நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 27, 2013

திருவிடைமருதூர்

மகர மாதமாகிய தை மாதத்தின் திருநாட்களுள் சிறப்பானதும்  - தமிழகம் மட்டுமல்லாது தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் விசேஷமாக கொண்டாடப்படுவதுமான  தை பூசம்  இன்று சீருடனும் சிறப்புடனும் நிகழ்வுறுகின்றது.

தை மாதத்தில் பெளர்ணமி திதி - தேவகுருவாகிய பிரகஸ்பதிக்குரிய பூச நட்சத்திரத்துடன் கூடி வரும் நாளே தை பூசம். 

தமிழகத்தில் ஆன்மீக நாட்டமுடைய அடியார்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனைத் தொழுது வணங்கி - உணவு உட்கொள்ளாமல், தேவார திருவாசகத் திருமுறைகள், கந்தபுராணம், கந்த சஷ்டிக்கவசம் - என புனித நூல்களைப் பாராயணம் செய்து - தம் இல்லங்களில் இறை அன்புடன் விரதம்  அனுசரித்து நிறைவாக -

சிவாலயங்களுக்கும் முருகன் திருக்கோயில்களுக்கும் குடும்பத்துடன் சென்று ஆலய தரிசனம் செய்து வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் - வியாக்ரபாதர் , பதஞ்சலி இருவரும் கண்டு மகிழ - அம்பிகையுடன்  ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்திய சிவபெருமான்    - 

தை பூச நாளில் அயிராவணத்துறை எனும் திருக்குளக்கரையினில் தீர்த்தம் கொடுத்தருள்கின்றனர்..... அது எங்கே!..... அந்தத் திருத்தலம் எங்கே!...

அந்தத் திருத்தலம் தான்....

சிவபெருமானுடைய யானையாகிய அயிராவணம் பணிந்து வணங்கிய திருத்தலம்.

உமாதேவியும், விநாயகரும், முருகனும், உருத்திரர்களும், பிரமனும், மகாவிஷ்ணுவும் வழிபட்ட திருத்தலம்.

அம்பிகை - ஐயனின் அன்பிற்பிரியாளாகி  - வலப்புறத்தில் கிழக்கு நோக்கி சன்னதி கொண்ட திருத்தலம்.

மூகாசுரனை அழித்த அன்னை வடக்கு முகமாக அருள் பொழியும் திருத்தலம்.

இருபத்தேழு நட்சத்திரங்களும் பூமியில் சிவவழிபாடு செய்த திருத்தலம்.

மன்னர் வரகுண பாண்டியரை விட்டு அவருடைய கொலைப்பழி (பிரம்மஹத்தி) நீங்கிய திருத்தலம்.

சித்த சுவாதீனம் அற்றோர் - மனநலம் குன்றியோர் - பிணி நீங்கப் பெறும் திருத்தலம்.

மிகப் பெரியதான நந்தி - சுதை வடிவில் விளங்கும் திருத்தலம்.

மருத மரம் தல விருட்சமாக விளங்கும் திருத்தலம்.

பட்டினத்தாரும் பத்ருஹரியும் தவமிருந்த திருத்தலம்.

மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சி காலத்தில் சிறந்த நகரமாகத் திகழ்ந்த திருத்தலம். 

- இப்படி இன்னும் பற்பல சிறப்புகளையுடைய திருத்தலம் தான்  -

வடக்கில் ஸ்ரீசைலம் தலை மருது,  தெற்கில் அம்பாசமுத்திரம் கடை மருது என விளங்க - நடுவில் இடை மருது என விளங்கும்  திருவிடைமருதூர்.

இடைமருது உறையும் எந்தை
இங்கே அருள் பொழியும் ஈசனின் திருப்பெயர் - இடைமருதீசர், மருதவாணர். அரவணைக்கும் அன்னையின் திருப்பெயர் பெருநல நன்முலை நாயகி. தீர்த்தம் காவிரியும் அயிராவண திருக்குளமும். 

இறைவனின் திருமேனி பெரியது. ஜோதி மகாலிங்கம் என்று அன்பர்கள் புகழ்ந்து வணங்குகின்றனர். 

காரணம் - மாலை வேளையில் பூஜை நேரத்தில் சன்னதியின் அலங்கார அணி விளக்குகளின் சுடர் ஒளியினில் மூலஸ்தானம் திருக்கயிலாயம் எனத் திகழ்வதால்.

இந்த திருவிடைமருதூர் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் - மயிலாடுதுறை  நெடுஞ்சாலையில் - ஆடுதுறையை அடுத்து உள்ளது.

தேவாரம் எனும் தேன் மழை பொழிந்த - திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரரும் வலஞ்செய்து வணங்கிய திருத்தலம்.

திருவாசகம் எனும்  அமுதினை அருளிய மாணிக்கவாசகர் ''இடைமருது உறையும் எந்தாய் போற்றி!''  - எனப் புகழ்ந்த திருத்தலம்.

இத்திருத்தலத்தில் தனது மற்றோர் வாகனமாகிய அயிராவணம் எனும் யானையின் விருப்பத்தினை - ஈசன் ஈடேற்றி - தை பூச நாளில், யானை தவமிருந்த திருக்குளக்கரையினில் தீர்த்தம் கொடுத்தருளினார். 

இந்தத் திருக்கோயிலினுள் கருவறைக்கு முன்பாக ஈசனின் வலப்பாகத்தில் தெற்கு நோக்கி அமர்ந்து - விநாயகர் சிவபூஜை செய்து மகிழ்கின்றனர்.

இத்திருத்தலத்தில் பூச நாளில் நீராடுதலைப் பற்றி - 

"ஈசன் எம்பெருமான் இடைமருதினில் பூச நாம் புகுதும் புனலாடவே'' (5/14/1) - என்று திருநாவுக்கரசர் புகழ்ந்துரைக்கின்றார். 

''பூசம் புகுந்தாடிப் பொலிந்து அழகாய ஈசன்  உறைகின்ற இடைமருது'' (1/32/5) - 

என்றும் ,

''வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டிப் பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த'' (2/56/5)

என்றும் திருஞானசம்பந்தர் போற்றி மகிழ்கின்றார்.

மயிலாப்பூரில் - நாகம் தீண்டி மடிந்த பூம்பாவையை, திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்து எழுப்பும் போதும் -

''நெய்ப்பூசும் ஒண்புழுக்க நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம்....'' (2/47/5) -

"நெய் நிறைந்த பொங்கல் படைத்துப் பெண்கள் கொண்டாடும் தைப்பூச விழாவினைக் காண வருவாய்...பூம்பாவையே!....'' என்று தைப்பூசத்தினைக் குறித்து பாடியருள்கின்றார்.

தவிரவும், காவிரி வலஞ்சுழித்த திருத்தலமும்  - 

தேவேந்திரன் கடல் நுரை கொண்டு விநாயகர் திருமேனியினை வடிவமைத்து வணங்க -   அதனை அன்புடன் ஏற்றுக் கொண்டு  - விநாயகர் விளங்கும்  திருத்தலமும் ஆகிய - திருவலஞ்சுழியில் - திருஞானசம்பந்தப்பெருமான்  பணிந்து வணங்கும் போது - 

''பூசநீர் பொழியும் புனற்பொன்னியில் பன்மலர் 
வாசநீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழித் தேசநீர்'' (2/2/6)

''பலவகையான  மலர்களைச் சுமந்து வருவதனால் நறுமணம் மிக்கதாக விளங்கும் பொன்னி எனும் காவிரி நதியில், பூச நன்நாளில் நீராடி - உமது திருவடிகளைப் பணிபவர்களுடைய இடர்களை நீக்கி அருளும் பெருமானே!..'' -

என்று சிவபெருமானின் நல்லருளைப் பெறுவதற்கான, எளிய வழியினைத் திருக்குறிப்பாக பாடியருள்கின்றனர்.

நாமும் அவ்வழி நின்று வணங்கி - இடர் தீர்ந்து இன்புறுவோமாக!....

திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..