நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 13, 2013

போகி


வந்து விட்டது பொங்கல் எனும் கட்டியம் கூறும் நாள் -  மார்கழியின் கடைசி நாள்

போகிப் பண்டிகை என்று அனுசரிக்கப்படும் இந்நாளில் - 

 ''பழையன கழிதலும் புதியன புகுதலும்'' நன்று என்று பழையனவற்றையும், உபயோகமற்றவைகளையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. 

தைத் திங்களின்  முதல் நாள் - பொங்கலுக்கு முதல் நாள் - மார்கழியின் கடைசி நாளை அந்த ஆண்டின் கடைசி நாளாகக் கருத்தில் கொண்டு  அந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் தான் போகி என்று சொல்பவர்களும் உளர்.

பொதுவாக அன்றைய தினத்தில் இல்லத்தில் மண்டிக் கிடந்த பழைய பொருட்கள் எல்லாமே முடிந்தவரை அப்புறப்படுத்தப்பட்டிருக்கும். 

குப்பைக் கூளங்கள் அகற்றப்பட்டு வீடு செம்மையாகி இருக்கும். கிராமங்களில் தவறாது - வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து - புது வர்ணம் தீட்டி அழகுபடுத்தியிருப்பார்கள். 

வீடுகளும் தெருக்களும் புதுப் பொலிவுடன் விளங்கும்.

இல்லம் தோறும் போகி அன்று, விடியற்காலையில் வீட்டின் தலைவாசல் நல்ல தண்ணீரால் கழுவி விடுவார்கள். வாசலில் கோலமிட்டு நிலைப்படிக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு,  நிலையில் பூச்சரம் சூட்டி விளக்கேற்றி வைத்து வாழைப்பழம், தாம்பூலம்  (வெற்றிலை, பாக்கு) வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி வீட்டு தெய்வத்தை வணங்குவர். இதனை வீட்டில் உள்ள வயது முதிர்ந்த பெண்மணி  அல்லது குடும்பத் தலைவி முன்னின்று நடத்துவார்.

போகிப் பண்டிகையின் போது வடை, பாயசம் போன்றவை வீட்டு தெய்வத்திற்கு - குல தெய்வத்திற்கு -  நிவேதனம் செய்யப்படும். 

சில குடும்பங்களில் பாரம்பரியமாக அன்று புத்தாடை - பொதுவாக வேட்டி, துண்டு - வைத்து அசைவ உணவு வகைகளைப் படைப்பதும் உண்டு.

எப்படியாயினும் - 

பழையனவற்றையும், உபயோகமற்றவைகளையும் விட்டெறிதலும் 

மண்டிக் கிடந்த பழைய பொருட்களை முடிந்தவரை அப்புறப்படுத்துதலும் 

குப்பைக் கூளங்கள் அகற்றப்பட்டு வீட்டினைச் செம்மையாக்குதலும் - தான்

போகியின் நோக்கம்.அதனை நாம் சிறப்பாகக் கடைப்பிடிக்கின்றோம் என்றால்

செங்கல், சுண்ணாம்பு அல்லது சிமெண்ட், இரும்புக் கம்பிகளை கொண்டு கட்டப்பட்ட வீட்டில்,  உணர்வுகளால் கட்டப்பட்ட நாம் குடியிருக்கின்றோம்.

அந்த வீட்டிற்குத் தரும் மரியாதையைப் போல - நாம், 

நம்முள் மண்டிக் கிடக்கும் அழுக்குகளை அகற்றி, ஆகாதவற்றை அப்புறப் படுத்தி நம்மை சுத்தப்படுத்திக் கொள்வோம் !.....

நம்மைப் பற்றி நிற்கும் நல்லவை, கெட்டவைகளை - நமக்கு நன்றாகத் தெரியும். நம்மால் சில பழக்க வழக்கங்களிலிருந்து விலக முடியும் எனில் அதனால் நமக்கும் பிறர்க்கும் நன்மை விளையும் எனில் - நாம் சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டோம்  என்பது பொருள்..

அதுதான் உண்மையான போகி!... நலங்களையும் நன்மைகளையும் நோக்கிப் பயணிப்போம்.

நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம்!....

பொங்கலே... வருக!.... புத்தொளியினைத் தருக!....
தைத்திங்களே... வருக!... தாய்மையாய் மலர்க!....

வாழ்க... நலமுடன்!... வாழ்க... வளமுடன்!...

நன்றி - ரதி. தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..