நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 28, 2025

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 16
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
பொது


தனனா தனத்த தனனா தனத்த  
தனனா தனத்த ... தனதான

கருவாய் வயிற்றி லுருவா யுதித்து முருகாய் மனக்க ... வலையோடே

கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த தலைபோய் வெளுத்து ... மரியாதே

இருபோது மற்றை யொருபோது மிட்ட கனல்மூழ்கி மிக்க ... புனல்மூழ்கி

இறவாத சுத்த மறையோர் துதிக்கு
மியல்போத கத்தை ... மொழிவாயே

அருமாத பத்தஅமரா பதிக்கு வழிமூடி விட்ட ... தனைமீள

அயிரா வதத்து விழியா யிரத்த
னுடனே பிடித்து ... முடியாதே

திருவான கற்ப தருநா டழித்து விபுதேசர் சுற்ற ... மவைகோலித்

திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த சிறைமீள விட்ட ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


தாயின் வயிற்றில் கருவாகி, உருவாகப் பிறந்து,
இளமைப் பருவம் அடைந்து, மனக் கவலையுடன்

படிக்க வேண்டிய கலை நூல்களை உண்மை அறிவின்றிப் படித்துப் பிதற்றி வாழ் நாளின் நடுவில் கறுத்திருந்த தலை மயிர் வெளுத்து,
வீணனாக இறந்து போகாமல், 

நாள் தோறும், காலை மாலை ஆகிய இரண்டு
வேளைகளிலும், மற்றுமுள்ள உச்சி வேளையிலும் (சிவ யோக நெறியால்)
வளர்த்த மூலாக்கினியில் முழுகுவதற்கும், (என்னுள் இருக்கும்) சிறந்த
மதி மண்டலச் சுத்த கங்கையில் (சிவயோக நிஷ்டையில்) முழுகுவதற்கும்,

சாகா வரம் பெற்ற (அகத்தியர் முதலான) முனிவர்கள்
போற்றுகின்ற  திருமந்திரத்தை எனக்கும் உபதேசித்து
அருள்வாயாக.. 

ஒளி மிகுந்த தேவர்களின் நகருக்குச் செல்லும் வழியை
 அடைத்து விட்டு, 

அந்தப் பொன்னுலகை மறுபடியும் தாக்கி,
ஐராவதம் என்ற வெள்ளை யானைக்குத் தலைவனான ஆயிரம் கண்களை உடைய இந்திரனை  பிடிக்க முயன்று, அங்ஙனம் பிடிக்க முடியாமல் போன காரணத்தால்,

செல்வம் நிறைந்த, கற்பக
விருட்சத்தைக் கொண்ட தேவர் உலகை தீயிட்டுப் பாழ் படுத்தி, 

தேவ சிரேஷ்டர்களை
அவர்களுடைய சுற்றத்தாருடன் வளைத்து ஒருங்கே பிடித்து,

வலிமையுடன் அசுரர்கள் கொண்டு போய் அடைத்த
சிறையினின்றும்  அவர்களை  விடுவித்து மீண்டும்
தேவலோகத்தில் குடிபுகச் செய்த பெருமாளே..
**
முருகா முருகா
முருகா முருகா

ஓம் 
சிவாய நம ஓம்
***

வியாழன், பிப்ரவரி 27, 2025

மூலிகை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 15 
வியாழக்கிழமை


பாரம்பரிய மருந்துக் கடைகளில் விற்கப்படும்  மூலிகைப் பொடிகள் எந்த எந்த நோய்க்கெல்லாம் பயன்படுகின்றன?..

நமது சரீரம் - பித்தம் வாதம் கபம் எனும் மூன்றினால் ஆனது..

அதாவது பித்தம் என்பது செரிமான மண்டலம்.. வாதம் என்பது நரம்பு மண்டலம் கபம் என்பது சுவாச மண்டலம்.. 

இவற்றில் ஏற்படும் பிரச்னைகளே நோய்கள்...

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று..

என்று - ஐயன் திருவள்ளுவரும் இதனைக் குறித்திருக்கின்றார்..

ஆதி வைத்ய முறையில் - 
ஒருவருக்கு நோய் என்றால் அவர் பிறந்தபோது இருந்த கோள் நிலைக் குறிப்புகளை ஆராய்ந்து - 
எந்த கிரகத்தினால் இக்குறை என்பதை உணர்ந்து அதற்கேற்ற சாந்தி மந்திரங்களுடன் தக்கதொரு மருந்தினைத் தயாரித்து வழங்கியிருக்கின்றனர்..

மகான்களின் நயன தீட்சை (பார்த்தல்) ஸ்பரிச தீட்சை (தொடுதல்) இவற்றினாலும் நோய் தீர்வது
சாத்தியமாகி இருக்கின்றது.. 

இந்நிலையில் அறுவைச் சிகிச்சைகளும் நடந்துள்ளன..

இதற்கான
சித்தர் பாடல்கள் இருந்தாலும் " வாளால் அறுத்துச் சுடினும் " எனும் திருப்பாசுரம் கூடுதல் சாட்சி..

பொதுவாக
மூலிகைகள் என்றாலே காடுகளிலும் ஆள் நடமாட்டம் இல்லாத வனாந்தரத்திலும் தான் கிடைப்பதாக நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

உண்மையில் அவை நம்மைச் சுற்றி தழைத்திருப்பவை... நமது அன்றாட 
உணவில் கலந்திருக்கின்ற பலவும் மருத்துவ குணங்களை உடைய மூலிகைப் பொருட்களே -  மிளகாயைத் தவிர்த்து..

தக்கபடி எடுத்துரைக்க ஆள் இன்றி தடுமாறிக் கிடக்கின்றனர் பலரும்..

இதைப் பற்றி வேறொரு பதிவில் பேசுவோம்..

நாளாவட்டத்தில்  உத்தமர்களின் வருகை குறைவினால் ஏதேதோ குழப்பங்கள்..




அவை ஒரு புறமிருக்க
உணவே மருந்து என்றிருந்தாலும்
நமது மருந்துகள் சூரணம் தைலம் கஷாயம்  இளகியம்   என்ற நிலைகள்..

சூரணம் என்பது பொடி ..
தைலம் என்பது எண்ணெய்..
கஷாயம்  என்பது அருந்தும் நீர்.. இளகியம் என்பது பாகு, (திடப்பாகு)..

பாகு என்பது  விநாயகப் பெருமானுக்கு ஔவையார் சமர்ப்பித்த ஒன்றாகும்..

தேனுக்கு அடுத்த நிலையில் சற்று இறுக்கமாக இருப்பது..

பாகு - சாற்றில் இருந்து காய்ச்சி எடுக்கப்படுவது...

சாறு என்றால்?..

போங்கப்பா...
 மேல் விளக்கங்கள் தமிழ் வழி படித்து அறிந்து கொள்ளவும்..

அந்தக் கால சூரணம் தனிப்பட்ட நோயாளிக்கான மந்திர உச்சாடனங்களுடன் கூடியது..  

நோயாளிக்கான மூலிகையைப் பறிக்கும் முன்பாக வைத்தியர் தனது பாதுகாப்பிற்காக நியம விரத பிரார்த்தனைகளுடன் காப்பு கட்டிக் கொள்வார்... அதன்பின் ஈசன் எம்பெருமானை வைத்தீஸ்வரன் தையல்நாயகியாக வணங்கி உத்தரவு பெற்று,
அந்த மூலிகையின் தேவதைக்கு தூப தீபம் சமர்ப்பித்து - சாந்தி மந்திரங்களுடன் வழிபட்டு மூலிகையைப் பறித்தெடுப்பார்...

பறித்தெடுத்த மூலிகையை முறையான அளவுகளின் அடிப்படையில் மருந்தாக மாற்றுவர்.. 

நோய் மற்றும் மருந்தின் தன்மையைப் பொறுத்து கல் உரலிலோ மர உரலிலோ மருந்து இடிக்கப்படும்..

உதாரணத்திற்கு
மூலிகை இலையின் சாறும் வேண்டும் எனில் கல்லுரல்.. உலர் பொருளாக வேண்டும் எனில் மர உரல்..

இதனிடையில் பல்வேறு நிலைகளில் ரகசியங்கள் கடைபிடிக்கப்படும்..

உதாரணமாக 
இரு குரங்கின் கை - என்பது ஒரு மூலிகையின் குறிப்புப் பெயர்..  அது என்ன என்று தெரியுமா?..

ரகசியங்கள் மந்திர உச்சாடனங்கள் எல்லாம் இப்போது இருக்கின்றனவா என்று தெரியவில்லை..

ஏனெனில், மாற்று சமயத்தினரும் தொழில் முறையாக நமது பாரம்பரிய மருத்துவத்திற்குள் வந்திருக்கின்றனர்..

பாரம்பரிய என்பது பரம்பரை என்பதன் அடைவுச் சொல்.. பரம்பரை என்பது பரன்  பரை எனும் சொற்களின் சேர்க்கை.. 
பரன்  - தற்பரன் எனப்படும் இறைவன்..  பரை - தற்பரை எனப்படும் அம்பிகை.. 

மாற்று சமயத்தில்  தற்பரையாகிய அம்பிகையின் தத்துவம் கிடையாது... 

அவர்களுக்கு 
அம்பிகையின் தத்துவம் கிடையாது எனும் போது 
வைத்தீஸ்வரன் தையல் நாயகி வழிபாடு பிரார்த்தனை எங்ஙனம்?..

இதிலிருந்து மேல் விவரங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளவும்...

நவீன அறிவியல் காலத்தில் சூரணம் என்பது மூலிகைப் பொடி  என்றே குறிக்கப்படுகின்றது!..

நாமாக வீட்டில் செய்து பயன்படுத்தக்  கூடிய ஒரு சிலவற்றைத் தவிர வேறெதையும் தக்க மருத்துவர் ஆலோசனை இல்லாமல் செய்யக் கூடாது.. பயன்படுத்தக்  கூடாது...

பதிவில் -
சற்றே வெயிலில் உலர்த்தி விட்டு வீட்டில் அரைத்துக் கொள்கின்ற அளவில்  எளிதான சில மூலிகைப் பொடி வகைகள்.

அருகம்புல் சூர்ணம் / பொடி :
 கொழுப்பைக் குறைக்கும்.. ரத்த சுத்திக்கு சிறந்தது..

கடுக்காய் பொடி:
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வப் பொடி:
அதிக கொழுப்பைக் குறைக்கும்..

நாவற் பொடி:
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரைப் பொடி:
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளைப் பொடி:
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வறட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசிப் பொடி:
மூக்கடைப்பு, சுவாசக் கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆவரம் பூ பொடி:
நீரிழிவுக்கு நல்லது., 

திப்பிலிப் பொடி:
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தயப் பொடி:
வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

லவங்கப்பட்டைப் பொடி:
கொழுப்பைக் குறைக்கும். இரத்த ஓட்டத்தை சீராக்கும்..

கறிவேப்பிலைப் பொடி:
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரும்புச் சத்து உண்டு.

வேப்பிலைப் பொடி:
சரும பராமரிப்பு சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

அதிமதுரப் பொடி:
தொண்டைம் கமறல், வறட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

கோரைக்கிழங்குப் பொடி:
தாது புஷ்டி, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

பூலாங்கிழங்கு பொடி:
தினசரி பூசிக் குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

கஸ்தூரி மஞ்சள் பொடி:
தினசரி பூசி குளித்து வர மேனி பொலிவு பெறும்.

வசம்பு பொடி:
வாந்தி, குமட்டல் நீங்கும்.

கருவேலம்பட்டை பொடி :
பல் கறை, பல் சொத்தை, பூச்சிப் பல், பல் வலி குணமாகும். தினசரி பல் துலக்குவதற்கு ஏற்றது..

பொன்னாங்கண்ணித் தைலம் :
உடல் சூடு, கண்நோய்க்கு சிறந்தது.

கரிசலாங்கண்ணித் தைலம் :
உடல் சூடு, கண்நோய்க்கு சிறந்தது.

மருதாணிச் சாந்து:
உள்ளங்கை , உள்ளங்கால்களில் இட்டு வர பித்தம், கபம் குணமாகும்..


தற்கால ஊடகங்களில்  யாராவது  எழுதியதைப் படித்து விட்டு அதைக் கொண்டு கடினமான மூலிகை மருந்து  எதையாவது 
வீட்டிற்குள் தயாரித்து வம்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.. 

தகுதி பெற்ற சித்த மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்ததாகும்..

தஞ்சை மூலிகைப் பண்ணையின் சிகிச்சையில் நான் இருப்பதால் இப்படியான சிந்தனைகள் எனக்குள்  சாத்தியமாகின்றன..

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு...

வாழ்க நலம்..

ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், பிப்ரவரி 26, 2025

சிவ சிவ

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மகா சிவராத்திரி

மாசி 14 
புதன்கிழமை


திருநாகேஸ்வரம்

இறைவன் 
ஸ்ரீ நாகேஸ்வரர்
ஸ்ரீ சண்பகாரண்யேஸ்வரர்

அம்பிகை
ஸ்ரீ பிறையணி வாணுதலாள்
ஸ்ரீ குன்றமுலை நாயகியாள்

பாம்புகளின் அரசனாகிய நாகராஜன் தனது சாபம் நீங்குவதற்காக
சிவராத்திரியின் முதற்காலத்தில் திருக்குடந்தை 
ஸ்ரீ நாகேஸ்வரன் கோயிலில் வழிபட்ட பின்னர்
 இரண்டாம் காலத்தில் வழிபட்ட திருத்தலம்..

மூன்றாம் காலத்தில்
திருப்பாம்புரம் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் ஆலயத்திலும்
நான்காம் காலத்தில் 
திருநாகை ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் ஆலயத்திலும் வழிபட்டதாக ஐதீகம்..
**

திருநாவுக்கரசர் அருளிச்செய்த திருப்பதிகம்

நான்காம் திருமுறை
அறுபத்தாறாம் திருப்பதிகம்


கச்சைசேர் அரவர் போலுங் 
  கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும் 
  பேரரு ளாளர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி 
  இரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க்கு இனியர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  1

வேடுறு வேட ராகி 
  விசயனோ டெய்தார் போலுங்
காடுறு பதியர் போலுங் 
  கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந் 
  தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  2

கற்றுணை வில்ல தாகக் 
  கடியரண் செற்றார் போலும்
பொற்றுணைப் பாதர் போலும் 
  புலியதள் உடையார் போலுஞ்
சொற்றுணை மாலை கொண்டு 
  தொழுதெழு வார்கட் கெல்லாம்
நற்றுணை ஆவர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  3

கொம்பனாள் பாகர் போலுங் 
  கொடியுடை விடையர் போலுஞ்
செம்பொனார் உருவர் போலுந் 
  திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரான் எம்மை யாளும் 
  இறைவனே என்று தம்மை
நம்புவார்க் கன்பர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  4 


கடகரி உரியர் போலுங் 
  கனல்மழு வாளர் போலும்
படவர அரையர் போலும் 
  பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவம் ஆர்ப்பக் 
  கூளிகள் பாட நாளும்
நடநவில் அடிகள் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  5  

பிறையுறு சடையர் போலும் 
  பெண்ணொரு பாகர் போலும்
மறையுறு மொழியர் போலும் 
  மால்மறை யவன் தனோடு
முறைமுறை அமரர் கூடி 
  முடிகளால் வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  6  

வஞ்சகர்க்கு அரியர் போலும் 
  மருவினோர்க்கு எளியர் போலுங்
குஞ்சரத்து உரியர் போலுங் 
  கூற்றினைக் குமைப்பர் போலும்
விஞ்சையர் இரிய அன்று 
  வேலைவாய் வந்தெ ழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  7 


போகமார் மோடி கொங்கை 
  புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும் 
  வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும் 
  பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  8  

கொக்கரை தாளம் வீணை 
  பாணிசெய் குழகர் போலும்
அக்கரை அணிவர் போலும் 
  ஐந்தலை அரவர் போலும்
வக்கரை அமர்வர் போலும் 
  மாதரை மையல் செய்யும்
நக்கரை உருவர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.  9  

வின்மையாற் புரங்கள் மூன்றும் 
  வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையால் அமரர் தங்கள் 
  தலைவர்க்குந் தலைவர் போலும்
வன்மையால் மலையெ டுத்தான் 
  வலியினைத் தொலைவித் தாங்கே
நன்மையால் அளிப்பர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.. 10
திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், பிப்ரவரி 25, 2025

சாய்க்காடு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 13
செவ்வாய்க்கிழமை

நாளை சிவராத்திரி


திரு சாய்க்காடு
ஐராவதம் வணங்கிய தலம்

பூம்புகாருக்கு அருகில
 உள்ளது.

இறைவன்
ஸ்ரீ சாயாவனேஸ்வரர்
அம்பிகை
குயிலின் நன்மொழியாள்

திருநாவுக்கரசர் அருளிச்செய்த
திருப்பதிகம்

எம்பெருமானின் பத்து அருஞ்செயல்கள் இப்பதிகத்தில் கூறப்பட்டுள்ளன..

நான்காம் திருமுறை
அறுபத்தைந்தாம் திருப்பதிகம்

மார்க்கண்டேயருக்கு அருளியது

தோடுலா மலர்கள் தூவித் 
  தொழுதெழு மார்க்கண் டேயன்
வீடுநாள் அணுகிற் றென்று 
  மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செலலு மஞ்சிப் 
  பாதமே சரண மென்னச்
சாடினார் காலன் மாளச் 
  சாய்க்காடு மேவி னாரே.  1  

ஆலகால நஞ்சினை அருந்தியது

வடங்கெழு மலைமத் தாக 
  வானவர் அசுர ரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங் 
  கண்டுபல் தேவ ரஞ்சி
அடைந்துநும் சரண மென்ன 
  அருள்பெரி துடைய ராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் 
  சாய்க்காடு மேவி னாரே.  2  

சிலந்திக்கு அருளியது

அரணிலா வெளிய நாவல் 
  அருள்நிழ லாக ஈசன்
வரணிய லாகித் தன்வாய் 
  நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை 
  முடியுடை மன்ன னாக்கித்
தரணிதான் ஆள வைத்தார் 
  சாய்க்காடு மேவி னாரே.  3  

பார்த்தனுக்கு அருளியது

அரும்பெருஞ் சிலைக்கை வேட 
  னாய்விறற் பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி 
  ஒள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரி துடைய னாக்கி 
  வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி ஈந்தார் 
  சாய்க்காடு மேவி னாரே.  4 


தக்கன் வேள்வி தகர்த்தது

இந்திரன் பிரமன் அங்கி 
  எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி 
  வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திர மறியாத் தக்கன் 
  வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ் 
  சாய்க்காடு மேவி னாரே.  5  

சண்டேச பதம் அருளியது

ஆமலி பாலும் நெய்யும் 
  ஆட்டிஅர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் 
  பொறாததன் தாதை தாளைக்
கூர்மழு வொன்றால் ஓச்சக் 
  குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார் 
  சாய்க்காடு மேவி னாரே.  6  

பகீரதனுக்கு அருளியது

மையறு மனத்த னாய 
  பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் லமர ரேத்த 
  ஆயிர முகம தாகி
வையகம் நெளியப் பாய்வான் 
  வந்திழி கங்கை என்னுந்
தையலைச் சடையில் ஏற்றார் 
  சாய்க்காடு மேவி னாரே.  7  

கண்ணப்பர்க்கு அருளியது

குவப்பெருந் தடக்கை வேடன் 
  கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந்
துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் 
  தூயவாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர 
  ஒருகணை யிடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார் 
  சாய்க்காடு மேவி னாரே.  8 

ஸ்ரீ வில்லேந்திய வேலவன்
சாய்க்காடு

ஸ்ரீ சக்ராயுதம் ஈந்தது

நக்குலா மலர்பன் னூறு 
  கொண்டுநன் ஞானத் தோடு
மிக்கபூ சனைகள் செய்வான் 
  மென்மல ரொன்று காணா
தொக்குமென் மலர்க்கண் ணென்றங் 
  கொருகணை யிடந்து மப்பச்
சக்கரங் கொடுப்பர் போலுஞ் 
  சாய்க்காடு மேவி னாரே.  9  

தசமுகனுக்கு அருளியது

புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து 
  மாயகொண் டரக்க னோடிச்
சிவன்திரு மலையைப் பேர்க்கத் 
  திருமலர்க் குழலி யஞ்ச
வியன்பெற எய்தி வீழ 
  விரல்சிறி தூன்றி மீண்டே
சயம்பெற நாமம் ஈந்தார் 
  சாய்க்காடு மேவி னாரே.. 10
திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

திங்கள், பிப்ரவரி 24, 2025

மசாலா போண்டா

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 12
திங்கட்கிழமை

இன்று
 மசாலா போண்டா


தேவையானவை

உருளைக் கிழங்கு  500 gr
பெரிய வெங்காயம் 2
கடலை மாவு  250 gr
அரிசி மாவு  2 tbl sp
பெருங்காயத்தூள் கால் tbl sp
மிளகுத்தூள் ஒரு tbl sp
பட்டைத்தூள் ஒரு tbl sp
 கடலெண்ணெய் தேவையான அளவு
கல்உப்பு தேவைக்கு

செய்முறை:  

கிழங்கை நன்கு வேகவிட்டு தோலை நீக்கி, நன்றாக மசிக்கவும்.. 

வெங்காயத்தை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்..

அரிசி மாவு, கடலை மாவைச் சேர்த்து மிதமாகக் கரைத்து தனியே வைத்துக் கொள்ளவும். 

வெங்காயம், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், பெருங்காயத் தூள், உப்பு  சேர்த்து இரும்பு வாணலியில் வதக்கி -

மசித்து வைத்திருக்கும்  கிழங்கையும் சேர்த்து நன்றாகப்  பிசைந்து மீண்டும் இளம் சூட்டில் வதக்கிக் கொள்ளவும்..

கலவை ஆறியதும் 
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கடலை மாவில் தோய்த்து - வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் -  உருண்டைகளைப் போட்டு சிவக்க விட்டு அரி கரண்டியால் அரித்து எடுக்கவும்..


ஒவ்வொன்றும்
50 கிராம் அளவுக்கு
 உருட்டி எடுத்தால் 12 அல்லது 13 போண்டாக்கள் கிடைக்கலாம்.. 

வெதுவெதுப்பான சூட்டில் சாப்பிடும் போது துணைக்கு
தேங்காய் சட்னி நல்லது..

இந்த அளவில்
சமையல் வாரம் 
நிறைவடைகின்றது.

நமது நலம் 
நமது சமையல்..
**

ஓம் 
சிவாய நம ஓம்
**

ஞாயிறு, பிப்ரவரி 23, 2025

பாதாம் பால்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 11
ஞாயிற்றுக்கிழமை

இன்று பாதாம் பால்


கறந்த பாலாக இருப்பின் நல்லது..


தேவையானவை :

பசும்பால் 750 ml
பாதாம் பருப்பு 150 gr
முந்திரிப் பருப்பு 50 gr
வறுக்கப்பட்ட நிலக்கடலை 50 gr
பனங்கற்கண்டு 150 gr
குங்குமப்பூ ஒரு சிட்டிகை
சுத்தமான மஞ்சள் தூள் சிறிது
ஏலக்காய் 3

செய்முறை

வறுபட்ட நிலக்கடலையின் தோலை நீக்கி  விடவும்..
பாதாம் பருப்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து தோலுரித்து பாதாம் பருப்பு  நிலக்கடலை
இரண்டையும் மிக்ஸியில் இட்டு பால் சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும். ஏலக்காயை இடித்து . முந்திரியை நெய்யில் வறுத்து  நொறுக்கிக் கொள்ளவும்.

அரைத்த பாதாம் பாலை - பாத்திரம் ஒன்றில் ஊற்றி அதனுடன் ஏலக்காய் தூள் பனங்கற்கண்டு,  குங்குமப்பூ, மஞ்சள் தூள் மீதியுள்ள பால் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து  சற்றே கொதிக்க விட்டு சுண்டக் காய்ச்சி -  நொறுக்கிய முந்திரியை அதில் தூவி  - அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.

நன்றாக ஆறியதும் 
இதனை  சில்லரில் சற்று நேரம் வைத்து
குளிரூட்டிய பின்   பரிமாறவும். .

இரசாயன வண்ணமாகிய கேசரி பவுடர் வேண்டாம்..


நான்கு பேருக்கானது..
மிக மிக ஆரோக்கியமான பாதாம் பால்..

வேண்டுமெனில் பாலின் அளவை சற்று அதிகரித்துக் கொள்ளலாம்..

இது மிகவும் திடமானது.. 

வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும்  அருந்துவது நல்லது..

நமது நலம்
நமது கையில்..

ஓம் 
சிவாய நம ஓம்
**

சனி, பிப்ரவரி 22, 2025

உளுந்து வடை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 10
சனிக்கிழமை

இன்று
 உளுத்தம் பருப்பு வடை

தேவையானவை :

உளுத்தம் பருப்பு 200 gr
பாசிப் பருப்பு 100 gr
பச்சரிசி 50 gr
பெரிய வெங்காயம் ஒன்று
பூண்டு 5 பல்
தேங்காய் ஒருமூடி
மிளகு 9
சீரகம் சிறிது
கறிவேப்பிலை 5 இணுக்கு
கடலெண்ணெய் தேவைக்கு
கல்உப்பு தேவைக்கு

செய்முறை:

உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு, பச்சரிசி மூன்றையும் சுத்தம் செய்து தனித் தனியே ஊற வைக்கவும்.

அனைத்தும் நன்றாக ஊறிய பிறகு  (தோல் நீக்காமல்)
வடிகட்டி எடுத்து மிளகு சீரகம் உப்பு சேர்த்து ) கொஞ்சமாக நீர் விட்டு,
வடைக்கு அரைப்பது போல - மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்..

தேங்காயைத் துருவிக் கொண்டு  வெங்காயம் பூண்டு  சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்..

கறிவேப்பிலையையும் உருவிக் கொள்ளவும்..

அரைத்த விழுதுடன்  தேங்காய் துருவல் வெங்காயம் பூண்டு
சேர்த்து கறிவேப்பிலை இலைகளைக் கிள்ளிப் போட்டு நன்கு பிசைந்து  உருண்டைகளாக உருட்டி -  உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.. 

உளுத்தம் பருப்பு வடை தயார். 

தோல் நீக்கப்படாத பயறும் உளுந்தும் உடலுக்கு மிகவும் நல்லவை.. 

தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் நிறைந்த உணவுகள் உளுந்தும் பயறும் என்பதை நினைவில்  கொள்வோம்..

சனி தோஷம் நீக்குவது உளுந்து.. ஸ்ரீ சனைச்சர ப்ரீதிக்கு உகந்தது உளுந்து.. இதனுடன் பாசிப்பருப்பும் சேர்ந்திருப்பது சிறப்பு..

நமது நலம் 
நமது கையில்..
**
ஓம் 
சிவாய நம ஓம்
**

வெள்ளி, பிப்ரவரி 21, 2025

நெய் அப்பம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 9
வெள்ளிக்கிழமை

இன்று
நெய் அப்பம்


ஸ்ரீ விநாயகருக்கான நிவேதனமாக திருப்புகழில் சொல்லப்படுவது..

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு செய்முறைகள் இந்த அப்பத்திற்கு..

தேவையானவை

பச்சரிசி மாவு ஒரு பங்கு
பழுப்புச் சர்க்கரை முக்கால் பங்கு 
கோதுமை மாவு  அரை பங்கு
ரவா கால் பங்கு
நெய் 2 Tbsp

எண்ணெய்  தேவைக்கு 
(உப்பு உங்கள் விருப்பம் )

செய்முறை

பச்சரிசியை மட்டும் நீரில் அலசி ஐந்து நிமிடம் ஊற வைத்து வெயிலில் உலர்த்தி மாவாக அரைத்துக் கொள்ளவும்..

பச்சரிசி மாவு, கோதுமை மாவு, ரவா, சர்க்கரை, நெய் - 
அனைத்தையும்  
ஒன்றாகக் கலந்து வெதுவெதுப்பான நீரில் தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்..

வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் சற்று  அகலமான கரண்டியால் மாவை எடுத்து சூடான எண்ணெயில் கவனத்துடன்  ஊற்றவும். தொடர்ந்து மாவு ஊற்றுவதை  நிதானமாகச் செய்யவும்..

ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு - சொட சொடப்பு அடங்கியதும்
எடுக்கவும்..

குறிப்பு

பச்சரிசியை நாமே நம் வீட்டில் 
சுத்தம் செய்து -
மாவாக்கிக் கொள்வது சாலச்  சிறந்தது..

மாவு  கரைத்ததும் பத்து நிமிடங்களில் செய்து விடவும்.. மாவு புளித்து விடக் கூடாது.. 

நெய் அப்பம் - மங்கல மரபு..  செவ்வாய்
வெள்ளிக் கிழமைகளில் நிவேதனத்துக்கு ஏற்றது..

சில சமுதாய மரபில் கோயில்களில் நெய் அப்பம் எண்ணிக்கை கணக்கில் நேர்ந்து கொள்ளப்படுகின்றது..

நமது நலம்
நமது கையில்..
**
ஓம் 
சிவாய நம ஓம்
**

வியாழன், பிப்ரவரி 20, 2025

கதம்ப ரசம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 8 
வியாழக்கிழமை

இன்று
கதம்ப ரசம் 
(வெஜ் சூப்)

வேகவைத்த 
துவரம் பருப்பு 3 Tbsp
உருளைக் கிழங்கு ஒன்று
கேரட் ஒன்று
குடை மிளகாய் ஒன்று
முட்டைக்கோஸ் தளிர் இலைகள் 2
வெங்காயக் குருத்து ஒன்று
பெரிய வெங்காயம் ஒன்று
தக்காளி ஒன்று
பூண்டு 3 பல்
புதினா இலைகள் 3
மல்லித்தழை சிறிது
வெண்ணெய் அரை tesp
கல் உப்பு சிறிது

பாத்திரம் ஒன்றில்  கேரட்
குடை மிளகாய் பூண்டு
முட்டைக்கோஸ் இலை வெங்காயக் குருத்து தக்காளி
 வெங்காயம் இவைகளைப் பொடியாக நறுக்கி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். 

உருளைக்கிழங்கை நறுக்கிப் போட்டு வெந்ததும் கரண்டியால் ஓரளவுக்கு மசித்து குழைத்து விடவும்..

புதினா, மல்லித் தழை ஆகியவற்றைப்  பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.. 

எல்லாம் வெந்து கொதித்ததும் பருப்பைச் சேர்த்து உப்பு போட்டு நான்கு பேருக்கான  சுடு நீர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

மிளகுத் தூள் வெண்ணெய் சேர்த்து இறக்கி -
சற்று ஆறிய பின்,
அப்படியே அருந்துவதும் அல்லது வடிகட்டி அருந்துவதும் தங்களது விருப்பம்..

வாரத்தில் இருமுறை இப்படி அருந்தலாம்..
**
நமது சமையல்
நலந்தரும் சமையல்

நமது நலம்
நமது கையில்..

ஓம் 
சிவாய நம ஓம்
**

புதன், பிப்ரவரி 19, 2025

நாரத்தங்காய்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 7
 புதன் கிழமை

இன்று
நாரத்தை ஊறுகாய்


நமது பாரம்பரியம்..

அபிஷேக திரவியங்களுள் இதுவும் ஒன்று.. நாரத்தம் பழச் சாறு அபிஷேகத்தினால் ஜன்ம பாவங்கள் தீர்கின்றன...

நாரத்தம் பழத்தினால்
உடல் சூடு தணிந்து பித்தம் குறையும்..

உப்பில் இட்டு வைப்பதற்கு நாரத்தங்காய்கள் ஏற்றவை.. இது சற்று இனிப்புச் சுவை உடையதால் குறைவான அளவில் உப்பு போடுவதே சிறந்தது..


தேவையானவை :

நார்த்தங்காய் 10
வெந்தயம் 50 கி
கல் உப்பு தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் ஒரு tsp
மிளகாய் வற்றல் 7
பால் பெருங்காயம் சிறிது 

தாளிப்பதற்கு:
நல்லெண்ணெய்  தேவைக்கு
கடுகு ஒரு tsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு

செய்முறை :

பால் பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் உலர
வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.. 

நார்த்தங்காய்களை கழுவிக் கொள்ளவும்..  

தண்ணீரை தளதள என்று கொதிக்க வைத்து நார்த்தங்காய்கள் மூழ்கும் படிக்கு   ஊற்றி சில நிமிடங்கள் வைத்திருந்து ஆறியதும் எடுத்து வெயிலில் உலர வைக்கவும்..

வெந்நீர் ஊற்றப்பட்ட
நாரத்தங்காய்கள் முழுதாக வெந்திருக்காது.. அரை வேக்காட்டில் இருக்கும்.. இந்தக் காய்களை முழுதாக பக்குவப்படுத்துபவன் சூரியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. 

இந்த முறையில் செய்கின்ற போது காய்களின் உள்ளிருக்கும் சாறு வீணாவதில்லை..

மூன்று நாட்களுக்குப் பிறகு 
நார்த்தங்காய்கள் சற்றே சுருங்கி இருக்கும்..

இந்நிலையில்
காய்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மேலும் இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்...

இனி நாரத்தங்காய் ஊறுகாய் தான்!..

இருப்புச்சட்டி ஒன்றை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் விடாமல் தனித்தனியாக மிளகாய் மற்றும் வெந்தயத்தை சிவக்க வறுத்து -

வறுத்த மிளகாய் வற்றல் வெந்தயம் இவற்றை ஆறியதற்குப் பின் ஒன்றாக மிக்ஸியில்  அரைத்துத் தூளாக்கிக் கொள்ளவும்.

சுத்தமான ஜாடியில்
நார்த்தங்காய்களைப் போட்டு, அதன் மேல் மஞ்சள்தூள் மற்றும் அளவான கல் உப்பு சேர்த்து, வறுத்து அரைத்த மிளகாய்ப் பொடி பெருங்காயப் பொடியையும் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்..

ஒரு வாணலியில் தளர எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை  தாளித்து - 

கடுகு பொரிந்ததும்,   நாரத்தை துண்டுகளைச் சேர்த்துக் கிளறி அப்படியே இறக்கி வைக்கவும்.

சூடு ஆறிய பின்பு, சுத்தமான ஜாடிக்கு ஊறுகாயை மாற்றி விடவும்.

ஜாடி அல்லது பாட்டிலில் நிரப்பப்பட்ட நார்த்தங்காய்த் துண்டுகளைத் தினமும் இரண்டு முறை - மரக் கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.. 

ஊறுகாயில் உள்ள எண்ணெய், ஊறுகாய்க்கு மேலாக  நிற்க  வேண்டும் என்பது முக்கியம்..

இந்த வகைக்கு நாரத்தங்காய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானவை - கல் உப்பும் நல்லெண்ணெயும்..

இந்த ஊறுகாய் பயன்படுத்துவதைப்  பொறுத்து ஆறு மாதங்களுக்கு மேலாக வரும்..
நமது நலம்
நமது கையில்..

ஓம் நம சிவாய நம ஓம்
***