நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 03, 2024

திசை திசை 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 20
 ஞாயிற்றுக்கிழமை


தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் தான்காண்
தூமலர்ச் சேவடியிணை எம் சோதியான் காண்
உண்டுபடு விடங்கண்டத்து ஒடுக்கினான் காண்
ஒலிகடலில் அமுதம் அமரர்க்கு உதவினான் காண்
வண்டுபடு மலர்க்கொன்றை மாலையான் காண்
வாண்மதியாய் நாண்மீனும் ஆயினான் காண்
எண்திசையும் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.. 6/65/8
-: திருநாவுக்கரசர் :-

ஆரோக்கியம் அற்ற உணவை நேரம் கெட்ட நேரத்தில் தின்று தீர்ப்பதே இன்றைய நவீனம்..  

காலம் அறிதல் என்று வலியுறுத்தியிருக்கும் நெறிகளில் இருந்து எவ்வளவு தூரம் விலகி வந்திருக்கின்றோம் என்பது எவருக்கும் புரியவில்லை..

ஒழுங்கு இல்லாத நேரம் தவறிய உணவு - உண்பவரது  ஆரோக்கியத்தைக் கெடுத்து விடுகிறது..

உணவிலும் ஒழுங்கு இல்லை.. உண்ணும் முறையிலும் ஒழுங்கு இல்லை என்பதே கசப்பான உண்மை..

உணவின் ஒழுங்கு முறை பற்றி பல பதிவுகளில் பேசியிருந்தாலும் அன்பின் திரு. ஸ்ரீராம் அவர்கள் கேட்டதன் பேரில் இந்தப் பதிவின் விஷயங்கள்..

சைவ வைணவ மரபுகளின் வழித் தோன்றல்களுக்கு ஒவ்வொரு நாளும் உதயாதி நாழிகையில் நீராடுவதுட்ன் தொடங்குகின்றது..

தீர்த்தங்கள் திருக்குளமாக கிணறுகளாக -  தல வரலாற்றை அனுசரித்து இருக்கக் கூடும்.. எனவே அங்கு நீராடுவதைப் பற்றி அங்குள்ள பெரியவர்களை அணுகி கேட்டுத் தெரிந்து கொள்ளவும்..

ஆறுகளில் நீராடும் பொழுது (நீரோடும் திசையில்) கிழக்கு முகமாக மூழ்கி எழ வேண்டும்.. மேற்கு முகமாக வடக்கு முகமாகவும் மூழ்கி எழலாம்.. தெற்கு முகமாக மூழ்கக் கூடாது.. நீரின் வேகத்தைக கவனத்தில் கொண்டு மூழ்கி எழ வேண்டும்.. 

எப்படி மூழ்கி எழுந்தாலும் சூரியனுக்கு  கிழக்கு நோக்கியும் ஈஸ்வரனுக்கு வடக்கு நோக்கியும் பித்ருக்களுக்கு தெற்கு நோக்கியும் அர்க்கியம்  கொடுத்து விட்டு கரையேற வேண்டும்..

இதைப் பற்றி வேறொரு பதிவில் காண்போம்..

அடுத்ததாக -

கை கால்களைக் கழுவி முகம் துலக்கி நெற்றிக்கு இட்டுக் கொண்டு கிழக்கு முகமாக அமர்ந்து சாப்பிடுவது உடலுக்கும் மனதிற்கும் நல்லது.. 

சிவ சூர்ய நாராயணா என்று நன்றியுடன் வணங்குவதற்கும்  நல்ல வாய்ப்பு..

ஆரோக்கியம்.. ஆயுள் கூடும்.. குறிப்பாக வயதானவர்கள் கிழக்கு முகமாக உணவருந்த வேண்டும்.. நோய் வாய்ப்பட்டவர்கள் கிழக்கு திசை நோக்கி மருந்து எடுத்துக் கொள்வது நல்லது..


புத்தாடைகளையும் ஆபரணங்களையும் கிழக்கு முகமாகவே அணிந்து கொள்ளல் வேண்டும்.. 

தெற்கு முகமாக  சாப்பிடுவதும்  நன்மையே..
தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும்.. இத்திசை  பித்ருக்களுக்கு உரிய திசை.. அவர்களின் ஆசி என்றும் நம்முடன் இருக்கும்..


மேற்கு திசை நோக்கி சாப்பிடுவது மிகுந்த நற்பலனைத் தரும். செல்வம்  விருத்தி ஆகும்.. தொழிலில் மேன்மை, லாபம் நிறையும்.. 

என்றாலும், உறவினர் வீடுகளில் மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் வம்பு வழக்கு வந்து சேரும்.. உறவு முறியும் என்றொரு நம்பிக்கையும் உள்ளது.. 

மேற்கு  நன்மை தரக்கூடிய திசை.. இருந்தாலும், சாப்பிடுவதற்கு  உகந்தது அல்ல..

வடக்கு நோக்கி  சாப்பிடுவது  நன்மை தரக்கூடியது  அல்ல..
ஆரோக்கியத்தில் பல்வேறு குறைகள் வந்து சேரும்...


கயிலாய மாமலை வடக்கே இருப்பதால் அந்தக் கயிலாயத்தைத் தியானித்து சிவாலயங்களில் வலம் செய்து தண்டனிட்ட பிறகு வடக்கு முகமாக அமர்வது மரபு.. என்றலும் வடக்கு முகமாக உண்பது அனுமதிக்கப்படவில்லை..

தவிரவும் அந்தக் காலத்தில் யோகியரும் வாழ்ந்தது போதும் என்று நினைத்த மானுடர்களும் உண்ணா நோன்பு மேற்கொண்டு வடக்கு நோக்கி அமர்ந்து தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டனர் என்பது வரலாறு. 

கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் ஆகியோரின் வலாற்றினை நாம் அறிவோம்..

கணைக்கால் இரும்பொறையின் வரலாறும் இப்படித் தான் என்றாலும் அது மானம் சம்பந்தப்பட்டது..

ஆகையால் வடக்கு முகமாக அமர்ந்து உண்பது தவிர்க்கப்பட்டது..

உணவு கிடைக்கிறது என்பதற்காக அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் நோய் வரும்.. ஆயுள் குறையும்.

எனவே வயிறு புடைக்க  உண்ணக் கூடாது.. கோபம் வெறுப்பு கொண்டு உணவு உண்ணக் கூடாது.. ஆயுள் குறைந்து விடும்.

உணவு உண்ணும் போது சளச் சள என்று பேசக் கூடாது. வார இதழ் படிக்கக் கூடாது.. தோக்கா பார்க்கக் கூடாது.. நுணுக்கியில் நோண்டக்கூடாது.. பேசக்கூடாது..

தினமும்  சாப்பிடும்போது - ஒரு கைப்பிடி சாதத்தை காக்கை போன்ற ஏதாவதொரு  ஜீவனுக்கு வைக்கும் வழக்கத்தை வைத்துக் கொள்வது நல்லது..

நீங்கள் பாட்டுக்கு சொல்லி விட்டீர்கள்.. ஓட்டலில் சாப்பிடும் போது சோற்றை உருட்டி வைக்க முடியுமா?.. - என்று கேட்டால் -

முன்னோர்க்கான காரியங்களில் மட்டுமே
உணவை உருட்டி வைக்கின்ற வழக்கம்.. 

மற்றபடி அன்னத்தை அள்ளித் தான் உண்ண வேண்டும்.. ஓட்டலில் சாப்பிடும் போது விரல்களைக் குவித்து எடுத்து இலையின் ஓரத்தில் வைத்து விடுவது நல்லது..

அட என்னங்க.. வட்டமான தட்டில் பூரி புரோட்டா சப்பாத்தி என்று வெட்டும் போது இதெல்லாம் சரிப்பட்டு வருமா!.. - என்று கேட்டால் -

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு..

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே...
-: திருமூலர் :-

முதல் கவளம் பிற உயிருக்கு என்ற அர்ப்பணிப்பு உணர்வு தான் முக்கியம்..

போதும் என்ற உணர்வைத் தருவது உணவு ஒன்று தான்..

அதனைப் புனிதமாக புண்ணியமாகக் கருதுபவர்களும் நாம் தான்.. 

அவ்வண்ணமே - உணவை புனிதமாக புண்ணியமாகப் போற்றி புசித்து வாழ்வோம்..
ஃஃஃ

எல்லாஞ் சரிதான்.. அங்க இங்க ஊர் ஊராப் போறப்ப 
எல்லாம் திசைய ஞாபகம் வெச்சிக்கிட்டு சாப்பிட முடியுமா?..

அட..  அத விடுங்க... தெரு முனையில சின்னத்தம்பி கடையில டீ குடிக்கறப்ப திசைய ஞாபகம் வெச்சிக்கிட்டா டீ குடிக்க முடியுமா?..

ஏன் முடியாது?..  திசை மாறிய ஜனங்களுக்குத் தான் எதுவும் முடியாது... 

" இப்படியே மேற்கால போயி தெற்கால திரும்புனா கிழக்கு பார்த்தா மாதிரி அவங்க வீடு .." ன்னு அடையாளம் காட்டி வாழ்ந்த வாழ்க்கையை மிதமிஞ்சிய நாகரிகத்தில் தொலைத்து விட்டோம்... 

நமக்கு நாமே தினமும் திசைகளை சொல்லிப் பழகிக் கொண்டால் எல்லாம் நலமாகும்!..
**

மட்டு மலியும் சடையார் போலும்
மாதை ஓர் பாகம் உடையார் போலும்
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்
காலன்தன் வாழ்நாள் கழிப்பார் போலும்
நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்
ஞாலம் எரி நீர்வெளிகால் ஆனார் போலும்
எட்டுத் திசைகளுந் தாமே போலும்
இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே.. 6/89/8
-: திருநாவுக்கரசர் :-

நன்றி
பன்னிரு திருமுறை

நாளும் வாழ்க
நன்றென வாழ்க..
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. திசைகளும் உணவு உண்ணும் முறைகளும் விளக்கங்களுடன் தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு
  3. அருமையான பதிவு. முன்னோர்கள் சொல்லிய நல்ல குறிப்புகள்.
    பாடல்கள் நல்ல தேர்வு. முடிந்தவரை கடைபிடிக்கலாம். மனது வைத்தால் எல்லாம் சாத்தியம் ஆகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. மனது வைத்தால் எல்லாம் சாத்தியம் ஆகும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  4. திசைகளும் உண்ணும் முறைகளும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி வெங்கட்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..