நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 25, 2012

திருவெம்பாவை - 07

மாணிக்கவாசகர் அருளிய 
திருவெம்பாவை
எங்கள் பிராட்டியும் எங்கோனும்
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்து  ஆர்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து  ஆடேலோர் எம்பாவாய். -13

நீர்வளம் நிறையப் பெற்றதால், நீரிலேயே செழித்துத் தழைத்துப் படர்ந்து - பசுமையாய் விளங்கும் குவளையின் கருமையான மலர்கள் எம்பிராட்டியைப் போலவும்  குளிர்ந்த செந்தாமரைப் பூக்கள் ஈசன் எம்பெருமானைப் போலவும் திகழ்கின்றன. 

அங்கும் இங்கும் அலைந்து திரியும் பறவையினங்கள் அம்பிகையின் திருமார்பில் அசைந்து புரளும் அணிகலன்களைப் போலவும் திருக்கரங்களில் கலந்து ஒலிக்கும் நிறைவளைகள் போலவும் திகழ்கின்றன. நீர்க்கொடிகளுடன் பின்னிக் கிடக்கும் பாம்புகள் எம்பெருமான் திருமேனியில் புரள்வன போலவும் விளங்குகின்றன. 

இளங்காலைப் பொழுதினில் மேனி அழுக்கினைக் கழுவுதல் போல தம்மைப் பீடித்துள்ள, மாயை, கன்மம், ஆணவம் எனும் மும்மலங்களையும் தொலைப்பார்களாக - வந்து நீராடும் அன்பர்களாலும்  - அம்பிகையையும் ஐயனையும் போல,  சிவசக்தி வடிவாகவே திகழும் இந்தத் திருக்குளத்தில் நீராடுதற்கு... 

வாராய்!...எம் பாவாய்!...

குளிர்ந்த நீர் பொங்கிப் பெருகித் ததும்பும் இந்தத் தாமரை மடுவில் நாம்,  நம் கைகளில் அணிந்துள்ள சங்கு வளைகளுடன்  காற்சிலம்புகளும் சேர்ந்து ''கலகல'' என  ஒலித்து ஆரவாரிக்கவும்,

மகிழ்ச்சியினால் நம் பெருந்தனங்கள் பொங்கிப் பூரிக்கவும், நீரில் மூழ்கிக் திளைப்போமாக!...

கொங்கைகள்  பொங்கிக் குலுங்க - வளைக் கரங்களால் குளிர் நீரைக் குடைந்து குதூகலித்து - தாமரைகள் தழைத்துத் தங்கியிருக்கும், பூம்புனற் பொய்கையில்  நீராடி மகிழ -

வாராய்!...எம் பாவாய்!...

வளர்த்தெடுத்த பெய்வளை
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.- 14

காதுகளில் இலங்கும் கனங்குழைகள் ஆடவும், அங்கமெல்லாம் அணிந்துள்ள பசும் பொன் ஆபரணங்கள் அசைந்து ஆடவும்,  சூடியுள்ள பூச்சரங்களுடன் கருங்குழலும் சேர்ந்தாடவும், அந்தப் பூச்சரங்களை மொய்த்து எந்நேரமும் சுற்றித் திரியும் வண்டினங்கள் ஆடவும் - பூம்புனற் பொய்கையில் நீராடுவோம். நீராடித் திளைத்த பெருமகிழ்ச்சியில்,

தில்லைச் சிற்றம்பலத்தைப் பாடுவோம்.  அந்தச் சிற்றம்பலத்தில் நின்று நிலைத்து ஆடிக் கொண்டிருக்கும் ஐயனின் திருப்பாதக் கமலங்களைப் பாடுவோம்.  வேத வேதாந்தப் பொருளெனத் திகழும் சிவபெருமானின் திருவடிவினைப் பாடுவோம். 

அந்த வேதப் பொருளான மங்களகரமான சிவம் நாம் வசமாகும் வண்ணம் பாடுவோம். ஈசன் திருமுடியில் திகழும் பொன்னிற கொன்றை மாலைகளைப் பாடுவோம். ஆதியும் அந்தமுமான அருட்பெருஞ் சோதியினைப் பாடுவோம்.

நம்மைப் பெற்றெடுத்து வளர்த்து - பக்குவப்படுத்தி - மங்களகரமான சிவன் எனும் - அந்த அருட்பெருஞ் சோதியினை நாம் அடையும் வண்ணம், நம்மை ஆளாக்கி உயர்த்தியவள் அம்பிகை. 

அழகிய வளையல்கள் இலங்கும் உமாதேவியின்  திருக்கரங்கள் மழையென வாரி வழங்கக் கூடியவை. அந்த அம்பிகையின் திருவடித் தாமரைகளைப் போற்றிப் பாடி மார்கழி நீராடுவோம்.

வாராய்... எம் பாவாய்!....
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..