நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 20, 2013

தை கார்த்திகை


thanjavur14
ஸ்ரீ சுவாமிநாதப்பெருமான்
மனம் ஒன்றி நோற்பவர்களுக்கு நல்ல பலன்களையும் நன்மைகளையும் வாரி வழங்கும் கார்த்திகை விரதம் விரதங்களுள் சிறந்ததாக விளங்குவது. அதன் பெருமைகள் அளவிடற்கரியது. 

முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக திருஅவதாரம் செய்த போது - வாரி அணைத்து அமுதூட்டிய தேவ மகளிர் அறுவரையும் சிவபெருமான் வாழ்த்தி, 

''என்றும் விண்ணில் கார்த்திகை நட்சத்திரங்களாகத் திகழ்ந்து, முருகனை நினைந்து விரதம் ஏற்பவர்க்கு ஏற்றன எல்லாம் அருள்க'' என்று  சிறப்பித்து அருளினார். 

அப்படி இறைவனால் - சிறப்பிக்கப்பட்ட கார்த்திகை விரதம் ஆண்டு முழுதும் அடியார்களால் மேற்கொள்ளப்பட்டாலும்  தனித்தன்மையான சிறப்பினைப் பெறுவது ஆடி,  தை மாதங்களில் தான். 

அந்த வகையில் நாளைய தினம் (தை - 08, திங்கட்கிழமை) சோமவார கார்த்திகையாக புலர்கின்றது (நன்றி - சுத்த வாக்கிய பஞ்சாங்கம்). 

நம் வாழ்வின் வழித்துணையாய் வந்து நமக்கு உதவும் வள்ளலை, முருகப் பெருமானை - நாளும் நமது வழிபாட்டில் பாடிப் பரவி, நல்லதெல்லாம் பெற்றிடுவோம்.

அருணகிரிநாதர் அருளிய 
சுவாமிமலைத் திருப்புகழ்.

பாதி மதிநதி போது மணிசடை
     நாதர்  அருளிய ...... குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா

காதும்  ஒருவிழி காகம்  உறஅருள்
     மாயன்  அரிதிரு ...... மருகோனே

காலன்   எனையணு காமல்  உனதிரு
     காலில் வழிபட ...... அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரருலகு
    ஆளும் வகையுறு ...... சிறைமீளா

ஆடும் மயிலினில்   ஏறி அமரர்கள்
     சூழ வரவரும் .....  இளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனில் ......  உறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ...... பெருமாளே...

பிறைநிலவு, கங்கைநதி, கொன்றை  - இவற்றை  ஒளிரும் ஜடாமுடியினில் அணிந்த சிவபெருமான் அருளிய குமரேசனே!...

சர்க்கரைப் பாகு, செழுங்கனிகள் - இவற்றின் சுவையினை மிஞ்சிய  - இனிய மொழியை உடையவளும் ,  வேடர்கோன் நம்பிராஜனின் மகளும் ஆகிய குற மங்கை வள்ளியின் மென்மையான  பாதத்தினை அன்பின் மிகுதியால் வருடிய மணவாளனே!...

கருத்தழிந்த காகத்தின் தவறுக்காக ஒரு கண்ணின் மணியினைப் பிரித்துத் தண்டித்து அருளிய மாயவனாகிய ஹரி நாராயணனுக்கும் மாயனைப் பிரிந்தறியாத அன்னை மகாலக்ஷ்மிக்கும் அன்பான மருமகனே!...

என்னை - யமன்  அணுகாதபடிக்கு உன்னிரு திருவடித் தாமரைகளில் மனம் பொருந்தி வழிபடும் புத்தியினை எனக்கு அருள்வாயாக!...

ஆதியில் - சூரபத்மனின் கொடுஞ்சிறையினின்று - பிரமனோடு இந்திராதி தேவர்கள் அனைவரையும் மீட்டு தேவலோகத்தை மீண்டும் இந்திரனே ஆளும்படிக்கு அருளியவனே!...  

அப்படி தேவலோகத்தினை மீண்டும் பெற்ற தேவர்கள் உன் திருவடிகளைப் புகழ்ந்து பாடியபடி - உனைச் சூழ்ந்து வர, நடனம் ஆடும் மயிலின் மீது திருக்கோலம் கொண்டு - இவ்வுலகினை வலம் வருகின்ற இளையவனே!...

அடர்ந்து வளர்ந்த மாஞ்சோலைகள் நிறைந்த சுவாமிமலைதனில் திருக் கோயில் கொண்டு  வீற்றிருப்பவனே!...

சூரனின் உடல்  இற்று வீழவும், பெருங்கடல் வற்றிப் போகவும், சுடர் வேலினைச் செலுத்திய வல்லவனே!... சுவாமிநாதப் பெருமாளே!...

நின் திருவடித் தாமரைகளே அடைக்கலம்!...
 
*** *** ***

இந்தத் திருப்பாடலை நாளும் ஓதிட, நம் மனதினைப் பொறுத்து - நமக்கு சில தெய்வீகச் செய்திகள் புலனாவதை உணரலாம்.
''கருத்தழிந்த காகத்தின் தவறு - தனிப்பதிவாக வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..