நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 16, 2018

நிலவே.. முகங்காட்டு..

இன்று தை மாதத்தின் அமாவாசை.

கிட்டத்தட்ட  215 ஆண்டுகளுக்கு முன், இதே  -  தை அமாவாசை நாள்.

தலம் : - திருக்கடவூர்.

இடம் : - வம்பளந்தான் திண்ணை.

நேரம் : - (அறியாமை) சாயுங்காலம்.

சூழல் :- ஊர் முழுதும் பரபரப்பு.

 அதே சமயம் அழுத்தமான மௌனம். என்ன நடக்குமோ என்ற திகைப்பு!..


என்னவாம்!?..

நம்ம சுப்ரமண்ய குருக்கள் இருக்காரே!..

யாரு?.. அம்பாள் சந்நிதியில உட்கார்ந்துகிட்டு போற வர்ற பொண்ணுங்களை அபிராமி.. அபிராமி..ன்னு வம்புக்கு இழுப்பாரே.. அவரா?..

அவரே தான்.. இன்னைக்கு சரியா மாட்டிக் கொண்டார்!..

யார் கிட்டே!..

மகராஜா கிட்டே!..

என்னது மகராஜாவா!.. அவர் எங்கே இங்கே வந்தார்?.. நான் மாயவரத்ல இருந்து இப்பதானே வர்றேன்.. கொஞ்சம் புரியும்படி சொல்லு..

தஞ்சாவூர்ல இருந்து சரபோஜி மகராஜா பூம்புகார் கடல் கரைல அமாவாசை தர்ப்பணம் செய்துட்டு -  இங்கே அம்பாளை தரிசிக்க வந்திருக்கார்...

.. ம்!..

கோயிலுக்கு வந்தவர் .. கோயிலுக்குள்ள நம்ம சுப்ரமணிய குருக்கள் அரை மயக்கத்தில இருக்கிறதை பார்த்து விட்டார்..

அடடே!..


நம்ம ஆளுங்க குருக்களோட அடாவடிகளை சொன்னப்போ ராஜா நம்பற மாதிரி இல்லை!.. 

ராஜாவே அவரைப் பார்த்து, 
குருக்களே!.. இன்னிக்கு என்னங்காணும் திதி..ன்னு கேட்டதும், 

அரை மயக்கத்தில் இருந்த சுப்ரமணி இன்னிக்கு பௌர்ணமின்னு உளறிட்டார்!..

அடப்பாவி மனுஷா!.. நெறஞ்ச அமாவாசை!.. அதுவும் தை அமாவாசை!..

அப்பறம் என்ன.. இன்னிக்கு பௌர்ணமின்னா ஆகாயத்தில நிலா வருமா.. ன்னு .. ராஜா கேட்க...

குருக்களும் - சர்தான்..போய்யா..  நிலா வரும்!... அப்படின்னுட்டார்...

ராஜா கடுப்பாயிட்டார்.. இன்னிக்கு சாயுங்காலம் நிலா வரல்லே... ன்னா.. உன்னைய நெருப்புல போட்டு வறுத்துடுவேன்....னுட்டார்.. 

ஐயையோ!..

அவருக்காக  நெருப்பு மூட்டி - அதுக்கு மேல ஊஞ்சல் கட்டி இருக்காங்க!..


அடப்பாவமே.. புள்ளகுட்டிக்காரர் ஆச்சே!... கோயிலுக்கு வந்தோமா.. பஞ்சாங்கம் படிச்சு ரெண்டு பாட்டு பாடுனோமா..ன்னு இல்லாம.. வம்பை விலை கொடுத்து வாங்கிக்கிட்டாரே!.. 

சரி..  போனா போவுது குருக்களை விட்டுடுங்க.. ன்னு  அவருக்காக யாரும் ராஜாக்கிட்டே பேசலியா!..

யார் பேசுவா!.. எப்ப பாத்தாலும்.. அவனோட என்ன கூட்டு!.. இவனோட என்ன சேர்த்தி..ன்னு  புலம்பிக்கிட்டே இருந்தா யார் தான் அவரை பக்கத்தில சேர்த்துக்குவாங்க!.. நீரே சொல்லும்!..

அதுவும் சரிதான்!... இருந்தாலும்...

ஓய்!.. நீர் அவருக்காக இரக்கப்படுறீரா?.. 
கோயிலுக்கு வர்ற பொண்ணுங்களைப் பார்த்து -

நீ வராஹி மாதிரி இருக்கே.. 
நீ பத்ரகாளி மாதிரி இருக்கே.. நீ சாமுண்டி மாதிரி இருக்கே...ன்னு சொன்னா.. நம்ம ஊரு பொண்ணுங்களுக்கு கோவம் வருமா.. வராதா?..

வரும் தான்... ஆனாலும் பாவம்... நம்ம குருக்கள்!..

நீர் வேறே...  ராஜாவுக்கு முன்னாலே உளறிட்டோமே.. அப்படின்னு ஒரு வருத்தம் கூட குருக்கள் கிட்ட இல்லை .. தெரியுமா?.. ''

அப்படியா!..


என்ன அப்படியா?.. எல்லாம் அவ பாத்துக்குவா.. அவ தானே என்னய இந்த மாதிரி பேச வெச்சி வம்புல மாட்டி விட்டா... அப்படி இப்படின்னு ஒரே பிடிவாதம்.. அபிராமி அம்பாளா இவர்க்கிட்ட வந்து சொல்லச் சொன்னா?.. இன்னிக்கு பௌர்ணமி...ன்னு!

சரி .. அப்ப இதுக்கு என்னதான் முடிவு?..

வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கலை.. அதனால முடிவை அவரே தேடிக்கிட்டார்!.. அம்பாள் எனைக் காப்பாத்துவா.. ன்னு இன்னமும் சொல்லிட்டு இருக்கார். 

கீழே நெருப்பை மூட்டி மேலே ஊஞ்சல் கட்டி தொங்க விட்டிருக்காங்க.. 
அதுல இருந்து தான் இன்னும் கொஞ்ச நேரத்தில.. 
நிலவே முகங் காட்டு..ன்னு பாட்டு பாடப் போறார் நம்ம சுப்ரமணி!.. 

நெருப்பு மேலே பாட்டா!?.. 

ஆமா.. அந்தாதி..ன்னு ஒரு பாட்டு வகை இருக்கு .. ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசில உள்ள எழுத்து அசை, சீர்....

இதெல்லாம் நமக்குப் புரியாது.. தெளிவா சொல்லு..

ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசி சொல்லை - அடுத்த செய்யுளோட முதல் சொல்லாக வச்சி பாடுறது.. அதுக்குப் பேர் தான் அந்தாதி.. அந்த மாதிரி பாடுறதா இருக்கிறார்..இப்ப புரியுதா!.. 

புரியுது.. நல்லாவே புரியுது!.. அப்போ.. பாட்டு பாடுனா நிலா வருமா!?..

யாருக்குத் தெரியும்!.. அங்கே போய் பார்த்தால் தானே தெரியும் .. நான் அதுக்குத் தான் கோயில் வாசலுக்குப் போறேன்!..

அப்போ.. சாமி கும்பிட இல்லையா?..

அதெல்லாம் வயசான காலத்தில பாத்துக்கலாம்!..

அப்போ... நானும் வர்றேன்!... என்ன தான் நடக்குதுன்னு பாக்கணும்!..

ஆமா.. ஏதோ.. பாட்டு சத்தம் காதுல விழலே!...

ஆமாமா!.. குருக்கள் தான் பாடுறார்... 
முன்னாலேயே கச்சேரிய ஆரம்பிச்சுட்டாரா!..

இரு ..இரு.. என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு.. 

ஊரே கூடி நிக்குது போல.. முதல்ல பாட்டைக் கவனி..

விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன 
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப் 
பழிக்கே உழன்று வெம்பாவங்களே  செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே!..

கேட்டியா.. இப்பவும் என்ன சொல்றார் பார்.. கயவர்  தம்மோடு என்ன கூட்டு.. ன்னு.. அதாவது நம்மள! ... 

அட.. ஏன் மேல இடிக்கிறே!.. கண்ணு தெரியலயா?.. பட்டப் பகல் மாதிரி நிலா இருக்குறப்ப!...

நிலாவா!... அது எங்கேயிருந்து வந்திச்சி.. இன்னிக்கு அமாவாசை.. மறந்து போச்சா!..

என்னய்யா உளர்றே!.. நிலவு இல்லேன்னா இவ்வளவு வெளிச்சம் எப்படி வரும்!?.. 
ஆ.. ஆ.. அதோ.. பார்யா.. நிலா.. அது .. வானத்து.. மேலே!..

என்னா இது?.. அதிசயமா இருக்கு.. நம்பவே முடியலயே.. இப்படியும் நடக்குமா!.. 

நடந்திருக்கே!..  குருக்கள் விஷயமான ஆள்தான்யா!.. பாட்டு பாடி நிலாவ கொண்டாந்துட்டாரே!..

இங்கே பாரு... அன்னிக்கு அவரை குறை சொன்ன  பொண்ணுங்கள்ளாம் ... இப்ப ஓடிப்போய் அவர் கால்ல விழுந்து கும்புடுறதை!.. அப்பப்பா.. இந்தப் பொண்ணுங்கள நம்பவே முடியல!...


கோயில்ல குடியிருக்கிற அம்பாளையே நம்ப முடியலையே... இவ தானே அன்னிக்கு பௌர்ணமி.. இன்னிக்கு அமாவாசைன்னு உருவாக்கி வெச்சா.. இப்ப - அவளே.. பாட்டுக்கு மயங்கி நிலாவைக் காட்டிட்டாள்... ன்னா!..

அதுவும்..  தமிழ் பாட்டுக்கு!.. அம்பாளே மயங்கிட்டாள்...ன்னு அர்த்தம்!..

நாம தான் தப்பு கணக்கு போட்டுட்டோம்.. அங்கே பார்.. மஹாராஜாவே எந்திரிச்சு வந்து குருக்களைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு ... என்னது.. அபிராமி பட்டர்..ன்னு பட்டயமா!.. சரிதான்.. நல்ல மனுஷனுக்கு மரியாதை செய்ய வேண்டியது தான்யா!..

இன்னும் பாடறார்.. கேளுங்க.. ஆஹா!.. மனசு கரையுதே...

ஸ்ரீ அபிராமவல்லி
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிசெஞ் 
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல் 
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!...

பார்.. பார்.. அம்பாளை நமக்கெல்லாம் தரிசனம் செய்து வைக்கிறார்.. ஆஹா.. தாயே.. தயாபரி.. எங்க பிழையெல்லாம் பொறுத்துக்கம்மா!.. எங்களுக்கு நல்ல புத்தியக் கொடும்மா!.. அபிராமி!.. அபிராமி!..

என்னய்யா.. கண்ணுல ... 

ஆனந்த கண்ணீர்!..  ஐயா!.. ஆனந்தக் கண்ணீர்!.. 
உங்கண்ணுலயுந்தான்.. கண்ணீர் வருது!..

நாம எல்லாம் குருக்களை தப்பு தப்பா சொல்லியும், அவரு நமக்கும்  அம்பாள் தரிசனம் செஞ்சு வெக்கிறார்..ன்னா..  அவரு தான்யா மனுசன்....

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் ..ன்னு ஆரம்பிச்சு - நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே!.. ன்னு நூறு பாட்டு பாடி அந்தாதிய பூர்த்தி செஞ்சிருக்கிறார்!..'

நூல் பயன் என்ன சொல்றார்..ன்னு கவனி..


ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் 
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவி அடங்கக் 
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை 
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!..

கேட்டீரா.. அம்பாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லை.. ன்னு.. சொல்லி நம்ம கண்ணைத் தெறந்து வச்சிருக்கார்..

வாங்க நாமளும் போய் அவர்கிட்ட நல்லதா நாலு வார்த்தை சொல்லுவோம்.. இனிமே.. எனக்கு அபிராமி தான் விழித்துணையும்.. வழித்துணையும்!..

எனக்குந்தான்!..
***
அன்பின் நண்பர்களுக்கு
இது முந்தைய ஆண்டின் பதிவு..
அவசியமும் அவசரமும் கருதி
மீண்டும் வெளியிட்டுள்ளேன்..
நன்றி..
***

அபிராம பட்டர் வாழ்க!..

அபிராமவல்லி வாழ்க!..
அமிர்தகடேசர் வாழ்க!..

- : ஓம் சக்தி ஓம் :-

8 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  ஆதிபராசக்தி திரைப்படத்தை மீண்டும் காண்பது போலிருந்தது நன்றி.

  //அப்போ சாமி கும்பிட இல்லையா ?
  அதெல்லாம் வயசான காலத்துல பார்த்துக்கிறலாம்.//

  உண்மையை நாசூக்காக வெளிப்படுத்தியது அருமை.

  பதிலளிநீக்கு
 2. பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஐயா

  பதிலளிநீக்கு
 3. கலையாத கல்வியும்குறையாத வயதும் ஓர்
  கபடு வாராத நட்பும்
  கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
  கழுபிணி இலாத உடலும்
  சலியாட மனமும் அன்பு அகலாத மனைவியும்
  தவறாத சந்தானமும்
  தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
  தடைகள் வாராத கொடையும்
  தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
  துன்பமிலாத வாழ்வும்
  துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
  தொண்டரோடு கூட்டு கண்டாய்
  அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
  ஆதி கடவூரின் வாழ்வே
  அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
  அருள்வாய் நீ அபிராமியே

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ஐயா!

  ஆத்தாளை எங்கள் அபிராமியை என்கண்முன்னே காட்டிய உங்களையும் நான் வணங்குகிறேன் ஐயா!
  பதிவு படித்து கண்களை மறைக்கும் நீரை விலக்கியும் முடியாமல் இவ்வளவு நேரம்
  நானும் அபிராமியை வேண்டிப் பதிகம் பாடி வந்து பின்னூட்டம் தருகிறேன்!

  உங்கள் பதிவு இன்னோர் திரைப்படமாக எனக்குக் காட்சியாகியது.
  அபிராமிப் பட்டரை மட்டுமல்ல தங்களையும் அபிராமி இன்று உலகறியச் செய்துளாள்!

  எனக்கும் இன்றைய அவசிய தேவை இது!
  உங்களிடம் வந்து புரியவைத்துப் பதிவாக்கிய அன்னை அபிராமி
  உங்களுக்கும் வேண்டியதெல்லாம் அருளட்டும்!

  நன்றியுடன் நல்வாழ்த்துக்கள் ஐயா!

  வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 5. எஸ் வி சுப்பையா நினைவுக்கு வருகிறார்! சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. ஆஹா ஆஹா.. இப்படித்தான் சில பாடங்களை படிப்பிக்கோணும்.. அதாவது நகைச்சுவைக் கதைபோல சொல்லும்போது நிறுத்தாமல் தொடர்ந்து படிக்கச் சொல்லி மனம் சொல்லுது,,அத்தோடு மனதிலும் பதிஞ்சு நின்றிடுது.. மிக அருமை..

  பதிலளிநீக்கு
 7. ஆஹா அருமை...அபிராமி அன்னையின் அருள் முகம் கண்டோம்...

  பதிலளிநீக்கு