ஓம் நமோ நாராயணாய:
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா எனும் நாமம்
அருள்மிகு அரங்கநாதப் பெருமான் |
பச்சை மாமலைபோல் மேனி! பவளவாய் கமலச்செங்கண்!
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்! அரங்கமா நகருளானே!...
- தொண்டரடிப்பொடி ஆழ்வார்
ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளிவண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா! அரங்கமா நகருளானே!...
- தொண்டரடிப்பொடி ஆழ்வார்
வைகுந்த வாசனை மனத்துள் இருத்தி, பக்தியுடன் ஏகாதசி விரதம் அனுசரிப்பதால் பாவம் செய்ய மனம் அஞ்சும். சலனமும் சஞ்சலமும் அடங்கி வைராக்கியம் பெருகும். எவ்விதத் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் போக்கும் சக்தி பிறக்கும்.
அஸ்வமேத யாகம் செய்த
பலனை ஏகாதசி விரதத்தை மேற்கொள்வதால் பெறமுடியும் . முப்பத்து முக்கோடி தேவர்களும்
அனுசரிக்கும் விரதம் இது என்று பரமேஸ்வரன் குறிப்பதாக புராணங்கள்
கூறுகின்றன.
அருள்மிகு வீரநரசிங்கப்பெருமாள் திருக்கோயில்,
தஞ்சாவூர்.
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடைவாணாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்தஎம் அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா எனும் நாமம்...
- திருமங்கை ஆழ்வார்.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல் நாளான தசமி அன்று ஒரு பொழுது
உணவு உண்டு, ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம்
இருந்து, மறுநாள் துவாதசியன்று சூரியோதயத்திற்குள்
நீராடி துளசிதீர்த்தம் அருந்த வேண்டும்.
''பாரணை'' என்னும் பலவகை காய்கறிகளுடன்
கூடிய உணவை உண்ண வேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய்
உணவில் இடம் பெறுதல் அவசியம் என்பர். அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி,
சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம்.
உண்ணாநோன்பிருந்த வயிற்றுக்கு அகத்திக்கீரையும் நெல்லிக்காயும் நன்மை தருவன என்பது சித்த மருத்துவக் குறிப்புகள்.
சுவாமிக்கு
நைவேத்யம் செய்து, ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்த பிறகு. சூரிய உதயத்திற்குள் சாப்பிட்டு முடித்து விட்டு, பகல்
முழுவதும் உறங்காமல் நாராயண மந்திரத்தை பாராயணம் செய்தல் நலம்.
வைகுந்த
ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவங்கள் நீங்கப் பெற்று வைகுந்தம்
செல்லும் பாக்கியம் பெறுவர் என்பது ஐதீகம்.
ஓம் ஹரி ஓம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..