மாணிக்கவாசகப் பெருமான்
அருளிய
திருவெம்பாவை.
அருள்மிகு சொக்கலிங்கம் |
திருச்சிற்றம்பலம்
முத்தன்ன வெண்நகையாய்! முன்வந்து எதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்து உன் கடை திறவாய்!
பத்துடையீர்! ஈசன் பழவடியீர்! பாங்குடையீர்!
புத்தடியோம்! புன்மை தீர்த்து ஆண்டாற் பொல்லாதோ?
எத்தோ நின் அன்புடைமை எல்லாம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்! - 03
முத்துக்களைப் போன்ற அழகிய பற்களை உடையவளே! எம்பாவாய்!
நீ எங்களுக்கு முன் துயில் எழுந்து -
எம்மைத் துயிலில் இருந்து எழுப்பி - எம் எதிரில் நின்று,
'' என் அத்தனே! என் வாழ்வின் ஆனந்தனே! என் உயிருக்கு அமுதனே!
என்று வாழ்த்தி - வாய் இனிக்க, சொல் இனிக்க, செவி இனிக்க
இறைவனைப் புகழ்ந்து பேசுவாயே!...இப்போது உனக்கு ஆனது என்ன? இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே!....வா... வந்து கதவைத் திறவாய்!...
தோழியரே!...நீங்கள் ஈசனிடத்தில் பேரன்பு உடையவர்கள்...
ஏனெனில் ஈசனுக்கு முன்பே அடியார்களாகியவர்கள்..
அதனால் எதிலும் நெறி உடையவர்கள்..ஆனால்
நானோ புதிதாய் அடிமை பூண்டுள்ளேன்... என் செயல்களில் சிறிது
குற்றம் உண்டாகும் தான். எனினும் ஈசனின் பொருட்டு - அதனைப் பொறுத்துக்கொள்ளல் ஆகாதா? பொல்லாததாகி விடுமா!
நான் கொன்டுள்ள அன்பு வஞ்சனையின் பாற்பட்டதா..என்ன!...
பாவாய்!... உன் அன்பினைப் பற்றி நாங்கள் மிக மிக நன்றாகவே அறிவோம். உன்னைப் போல் மிக்க அன்புடையவர்கள் ஈசனைப் பாடாமல் இருப்பார்களா?
(ஆயினும் இன்னும் படுக்கையினின்றும் நீ எழாதது ஏன்?)
உன்னைத் தூக்கத்திலிருந்து எழுப்ப வந்தோமே!...
எங்களுக்கு இதுவும் வேண்டும் தான்!..
ஈசன் புகழினைப் பாட - தாள் திறந்து கொண்டு வாராய்!....
ஒண்ணித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக்கிளி மொழியார் எல்லோரும் வந்தாரோ
என்ணிக்கொண்டு உள்ளவா சொல்லுகோம் - அவ்வளவும்
கண்ணை துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக்குறையில் துயிலேலோர் எம்பாவாய்! - 04.
பாவாய்!... ஒளிரும் புன்னகை உடையவளே!...
(பேச்சுக்கு மேல் பேச்சாகப் பேசிக்கொண்டு படுக்கையில் கிடக்கின்றாயே!)
உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா?...
வண்ணக் கிளியின் மழலை என மொழியுடைய எம் தோழியர்
எல்லோரும் வந்து விட்டனரா?...
(கொஞ்சம் எண்ணிப் பாருங்களேன்.. அதுவரைக்கும்
சற்று அயர்ந்து கொள்கிறேன்!....)
உள்ளபடியே சொல்லுகின்றோம்...அதெல்லாம் அப்போதே சரியாக எண்ணியாகி விட்டது...நீ அதற்காக கண்ணுறங்கிக் காலத்தை வீணாகக் கழிக்காதே!.... விண்ணில் உறையும் தேவர் தமக்கு அமுதம் போன்ற எம் இறைவனை, வேதங்களின் உட்பொருளாய் நிறைந்திருக்கும் எம் ஈசனை, எம் கண்களுக்கு இனியவனாய் விளங்கும் எம்பெருமானை - மனங்குழைந்து நெஞ்சம் நெகிழ்ந்து நெக்குருகி பாடிப் பரவுகின்ற இனிய வேளை இது.. இவ்வேளையில் எங்களுக்கு வேறு வேலை ஏதும் இல்லை.
எனவே நீயே கதவினைத் திறந்து கொண்டு வருவாயாக!..
(அப்படியாவது வெளியே வருகின்றாயா என்று பார்க்கிறோம்..)
வந்து தோழியரை எண்ணிப் பார்...(தோழியரையும் எண்ணிப் பார்...)
தோழியர் எண்ணிக்கை குறையுமானால் ...
நீ மறுபடியும் உள்ளே போய் மீண்டும் தூங்குவாயாக!...
திருச்சிற்றம்பலம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..