நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 13, 2023

சுந்தரத் தமிழ் 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 27
புதன்கிழமை

தொகுப்பிற்குத் துணை :- 
பன்னிரு திருமுறை, தருமபுர ஆதீனம்..


தென்புறத்தில் காவிரி.. வட புறமாக கொள்ளிடப் பேராறு.. இரண்டிற்கும் இடையில் இருக்கும் ஊருக்குள் ஆறு வேறொன்றும் இல்லை..

நிலைமை இப்படி இருக்க - 


வெள்ளை வெளேர் என்று வாளை மீன்கள் நீருக்குள் துள்ளிக் குதிக்கின்றன.. அதுவும் இளம் வாளை மீன்கள்..

கிழட்டு மீன்கள் துள்ளிக் குதித்து ஆகப் போவது ஒன்றும் இல்லை தானே!.. 

இருந்தாலும்,
மீன்களில் கிழட்டு மீன் என்று ஏது?..

எனினும், 
கிழட்டு மீன்கள் துள்ளிக் குதிக்கக் கூடாது என்று கணக்கு ஏதும் இருக்கின்றதா என்ன!..

அப்படியொன்றும் இல்லை.. 
இருந்தாலும் கிழடாகும் வரை மீன்களைத் தான் யாரும் விட்டு வைப்பது இல்லையே!.. 

சொல்றது எல்லாம் நல்லாத் தான் இருக்கு.. ஆனா, ஆறு இல்லாத ஊர்ல மீன் துள்ளி விளையாடுது.. ன்னு சும்மா அடிச்சு விடுறீங்களே!..

அடிச்சி உடுறதா?..
ஆறு இல்லாத ஊர்.. என்று தான் சொல்லி இருக்கேன்.. நீர் இல்லாத ஊர் என்று சொல்லலையே!.. 

ஆற்றின் மடை வழியே நீர் பாய்ந்து நெடு வயல் நிறைய - அந்த நீரில் தான் இள வாளைகள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்றன..

கொக்கு முதலான நீர்ப் பறவைகளால் மீன் வளம் குறைவதில்லை என்றாலும், 

அவ்வூரின் மக்கள்,
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்..
 - என்னும் வள்ளுவர் வழியில் - என்றே கொள்ளலாம்..

இதனூடே இங்கு இன்னொரு விநோதமும் அரங்கேறுகின்றது என்பதும் ஆச்சர்யம் தான்..

அதென்ன ஆச்சர்யம்?..

இப்படியாக
வாளை மீன்கள் துள்ளிக்  குதிக்கின்ற வயல்களில்  தாமரைப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன..

இதிலென்ன ஆச்சர்யம்!..


இரவுப் போதில் கூம்புகின்ற தாமரை மலர் சூரியோதயத்தில் கண் மலரும் போது அதனுள் முந்தைய இரவில் பள்ளி கொண்ட நண்டுகளும் கண் விழித்தன என்பது தான்..

பொதுவாக வயல் நண்டுகளின் மீது புள்ளிகள் காணப்படுவதில்லை
என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.. 

கோயில் தரிசனத்திற்காக வந்திருக்கின்ற அடியார் - நீர் நிறைந்த வயலில் வாளை மீன்கள் துள்ளி விளையாடுவதையும்
தாமரைப் பூக்களில் , புள்ளி நண்டுகள் பள்ளி கொள்கின்ற காட்சியையும் கண்டு மகிழ்ந்து அவற்றை திருப்பாடலில்  பதிவு செய்து வைக்கின்றார் எனில் - 
அது நம் பொருட்டு!..

வஞ்சனை நிறைந்த நெஞ்சமே!.. 
தீமைகள் பல செய்த நீ அவற்றால் உண்டாகிய பாவங்கள் நீங்கும்படி , இடப வாகனத்தை உடைய சிவலோகனாகிய பெருமான் விளங்கும் தலமாகிய திருப்புறம்பயத்தை வணங்குவதற்கு தெளிவடைந்த நிலையில் புறப்படுவாயாக!..

என்று, தமது திருவாக்கினால் நமக்கு உபதேசம் செய்தருள்கின்றார்.. 

யாருங்க அவர்?..


அவர் தான்
வன்தொண்டர் என்று புகழப் பெற்ற சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்!..


திருத்தலம்
திருப்புறம்பயம்


இறைவன்
ஸ்ரீ சாட்சி நாதர்


அம்பிகை
ஸ்ரீ கரும்பன்ன மொழியாள்

தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம் (திருக்குளம்
ஸப்த சாகர தீர்த்தம் 
(ஏழுகடல் கிணறு)

தலவிருட்சம்
புன்னை

ஸ்ரீ சாட்சிநாதப் பெருமான்

கள்ளி நீசெய்த தீமை உள்ளன
பாவ மும்பறை யும்படி
தெள்ளி தாஎழு நெஞ்சமே செங்கண்
சேவுடைச் சிவ லோகனூர்
துள்ளி வெள்ளிள வாளை பாய்வயல்
தோன்று தாமரைப் பூக்கள்மேல்
புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும்
புறம்பயம் தொழப் போதுமே.
7/35/5
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
**
 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. பாடலும், பாடலுக்கான விளக்கமும் அருமை.  கோவில் அழகாய் இருக்கிறது.  சாட்சி நாதர், கருமபன்ன மொழியால் தாயார் தரிசனம் கிட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. // கிழடாகும் வரை யாரும்தான் மீனை விட்டு வைப்பதில்லையே...//

    ஹா..  ஹா..  ஹா...  சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறது..  மற்றவர்களுக்கு உணவாவதற்கே இவைகளுக்கெல்லாம் இப்படி ஒரு பிறவி...  தப்பித் பிழைத்து ஒரு மீன் கூடவா இயற்கை மரணம் அடைந்திருக்காது?  கிழட்டுப் பருவத்தில் எப்படி தள்ளாடித் தள்ளாடி நீந்தி இருக்கும்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ரசனையான கருத்து..

      சிந்திக்க வைக்கின்ற திருப்பாடல்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. அயிரை மீனில் கிழடு உண்டா ஜி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீன்கள் கிழடு ஆவதில்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  4. சுந்தரத்தமிழ ரசித்தேன்.
    சுந்தரர் தேவாரம் பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
    படங்கள் பாடல் விளக்கம் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  5. நல்ல ரசனை. இந்தக் கோயில் பத்தாண்டுகள் முன்னர் போனோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..