நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 27, 2012

திருவெம்பாவை - 09


மாணிக்கவாசகர் அருளிய 
திருவெம்பாவை

அங்கண் அரசு - அடியோங்கட்கு ஆரமுது
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர்  எம்பாவாய் - 17

வாசமிகு மலர்கள் நிறைந்து நறுமணம் கமழும்  கருங்கூந்தற் கன்னி!...

சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், திசை தொறும் முகம் உடைய நான்முகனிடத்தும் மற்றுமுள்ள பிற தேவர்களிடத்தும்,  இந்த உலகில் வேறு எங்கும் உள்ள  மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, பேரானந்தம் நம்மிடத்தில் நிறைந்து ததும்பும்படி நம்மைப் பெருமைப்படுத்தியும், 

இவ்வுலகில் நம் போன்ற அடியார் தம் வீடுகள் தோறும் தாமாகவே எழுந்தருளி, செங்கமலப் பொற்பாதங்களைத் தந்து ஆட்கொண்டு அருளியும், அருஞ்செயல் புரியும் ஐயனை -  கருணை பெருகும் திருவிழித் தாமரைகளால் நம்மை ஆளும் அரசனை, அடியவர்களாகிய நமக்கு அமுதமாக விளங்கும் விமலனை, வேந்தனை, பெருமானைப் புகழ்ந்து பாடி, 

நலமும் வளமும் எங்கும் பெருகித் திகழ, தாமரை மலர்கள் நிறைந்த இந்த பொய்கையின் குளிர்ந்த நீரில் - கை வளைகள் குலுங்கக் குடைந்து - குதூகலமாக நீராடுவாயாக!....

கண்ணார் அமுதாய் நின்ற அண்ணாமலை
அண்ணாமலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோர்  எம்பாவாய் - 18

தோழி! எம் பாவையே!... 

திரு அண்ணாமலையில் குடி கொண்டு விளங்கும் எம்பெருமானது திருவடித் தாமரைகளில் - தேவர்கள் தலை வைத்துப் பணிந்து வணங்கும் போது அவர் தம் மணிமகுடங்களில் பதிந்துள்ள இரத்தினங்கள் ஒளி இழந்துவிடுகின்றன.

அதைப்போல கீழ்த்திசையில் கதிரவன் ஒளிக்கிரணங்களுடன் காண்பவர் கண்கள் நிறையும் படிக்கு தோன்றியதும் - கார் இருள் அகன்றது. இரவில் குளிர்ந்து விளங்கிய தாரகைகள் ஒளி குன்றி - பார்வையினின்றும் மறைகின்றன. 

இந்த இளங்காலைப் பொழுதில் பெண்ணாகவும், ஆணாகவும் பெண்ணும் ஆணும் அற்றதோர் தோற்றமாகவும்,

ஒளி பொருந்தி விளங்குகின்ற  ஆகாயமாகவும் பூவுலகமாகவும் விளங்கி - இவையனைத்தினின்று வேறுபட்ட பொருளாகவும் இலங்கி,

கண் நிறைந்த அமுதமாக நின்ற இறைவனின் திருவடித் தாமரைகளைப் பாடி, 

பொங்கித் ததும்பும் பூம்புனலில் - கை வளைகள் குலுங்கக் குடைந்து - குதூகலமாக நீராடுவாயாக!....
ிருச்சிற்றம்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..