நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 10, 2014

ஆலய தரிசனம் - 1

வீட்டிலிருந்து புறப்பட்டபோது மேக மூட்டமாகத் தான் இருந்தது.

எனினும் - அவ்வப்போது வெயில் தகித்தது.

மதியம் 12.30 மணியளவில் சென்றடைந்த தலம் - 

தஞ்சையில் இருந்து ஐம்பது கி.மீ தொலைவில் உள்ள 
பெரம்பூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில்!..

திருச்சி நெடுஞ்சாலையில் - 

செங்கிப்பட்டியிலிருந்து குன்றாண்டார் கோயில் வழியாக புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ளது பெரம்பூர். 

சுற்றிலும் புஞ்சைக் காடுகள் சூழ்ந்திருக்கும் அழகான கிராமம் பெரம்பூர்.

எட்டுத் திசையிலும் காவல் நாயகமாக ஸ்ரீ முனீஸ்வரர் ப்ரதிஷ்டை செய்யப் பட்டுள்ளார்.

எழிலான இந்த ஊரின் நடுவில் வேப்ப மரநிழலில் அருளாட்சி செய்கின்றனள் - 

அன்னை வீரமாகாளியம்மன்!..

அவளுடைய அருள் முகத்தினைக் காணும் முன்னதாக - 

அன்னையின் திருக்கோயிலுக்கு அருகில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஹரிஹர புத்ர ஐயனார் திருக்கோயிலில் தரிசனம்.

அழகான திருக்கோயில். 


நவக்கிரகங்கள் சேவை செய்ய - மூலஸ்தானத்தில் யானை மீது அமர்ந்த திருக்கோலத்தில் திகழ்கின்றார் - ஸ்ரீஐயனார்.




ஸ்ரீ விநாயகரும் ஸ்ரீமுருகவேளும் சந்நிதிகளில் அருள்கின்றனர்.

ஸ்ரீ விநாயகர் சந்நிதியில் மூஷிகத்திற்குப் பதிலாக நந்தி வாகனம். 

தை மாதத்தில் பெருந்தேர் திருவிழா காண்டருளும் - ஐயனார் ஸ்வாமியை தரிசனம் செய்து வலம் வந்தபின் - ஸ்ரீ வீரமாகாளி தரிசனம்.

தீய மந்திரவாதி ஒருவனை அழிப்பதற்காக ஸ்ரீ வீரமாகாளி இந்த தலத்தில் எழுந்தருளியதாக ஸ்தல வரலாறு கூறுகின்றது.

இங்கும் அன்னைக்கு அருகில் ஸ்ரீ ஐயனார் குடி கொண்டுள்ளார்.

ஏன்!?..

அன்னையை சாந்தப்படுத்துதற்காக!..

அது மட்டுமன்று..

ஸ்ரீ முனீஸ்வரனும் அருகில் எழுந்தருளியிருக்கின்றார்..

சகல உயிர்களும் வேண்டிக் கொண்டதன் பேரில் - அன்னை தன்னுரு கரந்து அருள்கின்றனள்..

எப்படி!..

அம்பாள் இத்தலத்தில் அருவமாக விளங்குகின்றாள்..

அவளுக்கு இங்கே சந்நிதி கூட கிடையாது. 

வேப்ப மரத்து நிழலில் - திருவாசி விளங்க - நடுநாயகமாகத் திகழ்வது 

ஸ்ரீ வீரமாகாளி அம்பிகையின் திரிசூலம் மட்டுமே!..

அவளைத் தேடி - இங்கே வருவோரின், 

தீராத வினைகள் எல்லாம் தீ பட்ட மெழுகாகத் தீர்கின்றன..
கஷ்டங்களும் கவலைகளும் தூசி எனத் தொலைகின்றன..

நல்லவரைச் சூழ்ந்திருக்கும் அதர்மம் அழிகின்றது..
தவித்துத் தடுமாறும் - தர்மம் தழைத்து எழுகின்றது.

அது ஒன்று போதாதா!?...

அல்லலுற்றோர் - ஆயிரம் ஆயிரமாகத் தேடி வருவதற்கு!..

அன்னையின் திரிசூலத்திற்கு மேலாக தென்னங்கூரை தான்!..

திருக்கோயிலின் வெளிப்புறம்
வெயிலும் மழையும் அவளுக்கு விருப்பமாகி விட - 
தென்றலே அவளுக்கு சாமரம் ஆனது!..

தெற்கு முகமாக அருளும் அம்பிகைக்கு கோப்பரசு எனும் மெய்க்காவலன். 

அம்பிகையின் உடனிருந்து அருளும் ஸ்ரீ வீரமுனீஸ்வர ஸ்வாமிக்கும் ஓலைக் கூரையே விதானம்!..



ஞாயிறு, செவ்வாய், வெள்ளி - என மூன்று தினங்களிலும் ஆயிரமாக பக்தர்கள் திரளுகின்றனர்.

அன்னைக்கு பெருந்திருவிழா வைகாசியில்!..

சித்திரை கடைசி வெள்ளி அன்று காப்பு கட்டுதல்.

வைகாசி முதல் வெள்ளி அன்று திருத்தேர்.

மறுநாள் சனிக்கிழமை நள்ளிரவு பில்லி சோறு படையல். இது அம்பிகையுடன் இருக்கும் உக்ர தேவதைகளுக்கானது.

அடுத்த நாள் ஞாயிறு அன்று பால்குட திருவிழா!..

அன்னை வீரமாகாளி என்னை ஆட்கொண்ட தாய்!..

அவளுடைய பணி செய்தற்கு என  - அவளே என்னை ஆளாக்கினள்..

அன்னையைக் கண்குளிரத் தரிசித்தபின் அடுத்த தலம் - புன்னை நல்லூர்!..

புன்னை நல்லூர்
புன்னை நல்லூர் ஸ்ரீ முத்து மாரியைப் பற்றி வாழ்நாள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கலாம்!..

அவளைப் பற்றிப் பேசப் பேச நமக்கு ஆயுளும் ஆரோக்கியமும் கூடும்!..

மகமாயி - துர்கை - காளி - என மூன்று அம்சங்களும் திருக்கோயிலில் விளங்குகின்றன.

மேற்கு முகமாக ஸ்ரீ பேச்சியம்மன். ஸ்ரீ லாட சன்னாசி, ஸ்ரீ மதுரை வீரன், 
ஸ்ரீ காத்தவராயன் எனும் பரிவாரங்கள் சூழ அன்னை திகழ்கின்றாள். 


ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ வேலவன் சந்நிதிகளுடன் -

ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ரன்  - தாமும் சந்நிதி கொண்டு அருள்கின்றார்.



மராட்டிய மன்னர் துளஜா அவர்களின் காலத்தில் புன்னை வனத்தில் வெளிப்பட்டவள் - மகமாயி.

கோடையில் அவளுக்கு முகமெல்லாம் வியர்க்கின்றது.

புற்றுரு ஆனதால் - அவளுக்கு நித்ய அபிஷேகம் ஏதும் கிடையாது. 

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு மட்டுமே. 


புற்றுருவாக இருந்த அன்னையை ஸ்ரீசக்ரத்துடன் பிரதிஷ்டை செய்தவர்
ஸ்ரீ சதாசிவப்ரம்மேந்திர ஸ்வாமிகள்..  

மக்கள் பிணி தீர்க்கும் - பைரவ உபாசகரான பாடகச்சேரி மகான் ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் பலகாலம் இருந்திருக்கின்றார்கள்..

ஆடி கடைசி வெள்ளியில் கொடி ஏற்றம். 

அதன்பின் ஆவணியில் முத்துப்பல்லக்கு வெகு பிரசித்தம்.

புரட்டாசி வரை ஞாயிறு தோறும் விசேஷசங்கள் நடந்து தெப்போற்சவத்துடன் விடையாற்றி.

கிழக்கு நோக்கிய திருக்கோயிலின் சற்று பின்புறம்  -

ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயில்!.. 

ஸ்ரீ ராம லக்ஷ்மண சீதா சுக்ரீவன் சாளக்ராம திருமேனி. கண்கொள்ளாக் காட்சி. அபய ஹஸ்த ஆஞ்சநேயரின் அழகிய தரிசனம். 

மாரியம்மன் திருக்கோயிலின் தென்புறம் திருக்குளம். 

திருக்குளக் கரையில் - 

ஸ்ரீ கல்யாண சுந்தரி சமேத ஸ்ரீ கையிலாய நாதர் திருக்கோயில்!..

ஸ்ரீ கயிலாய நாதர் திருக்கோயில்



அம்மையப்பனை ஆனந்தமாக தரிசனம் செய்த பின் - 
இரவு ஏழு மணியளவில் நலமுடன் வீடு திரும்பினோம்..

எனைச் சூழ்ந்திருக்கும் அதர்மம் அகல வேண்டும்
என வேண்டிக் கொண்டாலும்
எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் 
என்பதே பிரார்த்தனையாக இருந்தது!.

வாழ்க நலம்!..
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்!..
* * *

17 கருத்துகள்:

  1. அழகான படங்களுடன் விளக்கமான பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தஞ்சை வந்தால் நிறைய ஆலய தரிசங்கள் போல் தெரிகிறது. ஓரிரு முறை புன்னை நல்லூர் சென்றிருக்கிறோம். வரலாறு ஏதும் தெரியாது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..நன்றி.

      நீக்கு
  3. தஞ்சை அருகே உள்ள வீரமாகாளியம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்களின் தரிசனம் பற்றி சிறப்பாகவே சொல்லி இருந்தீர்கள். அருகில் இருந்தும் இரண்டு கோயில்களுக்குமே நான் சென்றதில்லை. ஒவ்வொரு முறையும் நான் புறப்படும் போதெல்லாம் பயணம் தள்ளிப் போகும். உங்கள் பதிவிலுள்ள தகவல்கள் எனக்கு உபயோகமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு நன்றி..
      தளத்தில் அளிக்கும் தகவல்கள் தங்களுக்கு உபயோகமாக இருப்பது கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. சில ஆண்டுகளுக்கு முன் வீரமா காளி அம்மன் கோயிலுக்கு சென்று வந்த நினைவுகள் நெஞ்சில் வலம் வருகின்றன ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  6. படங்களும் கோவில் குறித்த செய்தியும் அருமை ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் - மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அழகிய படங்களுடன் நல்ல விளக்கவுரை அருமை நண்பரே,,,,

    பதிலளிநீக்கு
  8. வீரமாகாளியம்மன் கோயிலுக்கு இதுவரை செல்லவில்லை. செல்லும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். தங்களது பதிவு என் ஆவலை மேம்படுத்திவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      நிச்சயம் தங்கள் ஆவல் நிறைவேறும்.
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. வணக்கம் ஐயா!

    பதிவும் படங்களும் பக்திப் பரவசப்படுத்திவிட்டது!
    மிக அருமை! இரண்டாவது பதிவு கண்டு முதலாவதைப்
    படிக்கவில்லையே என ஓடி வந்து படித்தேன்.. அற்புதம் ஐயா!
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..