இன்று ஆடி மாதம். முதல் வெள்ளிக்கிழமை..
என்னிடம் வந்த பிறகு உனக்கு என்ன குறை என்பதைப் போல -
இன்றைய தரிசனம் -
புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்!..
தமிழகத்தில் சிறப்பாக விளங்கும் திருக்கோயில்களுள் ஒன்று..
தஞ்சையின் கிழக்கே ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயில்....
சில ஆண்டுகளுக்கு முன்
திருக்கோயிலின் தெற்காக நெடுஞ்சாலையைத் தவிர்த்து
கண்ணுக்கெட்டியவரை பசுமையான வயல்வெளி தான்..
திருக்கோயிலின் மேற்காக தஞ்சை மாநகர் கீழவாசல் கரம்பை வரைக்கும்
சமுத்திரம் எனப்பட்ட மிகப்பெரிய ஏரி தான்...
இன்றைக்கு வயல் வெளிகள் எல்லாம்
அட்டைப் பெட்டியை ஒத்த வீடுகளாகிப் போயின...
சமுத்திரம் ஏரியையும் சிறு குட்டையைப் போல சுருக்கி விட்டனர்...
தஞ்சாவூரில் இருந்து கோயில்வெண்ணி (25 கி.மீ.,) வரைக்கும்
சாலையின் இருபுறமும் நூற்றுக் கணக்கான நிழல் மரங்கள்...
நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற பேரில்
அத்தனை மரங்களையும் வெட்டித் தள்ளி விட்டார்கள்...
காலக் கொடுமையடி தாயே... காலக் கொடுமையடி!..
என்றபடிக்கு - ஆலய தரிசனம் செய்ய வாருங்கள்...
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் வெங்கோஜி மகாராஜா (1680) மாதந் தோறும் சமயபுரத்திற்குச் சென்று அம்மனைத் தரிசித்து வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
அப்படி ஒரு முறை அவர் அங்கு சென்றபோது இரவு பூஜை முடிந்து விட்டது.
ஆலய நடையையும் அடைத்து விட்டனர்.
திருக்கோயிலில் அர்த்தஜாம பூஜைகள் முடிந்து நடை சாத்திவிட்டால் அடுத்த நாள் உதயத்தில்தான் திறக்க வேண்டும் என்பது விதி.
அதன்படி, மறுநாள் காலை தரிசிக்கலாம் என்று முடிவு செய்த மன்னர் - அங்கேயே பரிவாரங்களுடன் தங்கிவிட்டார்.
தூக்கத்தில் விளைந்த கனவில் - அம்மன் தோன்றினாள்..
தலைநகர் தஞ்சைக்கு அருகில் கிழக்குத் திசையில் தழைத்திருக்கும் புன்னை வனத்தினுள் - புற்றுக்குள் மறைந்திருக்கின்றேன். என்னை அங்கேயே கண்டு கொள்!..
- என்று கூறி அருளினாள் .
தூக்கம் கலைந்து எழுந்த மன்னருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
அன்னை கூறிய இடத்தினை மனதில் இருத்திக் கொண்டார்.. அதிகாலையில் சமயபுரத்தாளைத் தரிசித்து வணங்கிய பின் தலைநகர் திரும்பினார்.
வந்ததும் முதல் வேலையாக - திறமையான ஆட்களுடன்
தஞ்சைக்குக் கிழக்கே இருந்த வனாந்தரத்திற்குச் சென்றார் மன்னர்..
அன்னை கூறிய இடத்தைத் தேடிக் கொண்டிருந்த போது,
அழகே வடிவான சின்னஞ்சிறு பெண் ஒருத்தி
தலைவாரி பூச்சூடியவளாக, சர்வ அலங்கார பூஷிதையாக -
குதிரையில் அமர்ந்திருந்த மன்னனின் முன் வந்து நின்றாள்.
..யாரம்மா.. நீ!. இந்தக் காட்டில் தன்னந்தனியளாக என்ன செய்கின்றாய்?..''
- என்று மன்னன் கேட்க - அதற்கு அந்தப்பெண் ,
என்னைத் தேடி நீ வந்தாய்!.. உன்னைத் தேடி நான் வந்தேன்!..
- என்று புன்னகைத்தாள்..
திகைப்படைந்த மன்னனைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தவளாக
வேம்பின் கீழிருந்த புற்றுக்குள் ஒளி வடிவமாக கலந்து விட்டாள்.
மன்னனுக்கு புல்லரித்தது.
''அன்னையே வந்து முகங்காட்டினாள்..''
- என, பூமியில் விழுந்து வணங்கி ஆனந்தக் கூத்தாடினர் மக்கள்..
புற்றின் மீது குடில் அமைக்கப்பட்டது...
மஞ்சளும் மலர்களும் தூவப்பட்டன...
அணையா தீபங்கள் ஏற்றப்பட்டன..
அன்னையின் தவநிலைக்கு இடையூறு ஏற்படாதபடி,
மக்கள் வந்து வணங்கும் வண்ணம் அந்த புன்னை வனத்தினுள்
பாதையும் அமைக்கப்பட்டது.
புற்றுருவாய் எழுந்த அன்னையைக் கண்டு கைதொழுத மக்கள்
''..மகமாயீ..'' - என்று பெருங்குரலெடுத்து அழைத்து மகிழ்ந்தனர்.
அவளை அண்டினோர் தம் அல்லல் எல்லாம் அழிந்ததனால் புன்னைவனம் - புன்னை நல்லூர் என்றானது.
அச்சமயத்தில் மகாஞானியும் சித்த புருஷரும் அவதூதருமான
மகான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் காசியம்பதியில் இருந்து
தஞ்சை மாநகருக்கு எழுந்தருளியிருந்தார்.
அவரைப் பணிந்து வணங்கிய மன்னன் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்க, மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் புன்னை வனத்துக்கு விஜயம் செய்தார்.
புவனம் காக்க என்று வந்தவள் புன்னை வனத்துப் புற்றினுள்
பூர்ண கலைகளுடன் பொலிந்திருப்பதை உணர்ந்த ஸ்ரீ ப்ரம்மேந்திரர்
ஸ்ரீசக்ர பிரதிஷ்டையுடன் அம்மனை ஆவாகணம் செய்து முடித்தார்.
அந்தத் திருமேனி தான்
இப்போது புன்னைநல்லூர் ஆலயத்தில் திகழ்வது..
அதன் பின் வேறொரு சம்பவம்..
தஞ்சையை ஆண்ட துளஜா மகாராஜாவின் (1728-1735) புதல்வி
பெரியம்மையால் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தாள்.
துயரம் மிகுந்த மன்னன் அன்னையின் சந்நிதியில் நின்று அழுது தொழுதபடி
''..என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே!.. என் அன்னையே!''
-என்று தன் அன்பு மகளுடன் அங்கேயே தங்கிவிட்டான்..
நாட்கள் பலவாகின.
பார்வையிழந்த மகளுக்கு மீண்டும் வாழ்வளிக்க வேண்டுமென -
அல்லும் பகலும் அன்னையைத் தொழுது நின்றான்..
அன்னையைச் சரணடைந்த மன்னன் மகிழும்படியான நேரமும் வந்தது.
வழக்கம் போலவே -
சின்னஞ்சிறு பெண் போல, சிற்றாடை இடையுடுத்தவளாய்
சிவகங்கைக் குளக் கரையிலிருந்து - ஸ்ரீதுர்கையை துணைக்கு அழைத்துக்கொண்டு வந்தாள்.
இளவரசியின் உடல் முழுதும் வேப்பிலையால் வருடி,
திருநீறு பூசி விட்டாள்.
''..கண்களைத் திற!..'' - என்றாள்...
''..என்னம்மா.. கண்ணிழந்த என்னைக்
கண்களைத் திறக்கச் சொல்கின்றாயே!.''
- என இளவரசி கதறி அழுதாள்... வந்திருப்பது யாரென்று அறியாததால்!..
''..உன் அம்மா தான் வந்திருக்கின்றேன்!..
கண்களைத் திறந்து என்னைப் பார்!..''
கண்களைத் திறந்து என்னைப் பார்!..''
- என்றாள் உலகநாயகி!..
திடுக்கிட்டு அரசகுமாரி கண் விழிக்க -
மின்னலைப் போல் மூலத்தானத்தினுள் கலந்தாள் அன்னை.
பாதாதி கேசமும் புல்லரிக்க
அன்னையின் மலரடிகளில் விழுந்து வணங்கினர் அனைவரும்.
அம்பிகையின் அருளைக் கண்டு வியந்த மன்னன் -
தன் மகளுக்குப் பார்வை கிடைத்த நன்றியறிதலுடன் -
அம்பிகையின் குடிலை சிறிய கோயிலாக எழுப்பிக் கட்டினார்.
அந்தக் கோயில் தான் காலப்போக்கில் விஸ்தாரமான கட்டுமானங்களுடன் பெரிய கோயிலாக மாறியது.
சரபோஜி மன்னர் தன் ஆட்சிக் காலத்தில் - மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய திருமதில் - இவற்றை எழுப்பி பெரும் திருப்பணி செய்தார்.
பின்னர் மூன்றாவது திருச்சுற்றும், உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் ராணி காமாட்சியம்பா எழுப்பி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கவை.
என்னிடம் வந்த பிறகு உனக்கு என்ன குறை என்பதைப் போல -
ஆறடி உயரத்தில் பிரம்மாண்டமாகக் காட்சி தருகின்றாள் அம்பாள்.
மூலஸ்தான அம்பாளின் திருமேனி புற்றுமண் ஆனதால் -
அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.
மூலஸ்தானத்தில் அம்பாளுக்கு 48 நாட்கள் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் திருக்காப்பு நடைபெறும்.
அச்சமயம் மூலஸ்தானத்தைத் திரையிட்டு மறைத்து விடுவார்கள்.
அம்பாளை வெண் திரையில் சித்திரமாக வரைந்திருப்பர்..
அந்த சித்ர ரூபிணிக்கே 48 நாட்களுக்கு அர்ச்சனைகள் நிகழும்.
தைலக்காப்பின் போது அம்பாளுக்கு உக்ரம் அதிகமாகும்.அதைத் தவிர்க்க தயிர் பள்ளயம், இளநீர், நீர்மோர், பானகம் வைத்து நிவேத்தியம் நடைபெறும்.
இன்றும் காணக்கூடிய அதிசயமாக - ஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்தில், முத்து முத்தாக வியர்த்து தானாக உலர்கின்றது.
இதனாலேயே அன்னை முத்துமாரி எனப்பட்டாள்.
மூலத்தானத்தின் தென்புறம் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள விஷ்ணு துர்க்கைக்கும் உற்சவ மூர்த்திக்கும் தான் நித்ய அபிஷேகம் நடைபெறுகிறது.
கோபுரத்தடியில் விநாயகர், முருகன், நாகர் சந்நிதிகள்.
தென்புறத்தில் ஸ்ரீகாளியம்மன் மற்றும் பூர்ண புஷ்கலை தேவியருடன்
ஸ்ரீ ஐயனார் வீற்றிருக்கின்றார்.
பேச்சியம்மன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி ஆகியோர் ஒருங்கே உறையும் சந்நிதி கொடிமரத்திற்கு தென்புறம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
இங்கே உள்ள தொட்டிலில் பிறந்த குழந்தைகளை இட்டு பேச்சியம்மனிடம் திருநீறு வாங்கிக் கொள்வது பெரும் பேறாகும்.
மூன்றாம் திருச்சுற்றில் கோசாலையும் மாவிளக்கு ஏற்றும் தீபநாச்சியார் மேடையும் வேப்பமரத்தடியில் பெரிய புற்றும் சில பரிவார மூர்த்திகளும் புன்னை மரமும் விளங்குகின்றன.
பைரவ உபாசகராகிய -
பாடகச்சேரி மகான் தவத்திரு இராமலிங்க சுவாமிகள் இத்திருத்தலத்தில் பலகாலம் இருந்திருக்கின்றார்கள்.
தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார். இங்கே குறைவிலாத அன்னதானம் செய்ததுடன் திருப்பணிகளையும் செய்துள்ளார்.
சுவாமிகளுடைய திருமேனி வெளித் திருச்சுற்றில் மூலஸ்தானத்திற்கு நேர் பின்புறம் சுதை வடிவமாகத் திகழ்கின்றது.
திருக்கோயிலுக்குத் தென்புறமாக ஸ்ரீகல்யாணசுந்தரி சமேத
ஸ்ரீ கயிலாயநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
மாரியம்மன் கோயிலின் பின்புறம் சற்று அருகிலேயே -
சாளக்ராம ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயிலும் அமைந்துள்ளது..
ஏழைக் குழந்தையம்மா எடுப்போர்க்குப் பாலனம்மா
பச்சைக் குழந்தையம்மா பரிதவிக்கும் பிள்ளையம்மா!..
உற்றவளாய் நீயிருக்க உன்மடியில் நானிருக்க
பெற்றவளாய் நீயிருக்க என்மனதில் ஏது குறை!..
ஓம் சக்தி ஓம்..
* * *