நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 16, 2024

கழனி

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 3 
சனிக்கிழமை


நீர் நிறைந்து வரப்புகளில் ததும்பிக் கொண்டிருக்கும் நிலப்பரப்பு பொதுவாக வயல்வெளி எனப்பட்டாலும் இதற்கு -
கழனி, கோட்டகம், கழி என்றெல்லாம் வேறு பெயர்களும் இருக்கின்றன..

நீர் நிறைந்து வரப்புகளில் ததும்பிக் கொண்டிருக்கும் பரப்பு கழனி எனப்படுவது..

நடவு காலத்தில் நடவுக்கு ஏற்ற வகையில் (எரு, உழவு இவற்றால்) செம்மைப் படுத்தப்பட்டு அளவான நீருடன் இருப்பது வயல்.. 

இப்படி நீரும் நிலமும் நிறைவளமாக  விளங்குகின்ற வண்டல் வனப்பு தான் வயல்வெளி..

கழனியைக் குறிக்கின்ற தேவாரத் திருப்பாடல்கள் சில இன்றைய பதிவில்..

தேடலில் துணை
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்..


இப்படியான வயல்வெளியை
அந்நாளில் எப்படியெல்லாம் கொண்டாடியிருக்கின்றனர் என்று நினைக்கும்போது இன்றைய மனம் சோர்வடைகின்றது..

கிராமத்தில் வளர்ந்த வன்.. மூன்றாண்டு காலம் வயல்வெளியின் ஊடாகத் தான் பள்ளிக்குச் செல்வதும் திரும்புவதும்..

அதெல்லாம் இனி வாராத நாட்கள்..

மழைக்கான
 இயற்கைச் சூழலை அதன் அறிகுறிகளுடன் கண் முன்னே நிறுத்துகின்றது இப்பாடல்.. 

ஏழாம் வகுப்பில் மனனம் இந்தப் பாடல்.. இருந்தாலும் தற்போது இணையத்தில் இருந்து..

ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி 
மலையாள மின்னல் ஈழ மின்னல் 
சூழ மின்னுதே
நேற்றும் இன்றுங் கொம்பு சுற்றிக்
காற்றடிக்குதே கேணி நீர்ப்படு 
சொறித் தவளை கூப்பிடுகுதே
சேற்று நண்டு சேற்றில் வளை 
ஏற்றடைக்குதே மழை தேடியொரு 
கோடி வானம்பாடி ஆடுதே..
-: முக்கூடற்பள்ளு :-


-: திருஞானசம்பந்தர் :-

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே..1/48/1

வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
முளையார் மதியஞ் சூடி என்று முப்போதும்
இளையா தேத்த இருந்தான் எந்தை ஊர் போலும்
விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே.. 2/61/8

கோட்டகக் கழனிக் கொள்ளம் பூதூர்
நாட்டகத்துறை நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்கு மாறருள் நம்பனே. 3/6/2


-: திருநாவுக்கரசர் :-

வேலைக் கடல் நஞ்சம் உண்டு வெள்ளேற் றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க்கு உறைவிடம் ஆவது வாரிகுன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெற் கழனி அருகணைந்த
சோலைத் திருவொற்றியூரை எப்போதுந் தொழுமின்களே.. 4/86/5

கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை
மலரவனுங் கூடிச் சென்றறிய  மாட்டார்
ஆரொருவர் அவர்தன்மை அறிவார் தேவர் 
அறிவோம் என்பார்க்கெல்லாம் அறியலாகாச்
சீரரவக் கழலானை நிழலார் சோலைத் 
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நீரரவத் தண்கழனி நீடூரானை நீதனேன் 
என்னேநான் நினையாவாறே... 6/11/8

வெண்டலையும் வெண்மழுவும் ஏந்தி னானை
விரிகோவணம் அசைத்த வெண்ணீற் றானைப்
புண்தலைய மால்யானை உரிபோர்த் தானைப்
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் தன்னை
எண்திசையும் எரியாட வல்லான் தன்னை
ஏகம்பம் மேயானை எம்மான் தன்னைக்
கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.. 6/22/8


-: சுந்தரர் :-

மேலை விதியே விதியின் பயனே
விரவார் புர மூன்றெரி செய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.. 7/41/5

அருவி பாய் தருகழனி
அலர்தரு குவளையங் கண்ணார்
குருவியாய் கிளி சேர்ப்பக்
குருகினம் இரிதரு கிடங்கில்
பருவரால் குதி கொள்ளும்
பைம்பொழில் வாஞ்சியத்து உறையும்
இருவரால் அறியொண்ணா
இறைவன தறைகழல் சரணே.. 7/76/7

நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆருயிரைக்
கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்றொழியச்
செல்வ வயற்கழனித் தென்திரு ஆரூர்புக்கு
எல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே.. 7/83/4
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. என்ன ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு...  ஆனால் இதற்கெல்லாம் ஏக்கம் இருக்கலாம்.  மனம் சோர்வடைய வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நிறைந்த பசுமையான கண்களுக்கு குளிர்ச்சியான வயல் வெளிகள் படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது.

    கழனி பற்றிய பாடல்கள் அனைத்தும் அருமை. தாங்கள் கூறியபடி வயல் வெளிகளின் இனிமையே ஒரு சுகானுபவமாக இருக்கும். ஆழ்ந்து அவைகளின் பச்சையான வாசனையையும், குளிர்ச்சியான குழுமையையும் நானும் கண்களால் பருகி, உள்ளம் மகிழ்ந்து அனுபவித்திருக்கிறேன்.

    மழை வருவதற்கான முக்கூடற்பள்ளு பாடல் அருமை. நானும் படிக்கும் காலத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. இப்போதும் ரசித்துப் படித்தேன்.

    இன்றைய இயற்கையின் அழகை விவரித்திருக்கும் பகிர்வனைத்திற்கும் மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. முக்கூடற்பள்ளு பாடலை கல்கி பொன்னியின் செல்வனில் பயன்படுத்தி இருப்பார்.

    தேவார பதிகங்களை பாடி முன்பு வயல்வெளிகள் இருந்த நிலையை மன கண்ணில் பார்த்து மகிழ வேண்டும்.

    இப்போது கழனி இருந்த இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பச்சைப் பசேல் வயல்வெளிகளைக் காணும் போது மனம் துள்ளும். எங்கள் ஊரில் சுற்றிலும் பச்சையும் நீருமாகத்தான் இருந்தது என் திருமணம் ஆன பிறகும் கூட. ஆனால் கடந்த 15 வருடங்களில் ஒரு பகுதி முழுவதும் வயல்கள் போய் காலனிகள் வந்துவிட்டன. அதைக் கண்ட போது மனம் மிகவும் வேதனையுற்றது அப்போதுதான் எங்கள் ஊரில் வெள்ளம் ஊருக்குள் பாய்ந்தது. என்றாலும் வடிந்துவிட்டது. இனி வரும் காலங்களில் எப்படியோ.

    நினைத்து வேதனைப்பட்டாலும் ஒன்று நிச்சயம், இயற்கைக்குத்தெரியும் தன்னை சமநிலைப்படுத்திக் கொள்ள.

    மாற்றங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். ஒன்றும் செய்ய இயலாது

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பதிவு அருமை. பச்சை வயல் படங்களைக் கண்டு மனம் குளிர்ந்தது. காடுகள் நிறைந்த கேரளத்திலும் மாற்றங்கள் நிறைய. வெயிலின் கடுமை சற்றுக் கூடுதல்தான் இந்த வருடம். முக்கூடற்பள்ளு பாடல் அருமை. மழை வர பிரார்த்திப்போம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. ஸ்வாரஸ்யமான தொகுப்பு. இப்படியான பகுதிகளை இழந்து கொண்டேயிருக்கிறோம் என்பது நிதர்சனம்.

    பதிலளிநீக்கு
  7. செந்நெற் கழனி படிக்கும் போதே மனம் இனிக்கிறது.

    கழனிகள் வாழ்க.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..