நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 22, 2024

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 9 
வெள்ளிக்கிழமை

திருத்தலம்
திருத்தணிகை

தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ... தனதான


வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்
பினுக்கெதி ராகும் ... விழிமாதர்

மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
சமத்திடை போய்வெந் ... துயர்மூழ்கிக்

கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
கருக்குழி தோறுங் ... கவிழாதே

கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
கழற்புக ழோதுங் ... கலைதாராய்

புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
சியைப்புணர் வாகம் ... புயவேளே

பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
பொருக்கெழ வானும் ... புகைமூளச்

சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
திறக்கம ராடுந் ... திறல்வேலா

திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்
திருத்தணி மேவும் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 

வினைத்திரள் பெருக்கிடும் 
தனங்களையும் 
மன்மதனின் கணைக்கு ஒப்பான
கண்களையும் உடைய 
கணிகையர் மீது வைத்த ஆசையால்

பலவான அவமானங்களில் புகுந்து 
விரும்பிய போகங்களில் மூழ்கி 

பெருங் கவலை அடைந்து மீண்டும் 
கருக்குழிக்குள் நான் விழுந்திடாதபடி

இசைப் புலவர்கள் பாடுகின்ற உனது 
திருவடிப் புகழை நானும் பாடும்படியான 
ஞானத்தைத் தந்தருள்வாயாக..
 
கொடிய வில்லேந்திய குறவர் தம் 
குலக் கொடியாகிய வள்ளி நாயகியை
தினைப் புனத்தில் தேடிச் சேர்ந்தவனே..
அழகிய புயங்களை உடையவனே..

கிரெளஞ்ச மலை இரு கூறுகளாகும் படியும்,
பெருங்கடல் வற்றிக் காய்ந்திடவும், 
வானத்தில் பெரும்புகை மண்டிடவும்

கனத்த சூரனின் - திரண்ட மார்பு பிளக்கும்படியாக
கோபங்கொண்டு போர் புரிந்த மாவீரனே 
வேலாயுதப் பெருமானே..

திருப்புகழ் பாட வேண்டும் என்ற 
விருப்பத்துடன் அடியார்கள் 
கூடுகின்ற திருத்தணிகையில் 
வீற்றிருக்கும் பெருமாளே..
**

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. முருகப்பெருமான் திருவடி சரணம்....

    பதிலளிநீக்கு
  2. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தெய்வீகமான படங்கள் யாவும் சிறப்பு.

    இன்றைய திருப்புகழ் பாடி பரவசமடைந்தேன். விளக்கமும் நன்று. முருகன் திருவருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைத்திட பக்தியுடன் பணிந்து வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வெள்ளி முருகன் திருப்புகழ்.

    அனைவருக்கும் நலன் வேண்டி திருத்தணிகை முருகனை வணங்கி நிற்போம்.

    பதிலளிநீக்கு
  5. திருத்தணி திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..