நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 20, 2024

நினைவெல்லாம் 6

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 5
புதன் கிழமை


தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் புகுமுக  வகுப்பில் பயின்ற போது தமிழ் உரை நடை வகுப்பை திரு. விவேகானந்தன் அவர்களும் துணை நூலினை திரு. அருளிளங்குமரன் அவர்களும் நடத்தினர்.. 

இருவருமே முதன்மைத் தமிழாசிரியர்கள்..

அப்போதைய (1972) அரசியல்  சூழலில்  புரட்சி எனும் சூறாவளி சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது..

திருச்சி விடுதியில் மாணவர்கள் மிகக் கடுமையாக அடித்து நொறுக்கப்பட்டது அப்போது தான்..

தமிழ் நாட்டில
எங்காவது ஆ ஊ என்றால் இங்கே தஞ்சாவூரில் கல்லூரிக்கு விடுமுறை என்றாகி விடும்..

இருப்பினும் கிடைக்கின்ற நாட்களில் நடத்தப்பட்ட வகுப்புகளில் மனதில் பதிந்தவை இன்றைய பதிவில்..


மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே என்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை..
(மனையறம். 73-80)
**
தனித்திருந்த பொழுதில் கண்ணகியைக் கோவலன் வர்ணித்த விதத்தை யார் அறிந்திருப்பர்!?.. 

அமிழ்தினும் இனிதான அந்தப் பொழுது - 
 
இளங்கோவடிகளின் தீந்தமிழ் திறத்தால் இதோ நமது கண்களின் முன்னே!..

அருவியைப் போலும் அமுதத் தமிழ்..

துறவு பூண்ட ஒருவரிடம் இருந்து இப்படியான அழகு எனில் அதுதான் - தமிழ்.


பெண்ணாகி வந்த மாயப் பிசாசு என்றும் ஒரு வர்ணனை இருக்கையில் இளங்கோவடிகள
 மாசறு பொன்னே.. வலம்புரி முத்தே என்று புகழ்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

அது இருக்கட்டும்..

வலம்புரி முத்தே எனபது என்ன நியாயம்? வலம்புரி என்றால் சங்கு தானே?!..

இதற்குத் தான் நுனிப்புல் மேயக் கூடாது - என்பது..

வலம்புரி முத்தே.. எனபதை வலம்புரியே!..  முத்தே!.. என்று பொருள் கொள்ள வேண்டும்..

(யாரும் குறுக்குக் கேள்வி கேட்கும் முன் - தெரிந்ததைச் சொல்லியாயிற்று)


சிலப்பதிகாரத்தில்
மாசறு பொன்னே.. எனும் இப்பாடல் பகுதியைப் படித்த பின்னர் தான் இப்பாடலை அப்படியும் இப்படியும் உரு மாற்றம் செய்து பூம்புகார் எனும் திரைப்படத்தில் வைத்திருந்தது தெரியவந்தது..

வாழ்க சிலம்பு..


அப்போதைய பாடத் திட்டத்தின்படி - அன்று நடத்தப்பட்ட வகுப்புகளில் மனதில் பதிந்த -
திருமூலரின் திருமந்திரப் பாடல்கள்..

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கது ஆமே..

படமாடுங் கோயிலில் உறைகின்ற இறைவனுக்கு  ஒன்றை அளித்தால், அது நடமாடும் கோயிலான எளிய மனிதருக்கு  -  வறியவர்க்கு - சென்று சேராது. நடமாடுங் கோயிலான ஏழை எளியவருக்கு அளித்தால், அது படமாடும் கோயில் இறைவனையே சென்று சேரும்..

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை எனும் உயரிய கருத்து  அப்பாடலில்..


உள்ளங்கை நெல்லிக்கனி எனப் பொருள் விளங்கக் கூடிய இன்னொரு இன்தமிழ்ப் பாடல் :

உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே.
-: திருமூலர் ;-
**
நினைவெல்லாம் தொடரும்

அமுதே உந்தன் புகழ் வாழ்க

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***