ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!
சென்று அங்குத்தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றச்சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலாய் எறிந்தாய்! கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றுன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!..
சென்று அங்குத்தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றச்சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலாய் எறிந்தாய்! கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றுன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!..
அசுர குலத்தின் வேந்தனாகிய மாவலி, இந்திர பதவியினை அடைய வேண்டி - மாபெரும் யாகம் நிகழ்த்திய அன்று - வாமனனாக வந்து மூன்றடி மண்ணை யாசகமாகக் கேட்டு வாங்கி இவ்வுலகினை அளந்தவனே! நின் திருவடிகளைப் போற்றுகின்றோம்!.....
தென் திசை இலங்கையைத் தேடிச் சென்று - பண்பு அற்றவனாய், பகை உற்றவனாய் நின்ற இராவணனைச் செற்றவனே! இராகவனே!... திரண்ட நின் தோள் வலியினைப் போற்றுகின்றோம்!....
மாள்வதற்கெனவே - வண்டிச் சக்கரமாக வந்த சகடாசுரனைப் பொடிப் பொடியாக்கினையே! புனிதனே! நின் புகழினைப் போற்றுகின்றோம்!....
கோவர்த்தனம் எனும் குன்றினைக் குடையாகப் பிடித்து கோகுலத்தினைக் காத்தவனே! குணம் எனும் குன்றேறி விளங்கும் கோபாலனே! நின் மலரடிகளைப் போற்றுகின்றோம்!.....
ஆயர் குலத்தின் பகைவரை அழிக்கும் பொருட்டு நந்தகோபன் கையில் திகழ்ந்து, தலைமுறை மாற்றமாய் இன்று நின் திருக்கரத்தினில் - வீரத்தின் திருக்குறிப்பாக - விளங்கும் ''வெற்றிவேல்'' தனைப் போற்றுகின்றோம்!
என்றென்றும் நின்னைச் சேவிப்பதையே தலைமேல் கொண்டு, நின் திருப்புகழினை ஏத்தி வணங்கி, பறை என்னும் நோன்புப் பரிசினைப் பெற்று விருப்பங்களை
நிறைவேற்றிக் கொள்வதற்கு -
உன் அடியார்களாகிய நாங்கள் ஒன்று கூடி இங்கு வந்திருக்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..