பதியில் அற்புதமாக படங்களுடன் சிறப்பாக காணக்கொடுத்தமைக்கு இனிய நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. இரண்யாட்சகனை வதைக்க எடுத்த அவதாரம் அல்லவா வராஹ அவதாரம் . நான் எல்லா அவதாரக் கதைகளையும் பதிவிட்டிருக்கிறேன் பன்றி அவதாரம் பார்க்க
    gmbat1649.blogspot.in/2011/05/3.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
      தங்களது பதிவினை அவசியம் சென்று பார்க்கிறேன்..

      நீக்கு
  4. விளக்கங்கள் வெகு சிறப்பு ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. கும்பகோணத்தில் பெரியத் தெருவில் பல முறை கருட சேவை பார்த்துள்ளேன். அப்போது நீர்மோர், பானகம் வாங்கிக் குடித்துக் கொண்டு, பின்னர் தொடர்ந்து அங்கேயே படைக்கப்படும் மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து உட்கொண்ட சுவையான அனுபவம் எனக்கு உண்டு. அந்த நாள்களை மறக்கவே முடியாது. பின்னர் தஞ்சையில் அண்மைக்காலமாக பார்த்துவருகிறேன். கருட சேவையின் முக்கியத்துவத்தை உரிய படங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.
      தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு நன்றி..

      நீக்கு
  6. தஞ்சையின் உற்சவங்களை உங்கள் பதிவுகள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடிகிறது. நேரில் பார்க்கும் பொழுது எப்போதோ?

    தகவல்களுக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் ஆவலைக் கண்டு மகிழ்ச்சி..
      வாருங்கள் - அடுத்த ஆண்டு சந்திக்கலாம்.
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  7. தஞ்சை கருடசேவை மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..