நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 14, 2023

க்ஷணமுக்தீசர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 28
வியாழக்கிழமை


ராஜேந்திரம்ஆற்காடு..

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சோழப்பேரரசின் கூற்றங்களுள் ஒன்றாக இருந்ததாகச் சொல்லப்படுகின்ற - ராஜேந்திரம்ஆற்காடு..

அப்பேர்ப்பட்ட ராஜேந்திரம் ஆற்காடு காலப்போக்கில் -
தஞ்சை மாநகரின் வடபால் அமைந்துள்ள
ராஜாம்பாள்புரம் எனப்பட்ட அம்மன் பேட்டை கிராமத்திற்கு உட்பட்ட சிற்றூராகி விட்டது..

தஞ்சை நகரில் இருந்து வடக்கே திரு ஐயாறு நோக்கிப் பயணிக்கும் போது வெண்ணாறு பள்ளியக்கிரகாரம் கும்பகோணம் பிரிவு சாலையைக் கடந்ததும் ஒன்றரை கிமீ., தொலைவில் மணற்கரம்பை கிராமம்..  அடுத்தது அம்மன்பேட்டை ..
  
அம்மன்பேட்டையின் மேற்காக உட்புறமாக இராஜேந்திரம் ஆற்காடு கிராமம்.. 

இவ்வூரில் வயல்வெளிக்குள் இருக்கின்றது ஸ்ரீ அபயாம்பிகா உடனுறையும் க்ஷணமுக்தீஸ்வரர் கோயில்.. 

பிரதான சாலையில் இருந்து கோயிலின் வாசல் வரைக்கும் நல்ல சாலை அமைக்கப் பட்டிருக்கின்றது..

இத்திருக்கோயில்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மிகச் சிறப்பாக இருந்திருக்கும் என்பதற்கு கம்பீரமான - க்ஷணமுக்தீஸ்வரர் திருமேனியே சாட்சி..

கோயிலின் அமைப்பு
கால வெள்ளத்தில் கரைந்து விட பிற்காலத்தில் மராட்டியர்களால் எடுத்துக் கட்டப்பட்டு இருக்கின்றது..  

பின்னும் நலிந்துவிட்ட நிலையில் 2007 க்கு முன் புனரமைக்கப்பட்டு 2007 ஆகஸ்ட் 31அன்று கும்பாபிஷேகம் நடந்துள்ளது.. 

சந்நிதியை அடுத்த முன்மண்டபத்தை ஒட்டியவாறு ஸ்ரீ அபயாம்பிகா சந்நிதி.. 

கிழக்கு நோக்கிய கோயிலின் வாசலில் நந்திகேசர்.. பழைமை தெரிகின்றது..

ஒற்றைத் திருச்சுற்று உடைய இக்கோயிலின் தெற்கு கோட்டத்தில் தக்ஷிணாமூர்த்தி. நிருதி மூலையில் விநாயகர்..

மூலஸ்தானத்திற்கு நேர் பின்புறத்தில் ஸ்ரீ வள்ளி தேவகுஞ்சரி உடனாகிய முருகப்பெருமான்.. 

அடுத்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி.. வடக்கு கோட்டத்தில் ஸ்ரீ துர்கை.. எதிரில் சண்டேசர்.. தீர்த்தக் கிணறும் உள்ளது.. 

கோயில் வளாகத்தில் வேப்ப மரங்கள் நிழல் விரித்துக் கொண்டிருக்கின்றன..

நந்தீசருக்கு வலப்புறமாக நவக்கிரக மண்டபம்..

ராஜகோபுரம் அமையப்பெற வில்லை..
மூலஸ்தானம் மட்டுமே கருங்கல் கட்டுமானம்..

திருக்கோயிலின் அருகிலேயே எல்லைப் பிடாரி அம்மன் குடிகொண்டிருப்பது சிறப்பு..

சோழர் காலத்தில் இக்கோயிலுக்கு பெருநிதியங்கள் இருந்திருக்கலாம்.. இன்றைக்கு எப்படியோ தெரியவில்லை..

இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இந்தக் கோயிலைப் பற்றி அறிந்தேன்..

ஆயினும், 
2/9 அன்று தான் கோயிலுக்குச் சென்றோம்.. அன்றைக்கு சம்வஸ்த்ர யாகமும் திருக்கல்யாண வைபவமும் நடத்தப் பெற்றது..

கோயிலைச் சென்று அடைவதற்குள் இரவாகி விட்டது.. பொழுதோடு சென்றிருந்தால் கோயிலின் சூழலைப் படம் பிடித்திருக்கலாம்..

வேறொரு நல்ல சமயம் சீக்கிரம் அமையட்டும்..

இந்தப் பகுதியில் சில கோயில்களின் கைங்கர்யங்களைக் கவனித்துக் கொள்வதற்கு  சிவாச்சாரியார் ஒருவர் தான் என்று பேசிக் கொண்டார்கள் .. 

எனவே இந்தக் கோயில் திறக்கப்படும் நேரம் சொல்லுதற்கு அரியது.. 

ஆனால் பிரதோஷ வழிபாடுகள் தவறாமல் நடைபெறுகின்றன.. 

அல்லலுற்று அலைகின்ற உயிர்களுக்கு அஞ்சேல் என்று அருள்வதற்கு ஸ்ரீ அபயாம்பிகை இருக்கின்றாள்.. ஆதரவு நல்குவதற்கு ஸ்ரீ க்ஷணமுக்தீஸ்வரர் இருக்கின்றார்..

மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே.. -- என்பது திருநாவுக்கரசரின் திருவாக்கு..

அவ்வண்ணமாக, க்ஷணமுக்தீஸ்வரர் - விநாடிப் பொழுதிற்குள் அருள் தரும் இறைவன் என்பது அர்த்தம்..

வேறென்ன வேண்டும் நமக்கு!..












வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நம சிவாயவே.. 4/11/7
-: திருநாவுக்கரசர் :-
***

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

  1. புதியதொரு கோவிலைப் பற்றிய தகவல்.  முதலில் கட்டும்போது சோழர்களின் மற்ற கோவில்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தரவில்லையோ...   மற்ற கோவில்கள் பலமாய் நிற்க இது மட்டும் நலிந்ததேன்?  வெளிப்புறம் படம் ஒன்று வெளியிட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுமுறை செல்லும் போது தருகின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. க்ஷணமுக்தீஸ்வரர் .. ! இப்போதுதான் இப்படி ஒரு திருப்பெயரை அறிகிறேன்.

    மாத்திரைக்குள் அருளும் மாற்பேறர் எனில் மறக்கவும் முடியுமோ ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் அவர்களுக்கு நல்வரவு..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. விநாடிப் பொழுதிற்குள் அருள் தரும் ஈசனை வணங்கி கொண்டேன்.
    க்ஷணமுக்தீஸ்வரர் அனைவருக்கும் எல்லா நலன்களும் அருள பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  4. கோயிலும் புதுசு, தகவல்களூம் புதுசு. அறீயத் தந்தமைக்கு நன்னி. இங்கெல்லாம் போனதே இல்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..