நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 02, 2018

மார்கழிக் கோலம் 18

தமிழமுதம்

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று..(100) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 18



உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் 
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய் 
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் 
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப 
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்..
*

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ கூடல் அழகர்
என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பொழியா நீர்மையால் வென்றி
அடலாழி கொண்ட அறிவனே இன்பக்
கடலாழி நீயருளிக் காண்..(2236)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணை




சிவ தரிசனம் 

இன்று
திருஆதிரைத் திருநாள்..

சகல சிவாலயங்களிலும் 
ஸ்ரீ நடராஜப் பெருமானும்
சிவகாமசுந்தரியும்
மங்கல நீராட்டு கண்டருளும் நன்னாள்..

திருத்தலம்
திருஆலவாய் 


இறைவன்
ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர்
ஸ்ரீ சொக்கநாதப்பெருமான் 


அம்பிகை
ஸ்ரீ மீனாக்ஷி
ஸ்ரீ அங்கயற்கண்ணி 

தல விருட்சம் - கடம்பு
தீர்த்தம் - பொற்றாமரை, வைகை


அம்மையப்பனின்
திருமணத் தலங்களுள்
மதுரையும்பதியும் ஒன்று..


ஈசன் எம்பெருமான்
கால் மாறி ஆடியருளிய 
திருத்தலம்..


பஞ்ச சபைகளுள்
வெள்ளியம்பலம்..

அறுபத்து நான்கு திருவிளையாடல்கள்
நிகழ்த்தப் பெற்ற திருத்தலம்..
*

ஸ்ரீ ஞானசம்பந்தப்பெருமான் அருளிய
திருக்கடைக்காப்பு


மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டி மாதேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே..(3/120)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமேல் முகிழ்வெண் திங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தால் துவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோடு ஆடித்
திளைத்தானைத் தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே..(6/19)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 19 - 20



உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம்அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்...




போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்..


ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
இந்த அளவில் 
நிறைவடைகின்றது..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை சகோ!

    இன்று ஆருத்ரா தரிசனம் இங்கு கோயிலுக்குச் செல்லும் முன் இங்கு கண்குளிரக் கண்டேன்....

    உந்துமதக்களிற்றன் ஓடாத தோள்வலியனையும், திரு ஆலவாயனையும் தரிசித்தேன்..."திரு ஆலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நான்" ...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா!

    திருவாதிரைத் திருநாள் சேர்க்கட்டும் எல்லோர்க்கும் சிறப்பு!

    நன்றியுடன் வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  3. பதிவுகள் எழுதும் விதம் ஆச்சரியமூட்டுகிறது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. திருவாதிரை நாளில் தில்லை நடராஜர் தரிசனம்

    நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  5. திருநாளின் தரிசனத்தை மறுநாள் கண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நடராஜரை தரிசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..