நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 26, 2012

திருப்பாவை - 11

ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 11

கோவலர் தம் பொற்கொடி
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்று அரவு அல்குல் புனமயிலே, போதராய்!
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏலோர் எம்பாவாய்! 

கன்றும் கறவை இனமும்
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளலாய் - பால் சுரந்து பொழியும் பசுக்களையும் எருமைகளையும் அவற்றின் கன்றுகளையும் அன்புடனும் ஆதரவுடனும் பராமரித்து -

அவற்றுக்கு ஏதேனும் இடையூறு எனில் -  இடையூறு செய்யும் பகைவர்க்கு எதிராக கூர்வேல் ஏந்தியவராய் போர் முடித்து - அன்புக்குரிய ஆநிரைகளைக் காத்து, அன்பில் நிறைந்தவராக  -  யாதொரு குற்றமும் இல்லாதவராக விளங்கும் கோவலர் தம் பெருங்குடியில் பிறந்த பொற்கொடியே!... பாவாய்!...
புன்னை வன மயில்
புன்னை வனத்தில் மயில் என ஆடித் திரிபவளே!...

எப்படி .....நிலத்தடியில் புற்றினுள் மறைந்து உறையும் நல்ல பாம்பு ... தனக்கு ஒரு இன்னல் எனில் சீறிச் சினந்து விரிந்த படத்துடன் - பகையை - எதிர் கொள்கின்றதோ...அப்படி அந்த - 

நாகபடம் என  -  விரிந்து இழைந்து நெளிந்த இடையையும் - நடையையும் உடையவளே!...

வா... நீராடப் போகலாம்!....

உன் இல்லத்தைச் சுற்றியுள்ள  பெண்களும் மற்றுமுள்ள  தோழியரும் வந்து உன் வாசலில் வந்து நின்று  - கண்ணனை, கார்வண்ணனை,   மாதவனை, மதுசூதனனை, கோவிந்தனை, கோபாலனை - பாடுகின்றோமே!...

கேளாச் செவியாய்!...

நின் வீட்டின் முன் வாசல் முற்றம் திறந்து கிடந்தாலும் உன் சயன அறையின் மனிக்கதவம் மட்டும் இன்னும் அடைத்துக் கிடக்கின்றதே!... என் செல்லமே! 
ஏன் சிணுங்குகின்றாய்?...ஏன் முணுமுணுக்கின்றாய்?... 

பெருந்தனம் உடையவளே!...  இப்படி நீ தூங்கிக் கொண்டே இருந்தால்  என்ன தான் அர்த்தம்? 

எம் பாவாய்!...எழுந்து வருவாய்!...
நன்றி - ரதி, தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..