நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 28, 2023

இட்லி..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 11
வியாழக்கிழமை


நமது காலை உணவு வகைகளில் முதல் இடத்தில் இருப்பது இட்லி!..

முதல் நாளே சரியான அரிசியையும் உளுத்தம் பருப்பையும் சுத்தம் செய்து ஊற வைத்து மாலைப் பொழுதில் அவர்களும் இவர்களுமாக வீட்டுக் கதை பேசிக் கொண்டு அரிசியையும் உளுத்தம் பருப்பையும் கழுவி எடுத்து
ஆட்டுக் கல்லில் தனித்தனியே இட்டு அரைப்பது பழைய கதை..

அப்படி அரைத்து வழித்து கல் உப்பு போட்டு கையால் கலந்து வைத்து விட்டால் பொழுது விடியும் நேரத்தில் மாவு பொங்கி இருக்கும்.. 

அரைத்து எடுத்தவள் மகள் என்றால் அவளுடைய கைப் பக்குவம் கண்டு பெற்றவளுக்கு பூரிப்பாக இருக்கும்.. 

மாமியார் என்றால்  கடுப்பாக இருக்கும் - வந்தவளுக்கு இப்படி கைப் பக்குவமா?.. என்று..

இப்பொழுது தன்னந்தனியான குடும்பங்கள் பெருகி இருக்கும் கால கட்டத்தில் - 

புருசன்  பெண்டாட்டி இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் - என்று எழுதப்படாத சட்டம் இருப்பதால் - 

வீட்டில்  அரிசி உளுந்து ஊற வைத்து இட்லிக்கு அரைக்க நேரம் என்பது கிடைப்பதில்லை.. 

ஓய்வு நாள் என்று ஞாயிற்றுக்கிழமை வந்தாலும் - அரிசி உளுந்து ஊற வைத்து அரைப்பதற்கு அலுப்போ அலுப்பு..

உரித்த வாழைப்பழம் கிடைத்தால் நல்லது என, நினைக்கின்ற காலம் இப்போது..

இதனால் வேலை முடிந்து வரும் வழியில் , சாலை ஓரத்தில்  உடனடியாகக் கிடைக்கும் மாவுகளை  வாங்கி வந்து இட்லிக்கும் தோசைக்கும் பயன்படுத்துகின்றார்கள்...

இந்த நிலை தான் பலருக்கும் பொருள் ஈட்டும் வழியாயிற்று..

இப்படியான மக்களை நம்பியே சமுதாயத்தின் பல தரப்பினரும் இட்டிலி மாவு ஏவாரத்தில் இறங்கியிருக்கின்றனர்..

வணிக வளாகங்கள் பலவும் கூட  இந்த வேலையில் இறங்கியுள்ளன..

முன்பெல்லாம் இட்லிக்கென தனி அரிசி வகை.. இப்போது கண்ட கண்ட அரிசிகள்..

இந்நிலையில் -
குழந்தைகள் முதற்கொண்டு முதியோர் வரைக்கும் விரும்பி உண்ணும் இட்லி மாவுகளில் - பல வகையான கலப்படங்கள் என்று செய்திகள் வருகின்றன..

உடனடி மாவு வகைகளில் எதற்காகக் கலப்படம்  என்றால் -

இட்லிக்கான அரிசி என்று இல்லாமல் கண்ணில் கண்டதையெல்லாம் அள்ளிப் போட்டு அரைத்து மாவு என்று விற்று காசு பார்ப்பதற்குத் தான்..

இப்படியான மாவில்
சோடா உப்பு, சுண்ணாம்புத் தண்ணீர், மற்றும் ஈஸ்ட் சேர்க்கப்படுகின்றதாம்.

இட்லி மிருதுவாக வருவதற்கு சோடா உப்பு..

மட்டை அரிசிகளில் பளிச் என்று மாவு கிடைப்பதற்கு சுண்ணாம்புத் தண்ணீர்.. 

மாவு புளிப்பதற்கு ஈஸ்ட்.

இப்படியான மாவு வகைகளால் நமது உடல் நலம் பாதிக்கப்படும் என்பது நிஜம்..

சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சோடியம் நல்லது அல்ல..

சோடா உப்பு எனப்படும் சோடியம் பை கார்பனேட் ரத்தத்தில் சோடியத்தின் அளவை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்..

அதிகப்படியான ஈஸ்ட்   தடிப்புகளுடன் ஒவ்வாமையை உண்டாக்கும்..

சுண்ணாம்புத் தண்ணீரைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை..

 நன்றி - விக்கி.. 

அடப்பாவிகளா!..

வியாவாரிகள் அப்பாவிகளாக இருந்தது எல்லாம் அந்தக் காலத்தில்.. 

இப்போதெல்லாம்
உயர் நிலை தொழில் நுட்ப விவரம் அறிந்த படு #₹₹#கள்..

உடல் நலம் குன்றியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்ற சிறப்பான உணவு இட்லி.. 

இன்றைய நவீனத்தில் அதில் கலப்படம்  செய்து நஞ்சாக மாற்றியவர்கள் உடனடி மாவு விற்பனை செய்பவர்கள்..

அந்தக் காலத்தில் ஐயர் ஹோட்டலில் சாப்பிட்டேன் என்றாலே வீட்டில் ஏச்சும் பேச்சும் கிடைக்கும்..

இப்போது  பலரும் நடத்துகின்ற உணவு விற்பனையில் நீதி நேர்மை சுத்தம் சுகாதாரம் எனும் இவை மட்டும்  கிடைப்பதில்லை..

சுத்தம் சுகாதாரத்தை யாருமே அனுசரிப்பது இல்லை.. அதற்காக கவலைப்படுவதும் இல்லை..

இட்லி மாவினால் தற்போது நானே பாதிக்கப்பட்டிருக்கின்றேன்..

நீ பாதிக்கப்படவில்லை எனில் இங்கே சொல்லி இருக்க மாட்டாய்.. அப்படித்தானே!..

எனக் கேட்டால்,
நமகெதற்கு ஊர் வம்பு என்று ஒதுங்கியதால்..

நமக்கும் ஒரு பாதுகாப்பு வேணும் தானே!..

பதினைந்து வருடங்களுக்கும் மேலாக வளைகுடா நாட்டில் உணவகத்தில் சுத்தம் சுகாதாரம் தரம் என்று வேலை செய்து விட்டு இங்கே உள்ள சூழலுடன் ஒன்றுதற்கு இயலவில்லை..

அவ்வளவு தான்..

நமக்கு -
இட்லி மாவு விற்கின்றவர் நேர்மையானவர் எனில் ஏழேழ் பிறவியில்  நாம் செய்த புண்ணியம்..

எல்லா தரப்பினருக்கும் ஏற்றதான இட்லி மாவில் இப்படி ரசாயன கலப்பு செய்வதற்கு  எப்படி மனசு வருகிறது என்று தெரியவில்லை!…

இட்லிக்கான - 
அரிசியும் உளுந்தும் நீரும் தரமானவையா?..
இட்லி மாவு தயாரிப்பது எப்படியான சூழ்நிலையில்?..
மாவு தயாரிப்பவருக்கு எப்படியான உடல் ஆரோக்கியம்?..

இதெல்லாம் இப்போது முக்கியம் இல்லை..  இப்படியான தயாரிப்புகளில் இருந்து விலகுவதே உத்தமம்..

உணவு நமக்கு பாதுகாப்பு என்பது ஒரு காலம்..
உணவில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டியது இக்காலம்.
 
வம்பு செறி தீங்கினர் தம் கண்ணில் படாமல் 
நீங்குதலே நல்ல நெறி..

நமது நலம் நமது கையில்
 என்றாலும் 
இறையருளும் நமது அறிவுமே 
நமக்கு பாதுகாப்பு..

ஓம் சிவாய
திருச்சிற்றம்பலம்
***

10 கருத்துகள்:

  1. இட்லிக்கும் தோசைக்கும் மாவு வீட்டில்தான் அரைக்கிறோம்.  கடையில் வாங்குவதில்லை.  ஆனால் இட்லி தோசை கடையிலிருந்து வாங்குவதுண்டு!

    பதிலளிநீக்கு
  2. வீட்டில் அரைத்து அங்கேயே விற்பவர்களோ, சிறு வியாபாரிகளோ இது மாதிரி கலப்படம் செய்ய மாட்டார்கள்.  பெரிய பிராண்டட் என்று வரும் பொருள்களில்தான் பெரும்பாலும் கலப்படம் இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஸ்ரீராம். அவங்க மாவு மீந்தா என்ன பண்ணுவாங்க? அதனால கண்டதையும் கலந்து அரைத்துத் தந்துவிடுகிறார்கள்.

      நீக்கு
  3. கலப்படம் செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள். நீங்கள் சொல்வது போல நாம் தான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முன்பு மாதிரி கல்லுரலில் அரைப்பது இல்லை . வீட்டில் அரைக்க வசதியாக உயர் ரக மின் எந்திரம் உள்ளது. அதில் போட்டு அரைக்க நேரம் இல்லை என்றால் என்ன செய்வது?

    கடை மாவை அடிக்கடி வாங்குவதை தவிர்த்தால் உடல் நலத்துக்கு நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
  4. மருமகள் வேலைக்கு போகிறார், அதனால் விடுமுறை நாளில் அடை மாவு, தோசை மாவு, இட்லி மாவு அரைத்து வைத்துக் கொள்வார்.

    பதிலளிநீக்கு
  5. நான் எப்போவாவது கடையில் (brands) இட்லி/தோசை மாவு வாங்குவேன், வீட்டில் மாவு இல்லை என்றால்... ஆனால் மனைவி இதனை விரும்புவதில்லை. ஒரு நாள் காத்திருக்கக்கூடாதா என்பார். காரணம் இப்போ எல்லாப் பயலுவளும் கண்டதையும் அரைச்சு மாவுன்னு தந்துடறாங்க (பிராண்ட் இல்லாத மாவுகளில், பழைய சாதம், மீந்த மாவு, ஜவ்வரிசி போன்றவையும் கலக்கப்படுகிறதாம்)

    பதிலளிநீக்கு
  6. இட்லி மாவு வாங்கும் பழக்கம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அரிது. இங்கு நாங்கள் முன்பு இருந்த பகுதியில் நாம் அரிசியும் உளுந்தும் ஊற வைத்துக் கொடுத்து நம் கண் முன்னரே அரைத்தும் கொடுக்கிறாங்க. ஆனால் நமக்கு வீட்டில்தான் சரிப்படும். அதுவும் கறுப்பு தொலி உளுந்துதான் பெரும்பாலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அண்ணா எபியில் உங்களின் தேங்காய்ப்பால் தட்டை குறிப்பைப் பார்த்தேன் அருமையான குறிப்பு...எபியிலும் சொல்லியிருக்கிறேன். இன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கடையில் வாங்கியதே இல்லை. வீட்டில் தான். யார் வீட்டுக்கானும் போனால் வாங்கிய மாவில் இட்லி, தோசை எனில் கொஞ்சம் யோசனை தான். :( அநேகமாகத் தவிர்ப்பேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..