நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 29, 2016

ஸ்ரீ வல்லப விநாயகர் 2

கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்போ பலஸார பக்ஷிதம்
உமாஸூதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்..

அதென்ன.. அரிய செய்திகள்!?.. வெள்ளைப் பிள்ளையார் கோயிலைப் பற்றி?..
மற்றவர் அறியாதபடிக்கு.. உனக்கு மட்டும் தான் தெரியுமா?..

இதை வாசிப்பவர்களுக்கு இப்படியெல்லாம் எண்ணங்கள் ஏற்படக்கூடும்...

தற்காலத்தில் - திருத்தலங்கள்,  அவற்றின் தல வரலாறு மற்றும் திருக்கோயில்கள் இவற்றைப் பற்றிய செய்திகளைகளை வெளியிட்டு ஆதாயம் அடைகின்ற செய்தி ஊடகங்கள் பற்பல..

ஒரு சில முக்கிய கட்டுரைகளைத் தவிர்த்து மற்றபடி - வெளியிடப்படும்
துணுக்குச் செய்திகளை வழங்குவோர் பெரும்பாலும் அவற்றின் வாசகர்களே..

சென்ற வாரம் இந்தப் பத்திரிக்கையில் வந்த செய்தி -
வேறு விதமான ஒப்பனைகளுடன் இந்த வாரம் அந்தப் பத்திரிக்கையில் வெளியாவதைக் கண்டிருக்கின்றேன்..

ஆடி ஆமாவாசையன்று தான் திருக்கடவூரில் அபிராமபட்டர் அபிராமி அந்தாதி எழுதினார்!.. - என்று ஒரு ஊடகத்தில் செய்தி..

என்ன விந்தை!..

எழுதப் பெற்றதாம் - அபிராமி அந்தாதி?..

அடக் கொடுமையே!..

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் என்றால் யாருக்கும் புரியாது..

குரு பகவான் கோயில் என்று கேளுங்கள்!..

பளீர்!.. - என பதில் வரும்..

இன்னும் வைத்தீஸ்வரன் திருக்கோயிலை செவ்வாய் ஸ்தலம் என்றும்
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலை சனீஸ்வரன் கோயில் என்றும் எழுதுகின்ற பத்திரிக்கைகளை என்ன செய்வது?..

இவர்களின் தொல்லை தாங்கமுடியாமல் திருக்கோயில் நிர்வாகத்தினரே - செவ்வாய் ஸ்தலம் என்றும் சனீஸ்வரன் கோயில் என்றும் எழுதி வைத்து விட்டனர்..

மக்களுக்கும் அவ்வாறாகப் படித்தால் தான் திருப்தியாக இருக்கின்றது..

ஆகையால் -
இப்படிப் புனைந்து எழுதுவோர்க்கு எப்படித் தெரியும் - மற்ற விஷயங்கள்!..

சமீபத்தில் நிகழ்ந்த மகாமகத்தின் போது - ஊடகங்களில் வெளியானவற்றுள்
எத்தனை எத்தனை பிழையான தகவல்கள்!..

இதையெல்லாம் யார் கவனிக்கப் போகின்றார்கள் என்ற எண்ணம்!..

ஆதாயத்துக்கு வெளியிடுகின்றார்களே அன்றி
ஆய்ந்து அறிந்து வெளியிடுவதில்லை!..

சரி.. உனக்கென்ன ஆதாயம்.. இதனால்!?..

ஆதாயம் என்றால் -

ஒரு பதிவினைத் திட்டமிடும் போதும்
அந்தப் பதிவினில் இருக்கும் போதும்
நெஞ்சில் இறையுணர்வு ததும்புகின்றதே...

அது போதாதா!..

மேலும், நான் உணர்ந்த விஷயம் - மற்றவர்களுக்கும் ஆகட்டுமே!..

அவ்வளவுதான்!..

நண்பர்கள் இனி வருங்காலத்தில் தஞ்சை மாநகருக்கு வருகின்றபோது அவசியம் வெள்ளைப் பிள்ளையார் திருக்கோயிலுக்கு வாருங்கள்...

இத்திருக்கோயிலின் நுண்ணதிர்வுகளை உள்வாங்கி
வாழுங்காலத்தில் வளமுடனும் நலமுடனும் வாழுங்கள்...

அந்த விருப்பம் ஒன்றிற்காகத் தான் இந்தத் தொடர் பதிவு!..


மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்து
ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையார் திருக்கோயிலுக்குள் நுழையும் போதே
சில படிகள் கீழே இறங்கியாக வேண்டும்..

சந்நிதியை நோக்கி இரண்டாவது வாயிலைக் கடந்தால் - கொடிமரம்..
மேலும் சில படிகள் கீழே இறங்கியாக வேண்டும்..


அர்த்த மண்டபத்தைக் கடந்து சந்நிதி வாசலில் நின்று கொண்டு கிழக்கே நோக்கினால் -

தரை மட்டத்துக்குக் கீழாக ஏறத்தாழ மூன்று அல்லது நான்கு அடி தாழ்வாக நின்று கொண்டிருப்பது புரியும்..

ஏன் இப்படி!?..

பல காலங்களுக்கு முன்னால் -
உதயாதி நாழிகையில் சூரிய பூஜை நிகழ்ந்தற்கான சான்று அது!..

அதிகாலையிலோ மாலைப் பொழுதிலோ சூரியனின் கதிர்கள் கருவறையில் மூலமூர்த்தியின் மீது படர்வது அபூர்வமான ஒன்று..

இன்றும் பல திருக்கோயில்களில் இப்படியான சூரிய பூஜை நிகழ்கின்றது..

தஞ்சை வடக்கு அலங்கம் ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில்
தஞ்சை - கரந்தை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
ஆகிய திருக்கோயில்களில் இவ்வாறு சூரிய பூஜை நிகழ்கின்றது..

ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலில் மாலைப் பொழுதிலும் 
கரந்தை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் காலைப் பொழுதிலும்
சூரிய பூஜை நிகழ்கின்றது..

இந்தக் கோயில்களின் கருவறை சற்றே தாழ்வாக விளங்குகின்றது..

இப்போது - வெள்ளைப் பிள்ளையார் கோயிலில் சூரிய பூஜை நிகழ்வதில்லை..

சூரிய பூஜை நிகழ்ந்த கோயில் என்பது கூட எவருக்கும் தெரியாது..

காரணம் -

விவரம் புரியாத மக்களால் சந்நிதி வீதி அப்படியும் இப்படியுமாக மாற்றப்பட்டு உயரமான கட்டுமானங்கள் எழும்பிவிட்டன...

கும்பாபிஷேக கல்வெட்டு 25.1.1948


கண்ணாடிச் சப்பரம்
காலப்போக்கில் விநாயகருக்கு சூரிய பூஜை தடைப்பட்டதால் -
எந்த மாதத்தில் எந்த நாட்களில் நிகழ்ந்தது என்பதே தெரியாமல் போயிற்று..

மாசி அல்லது பங்குனியில் காலை 6.30 மணியளவில் -
சந்நிதியில் சூரிய பூஜை நிகழ்ந்திருக்கக் கூடும்..

தளராத முயற்சி இருப்பின் - சூரியனின் இயக்கத்தைக் கணித்து 
அந்த நாட்களையும் கண்டறிந்து விடலாம்...

அந்த நாட்கள் - எப்போது யாரால் கண்டறியப்படும்!?.. 

இவ்வாறே, தஞ்சையை அடுத்த கண்டியூரில் - பங்குனி மாதத்தின்
மாலைப் பொழுதில் நிகழும் சூரிய பூஜைக்கு இடையூறாக ஆக்ரமிப்புகள்..

இனி அடுத்தடுத்த காலங்களில் எப்படியாகுமோ?.. யாரறியக் கூடும்!..


அடுத்ததாக - 

பெரிய பெரிய வைணவத் திருக்கோயில்களில் கூட காண இயலாத அற்புதம்..

என்னங்க அது?..

முன் மண்டபத்தைக் கடந்து உள்ளே நுழையும் போது உட்புறச்சுவரில் இருபுறமும் புடைப்புச் சிற்பமாக கருடனின் திருவடிவம் பதிக்கப் பெற்றுள்ளது....

ஏறக்குறைய மூன்றடி உயரத்துடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட தோற்றம்..

இதிலென்ன விசேஷம்!?..

வடபுறம் அமைந்துள்ள கருடன் சிறகை அடக்கி தரை இறங்குவதாகவும் 
தென்புறம் அமைந்துள்ள கருடன் சிறகை விரித்து மேலே ஏறுவதாகவும் 
அமைந்துள்ளதே சிறப்பு!..

தோளில் நாகம் புரள - 
தெற்கு நோக்கிய கருடனின் கரத்தில் மாவிலைகளுடன் கூடிய கலசம்..

அது அமுத கலசம்...


ஒருசமயம் - அமுத கலசத்துடன் தெற்கு நோக்கிச் சென்ற கருடனை -
தஞ்சபுரியின் தலைவாசலில் வீற்றிருந்த தலைமகன் - விநாயகப் பெருமான்
கீழே இறங்குமாறு ஆணையிட்டார்..

கணபதியின் ஆணைக்குக் கட்டுப்பட்ட கருடன் தரையிறங்கி பணிந்து நின்றான்..

ஒரு நாழிகைப் பொழுது இத்தலத்தில் இருந்து செல்க!..
- என்று உத்தரவிட்டார் விநாயகப்பெருமான்..

அவ்வாறே, கருடன் ஒரு நாழிகைப் பொழுது இத்தலத்தில் இருந்து சென்றான்..

இந்த நிகழ்வை நினைவு கூர்பவை தான் அந்தச் சிற்பங்கள்...

இவற்றின் மகத்துவம் அறியாமலேயே -
விளக்கேற்றி வைத்து மக்கள் வணங்கிச் செல்கின்றனர்..

அந்த சிற்பங்கள் இரண்டினையும் படம் பிடித்தேன்..

ஆனால், கணினியில் கையாளும் போது
ஒரு படம் - எப்படி தவறியதென்று தெரியவில்லை..

இந்தப் பதிவில் -
கருடனின் ஒரு படம் மட்டுமே தங்கள் பார்வைக்கு!..

விரிந்த சிறகுகளுடன் கருடன்
தஞ்சையம்பதியில் -
பராசர முனிவருக்கும் திருமங்கையாழ்வாருக்கும்
ஸ்ரீ ஹரிபரந்தாமன் கருட வாகனத்தில் திருக்காட்சி நல்கியதால்
தஞ்சபுரி எனும் இத்தலம் கருடபுரி எனவும் வழங்கப்படுகின்றது...

இதனாலேயே பின்னாளில் அமைந்த பெருங்கோட்டைக்கு கருடன் கோட்டை என்று பெயர் சூட்டப்பட்டது...

அதுமட்டுமல்லாமல் - தஞ்சை பெரிய கோட்டை சிறகை விரித்துப் பறக்கும் கருடன் வடிவில் அமைக்கப் பெற்றதாகவும் சொல் வழக்கு..

கருடனின் நிழலுக்கு நல்ல பாம்பு அஞ்சி நடுங்கும் என்பர் ஆன்றோர்..

அதனாலேயே -
இன்றளவும் தஞ்சை எல்லைக்குள் விஷம் தீண்டுவதில்லை!...

தவிரவும்,
தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜன் திருவாயிலின் தென்புறமாக அமைந்துள்ள சந்நிதியில் மேற்கு நோக்கியவாறு பிரம்மாண்டமான நாகராஜன் திருமேனி விளங்குவதும் கருத்தில் கொள்ளத்தக்கது..

பின்னாளில், வடவாற்றங்கரையில் -
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் துறவறம் ஏற்றுத் தவம் புரிந்த
புனித இடத்தைத் தேடி அயர்ந்தபோது -

அங்கே ஐந்தலை நாகம் ஒன்று தோன்றி மண்டலமிட்டு
ஸ்வாமிகள் அமர்ந்து தவம் செய்த இடத்தை அடையாளம் காட்டியதாக -
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் வரலாற்றில் கூறப்படுகின்றது...

இன்றும் வடவாற்றங்கரை பிருந்தாவனத்தில் ஐந்தலை அரவு அடையாளம் காட்டிய இடத்தில் விளக்கேற்றி வைத்து அன்பர்கள் தியானம் செய்கின்றனர்..

இப்படி ஐந்தலை அரவு அடங்கிக் கிடப்பதற்குக் காரணம் -
அன்றைக்கு ஐங்கரன் திருவருள் கூட்டி - கருடனை தரையிறங்கச் செய்ததே!..

ஸ்ரீ பாடகச்சேரி மகான்
ஐந்தலை அரவு - ஐம்புலன்கள்..
கருடன் - ஆத்மா..
அமுதம் - ஞானம்..

அவற்றை ஒருங்கு கூட்டி உயர் நிலைக்கு ஏற்றியருள்பவன்
மூலாதார மூர்த்தியாகிய விநாயகப் பெருமான்!..

இதையெல்லாம் 
உள்ளிருந்து உணர்த்தியருளும் ஞானகுரு
பாடகச்சேரி மகான் ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகள்!.. 

கற்றார்க்கும் அற்றார்க்கும்
நன்மையை உணரும் வல்லமையை வழங்குபவர்
ஸ்ரீ வல்லபை சமேத வெள்ளை விநாயகர்..

ஸ்ரீ விநாயகப் பெருமானின் நல்லருள் 
எல்லாருக்கும் ஆவதாக!..

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கை தொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே!..

ஓம் கம் கணபதயே நம.. 
***

17 கருத்துகள்:

  1. அறிந்து கொள்ள வேண்டிய நிறைய தகவல்கள்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சிறப்பான தகவல்கள்.... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... காலையிலேயே வாசித்துவிட்டேன்...
    இந்த முறை ஊருக்குப் போகும் போது கண்டிப்பாக போக வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      அவசியம் வாருங்கள்.. கோயில் தரிசனம் செய்வதோடு -
      திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்களையும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களையும் சந்திக்கலாம்.

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான தகவல்கள்...தொடர்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..
      தங்கள் முதல் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அண்மையில் நடைபெற்ற குடமுழுக்கில் கலந்துகொண்டேன். அவ்வப்போது செல்கிறேன். இருந்தாலும் தங்கள் பதிவின் மூலம்தான் நுட்பமான செய்திகளை அறிந்தேன். விக்கிபீடியாவில் இக்கோயிலைப் பற்றி கடந்த ஆண்டு பதிவினை ஆரம்பித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. அடுத்தமுறை தஞ்சைக்கு வரும்போது பார்க்க வேண்டும் அதற்கு முன் மீண்டும் இந்தப் பதிவைப் படிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      அவசியம் தஞ்சைக்கு வாருங்கள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. நாங்கள் திருவெண்காட்டில் இருந்த போது அகோரமூர்த்தி கோவில், பிரம்மாவித்யா கோவில் என்பார்கள், இன்று அது புதன் கோவில் என்றால் தன் தெரிகிறது. நவக்கிரக வழிபாடு வந்தபின் கோவில்களில் உள்ள மூலவர்களை கூட வழிபடாமல் நவக்கிரகங்களை வணங்கி அடுத்த கோவில் ஓடுகிறார்கள் மக்கள்.

    கட்டிடங்கள் அமைப்பால் பிள்ளையாருக்கு சூரிய பூஜை தடைபட்டது அறிந்து வருத்தமாய் உள்ளது.

    பதிவும் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் கூறுவது சரியே..

      இன்றைய நாட்களில் நவக்கிரக தரிசனம் என்று ஒரே நாளில் நடத்தி முடித்து விடுகின்றார்கள்..

      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அறிந்திராத தகவல்கள் ஐயா . அறிந்து கொண்டோம்...மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..