நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 07, 2023

தஞ்சை முருகன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 21
 வியாழக்கிழமை


170 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள்..

திருச்செந்தூர்..
கடற்கரை மணலில் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் துறவி ஒருவர்.. அவரிடத்தில் சிறியதாக முருகன் விக்ரகம் ஒன்று.. 

ஐம்பொன் திருமேனியனாகிய முருகனை நாழிக் கிணற்று நீரில் நீராட்டுவதும் அலங்கரிப்பதும் அவனுடன் பேசிக் கொண்டிருப்பதும் அன்றாட வழக்கம்.. தனது அந்திமக் காலத்தை உணர்ந்த துறவியார் ஒருநாள் முருகனிடம் கேட்டார்..
" எனக்குப் பிறகு?..

" அதை ஏற்கனவே தீர்மானித்து விட்டேன்!.. " - என்ற முருகன் - தன்னை யாரிடம் சேர்க்க வேண்டுமோ அந்த அடியாருடைய அங்க அடையாளங்களைக் கூறினான்..

இப்படி முருகப் பெருமான் குறிப்பிட்ட அடையாளங்களுடன் கூடிய அடியார் வடக்கே வெகு தொலைவில் இருக்கும் ஒரு ஊரில் இருந்து ஏதோ ஒரு வேலையின் காரணமாக திருச்செந்தூருக்கு வந்து தங்கியிருப்பவர்.. இன்னும் சில தினங்களில் ஊருக்குத் திரும்ப இருக்கின்றார்..

இந்நிலையில்,
அன்றிரவு அந்த அடியாருடைய கனவில் முருகன் தோன்றி - நாளை புலரும் பொழுதில் துறவியார் எனது திருமேனியை உன்னிடம் வழங்குவார்.. உன்னுடன் உனது ஊருக்கு வருகின்றேன்!.. - என்று மொழிந்தான்..

திடுக்கிட்டு விழித்த அடியாருக்கு ஆனந்த அதிர்ச்சி..

பொழுதும் புலர்ந்தது.. முருகன் கூறியபடி துறவியார் தேடி வந்து அடியாரிடம் திருமேனியை வழங்கினார்.. பெருமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நமஸ்கரித்துக் கொண்டனர்..

தமது பணி நிறைவடைந்தாக துறவியாரிடம் ஆனந்தக் கண்ணீர்.. தமது பணி தொடர்வடைதாக அடியாரிடம் ஆனந்தக் கண்ணீர்..

மயிலேறி வருகின்ற மால் மருகன் திருச்செந்தூரில் இருந்து - வந்து இறங்கிய இடம் தஞ்சாவூர்..

முருகப்பெருமானை திருச்செந்தூரில் இருந்து தன்னுடன் அழைத்து வந்த நல்லடியாரின் பெயர் - ஷண்முக வேணுடையார்.. தஞ்சையின் நந்தவனமாக இருந்த பூக்கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்.. 

தன்னுடன் வந்தருளிய முருகனை நந்தவனத்தின் மத்தியில் கூரைக் குடிலில் இருத்தி வழிபட்டார்..  விவரம் அறிந்த மக்கள் திரண்டு வந்து தரிசித்தனர்.. இது நிகழ்ந்த ஆண்டு 1857..

காலப் போக்கில்  தஞ்சையின் முருக பக்தர்கள் ஒன்று கூடி ஸ்ரீமான் ராவ்பகதூர் சீனிவாசம் பிள்ளை அவர்களது தலைமையில்  கோயிலை உருவாக்கி 1911 ல் திருக் குடமுழுக்கு செய்வித்தனர் - என்பது  வரலாறு..

பூக்காரத் தெரு முருகன் கோயில் - என இன்று புகழ் கொண்டு விளங்குகின்றது.. தஞ்சை ஜங்ஷனில் இருந்து அரை கிமீ., தொலைவு.. 

நெடிதுயர்ந்த ராஜ கோபுரத்தைக் கடந்ததும் கொடிமரம்.. கம்பத்து விநாயகர்.. மயில் மண்டபம்.. இரண்டாம் திருவாசலின் வலப்புறம் ஸ்ரீ விநாயகர்.. இடப்புறம் ஸ்ரீ இடும்பன்..

மூலஸ்தானத்தில் ஸ்ரீ வள்ளி தேவ குஞ்சரியுடன் சுப்ரமணிய ஸ்வாமி திருக்காட்சி தருகின்றார்.. 

இரண்டு திருச்சுற்றுகள்.. உள் திருச்சுற்றில்  வடபுறத்தில் குக சண்டேசர்..

வெளித்திருச்சுற்றில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் விசாலாட்சி, ஆதி விநாயகர், ஸ்ரீ கஜலக்ஷ்மி, ஸ்ரீ துர்க்காம்பிகா சந்நிதிகள்..

திருக்கோயிலின் வெளிப்புறத்தில் ஸ்ரீ ஏகௌரியம்மன் பீடம்.. 

அருகிலேயே பிரசித்தமான பாரம்பரிய பூச்சந்தை..

இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஞாயிறன்று (4/9) காலை திருக்குட முழுக்கு நடைபெற்றுள்ளது.. காலையில் குடமுழுக்கினைத் தரிசிக்கும் பேறு கிட்டவில்லை.. 

மாலைப் பொழுதில் சென்று தரிசித்தோம்.. திருக்கோயில் முழுதும் மலர் அலங்காரம்..  தேவலோகம் போலிருந்தது..
தேவாரத் திருப்புகழ், பரதநாட்டிய,  இசை நிகழ்ச்சிகள், சித்ரான்ன விநியோகம் என கோலாகலமாக இருந்தது..

மயில் வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளி அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்காட்சி நல்கினான்   திருமுருகன்..











ஸ்ரீ காசி விஸ்வநாதர்









ஸ்ரீ ஏகௌரி அம்மன்






விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா 
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த 
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.. 70
-: அருணகிரிநாதர் :-
**
முருகன் திருவருள் முன்னின்று காக்க!..
வேலும் மயிலும் சேவலும் துணை!..
 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

13 கருத்துகள்:

  1. தஞ்சையில் இருந்திருந்தும் இந்தக் கோவிலை நான் தரிசித்தது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொரு முறை வந்து தரிசனம் செய்யுங்கள்..

      மகிழ்ச்சி.
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. முருகா உந்தன் சிரிப்பு... முத்தமிழின் தனிச்சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. எங்கு பார்த்தாலும் குடமுழுக்குகள்...மனதிற்கு நிறைவான நிகழ்வுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஐயா..

      நீக்கு
  4. இந்தக் கோவிலும் பட்டியலில் சேர்ந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை..

      நீக்கு
  5. தஞ்சை முருகன் கோயில் பற்றிய விவரங்கள், படங்கள் எல்லாமே மிக நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  6. பூக்காரச்சந்தை முருகன் கோவில் வரலாறும் படங்களும் அருமை.
    அருணகிரிநாதர் பாடலை பாடி வணங்கி கொண்டேன்.
    முருகா சரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. தஞ்சையில் இப்படி ஒரு முருகன் கோயில் இருப்பதைத் தெரிந்து கொண்டேன். படங்கள் அருமை. தஞ்சையில் பெரிய கோயிலுக்கு வெளீயே சுமார் ஒன்றரை மணீ காத்திருந்தோம். கூட்டம் காரணமாக எங்கும் போகவில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..