நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 15, 2013

மாட்டுப் பொங்கல்


பசுக்களும் காளைகளும்..

விலங்கு இனங்களில் மனிதனுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை கால்நடைகள். அதிலும் குறிப்பாக  பசுக்களும் காளைகளும்...

வேறெந்த விலங்கிற்கும் இல்லாத தனித்தன்மை பசுவுக்குண்டு. தாய்மையை வெளிப்படுத்தும் விதமாக பசு மட்டுமே "மா' என கத்தும். "மா' என்பது அம்மாவின் சுருக்கம். 


தாய்மை இன்றி பூவுலகில் ஏதும் இல்லை. தாய் - பெண்மை  - இல்லாமல் மனித குலம் இல்லை. பாலூட்டும் விலங்குகளில் மனிதனும் உள்ளடக்கம் என்கின்றனர்.

தாய் கூட, தான் பெற்ற பிள்ளைக்கு  குறிப்பிட்ட வயது  வரை மட்டுமே பால் கொடுத்து அன்பு காட்டுகிறாள். அதன் பின் -

மனிதன் தன் வாழ்நாளை பசுவின்  பாலைக் கொண்டே வாழ்ந்து முடிக்கின்றான்.  பசுவின்  பால் மனிதன் வாழும் காலத்தில் மட்டுமல்ல! .....

நமக்கு இன்னொரு தாயாக விளங்கும் பசுவை "கோமாதா' என வணங்குகிறோம். "ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்' என்று அப்பர் சுவாமிகளின் திருவாக்கு. 

திருநாவுக்கரசர்,  திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்திலும் மாணிக்கவாசகர் திருவாசகத்திலும் பசுவின் தன்மையை சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

இதே போல, காளைகளைக் கொண்டு வயலை உழுது, நாம் நமது உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றோம். உழைப்பின் சின்னமான அதை, சிவபெருமான் தனது வாகனமாகக் கொண்டுள்ளார். 

அம்பிகையுடன் காளையில் அமர்ந்தே அடியார்களுக்கு "ரிஷபாரூடராக'' - ''விடை வாகனனாக'' காட்சி தருகிறார். சைவத் திருமுறைகளில் பசுவும் காளையும் மிக உன்னதமாக சிறப்பிக்கப்படுகின்றன. சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்பவர் நீண்ட ஆயுள் பெறுவர் காலம் வாழ்வர் என ஆகமம் கூறுகின்றது.


பரந்தாமன் கோகுலத்தில் வாழ்ந்ததையும் வளர்ந்ததையும் மறக்க முடியுமா?....பசும் பாலில் இருந்து கிடைத்த வெண்ணெயை விரும்பி உண்டதால் கிருஷ்ணர் ''நவநீதகிருஷ்ணன்'' எனப்பட்டார். "நவநீதம்'' என்றால் "வெண்ணெய்'.

பசுவுக்கும், காளைக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகிறோம். உழவுக்கும் தொழிலுக்கும் மரியாதை செய்யும் விதமாக பசுக்களையும் காளைகளையும் நீராட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்தி, தெய்வமாக வழிபாடு செய்கிறோம். இதுவே தமிழரின் தனிப் பெரும் பண்பாடு.

நாம் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது, பசுவைக் காண்பது சுப சகுனம். அதுவும் கன்றோடு சேர்ந்த பசுவைப் பார்ப்பது மிகவும் சிறப்பு. பசுவின் உடலில் சகல தெய்வங்களும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். 

தமிழில் ''மாடு'' என்றால் - செல்வம் - என்று அர்த்தம்.

கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றயவை. - 

திருக்குறள் காட்டும் தலை சிறந்த கருத்து இது. ஒருவன் பெற்ற செல்வங்களுள் கல்வி தான் அவனுக்குச் சிறப்பானது. அவனுடைய மற்ற செல்வங்கள் ஏதும் செல்வங்கள் அல்ல   என்பது ஐயன் திருவள்ளுவர் நமக்கு அறிவுறுத்தும் கருத்து.

கால்நடைகளுடன் இணைந்த வாழ்வு தான் இயற்கையான வாழ்வு... அந்த வாழ்வு மீண்டும் மலர்வதாக....

வாழ்க கால்நடைச் செல்வங்கள்!....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..