நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 05, 2018

திருவீதியுலா 1

தஞ்சை மாநகரின் பாரம்பர்யமிக்க
முத்துப்பல்லக்குத் திருவிழாவும்
கருடசேவைத் திருவிழாவும்
அடுத்தடுத்து வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளன...

திருஞானசம்பந்தப் பெருமானின்
குருபூஜை நாளான வைகாசி மூலத்தன்று (வியாழன் 31/5)
இரவு முத்துப் பல்லக்கு வைபவம் நடைபெற்றது...


மேலராஜவீதியில் உள்ள 
திருஞானசம்பந்தர் மடாலயத்திலிருந்து
ஞானசம்பந்த மூர்த்தியின் திருச்சித்திரம் 
அலங்கார ரதத்தில் எழுந்தருள
திருவீதியுலா நடைபெற்றது...


மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் நம சிவாயவே..(3/22) 
-: திருஞானசம்பந்தர் :- 

ஸ்ரீ ஞானசம்பந்தர் ரதம்
அச்சமயம் மாநகரில் உள்ள
விநாயகர் திருக்கோயில்களில் இருந்தும்
முருகன் திருக்கோயில்களில் இருந்தும் உற்சவ மூர்த்திகள்
அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் எழுந்தருளி
நான்கு வீதிகளிலும் திருவுலா நிகழ்ந்தது...

விடியவிடிய நகரின் பலபகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன...

முத்துப் பல்லக்கு வைபவத்தின் ஒரு சில படங்களை
கீழே தரிசிக்கலாம்...


ஸ்ரீ வெள்ளைப்பிள்ளையார் திருக்கோயில்
ஸ்ரீ சித்தி விநாயகர், கீழராஜவீதி

நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்புநாண் மலர்வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக் கெல்லாம்
நம்பன் நாமம் நம சிவாயவே.. (3/49)
-: திருஞானசம்பந்தர் :- 


ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி, மேல அலங்கம்
ஆழ்வார் பெருமக்களுள் ஒருவரான திருமங்கையாழ்வார்
யாளி நகர் எனப்பட்ட தஞ்சையம்பதிக்கு வந்தபோது 
கருட வாகனத்தில் ஆரோகணித்து
எம்பெருமான் திருக்காட்சி நல்கினார் என்பது ஐதீகம்...

அந்த வைபவம் நிகழ்ந்த நாள் 
வைகாசி மாதத்தின் திருவோணம்...

அதனால் - வருடந்தோறும் 
வைகாசி மாதத்தின் திருவோண நாளில்
தஞ்சையின் ராஜவீதிகளில் 
ஸ்ரீ நீலமேகப் பெருமாள் தேவியருடன் 
கருட வாகனராக எழுந்தருள்கின்றார்...


நேற்றைய தினம் (திங்கள் 4/5) வைகாசி திருவோணம்...

தஞ்சை மாமணிக்கோயில்கள் எனப்படும்
ஸ்ரீ நீலமேகப் பெருமாள்,
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள்,
ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள் - திருக்கோயில்களிலிருந்தும்

மாகரிலுள்ள - ஏனைய பெருமாள் திருக்கோயில்களிலிருந்தும்
கருட சேவை வைபவம் கோலாகலமாக நடைபெற்றது...


இவ்விழாவினை 23 கருடசேவை என்று குறிப்பது வழக்கம்...

இவ்வருடம் மேலும் ஒரு திருக்கோயிலிலிருந்து கருட சேவை புறப்பட 
இந்த ஆண்டு 24 கருடசேவை என்று சிறப்பிக்கப்படுகின்றது... 

இதோ அந்த வைபவம் தங்களுக்காக...

நிகழ்வுகளை வழங்கிய - 
திரு. தஞ்சை ஞானசேகரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..

ஸ்ரீ திருமங்கையாழ்வார்



வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் 
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மொடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்..(0948)
-: திருமங்கையாழ்வார் :- 



திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருள
பெருமான் கருட வாகனத்தில் பின்தொடர்ந்தது கண்கொள்ளாக் காட்சி...


மேலும் சில படங்களை -
தொடரும் பதிவுகளில் காணலாம்...


எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவருயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா எனும் நாமம்..(0953)
-: திருமங்கையாழ்வார் :- 

ஓம் 
நமோ நாராயணாய..
ஃஃஃ