நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 13, 2013

திருப்பாவை தரிசனம்



திருஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!...
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!...
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!...
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!...
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!...
உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே!...
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!...
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள்  வாழியே!...

எல்லாம் வல்ல இறைவனின் தனிப் பெருங்கருணையினால் மார்கழி மாதம் முழுமையும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவை திருப்பாசுரங்களை சிந்திக்கும் பெரும்பேறு பெற்றோம். 

ஆண்டாளைத் தெரியும். திருப்பாவையைத் தெரியும்... திருஅரங்கத்தையும் திரு வில்லிபுத்தூரையும் தெரியும்... 

அதற்காக திருப்பாவையின் - திருப்பாசுரங்களுக்கு  பொருள் '' உட்பொருள் ''  தெரியும் என்று அர்த்தமா!.... 

இப்படி ஒரு கேள்வி என்னை நானே கேட்டுக் கொண்டேன்... 

''அவள் அருள் கூட வரும்... அதுவே பொருள் தரும்...'' என்று உள் மனம் சொல்லிற்று.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக, http://madhavipanthal.blogspot.com வலைத்தளத்தில் திரு.KRS., அவர்களின் திருப்பாவைப் பதிவுகளைப் படித்ததுண்டு...அவர் தமக்கு என் நன்றி என்றும் உரியது. மாதவிப்பந்தல் தந்த துணிவு தான் என்னைத் தூண்டியது.. பின்னும் துணையாகத் தேடி - திருப்பாசுரங்களின் வரிகளை - ஒருமுறைக்கு இரு முறையாக,

http://www.thehindutemple.ca/TamilMargazhiIntro.htm -
http://www.bhagavadgitausa.com/ANDALS_TIRUPPAVAI.htm

- ஆகிய தளங்களில் சரிபார்த்துக் கொண்டதை என்றும் மறவேன்..

இவைகளைக் கொண்டு என்னளவில் சிந்தித்த கருத்துக்களை இதுவரையில் பதிவு செய்துள்ளேன். ஏனெனில் - வைணவ சம்பிரதாயம் பற்றிய விஷயங்கள் நானறியாதவை. மரபுக்கு மீறியதாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனம் இருந்தது.

முன்னேற்பாடுகள் எல்லாம் சில மணித் துளிகள் தான்...

''ஆண்டாள் அருளே துணை!... ஐயன் அரங்கநாதனே துணை!...'' என்று திருப்பாவையின் திருப்பாசுரங்களைத் தலை மேல் கொண்டு பயணித்தேன்!.... என்னளவில் ஆண்டாள் துணையாய் வந்ததை மனப்பூர்வமாக உணர்ந்தேன்...

பன்னிரு பாசுரங்கள் நிறைவுறும் வேளையில் அன்னையின் தரிசனமும் கிடைக்கப் பெற்றேன்...

குலதெய்வம் கூட வந்தது... இருபத்தேழாம் நாள். அன்று அமாவாஸ்யையும் ஹனுமத் ஜயந்தியும்  இணைந்த  நன்னாள்...

''கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!.. '' என்று திருப்பாசுரம் முழங்கிற்று...

பொங்கல் நிவேதனம் செய்த போது மீண்டும் ஒருமுறை சூடிக்கொடுத்த சுடர்க் கொடியின்  - ஆனந்த தரிசனம் கண்டேன்...

கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து திருஅரங்கநாதனை சேவித்த பலன் என் முன்னோர்கள் செய்த தவம் - கைமேல் கிடைத்ததாக - கண்கள் கசிந்தன.. பாசுரங்களை நிறைவு செய்யும் வேளையில் கண்கள் பனித்து மெய் விதிர்த்து தட்டச்சு செய்ய இயலவில்லை..

''நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'' - என்பதே நமது கோட்பாடு..

'' நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை ''

ஐயனின் திருவாக்குக்கு இணங்க எல்லார்க்கும் நன்மை கிட்டியது...

இதில் என்னால் ஆனது ஏதுமில்லை..அப்படி ஏதும் நான் நினைக்கவுமில்லை..

மார்கழி முழுதும் கண்ணனின் திருக்கரத்தினைப் பிடித்துக் கொண்டு நடந்ததாக உணர்வு..

''படிப்பில்லாத ஆட்கள் கூட பாதத்திலே போய் விழுந்தால் வேதத்துக்கே பொருள் விளங்குது... கிருஷ்ணா....'' என்று அனுபவ பூர்வமாக கவியரசர் கண்ணதாசன் அவர்கள் கிருஷ்ணகானத்தில் குறிப்பிட்டிருப்பார்... அந்த வார்த்தைகள் சத்தியமானவை....

பயணத்தில் - உலகம் முழுதும் அன்பர்கள் நமது தளத்தில் விருந்தினராக உடன் வந்ததை புள்ளி விவரங்கள் பட்டியலிட்டன. உள்ளம் பெருமிதத்தினால் விம்மியது. எல்லாருக்கும் எனது நன்றி என்றும் உரியது.

இன்னும் நமது தளம் சரியாக வடிவமைக்கப்படவில்லை...இங்கு கணினியும் இணைய இணைப்பும் சிந்தனையின் வேகத்திற்கு ஏற்றபடி ஒத்துழைக்க வில்லை. ... இருப்பினும் நல்ல முறையில் நிறைவு செய்து விட்டேன் என்ற திருப்தி உள்ளது. பதிவுகளில் சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்தருள்க!..

எனக்கத் ை செய்த வத்ங்குக்கு மீண்டும் என் நன்றிகள். கிருஷ்ண சித்திரங்களையும் வேறு சில புகைப்படங்களையும் GOOGLE -ல் பதிவு செய்து வைத்திருந்த நல்லவர்களுக்கும் வல்லவர்களுக்கும் நன்றிகள்.

இன்று போல நமது தளத்திற்கு என்றும் வருகை தருக!... மீண்டும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு,

எல்லாருக்கும் எல்லா நலன்களும் கிடைக்க - வேண்டிக் கொள்கின்றேன்..

ஆண்டாள் திருவடிகளே சரணம்!...
அரங்கன்  திருவடிகளே சரணம்!...
ஹரி ஓம்!...

2 கருத்துகள்:

  1. உங்கள் பதிவைப் படித்துப் பேரானந்தம் அடைகிறேன்.

    amas32

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. வணக்கம்.
      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
      அரங்கனின் அருளும் சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாளின் கருணையும் அனைவருக்கும் நற்றுணையாவதாக!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..