ஆண்டாள் அருளிய திருப்பாவை
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால் |
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்ட வாற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!...
வங்கக்கடல் தனைக் கடைந்து தேவர்களுக்கு அமுதம் தந்தருளிய மாதவனை, கேசவனை -
மங்களகரமான வைகறைப் பொழுதில், ஆயர்பாடியின் செல்வச் சிறுமியர்களான - நிறை நிலவு எனும்படி திருமுகஎழில் திகழும் கன்னியர்கள் ஒன்றாகக் கூடிச் சென்று அடியார்களுடன் அடியாராக நின்று, வணங்கி வழிபட்டு,
பெரும் பறை எனும் பரிசினைக் கைக்கொண்ட வகையை - வழியை,
புதுவை என்றும் புத்தூர் என்றும் வழங்கப்படும் அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் - பட்டர்பிரானாகிய பெரியாழ்வார் பெற்றெடுத்த பெருஞ்செல்வம் என அவதரித்தவளும் -
அழகியதும் குளிர்ந்ததுமான தாமரை மலர்களால் தொடுக்கப் பெற்ற தெரியல் எனும் மாலைதனை அணிந்தவளும் -
அதனை அரவணையில் துயிலும் அரங்கன் அணிந்து கொள்ள அளித்தவளுமான -
கோதை நாச்சியார் - சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
அருளிய
சங்கத் தமிழ்ப் பாமாலையின் முப்பது பாடல்களையும்
''அங்கு!... எங்கு ?...'' என்று தேடுபவர் எவர்க்கும் '' இங்கு!... இது!... இப்பரிசு!..." என்று திகழும் திருப்பாவையின் முப்பது திருப்பாசுரங்களையும்,
குறிக்கோள், ஆர்வம், உள்ளத்தூய்மை எனும் தடம் தவறாமல் சுயநலம் இல்லாமல்
''என் கடன் பணி செய்து கிடப்பதே!..'' எனும் நித்ய கைங்கர்யம் செய்து -
ஓதுவார் எல்லாரும், திருப்பாவை எனும் பரிசு உரைப்பார்
எல்லாரும்....
அங்கு இங்கு என்று காற்றில் அலையும் கார்மேகங்கள் திரண்டு சென்று தங்கும் மலைமுகடு போலத் திகழும் - சங்கு, சக்கர, அபய, வரத - நான்கு திருத்தோள்களையும்,
தாமரையெனச் சிவந்த கண்கள் திகழும் திருமுகத்தினையும் உடைய -
செல்வத் திருமாலின் தனிப் பெருங்கருணையினால்
எங்கும் எப்போதும் திரு அருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!...
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்!...
தஞ்சையம்பதியினையும் ஆண்டாள்!...
தமிழறிந்த தம் மக்களையும் ஆண்டாள்!...
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
அரங்கன் திருவடிகளே சரணம்!
அடியார்களாகிய உங்கள் திருவடிகளை சேவித்துக் கொள்கிறேன்!
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!...
திருப்பாவைப் பதிவுகளை
அடியேன் இந்த அளவில் நிறைவு செய்து கொள்கிறேன்!
அரங்கன் திருவடிகளே சரணம்!
அடியார்களாகிய உங்கள் திருவடிகளை சேவித்துக் கொள்கிறேன்!
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!...
திருப்பாவைப் பதிவுகளை
அடியேன் இந்த அளவில் நிறைவு செய்து கொள்கிறேன்!
ஹரி ஓம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..