நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 26, 2012

சுவாமி ஐயப்பன்

 சுவாமி ஐயப்பன்


ுண்னியே புலி வாகே!
கார்த்திகை முதல் நாள் தொடங்கியதும் தென்னகம் 
முழுவதும் ஓங்கி ஒலிக்கும் சரண மந்திரம் 
சாமியே சரணம் ஐயப்பா!...


உலகம் முழுதும் அன்பர்களாலும் அடியவர்களாலும் 
உள்ளம் உருக, உயிர் உருக உச்சரிக்கப்படும் சரண மந்திரம் 
சாமியே சரணம் ஐயப்பா!...


உள்ளார் என்றும் இல்லார் என்றும் எவ்வித பேதமும் இன்றி 
எல்லாருக்கும் இனிது என்று போற்றப்படும் சரண மந்திரம் 
சாமியே சரணம் ஐயப்பா!...


கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி மார்கழியில் மண்டல பூஜை வரை நாற்பத்தொரு நாட்கள் கடுமையான விரதம்.
 

கடுமையான காட்டு வழியில் கஷ்டத்தையும் இஷ்டமாகக் கொண்டு, ஏற்றத்திலும் இறக்கத்திலும் இன்னலுற்ற போதிலும், ஆண்டுக்கு ஆண்டு  சபரி மலை நோக்கிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதே ..... 

என்ன காரணம்?....

சராசரி மனிதனின் வாழ்வில் - சபரி மலைக்கு என்று மாலையணிந்து விட்டால் - மலைக்கு சென்று திரும்பி வரும் வரையில், 

காலணி அணியக்கூடாது. முடி திருத்துவதும் முக சவரம் செய்து கொள்வதும் கூடாது. மது அருந்தக்கூடாது. புலால் உண்ணக்கூடாது. புகை பிடிக்கக் கூடாது. சூதாடக் கூடாது. பொழுது போக்கு கேளிக்கைகளை நாடக்கூடாது. பகலில் உறங்கக் கூடாது.

காலையில் சூரிய உதயத்திற்கு முன்னும் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னும் குளிர்ந்த நீரில் நீராடி - பொதுவாக கறுப்பு நிற வேட்டி துண்டு அணிந்து நூற்றெட்டு முறை சரணம் சொல்லி ஐயப்பனை வழிபடவேண்டும்.

அசைவ உணவினை முற்றிலுமாக நீக்கி,  இருவேளை மட்டும் எளிய உணவு உண்ண வேண்டும். அனைத்து தீய பழக்கங்களில் இருந்தும் நீங்கி, கடுமையான பிரம்மச்சர்யம் அனுசரிக்க வேண்டும்.

பாய், தலையணை, மெத்தை இவற்றைத் தவிர்த்து சாதாரண தரை விரிப்பில் உறங்க வேண்டும். காம, குரோத, மோக, லோப, மத மாச்சர்யங்கள் எனும் தீய குணங்களை விலக்கி - பகைவரிடத்தும் அன்பு பாராட்டி, உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்ற பேதங்களைத் தவிர்த்து எல்லோரிடத்தும் இதமாகப் பழக வேண்டும். ஏறக்குறைய துறவு நிலைதான்..

எந்த இலக்கினை அடைய வேண்டி விரதம் மேற்கொள்ளப்பட்டதோ - அதனை இமைப்பொழுதும் மறவாதவாறு ஒருமித்த சிந்தையுடன் - புனிதமான இருமுடிக்கட்டினை தலையில் ஏந்தியபடி  அன்பர் குழாத்துடன் பயணமாகி - 

எருமேலியில் தொடங்கி அடர்ந்த கானகத்தின் வழியாக, அழுதாமலை, கல்லிடும் குன்று இவைகளைக் கடந்து, கடுமையான ஏற்றமாகிய கரிமலை மேட்டில் கால் கடுக்க ஏறி, கரிமலை இறக்கத்தில் கால் களைக்க - கவனமாக இறங்கி,

பம்பை நதியில் நீராடி - இத்தனை தூரம் கடந்து வந்ததைப் போல மூன்று மடங்கு சிரமங்கள் நிறைந்த நீலி மலையில் நின்று நெகிழ்ந்து, தாய்மை தவமிருந்த சபரி பீடம் கடந்து, சன்னிதானத்தினை நெருங்கி அல்லும் பகலும் அனவரதமும் கருத்தில் வைத்துத் துதித்த பதினெட்டாம் படிகளை கடந்து, சன்னதியில் -நெய் விளக்கின் ஒளிச்சுடரில்,

பட்ட பந்தனத்துடன் யோகபீடத்தில் கற்பனைக்கு எட்டாத - நிறை அருள் நிலையாய், 

பூலோக நாதனை, பூமிப்ரபஞ்சனை, அனாதரட்சகனை, ஆபத்பாந்தவனை, அன்னதான ப்ரியனை, ஆனந்தரூபனை, கானகவாசனை, கருணாசாகரனை, மகிஷி சம்ஹாரனை,  மதகஜ வாகனனை,  மணிகண்டமூர்த்தியை, மகா வைத்யநாதனை, கற்பூரப்ரியனை, ஜோதிஸ்வரூபனை - ஐயன் ஐயப்ப ஸ்வாமியைக் கண்ட - கண்கள் குளிர்ந்தன - குளிர்கின்றன - என்றால்,

காரணம்...  விரதம் மேற்கொண்ட பக்தியும் வைராக்கியமும் மட்டுமல்ல.... 

அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்து அருளி, தாய்க்குத் தாய் என அன்பு காட்டி அரவணைத்து, தந்தைக்குத் தந்தையாய் அறிவு ஊட்டி ஆதரித்து, ஐயனாய் ஞானகுருவாய் நம்முள் ஞானம் எனும் நல்ல விளக்கினை ஏற்றி வைக்கும்  -

சுவாமியே சரணம் ஐயப்பா!...
ஐயன் ஐயப்ப ஸ்வாமியின் தனிப் பெருங்கருணை தான்!...  

கார்த்திகை முதல் நாள் மாலை அணிந்து இன்றுடன் நாற்பத்தொரு நாட்கள். இன்று (26.12.2012) சபரி மலையில் மண்டல பூஜை. 

மண்டல பூஜையுடன் விரதத்தை நிறைவு செய்து கொள்பவர்கள் உண்டு. மேலும் தொடர்ந்து மகரஜோதியுடன் நிறைவுசெய்து கொள்பவர்களும் உண்டு.
 
ஐயா  சரணம்!...அப்பா சரணம்!...ஐயப்பா சரணம்!...சரணம்!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..