மாணிக்கவாசகப்பெருமான்
அருளிய
திருவெம்பாவை
சிவன் என்றே வாய் திறப்பாய் |
அன்னே! இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியன் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகு ஒப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுது என்றெல்லோமுஞ்
சொன்னோம் கேள்! வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ!
வன்நெஞ்சப்பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய் - 07.
எம் பாவாய்!...இதுவரைக்கும் உன்னிடம் நாங்கள் சொன்னதெல்லாம் கொஞ்சம்தானா!....
ஈசன் எம்பெருமான் - அமரர்களால் நினைத்துப் பார்க்கவும் அரியவன்!... ஒப்பற்றவன்!... பெருஞ்சிறப்பினையும் புகழினையும் உடைய நம் பெருமானின் திருக்குறிப்புகளைக் கண்டாலும் கேட்டாலும், அந்தக் கணமே மெய் உருகுவாயே!..
ஈசனின் ரிஷபக் கொடியினைக் கண்டதுமே ''சிவ சிவ'' என்பாயே!...ஐயனின் திருக்கோயிலின் சங்கின் ஓசையை கேட்டதுமே ''சிவ சிவ'' என்பாயே!..
''தென்னாடுடைய சிவனே போற்றி'' என்று நாங்கள் சொல்வதற்கு முன்னரே - '' எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'' என்று நீ புகழ்ந்து உரைப்பாயே!... அனலிடைப்பட்ட மெழுகென உள்ளம் உருகி அன்பினால் தவிப்பாயே!...
ஆனால் உனக்கு என்ன ஆயிற்று இப்போது ?... நீ விரும்பிக் கேட்டு இன்புறுவாய் என்றல்லவா - நாங்கள் எல்லோருமாக ''எம் தலைவா! எம் அரசே! எமக்கு இன்னமுதே!'' - என்று பலவாறாக இறைவனைப் புகழ்ந்தோம்!... இறைவனின் திருப்பெயர்களைக் காதில் கேட்டும் - துயில் எழாமல் இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே!...
கல் நெஞ்சக் கன்னியர் போல் அசைவற்று நீ கிடந்தால் - உன் தூக்கத்தின் பெருமைதான் என்னே!....
சிலம்பும் குருகு எங்கும் |
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ!
வாழி ஈதென்ன உறக்கமோ!.. வாய் திறவாய்!..
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்! - 08
விடிந்தது பொழுதென - சேவலும் கூவிற்று.. தூக்கம் கலைந்த மற்ற பறவையினங்களும் கூட்டை விட்டு வெளியேறி உற்சாகத்துடன் பாடித் திரிந்தன. உய்வடைந்தோம் என ஊரும் விழித்தது.
கோயில்கள் தோறும் ஏழிசையாய் இசைத்தமிழாய் மங்கல வாத்தியங்கள் ஒலிக்கின்றன. வெண்சங்குகளும் ஓங்கி முழங்குகின்றன.
அருட்பெருங்சோதியாகிய இறைவனின் நிகரில்லாத பெருங்கருணையையும் பெரும் புகழினையும் பாடிப் புகழ்ந்தோமே... கேட்கவில்லையா.....நீ?....
வாய் திறந்து பேசவும் இயலாதபடி உறக்கம்... நன்றாக இருக்கிறதடி!....
சக்கரம் ஏந்திய திருமால் போல ஈசனிடத்தில் அன்புடையவள் என்பாயே... உன் அன்பு இப்படித்தானோ!...
ஊழிக்காலத்தில் தனிப்பெரும் தலைவனாகத் தோன்றும் ஈசனை, உமையொரு பாகனாக விளங்கும் உத்தமனை, அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருமருந்தென அருளும் ஐயனை - பாடிப் பரவ வேண்டாமா!...
பாவாய்....எழுந்திராய்!...
திருச்சிற்றம்பலம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..