நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 21, 2023

தீர்த்தன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 4
வியாழக்கிழமை


பகீரதனின் கடுந்தவத்தினால் பூமிக்கு வந்தவள் கங்கா தேவி.. 

அப்படி வந்தபோது மிகுந்த ஆக்ரோஷத்துடனும் சற்றே அகந்தையுடனும் விண்ணிலிருந்து இறங்கினாள்..

அத்தகைய கங்கையைத் தனது ஜடா பாரத்தினுள் ஐக்கியப் படுத்திக் கொண்டார் ஈசன் எம்பெருமான்..

அதன் பிறகு -
பகீதரன் செய்த வேண்டுதலின் பொருட்டு - சிறைப்பட்ட கங்கையை - மண்ணில் தவழவிட்டு சிவபெருமான் அநுக்கிரகம் செய்தார் -  என்பது நாமெல்லாம் அறிந்ததே..

இந்நிகழ்வு தேவாரத்தில் பல பாடல்களிலும் குறிக்கப்பட்டுள்ளது..

தீர்த்தன், தீர்த்தம் - என்ற பதங்களை மிக உயர்ந்தவன் - மிக  உயர்ந்தது என்று பொருள் கொள்கின்றனர் ஆன்றோர்..

சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே!..

மக்கள் சென்று மூழ்கி எழுந்து வினைகளைத் தீர்த்துக் கொள்கின்ற தீர்த்தங்களாகத் திகழ்பவன் ஈசனே!.. - எனும் அப்பர் பெருமானின் திருவாக்கும் சிந்திக்கத் தக்கது..

அப்படியானவற்றுள் ஒரு சில திருப் பாடல்கள் இன்றைய பதிவில்..


தூர்த்தனைச் செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்த மாவடைந் தேத்தி வாழ்மினே.. 1/96
-: திருஞானசம்பந்தர் :-

காமாந்தகனாகிய இராவணனைத் தண்டித்த புனித னாகிய அன்னியூர் இறைவனை அடைந்து அன்புக்குரியவனாக அவனைப் போற்றி வாழுங்கள்.

தோத்திரமா மணலில் இலிங்கந் தொடங்கிய ஆனிரையிற்பால்
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தமென மறைநால்வர்க்கு அறம்புரிநூ லன்று உரைத்த
தீர்த்த மல்கு சடையாரும் திருவேட்டக் குடியாரே.. 3/66
-: திருஞானசம்பந்தர் :-


பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமும் சடையில் வைத்தார் திருப்பயற் றூரனாரே.. 4/32
-: திருநாவுக்கரசர் :-


பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாம் கங்கை யாளைத் திருமுடி திகழ வைத்து
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்ப மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன் மால்கொடு மயங்கி னேனே.. 4/44
-: திருநாவுக்கரசர் :-

தீர்த்தனை சிவனைச் சிவ லோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப்
பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடி யேன்மறந்து உய்வனோ.. 5/2
-: திருநாவுக்கரசர் :-

ஒன்றா உலகனைத்தும் ஆனார் தாமே
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி எங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீ ஆகாசம் ஆனார் தாமே
கொன்றாடுங் கூற்றை உதைத்தார் தாமே
கோலப் பழனை உடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே
திருவாலங் காடுறையும் செல்வர் தாமே.. 6/78/1
-: திருநாவுக்கரசர் :-


ஆத்தம் என்றெனை ஆள்உகந் தானை
அமரர் நாதனைக் குமரனைப் பயந்த
வார் தயங்கிய முலை மட மானை
வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்தனைச் சிவனைச் செழுந் தேனைத்
தில்லை அம்பலத்துள் நிறைந் தாடுங்
கூத்தனைக் குரு மாமணி தன்னைக்
கோலக்காவினில் கண்டு கொண்டேனே..7/62
-: சுந்தரர் :-


கங்கை வார்சடையாய் கண நாதா
கால காலனே காமனுக்கு அனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால் விடையாய் தெளி தேனே
தீர்த்தனே திருவாவடு துறையுள்
அங்கணா எனை அஞ்சல் என் றருளாய்
ஆர் எனக்குறவு அமரர்கள் ஏறே.. 7/70
-: சுந்தரர் :-

நன்றி
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. ஆனந்த தீர்த்தமாய் ஒரு தொகுப்பு.  பருகி மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. தீர்த்தன் - ஓ சிவன் குறித்ததா..கலி தீர்த்தன் என்று கேட்டதுண்டு.

    இமயமலையில் சிம்லா அருகில் தீர்த்தன் நதி பாயும் தீர்த்தன் பள்ளத்தாக்கு இருக்கிறது. ஒரு வேளை இப்படித்தான் பெயர்க்காரணம் பெற்றிருக்குமோ?! தீர்த்தன் நதி மற்றும் தீர்த்தன் பள்ளத்தாக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தீர்த்த்னை நீங்கள் பகிர்ந்த திருப்பாடல்களிய பாடி தரிசனம் செய்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..